ஞாயிறு, 26 ஏப்ரல், 2015


அவளும்-நானும்-உரையாடல்-1 (உதடு)


அவள்
வெகுநேரம் காக்க வைத்து விட்டேனா

நான்
மனதில் சிந்தித்து கொண்டிருப்பதால் காத்திருப்பது தெரியவில்லை

அவள்
எதை பற்றிய சிந்தனை

நான்
உன் உதடுகளை பற்றிதான்

அவள்
உதடா ? ஏன் ?

நான்
ஆமாம்...
நேற்று என்னோடு பேச
மறுத்தது உன் உதடு தானே...
அதனால்தான் அதை சிந்தித்தேன்...


அவள்
என்ன வந்தது ?

நான்
கவிதை வந்தது

அவள்
பெரிதாக என்ன சொல்லிவிட போகிறீர்கள்

நான்
சொல்லவா ?

அவள்
ம்ம்ம்......

நான்

உடைந்து போகாத இரட்டை அலை
இரு பக்கம் கொண்ட காதல் நூலகம்

விழிகள் இல்லாத இமைகள்
நதிகள் பாயாத கரைகள்

தேய்ந்து போன சிவப்பு நிலா
உரைந்து போன அருவி

வாடாத இரு பூ இதழ்
கலையாத மேகம்

ஈரமான பாலைவனம்
புன்னகைக்கும் மொட்டு

அமர்ந்து கொள்ளும் படித்துறை
ஒற்றை நிறம் கொண்ட வானவில்

நாணல் பூட்டாத வில்
காயம் ஏற்படுத்தாத வாள்

உருகி வழியாத பனிக்கட்டி
ஒருவர் மட்டும் பயணிக்கும் படகு

பேசும் இதயம்
சிறகு விரிக்கும் அதிசிய இலை

கீறல் இல்லாத கிளை
செதுக்கப்பட்ட வழுக்குப் பாறை[/color]


அவள்
போதும், போதும்!

நான்
இன்னும் சொல்கிறேன் கேள்...

முத்தில்லாத சிப்பி
கூடு இல்லாத நத்தை

விரிந்து சுருங்கும் விநோத சாலை
விரல்கள் விளையாடும் சிறிய மலை

தூர பறக்கும் பறவையின் உருவம்
மொட்டவிழ்ந்த ரோஜாவின் வடிவம்

தூக்கம் தராத தலையணை
உரிக்கபடாத மாதுளை

குறுக்கு, நெடுக்காக திறந்து மூடும் கதவு
மயக்கம் தீர்க்காத மது கோப்பை

கீழே ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்து
மேலே ஆங்கிலத்தின் பதிமூன்றாவது எழுத்து

முகத்திற்கு சூட்டப்பட்ட முத்து மாலை
பாதியளவு இறகை விரித்து வைத்த பட்டாம் பூச்சி

நறுக்கி வைக்கபட்ட ஆரஞ்சு சுளை
அலையில் வீசுப்படும் வலை

குழையும் வைரம்
தேன் சுரக்கும் ஓடை

மீட்டாது இசை தரும் வீணை
மடித்து வைக்கப்பட்ட கடல்

சுவைக்க, சுவைக்க எனக்கு மட்டும்
கவிதையாகிறதே உனது
இதழ்.....


அவள்
உதடு வலிக்க வில்லையா

நான்
இன்னும் முழுமையாக ரசிக்க வில்லையடி
மெலிந்திருக்கும் ரோஜாவை
இந்த ராஜா !

-வித்யாசன்


இரவு தூங்கும் வேளையில்
மேகப் போர்வை-யை நகர்த்தி
மோகப் பார்வை-யை வீசுகிறது
வானத்து வெண்ணிலா...!!

-வித்யாசன்

உன்னோடு பேசும் பொழுது எல்லாம்
என் வார்த்தைகளுக்கு சிறகு முளைக்கிறது;

உன் இமை எனும் கிளையில் அமர்ந்து
இந்த உலகை ரசிக்க...!!!

- வித்யாசன்

மரணம் ( June 12 - 2013)

(இன்று எனது அலுவலக நண்பரின் தந்தை மரணம். அந்த தருணம்.)

அழுகையின் சப்தங்களில்
அதிரும் உணர்வுகள்

விழிகளின் நீர் பிசுபிசுப்பில்
உருண்டோடும் நினைவுகள்

கதறும் உதடுகளின் வார்தைகளில்
முகம் தேடும் ஏக்கங்கள்

எரிந்த பின்னும் கரைந்த திரியாய்- நீ
உருகி வழியும் மெழுகாய்-நான்

கடைசி நகர்தலில் நாலாக
பல நாள் கலந்தது நீயும்- நானுமாக

அருகருகில் இருந்தும் தொலைதூரமாய்
மறுபடியும் பேசியதாய் அந்த சில வார்த்தைகள்

தெருவெங்கும் வெறும் உடலாய் நீ
உயிருந்தும் நடந்தேன் சடலமாய் நான்

உறவை படைத்து உயிரை பிரித்த
உலகம் அறியா விந்தையாய்

எனக்கான உன் முகத்தை மறப்பேனோ
மீண்டும் விழிகள் தடவியது
கடைசி பார்வை ...

கண்ணீராய்...!!

- வித்யாசன்
இரவு உறங்க
இயற்கை இசைக்கும் குறுந்தகடு
நிலா !!

- வித்யாசன்

என்...
கண்ணீருக்கு
நீ...
காரணம் என்று தெரிந்திருந்தும்;

உன்னை மட்டும்தான்
காண ஏங்குகிறது
என்
கண்கள்...!!

- வித்யாசன்

கோவில் சுவற்றில்
உன் பெயர் எழுதியிருந்தது
அதனால்தான் கும்பிடப்போகிறேன்
தினமும்...!!

-வித்யாசன்

உனக்கு தெரியுமா ?

நீ எப்போதெல்லாம்
என் பக்கத்தில் இருக்கிறாயோ
அப்போதெல்லாம்
எப்போதும்போல் இருப்பதில்லை
நான் என்பது !!!


எப்போதும் தொலைந்தவனாய் நான்
தொலைவினில் நீ...

இப்போதும் கடல்நடுவில் நான்
கரையோரத்தில் நீ...

மறந்திருக்க முடியாத நிலையில் நான்
மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் நீ...

இழக்க நினைக்காத இடத்தில் நான்
ஏற்க முடியாத வகையில் நீ...

பிரிதல் வந்தும் பிரியாது நான்
புரிதல் தந்து விலகியது நீ...

மரணம் வருவது எப்போதென்று நான்
மறுபடியும் பிறப்போம் என்றாய் நீ...

உலகம் தாண்டியதாய் என் வாழ்க்கை
உடையாது ஒருபோதும் உன் சேர்க்கை

முடியாது என்று யார் கூறினும்
நினைவுக்கு யார் விதிக்க கூடும் தடை !!!

- வித்யாசன்

என்னை அதிகம் பேசவிட்டு
அடக்கமாய் இருக்கும்
உன் உதடுகளைத்தான்
எனக்கு அளவுக்கதிகமாய் பிடிக்கும்...!!!

- வித்யாசன்

நம்
மூன்று எழுத்து
உலகம்
அம்மா...!!


இளையராஜாவுக்கு பரிசு


இளைய ராஜா-வின் காதலர்களில் நானும் ஒருவன்...

அவருக்காக பாடல் ஒன்றை ஒரு நடு இரவில் மனதில் எழுதினேன்
நேரில் தர இது வரை வாய்ப்பில்லை.

ஆதலால்...

இன்று அவரது 70 வயதில் பிறந்த நாள் பரிசாகத் தருகின்றேன்.
எண்ணற்ற இதய தளத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இளையராஜாவுக்கு
இணைய தளத்தில்...!!

...............................
இதோ அந்த பாடல்
..............................

நான் போகும் பாதை எங்கே யாருக்கும் தெரியாது
நான் போகும் பயணம் எங்கே எவருக்கும் புரியாது
போகாத பாதை எல்லாம் போவோமே எல்லோரும்
புரியாத திசைகள் எல்லாம் அலைவோமே தினந்தோறும்
ஆஹாயம் போலே வாழ்க்கை தானடா
ஆதாரம் இல்லை வாழ்வில் ஏனடா...

என்னுலகம் எதுவென்று நான்சொல்லக் கூடுமோ
எனக்கெது வந்தாலும் அது என் தாய்க்கு ஈடாகுமோ;
மண்ணுலகம் கண்டதெல்லாம் மாயமென்று ஆகுமோ
எண்ணிலிருந்து வந்ததெல்லாம் ஈசனது நாடகமோ;

(நான் போகும் பாதை எங்கே ....)

கடலை தேடும் நதியாக - நான்
இசையைத் தேடுகிறேன் நிதம் காற்றாக;
ஓயும் இந்த வாழ்கையில் - என்றும்
ஓய்வதில்லை எந்தன் எண்ணலைகள்;

(நான் போகும் பாதை எங்கே ....)

கண்ணுறக்கம் என்பது எண்ணுறக்கமில்லையே
நான் காணும் காட்சியாவும் என் மனசாட்சியே;
வான் புகழானாலும் தான் என வாராதே
நான் படைத்த படைப்பெல்லாம் இறையருளானதே;

(நான் போகும் பாதை எங்கே ....)

எத்தனையோ
கவிதைகள் எழுதிய
என் பேனா-வுக்கு தெரியும்;

என் இதயத்தை விட
உயர்வான இடம்
அதற்கு வேறு ஒன்றுமில்லை என்று


- வித்யாசன்
சாகும் வரை நினை
நிலவு தேயும் வரை அலை

மெளனித்தே மரித்து போ
சில நிமிடங்களில் நிலைத்து வா

கவிதையாய் கட்டிப் பிடி
கண்ணீராய் கொட்டி விடு

அவ்வப்போது விலகு
முப்பொழுதும் உருகு

முன் நிகழ்ந்ததை அசைபோடு
விதியோட சமாதானம் தேடு

காற்றோடு நித்தமும் வாடு
கனவுக்குள்ளே வாழ்ந்திடு

சேர்ந்தது அழகிய நிமிடத்தோடு
பிரிந்தது யாருக்கும் புரியாத உணர்வோடு

மறவாது மறந்தேன் காலத்தோடு
தனியாகும்வேளையில் தாகத்தோடு

பிரிவுக்கு காரணம் அறியாது
அறிந்திருந்தால் நம்மில் பிரிவேது

மீண்டும் எப்போது சந்திப்பு ஏக்கத்தோடு
நிகழாதென்றிருந்தும் நிகழாதா என்கிறது மனம்

எனக்கு...
இங்கே
இன்றும்
இப்படித்தான்

உனக்கு...
அங்கே
என்றும்
இப்படித்தான்

அறிவேன்
அறிவேன்
ஆதலால்தான்
அழுகிறேன்
கண்ணீர் இன்றி...!!!

- வித்யாசன்
திறமை
என்பது
தோட்டாக்கள் போன்றது;

யார் தொட்டாலும்
வெடித்துச் சிதற
தயக்கம் காட்டுவதில்லை

- வித்யாசன்

எப்போதெல்லாம் நீ
பார்க்கிறாயோ
அப்போதெல்லாம் நான்
பூக்கிறேன்

ஒரு நிமிடம்
நீ பார்த்தால் போதும்
ஒவ்வொரு நிமிடமும்
அது வருடும்

நீ
உயர பார்க்காதே
பறவைகள்
தற்கொலை செய்து கொள்ளும்

நீ
நிமிர்ந்து பார்க்காதே
நிலா
தேய்ந்துவிடும்

எப்படிச் சொல்வது
உன் இரு விழி
என் வழியானதை

இதழ்கள் சிப்பது தெரியும்
விழிகள் சிரிப்பது அதிசயம்

குளம் இல்லை...
எப்படி பூத்தது ?
இலையின் நடுவில்
சிகப்பு தாமரை

இப்படி பார்க்காதே
இதயம் இடம் மாறுகிறது...!!

திங்கள், 18 ஜூன், 2012

தீரா- மீரா 17

வானம் உடைந்தால்
மழையாகும்

நட்சத்திரம் உடைந்தால்
தீப் பொறியாகும்

சிப்பி உடைந்தால்
முத்தாகும்

அலை உடைந்தால்
நுரையாகும்

காற்றுடைந்தால்
வெற்றிடமாகும்

நிலா உடைந்தால்
தேய்பிறையாகும்

கண்ணாடி உடைந்தால்
காட்சி பலவாகும்

வெயில் உடைந்தால்
குளிர் கொண்டாடும்

மனம் உடைந்தால்
உயிர் திண்டாடும்

உயிர் உடைந்தால்
உடல் விடைபெறும்

காதல் உடைந்தால்
கண்ணீர் உண்டாகும்

தீரா- மீரா- வின்
காதல் உடைந்தது
உறவுகள் கண் தொட்டதால்;

ஒரு பெண் எப்போது
மென்மையை உடைப்பாள்?
பெண்மை மீது பேய்களின்
நகம் கீறும்போது;

ஒரு பெண் எப்போது
மென்னையை மேலும் உடுத்துவாள் ?
உண்மை காதல்- உறவுகளின்
விரல்களால் பிரித்தெடுக்கும்போது;

மீரா-தீரா விடமிருந்து
பிரித்தெடுக்கப்பட்டாளா?
இல்லை...
இல்லை....
பிய்த்து எடுக்கப்பட்டாள்;

வலை
கிழிபட்ட சிலந்தியாய்
துடித்தால் மீரா;

மீரா துடிக்க
தீரா வெடித்தான்;

தீராவின் விழிகள்
சிகப்பு வானமானது;
கர்ஜித்தான்...
விடுங்கள் தீரா-வை
காட்டுச் சிங்கமாய்;

மீரா-வின் உறவுகள்
உறுமியது;
தீரா-வின் கர்ஜிப்பிக்கு
எதிர்ப்பு கிளம்பியது;
சற்று நேரத்திற்குள்
ஊர் கூடியது;
இரு தேசத்தின் படை மோதிய
சப்தம் அங்கே எழுந்தது;

பூ-வின் இதழில் சாட்டையடியாய்
மீராவின் கன்னத்தில் விரல் காயம்;
புலி-யின் கொடூர தாக்குதலாய்
தீராவின் தேகம் அடித்த உடலில்;

நடுக்கம் அதிகமானது
பதற்றம் பதறிப்போனது
திடுக்கிடும் நேரத்தில்
தீராவை ரத்த வெள்ளமாக்கியது
மீராவின் உறவுகள்;

தீரா மயங்கியபடி
புலி யயன புலம்பினான்
மீரா... மீரா... மீ...ரா.....

மீரா உருகியபடி
இழுத்துச் செல்லப்பட்டாள்
தீரா... தீரா... தீ..ரா....

(தொடரும்)

வெள்ளி, 30 மார்ச், 2012

தீரா - மீரா 16

நீள ஆற்றின் ஓரத்தில்
வீங்கிக் கிடந்த பாறையாய்
மீராவின் இதழ்கரை ஓரத்தில்
 மலையயன உயர்ந்திருந்தது காயம்...

மீரா- தீராவிடம்
வீட்டில் கேட்டால் என்ன சொல்ல?
தீரா- மீராவிடம்
பழம் என்று நினைத்து பறவை ஒன்று கொத்தியது என்று...!


மீரா....
முறைத்து சிரித்தாள்

தீரா...
சிரித்து சிறகடித்தான்...!

நிலா
மறைத்து வைக்கப்படுகிறது
பகல் முழுவதும்...

சூரியன்
மறைத்து வைக்கப்படுகிறான்
இரவு முழுவதும்...

மேகம்
ஒலித்து வைக்கப்படுகிறது
கடல் நீராக...

மழை
ஒலித்து வைக்கப்படுகிறது
மேகமாக...

ஸ்வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
உடலுக்குள்ளே...

வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
இதழுக்குள்ளே...

இப்படி...
பல ஒலிந்தே
பிறர் தெரிய
ஒளிர்கிறது...

சில ஒலிந்தே
பிறர் தெரியாது
மறைகிறது...!

தீராவின்- மீராவின்
காதலும் அப்படித்தான்
பல காலமாக மறைக்கப்பட்டிருந்தது...


வானுக்கும், மண்ணுக்கும்
நிலவுக்கும், ஆதவனுக்கும்
வெயிலுக்கும், மழைக்கும்
இனிப்புக்கும், கசப்புக்கும்
பிரிவுக்கும், அனைப்புக்கும்
இமைக்கும், விழிக்கும்
நாவுக்கும், தொண்டைக்கும்
விரலுக்கும், உடலுக்கும்
இலைக்கும், நிழலுக்கும்
நினைவுக்கும், கனவுக்கும்
காற்றுக்கும், ஆடைக்கும்
நதிக்கும், கரைக்கும்
குயிலுக்கும், கிளைக்கும்
மலைக்கும், குளிருக்கும்
தீரா- தோலுக்கும்
மீரா- மடிக்கும்
மட்டுமே தெரிந்த காதல்...


முதல் முறையாக தெரிந்தது...?

(தொடரும்...)

தஞ்சுவும் தாத்தாவும் 2

கரையை கண்டதும் தஞ்சு மீனுக்கு பயங்கர சந்தோசம். துள்ளி குதித்து கரையின் மேற்பரப்பில் உள்ள அழகை கண்டு ரசித்தது. அங்கேயும், இங்கேயுமாக பாய்ந்து நீந்தியது. மற்ற மீன்கள் தஞ்சுவின் சேட்டையை கண்டு சிரித்தன.

சற்று தூரத்தில் ஒரு மீன் நீந்த முடியாமல் தள்ளித்துக் கொண்டிருப்பதை தஞ்சு பார்த்தான். யார் என கேட்டான். மற்ற மீன்கள் இதுதான் முரட்டு முதிய மீன் என்று பயத்தோடு கூறின. தஞ்சு ஏன் இப்படி தள்ளாடி நீந்துகிறது என கேட்டான். அது நடிக்கிறது கிட்ட போனால் கடித்துவிடும் என்றன மற்ற மீன்கள். ஆனால் தஞ்சுவுற்கு அது உண்மையாக தென்படவில்லை.

தஞ்சு முதிய மீனிடம் சென்றது. மற்ற மீன்கள் அனைத்தும் தடுத்தன. ஆனால் தந்திரமாக தாத்தா மீன் அருகில் சென்றது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தாத்தா மீன் உயிருக்கு போராடி கொண்டிருந்து. அருகில் சென்ற தஞ்சு என்ன வேண்டும் தாத்தா என்றது... பசி பசி என்றது தாத்தா மீன்... தஞ்சு மற்ற மீன்களுக்கு ஆணையிட்டது. சீக்கிரம் இரை கொண்டு வாருங்கள் என்று. அனைத்து மீன் குஞ்சுகளும் இரை தேடி சென்று ஒரு வழியாக ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தது.

தஞ்சு அந்த ஆகாரத்தை தாத்தா மீனிற்கு கொடுத்தான். சில மணி நேரம் கழித்து தாத்தா மீன் கண் விழித்தது. செதில்களுக்கு புத்துயிர் கிடைத்தது. தாத்தா மீனின் விழிகளில் நீர் வழிந்தது நன்றி என்று. இதனை கண்ட மற்ற மீன்கள் மெல்ல நெருங்கி வந்தன ஆச்சர்யத்துடன்.

தாத்தா மீனை பார்த்து தஞ்சு கேட்டான் உங்களது பெயர் என்ன என்று? என் பெயரா வீரா என்றது.. தஞ்சு பயங்கரமாக சிரித்தது. கடலே அந்த சிரிப்பில் சற்று உள்வாங்கியது. வீரன் கேட்டான் ஏன் இந்த சிரிப்பு என்று. இல்லை தாத்தா உங்களை முரட்டு மீன் என்று தானே கூப்பிடுவார்கள் நீங்கள் என்னவென்றால் வீரா என்கிறீர்களே என்று... இதை கேட்டதும் வீராவும் சிரிக்க மற்ற அனைத்து மீன்களும் சிரித்தன கடல் அலைபோல.


( தொடரும்...)

தஞ்சுவும் தாத்தாவும் - 1

கண்கள் எட்டும் தூரம் கடற்கரை மணல்வெளி சிரிப்பு, மனித கால்தடம் அற்ற பகுதி. அற்புதங்கள் நிரம்பி வழியும் இயற்கையின் பொக்கிசம், கம்பீரமாக பாய்ந்து வரும் நீல அலைகளுக்குள் ஆதவன் எழுந்து, விழுந்து விçயாடும் அழகிய கடல் அது...

அந்த கடலுக்கு ஒரு புதிய மீன் குஞ்சு பிறந்தது பெயர் தஞ்சு. மிகவும் சுட்டியான மீன் குஞ்சு அது. மற்ற குஞ்சுகளை போன்றுஅமையானதாக இருக்காது. பயப்படாது. எல்லாவற்çயும் விட அழகிய கடலை விட தஞ்சுவே அழகானது ஆதலால். அத்தனை மீன்களுக்கும் தஞ்சு செல்லப்பிள்ளை. கடல் அலையே தஞ்சு... தஞ்சு... என்று சொல்லிக் கொண்டே  கரையில் உடையும்.

அந்த ஆழமான கடலில் கணக்கில் அடங்காத வண்ண மீன்கள் வாழ்ந்து கொண்டிருந்தது வளையிட்டு பிடிக்க யாரும் இல்லாததால் இனிமையாக. கடல் மீன்களின் குஞ்சு (குட்டி) மீன்கள் தினமும் கரையில் வந்து விளையாடிச் செல்வது வழக்கம். அப்படி விளையாடி செல்லும் போது தாய் மீன்கள் குஞ்சு மீன்களுக்கு சொல்லும் ஒரே விசயம். கரையில் இருக்கும் முரட்டு முதிய மீனின் பக்கம் செல்லவோ, பேசவோ கூடாது... மீறி சென்றால் கடித்து தின்று விடும்.

ஆகையால் கரைக்கு  விளையாடப் போகும் குஞ்சு மீன்கள், பயத்தில் முதிய மீன் இருக்கும் பக்கத்தில் செல்வதே இல்லை.
அதே போன்று அந்த முதிய மீனும் மற்ற மீன்களுடன் பேசாது. கரையோரத்திலே நீந்திக் கொண்டிருக்கும்.  கடலுக்குள் வராது.

இப்படியே  சில ஆண்டுகள் கழிந்தன. தஞ்சு மீன் வளர்ந்துவிட்டான். மற்ற மீன்கள் போல தானும் கரைக்கு சென்று விளையாடும் பருவத்தை எட்டி விட்டான். ஆனால் தஞ்சுவின் தாய்க்கு அது பயத்தை கூட்டியது. தஞ்சு சேட்டை காரன், சொல் பேச்சை கேட்காதவன். அவன் முரட்டு முதிய மீனிடம் ஏதாவது வம்பு செய்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாள். இதனால் தஞ்சுவை கரைக்கு அனுப்ப மறுத்தால்.

ஒருநாள் தஞ்சு தாய்கு தெரியாமல், மற்ற குஞ்சு மீன்களுடன் கரைக்கு வந்துவிட்டான் விளையாட. மற்ற மீன்கள் கடலிலிருந்து கரை வரும் வரை தஞ்சுவிடம் சொன்னது முரட்டு மீன் பக்கம் செல்லாதே என்று. தஞ்சு தçயை ஆட்டிக் கொண்டே கனவுகளோடு நீந்தி வந்தான். கரையை காணப்போகும் நினைவில்.

தஞ்சு மீன் மட்டும் தாத்தா மீனின் அருகில் தயிரியமாக வந்து பேசியது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கரை வந்நது... ?

(தொடரும்...)

செவ்வாய், 27 மார்ச், 2012

தீரா மீரா 15

மீரா -வின்
கேள்விக்கு
தீரா-வின் பதில் என்னவாக
இருக்கும்...?


புல்லாங்குழல் துளை மீது
ஈரம் படாமல் ஊதினால்
பிறப்பது ராகம்.

இலை இரண்டும்
ஈரத்தோடு உறிஞ்சினால்
உதிப்பது காமம்...!


மீராவின் கேள்விக்கு
தீராவின் பதில்...?

பட்டாம்பூச்சி கூட்டை விட்டு
புறப்பட்டதாய்
தோல் உரிக்கப்பட்டது
மீராவின் உதடுகள்...!

பிரிவின் இடைவெளி
எவ்வளவு சுகமானது
என்று தெரியுமா?

கோடை காலம்
மேடை போட்டால்
 கரை ஓரத்தில் மட்டுமல்ல -ஆற்றின்
நடுவிலும் மணல்களே கும்மாலமிடும்

இங்கே தகிக்கிறது
மழையின் பிரிவு...!

இலையுதிர் காலம்
இயங்க ஆரம்பித்துவிட்டால்
 கிளைகள் மட்டுமல்ல மரமே
நிர்வாண கோலமாகிவிடும்

இங்கே உதிர்கிறது
வசந்த காலத்தின் பிரிவு...!

இயற்கையின் பிரிவு
எதார்த்தமானது
இதயங்களின் பிரிவு
பயங்கரமானது...!

பிரிவு
சரிவை
ஏற்படுத்துவதில்லை
மாறாக...
உயர்வையே
ஏற்கிறது...!


தீரா...
உதடும்
மீரா..
உதடும்
ஈரம் வற்றத்
தொடங்கியது.

நீரில்லா
கடலில்
மிதந்தன
நான்கு படகுகள்
அலை மோதிக் கொண்டே...!

திடுக்கென
முகத்தை
வெடுக்கென
எடுத்தால்...

தீரா
படக்கென
மீரா இதழ் பார்த்து
சிரித்தான்...

உன் இதழுக்கு
யார் மருதாணியிட்டது என்று...!


மீரா...
வானம் மண்ணை தொட்டதாய்
நாணம் கொண்டு சற்று
தூரம் சென்றால்...!


தீரா...
அழைத்தான்
உயிர் மூச்சு பொங்க
மீரா... மீரா... மீரா... என்று...!

மீரா...
மறு கணம் உரைத்தாள்
உதடு எரிகின்றது..!

தீ
அணைக்கவா என்றான்
தீரா...!


ஐ..யோ....

(தொடரும்....)

சனி, 17 மார்ச், 2012

தீரா மீரா 14


பாலைவனத்தில்
கன மழை
பனிக்கட்டிக்குள்
சூரிய இழை
எப்படி இருக்கும்...
அப்படி இருந்தது
மீராவிற்கு தீராவை பார்த்ததும்....

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

இத்தனையும்...
ஒன்றாக
நின்றால் தீரா...!

உயிர் சருகு உருகியது
மயிர் முனைகள் மருகிறது
கை விரல்கள் அதிர்ந்தது
கால் தடங்கள் கண் திறந்தது
உதடுகளின் கதவுகள் சிவந்தது
உள் மூச்சு பேச்சறுந்து நின்றது
நாவுக்குள் ஆதவன் புகுந்தது
நரகமும், சொர்கமும்
நடுவில் தெரிந்தது
மீராவிற்கு...!


தீரா....
தூரத்தில்....

இதயத்தில் துளையிட்ட
அம்பாக தீராவை நோக்கி வந்தான்...!

அம்பு
நெருங்க, நெருங்க...

குருதி கொட்டியது
மீரா
விழிகளில்...!

மேகமும், வானமும்
முதல் முறையாக பார்ப்பதாய்...

தேகமும், ஆத்மாவும்
முதல் முறையாய் உரசுவதாய்...

மழையும், மண்ணும்
முதல் முறையாய் ஒட்டுவதாய்...

காற்றும், இலையும்
முதல் முறையாய் மோதுவதாய்...

பருவமும், காலமும்
முதல் முதலாய் முத்தமிடுவதாய்....

தங்கமும், நெருப்புமும்
முதல் முறையாய் முட்டுவதாய்...

இப்போது
தீரா, மீரா
அருகருகில்....

அகல துடுப்பான
இமைகளை நனைத்து கொண்டு
மீரா...
தீரா வை பார்த்தாள்...

அடுத்த கணம்
தீரா...
மீராவின்
உடலை பின்னிக்கொண்டிருந்தான்
முதுகின் எழும்புகளை எண்ணியபடி...!

பிரிவின் உச்சம் அறிந்த
புரிவின் அர்த்தம் புரிந்து
ஆழ தழுவினான் தீரா...

இது...
தீராது.. தீராது...தீராது....
போதாது...போதாது..போதாது..
தீ யாக பற்றிக் கொண்டால்
தீராவை முழுவதுமாக மீரா...!


சில நிமிடங்கள் மயங்கியது
பல இலைகள் தலை கவிழ்ந்தது
சில மைல் கடந்தது நதி நீர்
பல குயில் பறந்தது வான்வெளியில்
சில மேகம் சிதைந்தது திடுக்கென
பல மோதலில் விழி-த்தன படக்கென
தீரா- மீரா


மீரா நீள் முடியைபோன்று
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மீண்டு கேட்டால்
ஏன் இவ்வளவு காலம்
வரவில்லை என்று...!

பெண் என்பவள்
தெரிந்தே (புரிந்து)
வேகமாக நுழைவாள் ( யாருக்கும் தெரியாது)
அதை விட பன்மடங்கு வேகத்தில்
மீண்டு விடுவாள்...


தீரா நீந்திக் கொண்டிருந்தான்
விரல் இடுக்கில் எப்படி
சூரியன் சுருண்டு கிடக்கிறான் என்று
தீராவின் கைகளை பற்றிக் கொண்டே
மீராவின் கேள்விக்கு
பதில் கூறாது....

ஆண் என்பவன்
ஆழம் அறியாது
புயலென நுழைவான்
ஆனால்...
மீளத் தெரியாது
அதிலே வீழ்ந்து
ஆளவும் செய்வான்
மாளவும் செய்வான்...!

(தொடரும்)

தீரா-மீரா -13

நிலா...
உடை களையும் நேரம்
பொழுது புத்துணர்வு பெறும்!

வானம்...
கண் மை யை கழுவும் நிமிடம்
பூமி பிரகாசமாகும்!

தீரா - மீராவின்
உரசலில்...
இயற்கை தன்னை
சருகுகளாக உதிர்த்து கொண்டிருந்தன!

நதிக் கரையின்
இடைவெளிக்கு பின்
கரைகளின் வார்த்தைகள் எழுதப்படும்!

மழைத் துளியின்
இடைவெளிக்கு முன்
வானவில் அர்த்தங்களை பொறிக்கும்!


உளி முனையின்
இடைவெளிக்கு இடையில்
சிந்தனையின் சிலை புலப்படும்!

தீரா - மீராவின்
உரசலின் நீள் இடைவெளிக்கு
முன், பின், இடையில்
மெளனங்கள்!


ஒரு கணம்
உரைந்த பணி
உருகியதாய்
உதடு திறந்து
ஆரம்பித்தான் தீரா!


சுற்றும்முற்றும்
பார்த்தான்
சூழ்நிலைகளை
சுழற்றி போட்டுக் கொண்டு
கற்பனைகளை
கழற்றி கொண்டிருந்தான்
மீராவிடம், தீரா!


மலையை பார்...
அசையாத கருப்பு நதியாய்
நீள்கிறது!

வானை பார்...
விதவிதமாய் ஓவியங்களை
வரைகிறது மேகம்!

காற்றை உணர்...
தீண்டலின் ஆழத்தை
சொல்கிறது!

உன்னை கண்ட நிலா
முகம் காட்ட
மறுக்கிறது!

வண்டுகள்
தேன் குடித்து
பூ இதழ் மடியில் நீந்துகிறது!

நதிக் கரைகள்
நீரில் கால் கழுவி
சுத்தம் செய்கிறது!

விரல்களா ?
இல்லை
புல்லாங்குழலா ?
என் உதடுகளுக்கு
சந்தேகம்!

அசையும்
தீபமாய் நீ!
வெளிச்சத்தின்
ஈரமாய் நான்!

அதோ...
பறக்கிறது பறவை
எப்படி?
ஒரு பழம்
அமர்ந்திருக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்!


அதோ...
அலைகிறது முகில்
எப்படி?
வானவில்
மண்ணில் முகாமிட்டுக்கிறது
என்ற தடுமாற்றத்தில்!

அடிக்கொரு முறை
இமைக்காதே!
துடிக்கின்ற
இருதயத்தை நறுக்காதே!

தொடர்ந்தான்
விடாது
கற்பனையை
பொழிந்தான்!

கடல்
வெப்பம்
அலை
கிளை
குளிர்
அழகு
சிலிர்ப்பு
சிரிப்பு
உயிர்ப்பு
தவிப்பு
கதகதப்பு
என
எல்லாவற்றையும்
எல்லையில்லாது
இறுதியில்
இளைத்து
பார்த்தான்
தீரா - மீராவை !


ஆண்
எப்போதுமே
அழகை கண்டதும்
ஆழ விழுந்து அமிழ்ந்திடுவான்!

பெண்
அப்படி இல்லை
எதிர்மாறானது!

தீரா
விழுந்து
வார்த்தைகளில்
மூழ்கி
விழுங்கிக் கொண்டிருநதான்!

இத்தனையும்
கேட்ட மீரா
ஒரே
வார்த்தை
ம்.......


தீரா
திகைக்கவில்லை!
நகைக்கவில்லை!
பரிதவிக்கவில்லை!
பரவசபடவில்லை!
கோபபடவில்லை!

மாறாக...
ரசித்தான்!

எத்தனையோ
கற்பனைகளை விதைத்தேன்
அத்தனையும்
அர்த்தமில்லை என்று அறிந்தேன்

ம்...
என்ற ஒரு வார்த்தைக்கு முன்
மொத்தத்தையும்
சமர்ப்பனம் செய்தேன்
என்றான் தீரா!

(தொடரும்...)

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;



குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்

இது சடுதியில் நிகழட்டும்;



உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு

அழுவதே என்ற நிலை மாறட்டும்;



இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்

இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;



காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்

எழும் தோல்விகள் தோற்கட்டும்;



துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்

நம் துன்பங்கள் மூழ்கட்டும்;



மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்

நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;



வானம் எட்டி கிழியும் அளவு

கைகளில் வெற்றிகள் குவியட்டும்;



பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்

இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;



எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று

இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

சனி, 27 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 12

நாம்
ஒவ்வொருவரும்
நமது
நினைவுக் கப்பலில்
நமக்கு பிடித்தமானவர்களை (சரக்கு)
மட்டுமே ஏற்றிச் செல்கிறோம்!

ஏன் தெரியுமா?

சரக்கு எவ்வளவு
கனமாக இருந்தாலும்
கப்பல் கவிழாது!

(சரக்கு என்பது அன்பால் ஏற்படக்கூடிய
வேக மோதல்கள்)

அப்படி

தீரா- மீரா
நினைவு கப்பலில்
ஒருவர் மாறி
ஒருவரை சுமந்தனர்!

இந்த பூமியின் சுழற்சி
நிற்காமல் இயங்கிக் கொண்டிக்கிறது!
எவ்வித தடை ஏற்பட்டாலும்!

ஏன் தெரியுமா?

தடைகள் எனும் சூழ்நிலைகளை
பின்னிக் கொண்டு - அதன்
இயக்கம் நடந்து கொண்டிருப்பதால்!

அப்படிதான்!
தடைகள் பல கடந்து!
தீரா - மீரா
காதல் சூழற்சி
இயங்கிக் கொண்டிருந்தது!

ஆயிரம் புலியையும்
சம நேரத்தில்
எதிர்க்கவல்ல வீரனால்!
ஒரு பெண்ணின்
பார்வையை சமாளிக்க முடியாது!

மாபெரும் மலைகளையும் புரட்டிபோடும்
ஒருவனின் கைகளால்
ஒரு பெண்ணின் இதயத்தை
தீண்ட முடியாது!


எந்த யுகத்திலும்
கத்திகளை விட
கண் விழியால்
குத்தி பலியானவர்கள்
அதிகம்!

நினைவுகளின்
ராட்டின சவாரியில்
எப்போதுமே திருவிழா
நிகழ்வதில்லை!

ராட்சத சுழற்சியும்
அவ்வப்போது நிகழ்வதுண்டு!

ஒரு சிறு புள்ளிக்குள்
இரு உருவங்கள்!
தேய்ந்து கொண்டிருந்தன
தீராவும் - மீராவுமாக!

காதல் என்பது
மலைத்தேன்கூடு...
கலைக்க நினைத்தால்
காயங்களை ஏற்படுத்திவிடும்!

காதல் என்பது
காற்று...
கட்டுப்படுத்த நினைத்தால்
சூறாவளியாகி விடும்!

காதல் என்பது
தீப்பந்தம்...
அனைக்க நினைத்தால்
அனைத்தையும் எரித்துவிடும்!


காதல் என்பது
தண்ணீர் ...
பிடிக்க நினைத்தால்
கடலாக உருமாறி உள் இழுத்துவிடும்!

காதல் என்பது
மென்மை...
கசக்க நினைத்தால்
பற்கள் முளைத்து கடித்துக் குதறிவிடும்!

காதல் என்பது
அமைதி...
அடக்க நினைத்தால்
ஆயுதம் தாங்கிய படைகளே நடுங்கிவிடும்!


காதல் என்பது
கவிதை...
படிக்க நினைத்தால்
பிடித்து கொண்டு பிய்த்து எடுத்திவிடும்!

காதல் என்பது
நூல்...
அறுக்க நினைத்தால்
வில்லாக உருமாறி ஊடுறுவி செல்லும்!

காதல்
என்பது பொதுவானது
பிரிக்க நினைத்தால்
சாதி, மதங்களை சல்லடையாக்கிவிடும்!

காதல்
என்பது உலகானது
அழிக்க நினைத்தால்
மானுடம் மரித்துவிடும்!


காதல்
என்பது அழகானது
தீராவுக்கும் மீராவுக்கும்
சற்று அழுத்தமானதானது!!

நேற்று, இன்று, நாளை
பொழுதுகளை பொக்கி­rமாக
அடை காப்பது காதல் மட்டுமே!

முதன் முறையாக
காதலிப்பவர்களுக்கு
காதல்
கற்று கொடுக்கும்
முதல் பாடம்!

என்ன தெரியுமா?


இந்த வகுப்பிற்கு
மட்டும்தான்
கல்வி சாலை கிடையாது!
அனுமதி சீட்டு கிடையாது!
கட்டணம் கிடையாது!
தகுதி கிடையாது!
ஆசிரியர்கள் கிடையாது!
பாட புத்தகம் கிடையாது!
மனப்பாடம் கிடையாது!
தேர்வுகள் கிடையாது!
மதிப்பெண்கள் கிடையாது!
ஒரு வகுப்பில்
இருவருக்கு மட்டுமே
அனுமதி!

தினசரி வகுப்பில்
தினுசு தினுசாய் பாடங்களை
விழிகள் எனும் விரல்களால்
இமை பக்கங்களை புரட்டி போட்டபடி
படித்துக் கொண்டிருந்தனர்
இருவரும் ஒருவராய்!


காதலர்கள்
பேச ஆரம்பித்தால் போதும்...

வார்த்தைகளுக்கு வலி ஏற்பட்டுவிடும்!
பொழுதுகள் தேய்ந்து ஓய்ந்துவிடும்!
கற்பனைகள் கட்டித்தழுவும்!
பசி படுத்துறங்கும்!
மெளனம் இலக்கியமாகும்!
பார்வை உடைந்து பாதைதேடும்!
பிடிக்காதது இனிக்கும்!
பிடித்தது கசக்கும்!
புதிது புதிதாய்
ஆசைகள் பறக்க ஆரம்பிக்கும்!!

இப்படித்தான்
ஒருமுறை...
தீராவும் - மீராவும்
பேசிக் கொண்டிருந்தனர்!

அருகருகில்
ஆதவனும் - சந்திரனுமாய்
தீரா - மீரா!

பூவோடு காற்று உரசியதாய்
மீராவை உரசியபடி தீரா!

4 விழிகள் மாறி மாறி
கவ்விக் கொண்டிருந்தன
ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு!

மீராவின் மொட்டு ஐ விரல்கள்
தீராவின் விரல்களுக்கு இடையில்
இசை மீட்டிக் கொண்டிருந்தது...

எப்படி?

நதி நீரில், படகு துடுப்புபட்டதாய்!
ஓவியத்தின் மீது வண்ணம் தீண்டியதாய்!
வெயில் மீது மரல்நிழல் குவிந்ததாய்!
இலை மீது பனி வந்து அமர்ந்ததாய்!
குயவன் மண் பாண்டம் பிசைந்ததாய்!
நரம்பு மீது நாதங்கள் எழுந்ததாய்!
பூகளின் இதழ்களில் தேன் வடிந்ததாய்!
கிளை மீது நத்தை ஊறியதாய்!
இறுக்கியபடி பாம்புகள் பின்னியதாய்!
பறவையின் இறகுகள் அசைந்ததாய்!
கடல் அலைகள் எழுந்து அமர்ந்ததாய்!
நிலாவினை மேகம் உரசியதாய்!
மூங்கிலுக்குள் வண்டு நுழைந்ததாய்!
வானமும்,பூமியும் ஒட்டி பிரிந்ததாய்!
வார்தையில் அகப்படாத வரிகள் கிரங்கியதாய்!
விரல்களே கைகளாக மாறியதாய்!
புது விளையாட்டை
மீராவுக்கு தீரா விளக்கிக் கொண்டிருந்தான்!


(தொடரும்...)

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 11

இடைவெளி
சில நேரம்
உதிரத்தை நனைக்கும்!

இடைவெளி
சில கணம்
உணர்வுகளை சிதைக்கும்!

இடைவெளி
பல தருணம்
நினைவுகளை வருடும்!

இடைவெளி
பல நிமிடம்
கடந்ததை மறைக்கும்!

இடைவெளி
ஒவ்வொரு வினாடியும்
புதுப்புது விதையைய் விதைக்கும்!

தீரா-மீரா-வின்
அன்றை இடை வெளி
வானையும், மண்ணையும்
இணைத்ததாய்!

காற்றையும், மேகத்தையும்
கட்டியதாய்!

நீரையும், வெப்பத்தையும்
பிணைத்ததாய்!

நிழலையும், உருவத்தையும்
உருக்கியதாய்!

நினைவையும், கனவையும்
கலந்ததாய்!
ஆனது!

முதல் சந்திப்பில்
மூச்சு திணறிய நிமிடங்களில்
மயங்கிய கணங்களை சுமந்தபடி
தீரா!

முதல் சந்திப்பில்
முகம் சிவந்து, யுகம் கடந்த
மர்மங்களின் கனவுகளை அலசியபடி
மீரா!

காந்தமும், இரும்பும்
வேறு வேறுதான்!
அருகினில் இருந்தால்
வேரும் - நீரும் போன்றது!

அப்படித்தான்...
இளமை மைதானத்தில்
இருள் பந்தலில்
நிலவு பந்தை
நினைவுக் கைகளால்
தட்டி ....
விளையாடிக் கொண்டிருந்தனர்
மீராவும்- தீராவும்!

எல்லா பொழுதுகளுமே
ஒரே நினைவில்
ஒரே நிமிடத்தில்
ஒரே எண்ணத்தில்
ஒரே சுகத்தில்
ஒரே மயக்கில்
ஒவ்வொருவருக்கும்
விடிவதில்லை!

வேறுபடுவதுண்டு
வேறுபட்டது இருவருக்கும்!

ஆழமான எண்ணம்
தீண்டாத - வரை...

கோரமான ஆசை
புகாத - வரை...

விபரீதமான எண்ணம்
எழாத - வரை...

விழுங்கும் நினைவுகள்
விளாங்காத - வரை...

அழுத்தும் உணர்வுகள்
உதிக்காத - வரை...

ஆவேச உணர்ச்சிகள்
குதிக்காத - வரை...

அவசர செயல்கள்
புகாத - வரை...

அதிகார வாய்
பிளக்காத - வரை...

எதிலும் அடிமையாய்
ஆகாத - வரை..


காதல் நோய்
கவ்வாத வரை...தான் !

ஒருவன்
தான்..
தானாக
இருக்கிறான்!

இதில்...
ஏதாவது ஒன்று
எழுதத் தொடங்கி விட்டால்
போதும்!

தான்..
விண்ணாகி
மண்ணாகி
உலகாகி
உயராகி
மலையாகி
அலையாகி
கடுகாகி
காடாகி
கடவுளாகி
அனைத்துமாகிறான்!

அனைத்துமாகி
அதிர்ந்து கொண்டிருந்தனர்
தீராவும் - மீராவும்!

வானம்...
நிலா முகம்
கழுவிக் கொண்டிருந்தது...

சூரியன்
ஆடையை
சுறுசுறுப்பாக
அணிய
ஆயதத்மானது
வானம்!

இரவில்
நினைவில் கரைந்து
விழி சிவந்து
விழித்து...
சிரித்துக் கொண்டனர்
இதழ் சிவப்பு பார்த்து!

காலத்தின் சக்கரம்
சுழன்று கொண்டிருந்தது
தீராவுக்கும் - மீராவுக்கும்
காதல் பாடம்
கற்பித்துக் கொண்டு!

(தொடரும்....)

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

photo kavi



photo kavi


தீரா - மீரா 10

தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

வெட்கம் உடையும்!
வெப்பம் உருகும்!
வேகம் கூடும்!
மோகம் பெருகும்!
ஞாபகம் மோதும்!
விரல்கள் தாவும்!
குரல்கள் அடைபடும்!
மயக்கம் வகுப்பெடுக்கும்!
தயக்கம் தற்கொலை செய்யும்!
ஓசைகள் செவிடாகும்!
காட்சிகள் குருடாகும்!
இருள் இன்பமாகும்!
வெளிச்சம் கூச்சமாகும்!
பசி படத்துறங்கும்!
ருசி நாவை விட்டிறங்கும்!
உதிரம் நோகும்!
உணர்வு வேகும்!
இமைகள் ஒட்ட மறுக்கும்!
உதடுகள் ஒட்ட துடிக்கும்!
எனக்கு நீ!
உனக்கு நான்!
இனி...
எல்லாம் வசப்படும்
நமக்கு!

இப்படி ஆகும்!


தீராவின் உதடுகள்
திடீரென திறந்தது !

வார்த்தை சில நேரம்
உணர்ச்சிக்குள்
மாட்டிக் கொள்ளும்
அப்போது
நாம்
மற்றவர்களை கொல்வோம் !

தீரா!
தேய்ந்து போன
வார்த்தைகளால்
பேச தொடங்கினான்!

முதலில்
யார் நீ?

மீரா!
மெளனம்!

தீரா!
எந்த ஊர்?
என்ன பெயர்?
எப்போதெல்லாம்
இங்கு வருவாய்?
என்னை பார்த்திருக்கிறாயா?
ஏன் வந்தாய்?
எப்போது வந்தாய்?
கேள்விகள் நீண்டன!

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
உதடு உதிர்த்தது!
ம்.....

என் பெயர்
மீரா!

தீரா!
சொல்லி பார்த்தான்
முதல் முதலாக பேசும்
குழந்தையாய்
மீரா வின் பெயரை!

மீரா!
உடையூர் எனதூர்!
முன்பு பார்த்தில்லை!
அடிக்கடி இங்கு வருவதுண்டு
தோழிகளுடன்!

தீரா!
மானை தின்ற
மலைப் பாம்பாய்!

தீரா!
எங்கே தோழிகள்!

மீரா!
தனிமை!

தீரா!
எனை பார்க்கவா?

மீரா!
மீண்டும்
மெ...ள...ன...ம்...

இளைபாற விரும்பவில்லை
எனது பெயர்
தீரா!

மீரா!
இதழ்
சிவத்தது!

தீரா-மீரா!
உயிரா-உடலா !

உதடுகளின் பாசையை விட
கண்களின் பாசையே
கனமானது!

மின்னலின்
பின்னலில்
முளைக்கும் காளானாய்!

கண்களின்
பின்னலில்
பேசியது காதலாய்!


மாலை (பொழுது)
வாட ஆரம்பித்தது!

கருப்பு ( உடை)
உடுத்த தொடங்கியது!

மீரா!
உணர்ந்தாள்!

உதிர்த்தாள்
வருகிறேன்!

தீரா!
அவசரம் ஏன்?

மீரா!
மாலை ரசம் மறைகிறதே!

தீரா!
அடுத்து எப்போது ?

மீரா!
நாளை இப்பொழுது!

தீரா!
உறுதியாகவா?

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
பறக்க ஆரம்பித்தாள்!

தீரா!
ஒரே இடத்தில்
பறந்து கொண்டே பார்த்தான்!

ஒரு நாள்
எப்போது முழுமையடையும்?
பகலும் இரவும்
கடக்கும் கணத்தில்!

ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது!

தீரா-மீரா
பிணைப்பு
ஆரம்பமானது!


தீரா- மீரா
இணைப்பு
துளிர் விட்டது!

தீரா- மீரா
நினைவு
இறுக்கப்பட்டது!

தீரா- மீரா
கனவு
களவாடப்பட்டது!

தீரா- மீரா
உணர்வு
வார்க்கப்பட்டது!

தீரா- மீரா
கவிதை
முழுமையாக வாசிக்கப்பட்டது!!


(தொடரும்...)

தீரா - மீரா 9


காத்திருப்பின்
நுனியில்!
திரியில் ஆடும் தீபமாய்!
தீரா!

காற்றில்
சிக்கிய காகிதமாய்!
கலக்கம்
தாண்டிய பெண்மையாய்!
மீரா!


ஆற்றங்கரை வரை
இறாகய் வந்த மீரா!
அடுத்த அடி வைக்க
பாதங்களை பாறைகளாக்கினாள்!

கரையும்
நிலையில்!
கரை வந்தாள்
மீரா!

மறு கரையில்
விழி வலையில்
தேடிக் கொண்டிருந்தான்
மீராவை - தீரா!

தூரத்தில்
துடிக்கும் நட்சத்திரமாய்!

மேகத்துணி
துடைத்தெடுத்த நிலவாய்!

பூமி
வந்திறங்கிய வானவில்லாய்!

புள்ளிகளால்
நிரப்பிய பூப்பந்தாய்!

தீராவின்
விழியில்
மீரா!
தூரத்தில்!!

பெண்களின் வெற்றிக்கு பின்னாள்
மூன்று முக்கிய காரணங்கள்
முகாமிட்டிருக்கிறது!

அழகு!
அழுகை!
பிடிவாதம்!

சில வெற்றிகள்
பிடிவதாத்தின் முனையில்
தீட்டப்படிருக்கும்!

பல வெற்றிகள்
அழுகையின் துளிகளில்
எழுதப்பட்டிருக்கும்!

இரண்டையும் விட
இந்த உலகில்
அழகினால் எழுப்பப்பட்ட
வெற்றிகளே அதிகம்!


தீரா!
மீராவின்
அழகில்!!


ஆண்கள் உடைதலுக்கும்
மூன்று முக்கிய காரணங்கள்
மூழ்கியிருக்கிறது!

காதல்!
காமம்!
பணம்!


பணத்தால் உடைபட்ட
உள்ளங்கள் சில!

காமத்தால் கரைந்த
உருவங்கள் பல!

கால சக்கரத்தில்
காதலால் உருவாக்கப்பட்ட
கல்லறைகள் அதிகம்!

தீரா!
காதலால்
உடைக்கப்பட்டான்!

விதை உயிர்த்து விட்டால்
பாறைகளை கூட துளைத்விடும்
வேர்கள்!

நதி
மலையிலிருந்து குதித்துவிட்டால்
மீண்டும் மேல் எழும்புவதில்லை!


அலை
கரையை தொட்டுவிட்டால்
நுரைகளுக்கு கூலி கேட்பதில்லை!

காதல்
இதயங்களில் வரையப்பட்டால்
வரம்புகள் விழிகளுக்கு புலப்படுவதில்லை!

தீரா!
மீரா!
இருவருக்கும்
வரம்புகளின் இடைவெளி
ஆற்றங்கரை மட்டுமே!

யார்
முதலில்
யாரிடம்
நோக்கி வருவது ?


பூவைத் தேடி
வண்டு!

தேனைத் தேடி
தேனீ!

மண்ணைத்தேடி
மழை!

விண்னைத்தேடி
மலை!

புல்லைத்தேடி
பனி!

தற்போது
மீராவை நோக்கி
தீரா!


தீரா!
மீரா அருகில்
ஊமையாக!

மீரா!
தீரா பக்கத்தில்
பொம்மையாக!

கண்ணாடியும்
கண்ணாடியும்
பார்த்துக் கொண்டால் என்னாகும்?
பிம்பங்கள் ஒன்றாகும்!

தண்ணீரும்
கண்ணீரும்
ஒன்றானால் என்னாகும்?
உவர்ப்பு அர்த்தமுள்ளதாகும்!

காற்றும்
வாசமும்
இணைந்தால் என்னாகும் ?
உருவமற்றது புது உயிராகும்!


காதலும்
இதயமும்
கலந்தால் என்னாகும்?
எதையும் தாங்கும் பலம் உருவாகும்!


தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

(தொடரும்...)