வெள்ளி, 22 ஜூலை, 2016

மாதவம் செய்தேன்

மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்
சுடராதவன் போல் அருகினில் வந்தான்
இரு தோளில் அள்ளி மலர் மாலையாய் சூடிக் கொண்டான்....


மின்னிடும் மார்பில்
பொன்னென சரிந்தேன்
அதை எண்ணி எண்ணி
பெண்மை அணிந்தேன்
இரு விழி கண்டு
இருதயம் தந்தேன்
இனி அவனில்லை யென்றால்
என்னுயி ரில்லை யென்றேன்....


என் முகம் நோக்கி
வரம் வேண்டிடக் கேட்பான்
ஏதெனக் கொடுப்பாய் என்றால்
என்னுயிர் தருவேனென்பான்
தன் இன்முகம் காட்டி
இன்னும் கேள் என்பான்
இதுவே தக்க தருணமென
முத்தங்கள் தருவான்....


வெட்கம் பூசிய இதழில்
புல்லாங்குழல் இசைப்பான்
பின்னிடை பற்றியே
தன்னுடல் சிலிர்ப்பான்
பின் மடி சாய்ந்தே
நிலவினை பிடிப்பான்
கண்கள் சொருக காதல் செய்வான்
கள்வன் அவனே இதைக் கனவென நகைப்பான்....


மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்~~~




- வித்யாசன்

ராதையின் குரல் கேளாயோ

கண்ணா பாராயோ
ராதையின் குரல் கேளாயோ
பிருந்தாவனம் வாராயோ
புல்லாங்குழல் இசை தாராயோ


வழிமீதிலே விழி எதிர்பார்ப்பிலே
வலி மீறுதே வருகை பொய்யாகையிலே
என் எண்ணம் வண்ணம் யாவும் கண்ணன் பாதையிலே...


வாட்டும் இரவை நான் காட்டவா
வரம்பு மீற முடியா சிறு கூட்டு பறவை நான் அல்லவா
வேதனை தீர்க்க மாலை சூட்டவா
உனை சேரக் காத்துக் கிடக்கும்
பாவை நான் அல்லவா
ஆயர்பாடி அழகு மாதவா
நான் ஆராரோ பாடிட என் மடிமீது சாயவா

கண்ணா பாராயோ....

ராதையின் குரல் கேளாயோ...



- வித்யாசன்

காமராசர்‬

தனக்கென காலணா சேமிக்காது காலத்தை வென்ற கர்மவீரன்
தலைக்கணம் இல்லா தன்னலமற்ற தலைவன்
ஏழையின் பசியை மட்டுமே எண்ணிய எளியோன்
கூரைக்கும் ஏடு கிட்ட வேண்டி கல்விச் சாலை திறந்த மாணவன்
பட்டம் படிக்காது பாராளுமன்றத்தை வகுத்த பகுத்தறிவாளன்
நாட்டின் முன்னேற்றம் ஒன்றை மட்டுமே கரம்பிடித்தக் காதலன்
அரசியலில் கறைபடியாத ஒரே கதராடை கறுப்பு மனிதன்
எங்கள் ‪#‎காமராசர்‬ 







- வித்யாசன்

வைர முத்து

உன்னை பிடிக்கும்
உன் கண்ணை பிடிக்கும்
உன் மீசை பிடிக்கும்
உன் ஆசை பிடிக்கும்
உன் எண்ணம் பிடிக்கும்
உன் எழுத்தும் பிடிக்கும்

எல்லாவற்றையும் விட உன்னிடம் எனக்கு
செவி உதிர தமிழதிர பேசும் பேச்சே மூச்சாய் பிடிக்கும்...


வைர முத்து

ஆசை

பாயா நதியினிலே
எதிர் தாவும் மீனென
மாயா வாழ்வினிலே
மாட்டிக் கொண்டேன்
ஆசை தூண்டிலிலே~~~


- வித்யாசன்

இறைவா‬


ஒன்றுமில்லா வாழ்க்கையில்
ஒவ்வொன்றாய் கொடுத்தாய்
பின் னது என்னவென்று ஏனென்று அறியுமுன் அடுத்தடுத்து தட்டிப் பறித்தாய்
மற்றதற்கு ஏதுமற்ற மானிடர்க்கு யாவும் அறிய வைத்தாய்
குற்றமது நிறைந்தே கொஞ்சம் நெஞ்சினில் நன்மை புகுத்தாய்
மற்றவரை தன்போல் எண்ணாது தானெனும் ஆணவம் அளித்தாய்
கற்றதெல்லாம் கானலாக்கி கர்வத்தில் அழித்தாய்
இங்கே யாவரும் பெற்றதெல்லாம் நிலையற்றதாய் படைத்தே
இவ்வெற்றுடலுக்குள் நீங்கா ஆசை வளர்த்தாய்
கட்டுடல் களைந்தே வெறும் கட்டையென நீட்டிப்படுக்கையிலே
விட்டுக் கொடுக்க இயலா இம்மனதை
#இறைவா நீ எங்கே ஒழித்து வைத்தாய்~~~


- வித்யாசன்

ஒளிர்க்க

காயுமிந்தப் பழமானது உதிரக் காத்திருக்க
பாயுமிந்த இரவின் மேக இதழ் மோதி தேய்ந்திருக்க
அதன் சாறு புழிந்து பூமியெங்கும் சிதறிக்கிடக்க
சின்னஞ் சிறு இலை தாங்கியதை தேன் துளியாய் மிதக்க
அதிகாலை கண்டதனை உண்டெழுந்ததோ பெருஞ் சோதியாய் ஒளிர்க்க~~~

ஓம்... ஓம்... ஓம்...

ள்ளத்தில் உறுதி கொள்
உடைந்தால் உயிரைக் கொல்
வெள்ளமென கோபம் பொங்கிடின்
பள்ளமென பொறுமை கொள் ;


தெள்ளத் தெளிவுடன்
வார்த்தை சொல்
கள்ளமற்ற நெஞ்சத்துடன்
கனிவோடு கேள் ;


நல்லனவற்றுக்கு நயமுடன்
கொடு தோள்
எதிர் எவரெனினும் தயங்கிடாது
மார் நிமிர்த்தி நில் ;


யாவிலும் பற்றற்று
இன்புற்று ஆள்
அன்பது வைத்தாயின்
அடிமையாகாது மீள் ;

கொடுமை காண்பின்
உயர்த்திடு வாள்
வறுமை உடுப்பினும்
நெறி மாறாது வாழ் ;


சுதந்திரக் காற்றாய்
நாளெல்லாம் சுழல்
சுவர் மோதும் பந்தாய்
வேண்டும் மீண்டும் எழல் ;


மரமென உருமாறி
நித்தமும் கொடு நிழல்
மனமது மலிவாகாது
சூட்சமம் அவிழ் ;


முயலுதல் முடங்காது
தொடர்ந்திடும் அலை கடல்
அதுபோல் அடங்கிடாது
அனுதினமும் வீழ் ;


எது நேர்வினும் வேண்டி
நிகழ்ந்திடாது பிறர் தொழல்
வையத்தில் அழியா அழகது
இயற்கையின் எழில் ;


யாவுமது விலகினும்
துணையிருக்கும் தமிழ்
சிதை மூட்டி சாம்பலாகினும்
சாகாது சிவப்பொருள் ;


ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்

நெஞ்சதன்மீது

அன்பொழுகும் நெஞ்சதன்மீது
அலைபாயும் ஆசை ஓய்ந்திடலாகாது
இன்பமது நாளும் நிறைந்திங்கே வாழ்தலென்பது
துன்பமது தீர்த்திடுதல் துறப்பதன் ஒன்றதுவே
என்பது உண்மையென அறிந்தும்
இதயத்தில் ஏந்தினேன் எல்லையில்லாக் காதலை~~~


- வித்யாசன்

மறுக்கிறது

ஒரு பெரு வயிறு நிறைய
சிறு சிறு பருக்கையாலே இயலுகிறது
நம் மனம்தான் அதையுணர்ந்தும் மறுக்கிறது


- வித்யாசன்

#‎கண்ணா‬... என்ன மனமிதுவோ

என்ன மனம் இதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ


என்னை நான் மறப்பதோ
உன்னை என்னில் எங்ஙனம் மறைப்பதோ


சொல்லில் பொய் வைப்பதோ
அதன் பொருள் உண்மைக் காதல் இருப்பதோ


விண்ணில் யாவும் நின் முகம் சிரிப்பதோ 
அது மண்ணில் வீழ்ந்தால் முத்தம் கொடுப்பதோ

 காற்றில் எங்கும் உந்தன் ஒலி கேட்பதோ
அதன் பாட்டில் தான் இலை தன் தலை அசைக்குதோ


கண்ணா...
என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ
என்ன மனம் இதுவோ ;


அன்பே துன்பமாவதோ
அது நின்மேல் கொண்ட பாசமல்லவோ


என் மேல் நேசம் குறைவதுவோ
அது தீர்ந்தால் உயிர் எங்ஙனம் வாழ்வதுவோ


கண்ணில் உறக்கம் கொள்வதுவோ
கள்வா நீ கனவில் உலா வருவதுவோ


நானெனில் உன்னில் அடங்கியதுவோ
தானென பிரிவது இறப்பிலும் நிகழாதது அல்லவோ


என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட ஆகாதோ~~~


கண்ணா...
என்ன மனமிதுவோ



- வித்யாசன்

விதி

விதியென்று எதை நான் சொல்ல
விரும்பா வெறுமேனி வளர்த்தாய்
அவ்விளையாட்டு போதாதென்று அதற்குள் ஆசை கொடுத்தாய்
உறவென்று நட்புலகென்று நலமாய் அளித்தாய்
அஃதும் ஓர்நாள் நஞ்சென்று நெஞ்சதனை புலம்பவைத்தாய்
கரும்பாய் இனிக்கும் பருவமதனில் உண்மை காதல் விதைத்தாய்
அது கை கூடாது கருணையற்று பிரித்தே ரசித்தாய்
காலம் கடக்க தர்மம் இதுவென கல்யாணம் முடித்தாய்
காமம் உடைபட கர்மம் எனை மீண்டும் குழந்தையாய் படைத்தாய்
இது போதாது போதாதென பொருள் தேடி முதுகெலும்பு வளைத்தாய்
பொய்யுரைக்க சுயநலமிக்க புகழ் வேண்டி உறவாடி கெடுத்தாய்
மெய்யற்றது இளமை என்பதறி யாததாய் அவ்வழி முடித்தாய்
இறுதியில் இவ்வுடல் பலவீனமாக இருப்போருக்கு எனை பாரமாக்கி சிரித்தாய்
இறைவா...
இதுவே எம் வாழ்வென்று பிறர்போல் மண் மூடி தீ தின்றிடாது
என்றும் அழியா வடிவான எழுத்தாய் நிற்க அருள்விப்பாய்~~~


- வித்யாசன்

பரா சக்தி

யாவுமிங்கு வெற்றுப் பொருளடி
பெரும் அன்பும் மாயும் விட்டுப் பிரிந்த சில நொடி
அடுக்கடுக்காய் கட்டி வைத்ததெல்லாம் கனவாய் போகுமடி
கெட்டு குப்பையிலேயிடும் எச்சில் பொருளாய் ஓர் நாள் நம் உடலாகுமடி
ஆசை தொட்டுப் படர்ந்ததெல்லாம் வெட்டி புதைக்கையிலே அற்பமாவதேனடி
அனைத்தையும் அறியவைத்து அதன் வழி செல்லாது ஆடச்செய்யும் கோலமென்னடி
உற்றுப் பார்த்தால் அவனியில் ஒன்றிலுமில்லை உன்போல் அழகடி
எனை சற்றே தீபமென எரியவைத்து அதன் ஜோதியாய் நீ யெங்கும் பரவி நிற்பதென்னடி
பரா சக்தியே~~~


- வித்யாசன்

அணிலாகியிருக்கலாம்

ஒரு சமாதி எப்படி இருக்குமென்பதை
இருவிழி நுழைந்தபின் புலப்பட்டிருக்கலாம்


நகரும் குடங்களுக்கு பின்னால்
நகர்ந்து சென்றுயிருக்கலாம் நந்தவனம்


ஒரு யுகம் குடிக்கும் பின்கழுத்து முத்தத்தில்
பின்னரவில் உறைந்திருக்கலாம் பித்தனாகி


விரல் மடித்து இறுக்கிய அணைப்பில்
இன்னும் கொஞ்சம் இதழ் சிவந்திருக்கலாம்


மிளிரும் குறுகிய வளைவினில்
முயல் தடவலாய் நூலாடையில் தொலைந்திருக்கலாம் 


அப்பெரிய அழகிய மரத்தினடிவாரத்தில்
பூத்திருக்கும் இலைமீது குதித்தாடும்
ஒற்றை அணிலாகியிருக்கலாம் ~~~


- வித்யாசன்

காமமாக

பார்த்திருந்த பார்வையெல்லாம் வெறும் பாத்திரமாக
காத்திருந்த காலமெல்லாம் கலையும் கனவாக
ஒன்று சேர்ந்திருந்த கோலமெல்லாம் தனிமையாக
முத்தமிட்ட உதடுகள் உதறும் கோவமாக
செத்த சவமாய் ஆன பிரிவது பின்னாளில் சுத்தமாய் மறந்துபோக
உத்தம காதலென்று இங்கேதுண்டு யாவும் காமமாக~~~


- வித்யாசன்

இசை ராஜா

இவ்வானம் எந்நிலமென்று பாராது எந்நேரமும் பொழியக் கூடியது

இங்கிருந்து கடக்கும் மேகம் யாவும் ஹார்மோனியமாவதில் எந்த வியப்புமில்லை

இவ்விடத்தில் பறக்கும் வெள்ளைபுறாக்கள் மட்டுமல்ல எல்லா சிறகுகளும் இசைக்கும் புது ஸ்வரம்தான்

அத்தனை உணர்வுக்கும் ஒரே குரல்தான் அதனை எத்தனை முறை கேட்டாலும் அது சுக வரம்தான்

இதிலிருந்து வீழும் துளிகள் பெருங்கடலை மட்டுமல்ல சிறு குட்டையையும் குளிர்விக்கும்

ஆம்...
இந்த இசை தட்டுதான் நித்தமும் தேய்ந்து வளர்ந்து நம்மை மட்டுமல்ல ஒவ்வொரு இரவையும் தாலாட்டி தூங்கவைக்கிறது
மானிடரை எல்லாம் மயக்கும் இசையில் குழந்தையாக்கும் எங்கள் இசை ராஜா குழந்தைக்கு
இனிய தாலாட்டு நாள்

வாழ்த்துக்கள்~~~

** காட்சி தந்தாள் காளி **

காலை தூக்கி ஆடி நின்றாள் காலையில் காளி
இந்நாளை நல்வேளை ஆக்கிடுவாள் எம் தேவி
இருளை தூளாக்கி பெரும் சுடரானவள் சூலி
அனலை விழியாக்கி சூடி எதிர் நின்றாள் யாதுமாகி ;


மோகம் குடித்து மோட்சம் அருள்வாள் ஆதி சிவனின் பாதி
கருமேகமென உருவெடுத்து தன் கோவம் தீர்த்து பொழிந்திடுவாள் மாரி
பூதகணம் சூழ நா நாகமென நீள நல் வாக்கு தந்திடுவாள் ஓம்காரி
பாதகம் புரிவோரை பாராது நின் பாதங்களால் நசுக்கிடுவாய் பரா சக்தி ;


மண்டை ஓடு அணிந்து மாயை யாவும் கொன்று மகிழ்ந்திடுவாள் மாரி
தொண்டர் தம்மை நாடி வந்து தொழுவோருக்கு இம்மை நீக்குபவளே நீலி
அன்பை ஆயிரங் கரங்களில் அள்ளிக் கொடுக்கும் ஆனந்த ஜோதி
ஆணவம் எங்கும் தலைகாட்டினும் அதனை கொய்யும் அகோரி ;


வானெங்கும் படர்ந்து எம் நாவில் நிறைந்து நிற்கும் வாணி
தீதெங்கு நிகழினும் தானங்கு தயங்காது உதிரம் நனைக்கும் மேனி
பாரெங்கும் கேள் ஒலிக்கின்றது பராசக்தி நின் பெயரை ஓயாது மணி
யாரென்று எனை அறிந்து நின் தாள் பணிந்தேன் தாயே நீயே எனதவனி ;


- வித்யாசன்

கண் மூடவைக்க

காரிருளில் விழி காந்த காத்திருக்க
அந்நாந்து பார்த்திருக்கும் நிலவாய் நீ பூத்திருக்க
இடையில் கரையும் தூக்கத்தை யாரெடுக்க
தோள் மீது தாலாட்டி அதன் கண் மூடவைக்க~~~


- வித்யாசன்

விரகம்...

மறைக்கப்பட்ட அழகின் நூல் கோர்ப்பு நழுவலில் விழிக் கண்ணாடி பாதரசமெங்கும் வழிகிறது விரகம்...

ஒரு தழுவலுக்கு முன் விரல் தீண்டலின் உஷ்ணத்தில் உடலெங்கும் பற்றி எரியும் காட்டினை அனைக்கிறது சிறு வியர்வை...

இக்கடுங் குளிரில் சிக்கிமுக்கி கல்லென உரசிடும் இதழ் நுனியில் கனல் சிவக்கிறது...

அக்னி மழையில் எழுந்த சர்பமொன்று மலை மீதேறி இடை கிளை பற்றி இலை ஒலிந்து பின்னது தூரலாய் வீழ்ந்து இளைப்பாறியது...

ஆப்பிள்களும், கறுந்திராட்சைகளும் குலுங்கும் தோட்டத்தில் தாளிட வாய்ப்பற்ற அடர் இருளில் நிர்வாணம் வெட்கத்தில் ஆடை உதறி குறி சொல்லுகிறது...

இனி...
இந்த சாமக் கோடாங்கியிலிருந்து எழும் சப்தம்
ஒவ்வொரு படுக்கையிலும் உடுக்கையாய் எதிரொலிக்கும்~~~


- வித்யாசன்

ஆசை

அத்தனை உண்மையும் ஒருசேர நாவறுத்து
பொய் எச்சிலை நக்கிக் கொண்டிருக்க
அம்மணமாய் வழிந்தது ஆசை ரத்தம்~~~


- வித்யாசன்