செவ்வாய், 19 அக்டோபர், 2010

மூடிய புத்தகமாகவே இரு

உன் இதயத்தை திறந்த புத்தகமாக வைக்காதே,
படித்து விட்டு சென்றால் பரவாயில்லை
எதை எதையோ கிறுக்கி வைத்து விடுவார்கள்...

உன் கடந்த வாழ்க்கையை கண் மூடி
சொல்லிவிடாதே, காதில் போடா விட்டாலும் பரவாயில்லை
கதைகள் திரித்து சொல்லி விடுவார்கள்...

உன் கண்ணீரை பங்கிட்டுக் கொள்ள
விரல்களை தேடாதே, துடைக்கா விட்டாலும் பரவாயில்லை
புன்னகைத்து ஏலனம் செய்வார்கள்...


உன் உணர்வுகளை யாருக்கும் உணர்த்தி விடாதே,
உரிமை எடுத்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை
உதாசினப் படுத்தி விடுவார்கள்...

உன் கனவுகளை வெளியே வரைந்து காட்டி விடாதே
கண்டு ரசிக்கா விட்டாலும் பரவாயில்லை
கிழித்து எறிந்து விடுவார்கள்...

உன் நினைவுகளை படம் பிடித்து காட்சியாக்கி விடாதே
கை தட்டா விட்டாலும் பரவாயில்லை
காலில் போட்டு மிதித்து விடுவார்கள்...

உன் உழைப்புக்கு பாராட்டு எதிர் பார்த்து விடாதே
வாழ்த்துக்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
வஞ்சகன் என்று வர்ணித்துவிடுவார்கள்...

உன் கவலைகளை எவரிடமும் உரைத்து விடாதே
தோள் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை
தொலை தூரத்தில் சென்று விடுவார்கள்...

உன் புனிதமான காதலை ஒருவரிடமும் ஒப்படைத்து விடாதே
இதயத்தை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை
இரக்கமின்றி அசிங்கம்  என்று கதவடைத்து விடுவார்கள்...

அர்த்தங்களை தேடி அலையும் வாழ்க்கையில்
முகமூடி போர்த்தியிருக்கும் முகங்களுக்கு முன்னால்
நீ....
மூடிய புத்தகமாகவே இரு
வருத்தங்கள் ஏதும் வருவதில்லை !!

அன்பு மலர்
------------- Mvidhyasan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக