வெள்ளி, 22 ஜூலை, 2016

மாதவம் செய்தேன்

மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்
சுடராதவன் போல் அருகினில் வந்தான்
இரு தோளில் அள்ளி மலர் மாலையாய் சூடிக் கொண்டான்....


மின்னிடும் மார்பில்
பொன்னென சரிந்தேன்
அதை எண்ணி எண்ணி
பெண்மை அணிந்தேன்
இரு விழி கண்டு
இருதயம் தந்தேன்
இனி அவனில்லை யென்றால்
என்னுயி ரில்லை யென்றேன்....


என் முகம் நோக்கி
வரம் வேண்டிடக் கேட்பான்
ஏதெனக் கொடுப்பாய் என்றால்
என்னுயிர் தருவேனென்பான்
தன் இன்முகம் காட்டி
இன்னும் கேள் என்பான்
இதுவே தக்க தருணமென
முத்தங்கள் தருவான்....


வெட்கம் பூசிய இதழில்
புல்லாங்குழல் இசைப்பான்
பின்னிடை பற்றியே
தன்னுடல் சிலிர்ப்பான்
பின் மடி சாய்ந்தே
நிலவினை பிடிப்பான்
கண்கள் சொருக காதல் செய்வான்
கள்வன் அவனே இதைக் கனவென நகைப்பான்....


மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்~~~




- வித்யாசன்

ராதையின் குரல் கேளாயோ

கண்ணா பாராயோ
ராதையின் குரல் கேளாயோ
பிருந்தாவனம் வாராயோ
புல்லாங்குழல் இசை தாராயோ


வழிமீதிலே விழி எதிர்பார்ப்பிலே
வலி மீறுதே வருகை பொய்யாகையிலே
என் எண்ணம் வண்ணம் யாவும் கண்ணன் பாதையிலே...


வாட்டும் இரவை நான் காட்டவா
வரம்பு மீற முடியா சிறு கூட்டு பறவை நான் அல்லவா
வேதனை தீர்க்க மாலை சூட்டவா
உனை சேரக் காத்துக் கிடக்கும்
பாவை நான் அல்லவா
ஆயர்பாடி அழகு மாதவா
நான் ஆராரோ பாடிட என் மடிமீது சாயவா

கண்ணா பாராயோ....

ராதையின் குரல் கேளாயோ...



- வித்யாசன்

காமராசர்‬

தனக்கென காலணா சேமிக்காது காலத்தை வென்ற கர்மவீரன்
தலைக்கணம் இல்லா தன்னலமற்ற தலைவன்
ஏழையின் பசியை மட்டுமே எண்ணிய எளியோன்
கூரைக்கும் ஏடு கிட்ட வேண்டி கல்விச் சாலை திறந்த மாணவன்
பட்டம் படிக்காது பாராளுமன்றத்தை வகுத்த பகுத்தறிவாளன்
நாட்டின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கரம்பிடித்தக் காதலன்
அரசியலில் கறைபடியாத ஒரே கதராடை கறுப்பு மனிதன்
எங்கள் ‪#‎காமராசர்‬ 







- வித்யாசன்

வைர முத்து

உன்னை பிடிக்கும்
உன் கண்ணை பிடிக்கும்
உன் மீசை பிடிக்கும்
உன் ஆசை பிடிக்கும்
உன் எண்ணம் பிடிக்கும்
உன் எழுத்தும் பிடிக்கும்

எல்லாவற்றையும் விட உன்னிடம் எனக்கு
செவி உதிர தமிழதிர பேசும் பேச்சே மூச்சாய் பிடிக்கும்...


வைர முத்து

ஆசை

பாயா நதியினிலே
எதிர் தாவும் மீனென
மாயா வாழ்வினிலே
மாட்டிக் கொண்டேன்
ஆசை தூண்டிலிலே~~~


- வித்யாசன்

இறைவா‬


ஒன்றுமில்லா வாழ்க்கையில்
ஒவ்வொன்றாய் கொடுத்தாய்
பின் னது என்னவென்று ஏனென்று அறியுமுன் அடுத்தடுத்து தட்டிப் பறித்தாய்
மற்றதற்கு ஏதுமற்ற மானிடர்க்கு யாவும் அறிய வைத்தாய்
குற்றமது நிறைந்தே கொஞ்சம் நெஞ்சினில் நன்மை புகுத்தாய்
மற்றவரை தன்போல் எண்ணாது தானெனும் ஆணவம் அளித்தாய்
கற்றதெல்லாம் கானலாக்கி கர்வத்தில் அழித்தாய்
இங்கே யாவரும் பெற்றதெல்லாம் நிலையற்றதாய் படைத்தே
இவ்வெற்றுடலுக்குள் நீங்கா ஆசை வளர்த்தாய்
கட்டுடல் களைந்தே வெறும் கட்டையென நீட்டிப்படுக்கையிலே
விட்டுக் கொடுக்க இயலா இம்மனதை
#இறைவா நீ எங்கே ஒழித்து வைத்தாய்~~~


- வித்யாசன்

ஒளிர்க்க

காயுமிந்தப் பழமானது உதிரக் காத்திருக்க
பாயுமிந்த இரவின் மேக இதழ் மோதி தேய்ந்திருக்க
அதன் சாறு புழிந்து பூமியெங்கும் சிதறிக்கிடக்க
சின்னஞ் சிறு இலை தாங்கியதை தேன் துளியாய் மிதக்க
அதிகாலை கண்டதனை உண்டெழுந்ததோ பெருஞ் சோதியாய் ஒளிர்க்க~~~

ஓம்... ஓம்... ஓம்...

ள்ளத்தில் உறுதி கொள்
உடைந்தால் உயிரைக் கொல்
வெள்ளமென கோபம் பொங்கிடின்
பள்ளமென பொறுமை கொள் ;


தெள்ளத் தெளிவுடன்
வார்த்தை சொல்
கள்ளமற்ற நெஞ்சத்துடன்
கனிவோடு கேள் ;


நல்லனவற்றுக்கு நயமுடன்
கொடு தோள்
எதிர் எவரெனினும் தயங்கிடாது
மார் நிமிர்த்தி நில் ;


யாவிலும் பற்றற்று
இன்புற்று ஆள்
அன்பது வைத்தாயின்
அடிமையாகாது மீள் ;

கொடுமை காண்பின்
உயர்த்திடு வாள்
வறுமை உடுப்பினும்
நெறி மாறாது வாழ் ;


சுதந்திரக் காற்றாய்
நாளெல்லாம் சுழல்
சுவர் மோதும் பந்தாய்
வேண்டும் மீண்டும் எழல் ;


மரமென உருமாறி
நித்தமும் கொடு நிழல்
மனமது மலிவாகாது
சூட்சமம் அவிழ் ;


முயலுதல் முடங்காது
தொடர்ந்திடும் அலை கடல்
அதுபோல் அடங்கிடாது
அனுதினமும் வீழ் ;


எது நேர்வினும் வேண்டி
நிகழ்ந்திடாது பிறர் தொழல்
வையத்தில் அழியா அழகது
இயற்கையின் எழில் ;


யாவுமது விலகினும்
துணையிருக்கும் தமிழ்
சிதை மூட்டி சாம்பலாகினும்
சாகாது சிவப்பொருள் ;


ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்

நெஞ்சதன்மீது

அன்பொழுகும் நெஞ்சதன்மீது
அலைபாயும் ஆசை ஓய்ந்திடலாகாது
இன்பமது நாளும் நிறைந்திங்கே வாழ்தலென்பது
துன்பமது தீர்த்திடுதல் துறப்பதன் ஒன்றதுவே
என்பது உண்மையென அறிந்தும்
இதயத்தில் ஏந்தினேன் எல்லையில்லாக் காதலை~~~


- வித்யாசன்

மறுக்கிறது

ஒரு பெரு வயிறு நிறைய
சிறு சிறு பருக்கையாலே இயலுகிறது
நம் மனம்தான் அதையுணர்ந்தும் மறுக்கிறது


- வித்யாசன்

#‎கண்ணா‬... என்ன மனமிதுவோ

என்ன மனம் இதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ


என்னை நான் மறப்பதோ
உன்னை என்னில் எங்ஙனம் மறைப்பதோ


சொல்லில் பொய் வைப்பதோ
அதன் பொருள் உண்மைக் காதல் இருப்பதோ


விண்ணில் யாவும் நின் முகம் சிரிப்பதோ 
அது மண்ணில் வீழ்ந்தால் முத்தம் கொடுப்பதோ

 காற்றில் எங்கும் உந்தன் ஒலி கேட்பதோ
அதன் பாட்டில் தான் இலை தன் தலை அசைக்குதோ


கண்ணா...
என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ
என்ன மனம் இதுவோ ;


அன்பே துன்பமாவதோ
அது நின்மேல் கொண்ட பாசமல்லவோ


என் மேல் நேசம் குறைவதுவோ
அது தீர்ந்தால் உயிர் எங்ஙனம் வாழ்வதுவோ


கண்ணில் உறக்கம் கொள்வதுவோ
கள்வா நீ கனவில் உலா வருவதுவோ


நானெனில் உன்னில் அடங்கியதுவோ
தானென பிரிவது இறப்பிலும் நிகழாதது அல்லவோ


என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட ஆகாதோ~~~


கண்ணா...
என்ன மனமிதுவோ



- வித்யாசன்

விதி

விதியென்று எதை நான் சொல்ல
விரும்பா வெறுமேனி வளர்த்தாய்
அவ்விளையாட்டு போதாதென்று அதற்குள் ஆசை கொடுத்தாய்
உறவென்று நட்புலகென்று நலமாய் அளித்தாய்
அஃதும் ஓர்நாள் நஞ்சென்று நெஞ்சதனை புலம்பவைத்தாய்
கரும்பாய் இனிக்கும் பருவமதனில் உண்மை காதல் விதைத்தாய்
அது கை கூடாது கருணையற்று பிரித்தே ரசித்தாய்
காலம் கடக்க தர்மம் இதுவென கல்யாணம் முடித்தாய்
காமம் உடைபட கர்மம் எனை மீண்டும் குழந்தையாய் படைத்தாய்
இது போதாது போதாதென பொருள் தேடி முதுகெலும்பு வளைத்தாய்
பொய்யுரைக்க சுயநலமிக்க புகழ் வேண்டி உறவாடி கெடுத்தாய்
மெய்யற்றது இளமை என்பதறி யாததாய் அவ்வழி முடித்தாய்
இறுதியில் இவ்வுடல் பலவீனமாக இருப்போருக்கு எனை பாரமாக்கி சிரித்தாய்
இறைவா...
இதுவே எம் வாழ்வென்று பிறர்போல் மண் மூடி தீ தின்றிடாது
என்றும் அழியா வடிவான எழுத்தாய் நிற்க அருள்விப்பாய்~~~


- வித்யாசன்

பரா சக்தி

யாவுமிங்கு வெற்றுப் பொருளடி
பெரும் அன்பும் மாயும் விட்டுப் பிரிந்த சில நொடி
அடுக்கடுக்காய் கட்டி வைத்ததெல்லாம் கனவாய் போகுமடி
கெட்டு குப்பையிலேயிடும் எச்சில் பொருளாய் ஓர் நாள் நம் உடலாகுமடி
ஆசை தொட்டுப் படர்ந்ததெல்லாம் வெட்டி புதைக்கையிலே அற்பமாவதேனடி
அனைத்தையும் அறியவைத்து அதன் வழி செல்லாது ஆடச்செய்யும் கோலமென்னடி
உற்றுப் பார்த்தால் அவனியில் ஒன்றிலுமில்லை உன்போல் அழகடி
எனை சற்றே தீபமென எரியவைத்து அதன் ஜோதியாய் நீ யெங்கும் பரவி நிற்பதென்னடி
பரா சக்தியே~~~


- வித்யாசன்

அணிலாகியிருக்கலாம்

ஒரு சமாதி எப்படி இருக்குமென்பதை
இருவிழி நுழைந்தபின் புலப்பட்டிருக்கலாம்


நகரும் குடங்களுக்கு பின்னால்
நகர்ந்து சென்றுயிருக்கலாம் நந்தவனம்


ஒரு யுகம் குடிக்கும் பின்கழுத்து முத்தத்தில்
பின்னரவில் உறைந்திருக்கலாம் பித்தனாகி


விரல் மடித்து இறுக்கிய அணைப்பில்
இன்னும் கொஞ்சம் இதழ் சிவந்திருக்கலாம்


மிளிரும் குறுகிய வளைவினில்
முயல் தடவலாய் நூலாடையில் தொலைந்திருக்கலாம் 


அப்பெரிய அழகிய மரத்தினடிவாரத்தில்
பூத்திருக்கும் இலைமீது குதித்தாடும்
ஒற்றை அணிலாகியிருக்கலாம் ~~~


- வித்யாசன்

காமமாக

பார்த்திருந்த பார்வையெல்லாம் வெறும் பாத்திரமாக
காத்திருந்த காலமெல்லாம் கலையும் கனவாக
ஒன்று சேர்ந்திருந்த கோலமெல்லாம் தனிமையாக
முத்தமிட்ட உதடுகள் உதறும் கோவமாக
செத்த சவமாய் ஆன பிரிவது பின்னாளில் சுத்தமாய் மறந்துபோக
உத்தம காதலென்று இங்கேதுண்டு யாவும் காமமாக~~~


- வித்யாசன்

இசை ராஜா

இவ்வானம் எந்நிலமென்று பாராது எந்நேரமும் பொழியக் கூடியது

இங்கிருந்து கடக்கும் மேகம் யாவும் ஹார்மோனியமாவதில் எந்த வியப்புமில்லை

இவ்விடத்தில் பறக்கும் வெள்ளைபுறாக்கள் மட்டுமல்ல எல்லா சிறகுகளும் இசைக்கும் புது ஸ்வரம்தான்

அத்தனை உணர்வுக்கும் ஒரே குரல்தான் அதனை எத்தனை முறை கேட்டாலும் அது சுக வரம்தான்

இதிலிருந்து வீழும் துளிகள் பெருங்கடலை மட்டுமல்ல சிறு குட்டையையும் குளிர்விக்கும்

ஆம்...
இந்த இசை தட்டுதான் நித்தமும் தேய்ந்து வளர்ந்து நம்மை மட்டுமல்ல ஒவ்வொரு இரவையும் தாலாட்டி தூங்கவைக்கிறது
மானிடரை எல்லாம் மயக்கும் இசையில் குழந்தையாக்கும் எங்கள் இசை ராஜா குழந்தைக்கு
இனிய தாலாட்டு நாள்

வாழ்த்துக்கள்~~~

** காட்சி தந்தாள் காளி **

காலை தூக்கி ஆடி நின்றாள் காலையில் காளி
இந்நாளை நல்வேளை ஆக்கிடுவாள் எம் தேவி
இருளை தூளாக்கி பெரும் சுடரானவள் சூலி
அனலை விழியாக்கி சூடி எதிர் நின்றாள் யாதுமாகி ;


மோகம் குடித்து மோட்சம் அருள்வாள் ஆதி சிவனின் பாதி
கருமேகமென உருவெடுத்து தன் கோவம் தீர்த்து பொழிந்திடுவாள் மாரி
பூதகணம் சூழ நா நாகமென நீள நல் வாக்கு தந்திடுவாள் ஓம்காரி
பாதகம் புரிவோரை பாராது நின் பாதங்களால் நசுக்கிடுவாய் பரா சக்தி ;


மண்டை ஓடு அணிந்து மாயை யாவும் கொன்று மகிழ்ந்திடுவாள் மாரி
தொண்டர் தம்மை நாடி வந்து தொழுவோருக்கு இம்மை நீக்குபவளே நீலி
அன்பை ஆயிரங் கரங்களில் அள்ளிக் கொடுக்கும் ஆனந்த ஜோதி
ஆணவம் எங்கும் தலைகாட்டினும் அதனை கொய்யும் அகோரி ;


வானெங்கும் படர்ந்து எம் நாவில் நிறைந்து நிற்கும் வாணி
தீதெங்கு நிகழினும் தானங்கு தயங்காது உதிரம் நனைக்கும் மேனி
பாரெங்கும் கேள் ஒலிக்கின்றது பராசக்தி நின் பெயரை ஓயாது மணி
யாரென்று எனை அறிந்து நின் தாள் பணிந்தேன் தாயே நீயே எனதவனி ;


- வித்யாசன்

கண் மூடவைக்க

காரிருளில் விழி காந்த காத்திருக்க
அந்நாந்து பார்த்திருக்கும் நிலவாய் நீ பூத்திருக்க
இடையில் கரையும் தூக்கத்தை யாரெடுக்க
தோள் மீது தாலாட்டி அதன் கண் மூடவைக்க~~~


- வித்யாசன்

விரகம்...

மறைக்கப்பட்ட அழகின் நூல் கோர்ப்பு நழுவலில் விழிக் கண்ணாடி பாதரசமெங்கும் வழிகிறது விரகம்...

ஒரு தழுவலுக்கு முன் விரல் தீண்டலின் உஷ்ணத்தில் உடலெங்கும் பற்றி எரியும் காட்டினை அனைக்கிறது சிறு வியர்வை...

இக்கடுங் குளிரில் சிக்கிமுக்கி கல்லென உரசிடும் இதழ் நுனியில் கனல் சிவக்கிறது...

அக்னி மழையில் எழுந்த சர்பமொன்று மலை மீதேறி இடை கிளை பற்றி இலை ஒலிந்து பின்னது தூரலாய் வீழ்ந்து இளைப்பாறியது...

ஆப்பிள்களும், கறுந்திராட்சைகளும் குலுங்கும் தோட்டத்தில் தாளிட வாய்ப்பற்ற அடர் இருளில் நிர்வாணம் வெட்கத்தில் ஆடை உதறி குறி சொல்லுகிறது...

இனி...
இந்த சாமக் கோடாங்கியிலிருந்து எழும் சப்தம்
ஒவ்வொரு படுக்கையிலும் உடுக்கையாய் எதிரொலிக்கும்~~~


- வித்யாசன்

ஆசை

அத்தனை உண்மையும் ஒருசேர நாவறுத்து
பொய் எச்சிலை நக்கிக் கொண்டிருக்க
அம்மணமாய் வழிந்தது ஆசை ரத்தம்~~~


- வித்யாசன்

தனிமை

கழுவேற்றலின் கூர்மையாகும் இழப்பாகையில்
துளையிடும் துயரமாகும் தனிமை ~~~


- வித்யாசன்

சிறு மயிர்

மகுடம் மலையல்ல
ஆசை உதறலின் சிறு மயிர்~~~


- வித்யாசன்

நித்தமும்

உன் முத்தம் உடையுமென்ற போதும்
அதுயெமக்கு நித்தமும் வேண்டும்~~~


- வித்யாசன்

என்ன சொல்ல

ஐந்தாண்டுக்கொருமுறை செய்யப்படும் அடிமைச் சங்கிலி விதவிதமாக சந்தையில் விற்க அதில் சிறந்ததை கைகளில் பூணுகிறோம்...
சில்லரைக்கும் சினிமா தனத்திற்கும் பதிவிட்ட நகங்களின் ரேகைகளில் அறியா"மை" கடலென கொட்டியிருக்க ஆளுமை கை கொட்டி நகைக்கிறது...

எல்லாம் இலவசமாகிய பின் தின்னுதல் கழித்தல் தவிற உனக்கென்ன இங்கொரு வேளை எம் அரமணையின் வாயிலில் கையேந்தி நின்றிரு அமரும் உரிமை எங்களுக்குரியது...

எச்சில் சோற்றுக்கலையும் நாயாகிய பின் கிடைக்கும் எலும்பு துண்டுகளுக்கு நிகழும் குதறல்களில் நமக்கு நாமே சட்டை கிழிக்க பழகி பின் கொல்வோம்...

அத்தனை வளைதலையும் மண் முன் செய்திருந்தால் நிமிர்ந்திருக்கலாம் சுய செருக்காய் என்ன செய்ய சர்வாதிகள் அடை காக்க இடும் மல முட்டைகளாகிறோம்
பொறிக்கும் நம் குஞ்சுகளுக்கு புத்தியிருப்பதில்லை...


மதுவும் மாங்கல்யமும் சதுரங்கமாடும் அரசியல் கட்டங்களில் இரு புறமும் காயுருட்டுதல் சகுனி ஆகையில் பாஞ்சாலிகளின் துயிலுரிதலுக்கு கண்ணனற்ற சபையினில் மேஜை தட்டி எழும் ஒலி காது பிளக்கிறது...

காக்கியும் கறுப்பு அங்கியும் ஆள்வோரை பல்லக்கு சுமக்கும் ஆனை ஆகிய பின் ஆணைகளை ஏற்று தும்பிக்கை ஏந்தி ஆசிர்வதிக்கிறது தன் அகன்ற பாதங்களில் சினஞ் சிறு எறும்புகளை மிதித்தவாறு...

சட்டத்தின் சட்டை கழற்றி உற்று நோக்கினால் அதில் ஓட்டைகள் மட்டுமல்ல பல கோடி அணைகட்டுகள் பொத்தலாகியிருப்பது கண்களில் கசிகிறது தராசு தலைகீழாய்...

இனி
என்ன சொல்ல
ஏட்டிலுள்ள யாவையும் எரித்து
அதன் மேல் உலகப் பானை அமைத்து
பொய்மை எனும் சாராயம் காய்த்து
யாவரும் வயிறு முட்டக் குடித்து
போதை தெளிய தெளிய பருகிடும் இந்நாட்டின் பெருங்குடிமகனாவோம்~~~



- வித்யாசன்
உன் முத்தம் உடையுமென்ற போதும்
அதுயெமக்கு நித்தமும் வேண்டும்~~~


- வித்யாசன்

எவர்முன்னின்று

நெஞ்சிலே நேர் திறமுண்டு
நாவிலே உண்மை நரம்புண்டு
அஞ்சுவதற்கென்று எனக்கிங் கொரு பொருளுமில்லை யென்று - ஆகுதலால்
ஆகாது கெஞ்சுதல் எவர்முன்னின்று~~~


- வித்யாசன்

என் நேசத்தில் சந்தேகமா

#‎இன்னும்‬...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வு வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்...
நம் பிரிவது நல்லின்பமா...


உனைக் கண்டால்
கடும் துன்பமும் தீருமம்மா
உனைக் காணாதிருந்தால்
கண்ணிருந்தும் பயனென்னமா
வருந்தும் என் நெஞ்சத்துக்கே
அதை தீர்க்கும் நல் மருந்து நீதானம்மா
அதை மறந்தே நீ சென்றால்
நானிருந்தும் இறவாப் பிணம்தானம்மா...


எனைத் தொடரும் நிழல் நீதானம்மா
உனைத் தொலைத்தால் நான் வீழ்வேனம்மா
என்மீது படரும் கொடி நீதானம்மா
அதனை சுமத்தல் பாரமல்ல பேரின்பமம்மா
காணும் யாவிலும் உன் வண்ண முகம்மம்மா
வரும் கனவிலும் வலம் வருவது நீயம்மா...


என்னிருதயம் தட்டிப் பார்
உன் பெயர் சொல்லுமம்மா
நீ சற்று எட்டி நின்றாலும் என் மனமதை தாங்கிடுமா
ஒரு தட்டில் இவ்வுலம் வைத்து தந்தாலுமம்மா
எனை மாரினிலிட்டு தட்டும் தாலாட்டுக்கு அது இணையாகுமா
என் சிறு கோபம் உனக்கொரு குறையாகுமா
உன் குடல் ஒட்டி பிறந்தவன் நானம்மா...


கடல் மேலும் நீ பெரிதம்மா
நின் காதல் முன் வான் மிகச் சிறிதம்மா
மண் யாவும் தந்தாளும் உனக்கீடாகுமா
கண்ணிமைப்போல் எனைக் காத்திட வேறாரும் உனைப்போல் உண்டோமா
மன வேதனை தீர்த்திடமா
பெரும் மாற்றம் தந்திடும் மந்திரப் புன்னகை ஒன்று வீசிடம்மா...


காலம் பல கழிந்தாலுமே நம் நேசம் மாறாதம்மா
கோலம் சிதைந்தாலுமே கொண்ட பாசம் மறையாதம்மா
என் உயிர் வாசம் நீதானம்மா
இதிலில்லை ஓர் நாளும் வேசமம்மா...


இன்னும்...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வது வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்
நம் பிரிவது நல்லின்பமா~~~


- வித்யாசன்

கண்கள் சிவக்க

ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்திழுக்க
விடிய விடிய பொழிந்த பாலினை இரவு குடிக்க
விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~


- வித்யாசன்

ஈசனே

கொட்டிடும் தேளென துடித்திடும் மனக் கவலையினை காலால் எட்டி மிதித்து
சுடர் விட்டு எரியும் நினைவதனை வேகமாய் கொளுத்து
அதில் தெறித்து பறக்கும் தனலெடுத்து உடையென உடுத்து
கரு பெட்டியில் உருவிட்ட சடமிது என்பதனை நிலை நிறுத்து
அது ஓர்நாள் மண்சட்டியில் புகைந்து மாய்ந்திடும் வகையே நம் தலை எழுத்து
பத்தென பெற்றதெல்லாம் ஆசைப் பற்றதனாலே உண்மை உணர்த்து
பெரும் பட்டினி வந்துனை வாட்டுகையில் ஏதும் பெரிதிருந்தால் அதன்முன் நிறுத்து
தொட்டென தீரா உறவு யாவும் நெருங்கிடின் சட்டென மறையும் கானல் நீரூற்று
கிட்டா மானிட வாழ்விதுவே ஆயினும் பட்டதே போதுமடா
மறுபிறப்பு அறுத்தின்றே மாயமது விட்டொழிய இக்கணமே நின் உயிர் பூட்டிடடா

தாண்டவ ஈசனே~~~~

- வித்யாசன்

என் தோழி

அதிகாலைப் பேரொளி இரு கண் விழி பாயுதடி
மலர் சோலை மரயிலைகள் பச்சை தோகை விரித்தாடுதடி
கானக் குயில்களின் குரல் ஒலி காதினில் தேனென வழியுதடி
மோனப் புன்னகை வீசிடும் பூக்களின் இதழமர்ந்து வண்டின்பம் சேர்க்குதடி
வானப் பெருங் கடலெங்கும் மேக அலை மோதிடாது பறவைகள் தாவிப் பறக்குதடி
வெள்ளி யாழென வளைந்தே பொங்குமருவி சந்தமிட்டு புது ராகம் பாடுதடி
குழல் காய எங்கும் நெழிந்தோடும் ஆறு தன் கூந்தழ் உலர்த்த நீளுதடி
இயற்கையின் உயர் இச்செய்கையின் அற்புதம் கண்டே மனம் கற்ச்சிலையாய் நிற்குதடி

நீ பாராய்
என் தோழி~~~


- வித்யாசன்

நீயல்லவா~

வெற்று நட்சத்திரங்களை வெட்கப்பட வைக்கும்
அக்னி நட்சத்திரம்


நீயல்லவா~~~

காதல்

கை தவறி விழுந்த
கண்ணாடியாய்
காதல்
காலடியில்


- வித்யாசன்

அட... சாமி...

வீட்டுக்கு வந்தவங்கள கௌரவிச்சு விருந்து வச்சது பழசாச்சு
ஏன்டா வர்ரேனு வாசலோடு நிக்கவச்சு விரட்டி அடிப்பது புதுசாச்சு

ஒத்த ரூபாயில எல்லாம் வாங்கியது பழைய கதையாச்சு
இப்ப மாதம் முப்பது உழைச்சாலும் கடன்காரனாக வாழ பழகியாச்சு
ஒத்த குடும்பமா வாழ்ந்த காலம் வெட்ககேடா போச்சு


இப்ப வெத்து ரூம்மில்ல ஒத்தையில வாழுரது ஸ்டைலு ஆச்சு

மனுசன மனுசன் மதிக்கும் காலம் மக்கிப் போச்சு
இப்ப பிஞ்சுலையே பழுத்து வெம்பி உதிர்ந்தாச்சு
ஊறக்கஞ்சி குடிச்சு எம்பதுலையும் கம்பீரமா நடந்தது என்ன ஆச்சு


இப்ப பதினாறுலையே தொந்திவச்சு சொங்கி போச்சு

கொள்ளையடிக்க ஆட்சி பிடிக்க போட்டி போடும் தந்திர பேச்சு
ஒரு நல்லது கூட நடக்காது ஆட்சி வந்தா இது சத்திய பேச்சு
பட்ட பகலில் கொலை நடக்க நாம பயந்து ஓடியாச்சு


அட பத்து பேர ஒத்த ஆள நின்னு அடிக்குறது படத்தில் மட்டும் என்று ஆச்சு

சத்து உணவு மேஜ மேல பஞ்சராகி பர்க்கராகி போச்சு
செத்து விழும் மனிதனை பாராது சொத்து கணக்க பங்கிட்டாச்சு
நச்சு மட்டும் காற்றில் கலந்து விட்டாச்சு


அன்று நட்டுவச்ச மரத்த ஒன்னுயில்லாம பிடுங்கியாச்சு

கொத்து கொத்தா சாகும் போது வேடிக்கை பார்த்தாச்சு
கொத்து சாவிக்கு அலையும் சீரியல் வாழ்க்கையாச்சு
பத்து பெத்த பிறகும் விறகு சுமந்த உடல் எங்க போச்சு


அட... சாமி...
இன்னைக்கு பத்துக்கு பத்து ஏசி ரூம்புல வியர்க்கும் தெம்பாச்சு

போக போக இன்னும் மோசமாகும் புவி ஆச்சு
போட நீ என்ன சொல்லுற எனக்கு தெரியும் னா சங்கு ஊதியாச்சு
காலம் கடந்து யோசிச்சு பயன் என்ன ஆச்சு
அட எல்லாம் கர்மாகி போன பிறகு காப்பாத யாருமில்ல இது சத்தியமாச்சு~~~


- வித்யாசன்

தொடாமல் சிணுங்கலை

பெரும் மலைகளை அழகாய் உன்னால் மட்டுமே ஆடைக்குள் மறைக்க இயலும்
வற்றா நதியினை உன்னால் மட்டுமே 

வாரியெடுத்து வெயிலில் உலர்த்த முடியும்
கறுமை ஊற்றிய வானவில்லை உன்னால் மட்டுமே

 கண்ணசைவில் வளைக்க முடியும்
சந்திர சூரியனை உன்னால் மட்டுமே

 ஒரு கணத்தில் உதிக்கவும் உதிர்க்கவும் கூடும்
உடையா அலையினை உன்னால் மட்டுமே 

ஒன்று குவித்து விளையாட முடியும்
கடும் கருப்பினை உன்னால் மட்டுமே 

இடையென தரித்திட முடியும்
நிமிர் வாரிசத்தில் உன்னால் மட்டுமே 

மதநீர் வழிந்திடச் செய்திடல் முடியும்
எப்படி என்னால் கற்றுக்கொள்ள முடியும்
உன்னால் மட்டுமே நிகழும்
தொடாமல் சிணுங்கலை~~~


- வித்யாசன்

ஞானம்

எனதாழ தனிமையில் உனதான இனிமை இருளொளியாய் மனவறையெங்கும் சுடர் குளிர்கிறது
புறங்களைத் துறக்கும் இமைகளின் இறகினில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் நினை வகத்தில் ஞாபகம் உதிர்கிறது
துரத்தும் எண்ணங்கள் வடிவிழந்து புலன் விலகித் துகளாகிட தூய்மை புது மலராய் இதழ் விரிகிறது
துறப்பின் திண்ணம் தெளிவாகையில் நிலையற்றது யாவுமாகிட மெய் மாயையின் நிழலென ஞானம் வினவுது~~~

- வித்யாசன்

நடராஜன்‬

செரியாது கனத்து கழிக்காது திரியும் இவ்வாணவ மலத்துடலை சரித்துக் கிடத்தி எரித்த நரகல் சாம்பலள்ளி உடலெங்கும் பூசி உடுக்கையடித்து திரிசூளமுயர்த்தி நர்த்தனமாடுகிறான் ‪#‎நடராஜன்‬~~~

- வித்யாசன்

விந்தாய்

ஊதா கன்னத்தை உரசி
முத்தமிட்டுச் சிவந்த இதழினால்
தள்ளாடும் மேகத்தின் மோகமது
நில்லாது விந்தாய் நெளிகிறது~~~


- வித்யாசன்

புத்தனாய்

ஒரு புத்தகமாய் உனை வாசிக்க
மென்னிதழ்களில் நீ வார்த்தை முத்தமாகிறாய்


ஒரு புத்தனாய் கண்மூடி நானமர
என்மீதேறி போதி மரமாய் நீ வளர்கிறாய்


ஒரு புள்ளியாய் நானுனை வரைய
என்னுள் சுழல் பூமியாய் நீ வலம் வருகிறாய்


ஒரு விண்மீனாய் நான் துடிக்க
இருள் வானமாய் நீண்டெனை ரசிக்கிறாய்


ஒரு பனித்துளியாய் நானுனை சுமக்க
பகல் ஒளி உளியாய் நீ எனை உடைக்கிறாய்


ஒரு நிர்வாண ஆடையாய் நானுனக்கிருக்க
நீ அதை ஆசை ஆசையாய் உடுத்துகிறாய்~~~


- வித்யாசன்

கண்ணா ~~~

வீணாய் பொழுதது கழியுது
மீனாய் விழியது தேடுது
வேம்பாய் வார்த்தைகளானது
வீம்பாய் காக்கவைத்தலாகாது
நேராய் இங்கே வாராய் கண்ணா ;


கடும் நோய்விடக் காதல் கொடியது
அதைவிடக் காத்திருத்தல் கடினமது
பெருந்துன்பம் தாராது பொறுமை போதாது
வெறுமை முழுவதுவுண்டுவிடப் பாராது
எங்கேப் போயொழிந்தாய் கண்ணா ;


பாவை உடலின்று பனையென மெலியுது
பாம்பினது தலைமீது நடமாடும் பாதவடிவது
பூவெல்லாம் மயக்கும் புல்லாங்குழலிசையது
பூலோகம் ஓரடி அளந்த புன்னகை முகமது
காணாது வாடினேன் வந்தணைக் கண்ணா ;


கூடிய நினைவுகள் ஒன்றுகூடியே நகைக்குது
கைகோர்த்து ஆடிய மனதின்று நீரற்ற ஆறானது
பேடிருளில் எனை பேதமைச் செய்யலாகாது
பெரும் காமத் தீ தள்ளி; நீ தள்ளி நிற்க நியாயமாகது
பேரன்புடையோனே அழைக்கின்றேன் வா கண்ணா ;


கோவமடையும் வரை வேடிக்கைப் பார்க்காது
கொந்தளித்தே குறை கூறி அழவைத்தல் ஆகாது
மாயங்கள் புரிந்தென்னை சோதனை செய்திடாது
மார்மீது சாய்த்து மனச்சாந்தி தந்திடவே
கார் மேகமென விரைந்தே வந்திடுவாய் கண்ணா ~~~

தடுக்கவில்லை

அந்தப் பறவை பறக்கையில்
எந்த இறகும் உதிரவில்லை


அந்தச் சூரியன் மறைகையில்
எந்தக் கைகளும் ஏந்தவில்லை


அந்த வானம் அழுகையில்
எந்த நிலமும் தடுக்கவில்லை


அந்தப் பூக்கள் உதிர்கையில்
எந்த இலைகளும் தற்கொலை செய்யவில்லை


அந்த நதி வற்றுகையில்
எந்தச் சலனமும் நிகழவில்லை


அந்த நிலவு தொலைந்ததில்
எந்த வைகறையும் விடியவில்லை

வைகறை வைகறை

இனி வைகரை பார்க்கும் போதெல்லாம் கண்ணீராக ஓடும்
இதுதான் கடைசி சந்திப்பென்று தெரிந்திருந்தால் அகன்றிடாது உன்னிருகை பற்றி துணையாய் இருந்திருப்பேன்

எத்தனை முறை பார்த்தாலும் உன் முக புத்தகம் என் அழுகையை பார்த்து நகைக்கிறது

மறுபடியும் மறுபடியும் வாசிக்கின்றேன் உன் எழுத்துக்களை அது உன்னைப்போலவே இப்பொழுது மௌனமாய்

நம்பமுடியவில்லை எந்த ஆறுதல் வார்த்தையும் உன் இழப்பின் நிழல் தீண்டிட இயலாது

ஒரு வேளை உனை உயிர்பிக்க இன்னொரு உயிர் வேண்டுமெனில் எனை தருகிறேன் இதை விட இன்பம் வேறென்ன எனக்கு

அத்தனைக்கும் மேல் உன் இழப்பறிந்து இருக்கும் குடும்பத்தாரின் நிலையினை எங்ஙனம் என் விழி காண இயலும்

அன்பின் பெரும் காடு துன்பமெனும் நிலைப்பாடாகையில் வெறுமென உனை எப்படிக் காண்பேன்

என் மனக்கரை உடைந்து நின் மீது வீழ்ந்து மீண்டும் வா வா என அழைக்கிறது
நீயோ எனை நினை ஒவ்வொரு வைகறை வைகறை என்கிறாய்~~~

‪#‎ஆழ்ந்த‬ இரங்கல்

- தம்பி

தேசம் தேம்புதடா - தம்பி
நடுத்தெருவினில் மோசம் நிகழுதடா
யாவுமிங்கு முழு வேசமடா - தம்பி
எதனையும் நீ எளிதினில் நம்பிடாதேடா


பெரும் பாசம் வைப்பாரடா
அதனருகில் பணம் வாசம் பிடிப்பாரடா
அடிமை சாசனம் செய்வாரடா - தம்பி
அதில் அவர் மாண்டிடும் வரை ஆண்டிட பாசாங்கு செய்வாரடா


காணும் உறவது பொய்யேடா
நிலம் காய்ந்திட்டால் உழுதிட எவர் வருவாரடா
தன்மானம் உள்ளோர் வாழ்வதுடா - தம்பி
தடைபட்டே தவியாய் தவிக்குதடா


செய் நன்றி மறக்கும் ஈனப்பிறவி இங்குண்டேடா
மெய் கண்டது ஓர் நாளும் பொய்வுரைப்பதில்லையடா
நான்கடி தீக்கிரை நம் வாழ்வேடா - தம்பி
வாழும் வரை நீ எவர் நம்பியும் தலை குணிந்திடாதேடா~~~


- வித்யாசன்

கள்ளழகரே

தமிழ் மண்ணாளும் மா மதுரையிலே
எனை எந்நாளும் அருள்பவளே
கயல் துள்ளி விளையாடும் வைகைக் கரையினிலே

 தங்கக் குதிரையில் தாவி வருவான் கள்ளழகரே

பெரும் தேர் வடமிழுக்கும் நான் வீதியிலே
எம்பெருமானுடன் எழுந்தருள்வாள் மணக்கோலத்திலே
கடலென பொங்கிடும் தலை நிறை கூட்டத்திலே
அதைக் கண்டிட போதாது இரு கண் மாத்திரத்திலே


ஊர் கூடி தேடி வருவர் கள்ளழகர் கோலத்திலே
தாளிக்கயிறு ஏறிய தங்கையினைக் காண இயலாத கோபத்திலே
மண்டபங்கள் பல தங்கி பக்தர்களின் போகத்திலே
அழகர் மலை மீது வந்தமர்ந்து சினம் தணித்தார் ஆனந்தத்திலே


சிக்கல் யாவும் தீர்த்திடுவார் சொக்கர் நல் மார்க்கத்திலே
சக்தி வடிவானவள் மும்மார் மறைந்திடவே அமர்ந்தாள் அவர்தம் பக்கத்திலே
பக்தி முக்தி தரும் சித்திரை திருநாள் உச்சத்திலே
இதனைக் கண்டவர் யாவரும் மகிழ்ச்சியில் பொங்கிடுவர் மீனாட்சி திருக்கல்யாணத்திலே~~~


- வித்யாசன்

ஞாபகக் குருதி

தவம் புரியும் முனிவரின் தியானத்தை சிதைக்கும் நிகழ்வாகவே பொருந்துகிறது நம் வாழ்வு. 

துன்பம் தோய்ந்த அறிவு நிலை அசுத்தமான எண்ணங்களை சலவை செய்ய அனுமதிப்பதில்லை.

நம்பிக்கையின் பாத்திரம் உடையும் போதெல்லாம் உள்ளங்கையை வெட்டி எறிய முற்படும் ரேகை கத்தியின் கூர்மை மழிக்கலாகாது.

பசி தாண்டி தேடும் கால்தடங்களின் அலை ஒரு போதும் ஓய்வதில்லை மாறாக அது உள்ளிருப்பவற்றை வெளிக்கொணரும் கிளிஞ்சலாகும்.

அன்பின் தலைக்கணம் முள் கிரீடமாகையில் ஏற்றுக்கொள்ளக் கூடும் சிலுவையும் அதிலிருந்து வழியும் ரத்தமும் நேசத்தின் விசுவாசிகள்.

வறண்ட உள்நாக்கில் ஒட்டிய வார்த்தைகள் யாவும் கிடந்து உருண்டிட முடியாது வளைந்து தாகம் உறிஞ்சுகையில் விழும் நிழல் குளிர் நீரல்ல கரை புரண்டோடும் ஞாபகக் குருதி~~~

- வித்யாசன்

யாவிலும் நிறை

காலைப் பெரொளியில்
ஞானப் பெரருளில்
மனமானது நின் பாதம் தொழுதல் இனிதே
ஆயிரமிங்குண்டு
யாவிலும் நீ நிறை நின்று
பெரும் ஆணவம் கொன்று
மலரடி வீழ்ந்தேன் மாயையின்று
காயம் பொய்யெனக்
காலம் சொல்வதில்
ஞாலம் செய்திட்ட எம் காளி
உம் பார்வையில் கலந்தே குங்குமக் கண்ணானேன்~~~


- வித்யாசன்

சுகம் ... சுகம் ~~~

சுட்டெரிக்கும் மணலானது உதிர்ந்திருக்கும் மலை முகட்டின் குறு முகத்தில் ஒருங்கற்ற வடிவில் அனல் அமர்ந்திருக்கும் அழகாகும்

நகரும் மரயிலை நிழல் திசை மீதுயரும் வெம்மைக் காற்றின் நுனி வளரும் உஷ்ணத்தில் உயிர் துறக்கும் சருகின் சப்தம் ஏகாந்தம்

சுருக்கென வரி பிளந்த மேனியின் நிறம் வறட்சியின் ஓவியமாகையில் யாவும் துறந்து தூரிகையாகி வரைவதை வானம் அறியும்

பெரும் பாறை நாடியெங்கும் வளரும் வெண் தாடியென நீளும் நீரதனை சவரம் செய்யும் கதிரவனின் ஒளியினில் பளபளக்கிறது பச்சையம்

வேர் உறிஞ்சும் ஈரத்தின் குடல் யாவிலும் நீராவியாகும் வெப்பச் சலனத்தின் வியர்வையில் பூக்கும் இதழ்களில் அரும்பும் தேன் சுடச் சுட

மேகம் உருகி வழிய காலம் கனியக் காத்திருக்கும் கை ரேகையென விரிந்திருக்கும் கிளையதனில் தவமிருக்கும் பறவைக் கூடு அழியா மின்னல் கோடு

ஆவியாகும் குளிரற்ற அறை சூழும் சுவரெங்கும் எரியும் நெருப்புக் காடாகையில் தணல் சிவப்பிழந்து கருப்பென வழிகிறது சித்திரை உடலெங்கும்
சுகம் ... சுகம் ~~~

- வித்யாசன்

#‎மகா‬ ‪#‎சக்தியே‬


யாவும் உணர்தல் வேண்டும் யமக்கு
நிலை மாறுதல் நிகழ் கூடாது நீதி விளக்கு
உடல் சரிபாதியானவளே எமக்கு
ஊழ்வினை தீர்ப்பாய் யிதுவே எம் வழக்கு ;

மகா சக்தியே...

அலைமோதுமென் மனதினை நிலைகொள் செய்
சிலைபோலவேயென் சிந்தனை நிரை செய்
பிழையாவையும் சீராக்கி புகழ் தேடா வை
கலைமகளே எமக்கு எந்நாளும் நீயே மெய் ;

மகா சக்தியே...

பெருங்காடும் சிறு கூடாகும் பாயும் பறவைக்கு
அறியார்கோ சிறு கூடும் பெருங்காடாகும்
நல்தெளிவு மதிதன்னில் யாவும் நிலவொளியாகும்
விளையும் தீதும் நன்றுமிரண்டும் நின் வடிவாகும் ;

மகா சக்தியே...

நாடும் எதுவாகினும் உள்ளிருக்கும் பொருள் நீயாகிடும்
வாடும் மனநோயின்றி உனைப்பாடும் வரம் வேண்டும்
கூடும் சிதை நெருப்பாகினும் நினைக் காணும் அருள் வேண்டும்
ஓடும் சாம்பலிலும் நின் நாமம் ஓதிப் பரவ வேண்டும் ;

மகா சக்தியே...

மாய்ந்து மறுபடியும் நின் பாதமாகி
ஆய்ந்து நல்லொளியாய் விழி கலந்து
மாயை அழிந்து வெண் மலரிதழாய்
வீழ்ந்து தவமிருப்பேன் நின் தாள் பணிந்தே ;

மகா சக்தியே ; மகா சக்தியே...
மகா சக்தியே....

- வித்யாசன்

இன்பம் மற்றதில் காண்பதுண்டோ

வல்லவன் வாழ்வது சொற்பமாம்
அற்பமென ஆயினேனோ ஆயுளது நீள்கிறதே
கற்றபடி பிறருக்குதவா இப்பிறப்பில் இன்பம்
மற்றதில் காண்பதுண்டோ~~~


- வித்யாசன்

புது சக்தி

பகலவனொளி புலமதில் பாய்ந்திட
சோர்வு நீங்கியே நற்சுடர் விழிபடர
உள்ளத்தில் பலமது பாய்ந்து பெருகுதே

கொஞ்சம் குருவிகளும் கொஞ்சும் கிளிகளும் நெஞ்சுறக்கம் தட்டியெழுப்பி சின்னஞ் சிறகதனை நீட்டியே விண்ணில் பறக்க ஊக்கம் காட்டுதே
கூ கூ யெனக் கூவும் குயிலும்
கிரீச் கிரீச்சென பாடும் பறவையும்
கா கா வென கரையும் காகமும் அதிகாலையினை எழுப்பும் அற்புத மிங்குக் கண்டீரோ

தாவிக்குதிக்கும் பூனையும்
நா நீவிக் குரைக்கும் நாயும்
கூவி அழைக்கும் சேவலையும்
கூர்ந்து கவனித்ததுண்டோ
அது சோர்ந்திங்கு பொழுது விடிந்ததுண்டோ

தென்றல் தாளத்திற்கொன்று ஆடும் மரங்களில் நின்று
துள்ளி ஓடும் அணில் அதனினும் அழகுண்டு
பள்ளி விரும்பிடா நதி கண்டு அதில் படுத்துறங்கா மீன் செதில் நீந்துதல் அற்புதமாம்

மண்ணில் இதுபோல் மலர்வது பலவுண்டு
நம்மில் அதனை வுணர்தலில் தான் திறமுண்டு
இதை எண்ணி நிதமும் கண் விழித்தால் உடலெங்கிலும் பொங்கும் புது சக்தியாம்~~~


- வித்யாசன்

ஓமெனும்

பெரும் மலையாவும் நிலையாக நிற்பவனே
தமிழ் மொழியாளும் வல்லமை கொண்டவனே
விழியும் வேலும் ஒன்றென புது விதி செய்வோனே
ஒவ்வொரு விடியலிலும் ஓமெனும் மந்திரம் ஒலிப்போனே~~~


- வித்யாசன்