சூரியனுக்கும்,நிலவுக்கும் உள்ள இடைவெளி வெளிச்சமே
காற்றுக்கும், இதத்திற்கும் உள்ள இடைவெளி ஈரமே
நெருப்புக்கும், குளுமைக்கும் உள்ள இடைவெளி உராய்வே
உணர்ச்சிக்கும், உள்ளத்திற்கும் உள்ள இடைவெளி நிகழ்வே
எல்லாவற்றுக்குமான இடைவெளியை
அளந்து வைத்திருந்தான் தீரா...
பூமி பந்தின் இறுதியில் புத்துயிர்கள் உயிர்ப்பதுண்டு
கடல் ஆழத்தின் இறுதி சொட்டும், கரைதொட ஏங்குவதுண்டு
பூவிலிருந்து வெளிப்பட்ட வாசனை காற்று மூக்கில் அமர்வதுண்டு
கானல் நீரில் எழும் தோற்றங்கள் நிஜங்களை அலங்கரிப்பதுண்டு
இல்லாதவற்றிலும் ஏதாவது ஒலிந்து கொண்டிருப்பது உண்டு
அதை தெரிந்து வைத்திருந்தாள் மீரா...
வாழ்க்கை புத்தகத்தின் முதல் அட்டை அழுகையின் ஆரம்பத்தில்
அதன் கடைசி பக்கமும் கண்ணீரின் முடிவில்
இடையில் உள்ள பக்கத்தில் தான் மாறுப்பட்ட
மன நிலைகள் பதிவாகியிருக்கிறது
நிகழ நிகழத்தான் ஒவ்வொரு எழுத்தாக அச்சிடப்படுகிறது....
மூங்கிலுக்குள் காற்று இறங்காதவரை அது வெறும் மரக்கிளையே
காற்று வந்து தங்கி விடைபெறும் போது எழுகிறது ஒலியே...
ஒரு சந்திப்பு நிகழும்போதுதான்
இன்னொரு உணர்வுகள் உசுபப்படுகிறது....
குழந்தையின் பார்வையில் பொம்மையின் சந்திப்பு மகிழ்ச்சியாய்
நோயின் பிடியில் உடலின் சந்திப்பு சோகமாய்
பிரிவின் இடைவெளியில் மறு சந்திப்பு கண்ணீராய்
இழப்பின் பின்னல், தொடர் சந்திப்பு தவிப்பாய்
அவமானத்தின் ஆழச் சந்திப்பு எழுச்சியாய்
பொறமையின் கொடூர சந்திப்பு கோபமாய்
காகிதமும் (ஆண்) கவிதையும் (பெண்) சந்திப்பு காதலாய்...
இந்த உலகத்தை திருப்பி போட்ட சந்திப்புகள் நிறையவுண்டு
அதில்....
ரத்தத்திலும், விழி யுத்தத்திலும் அரங்கேறியதே அதிகமானது !!
தீரா...
விழிகள் எனும் பாடசாலையில்
இமைகள் என்னும் பக்கத்தை திருப்பிக் கொண்டு
இரவை தொடும் தூர அந்தி மாலையில் உலாவிக் கொண்டிருந்தான்....
தொடுவானம் முழுக்க ...
பயணத்தின் பாதங்கள்
அன்று ஏனோ நதி கரையில் மையல் கொண்டது...
சலசலப்பு பேச்சாய்
பாறைகளோடு உராய்வாய்
கூழாங் கற்கள் கன்னத்தில் முத்தமாய்
மீன்களின் நடனங்களாய்
வானம் முகம் பார்க்கும் கண்ணாடியாய்
கரைகளின் காதுகளுக்கு கவிதையாய்
பூமிக்கு நெய்யப்படும் ஆடையாய்
நிலப்பகுதியில் தவழும் ஒற்றை வானவில்லாய்
வேர்களுக்குள் ஒலிந்து கொள்ளும் குழந்தையாய்
ஈரமான இதயத்தால் ரசித்து கொண்டிருந்தான் தீரா....
ஒரு மரம் எப்போதுமே இலைகள் எனும்
பற்காளால் புன்னகைத்து கொண்டே இருக்கிறது
அது ஏன் என்று தெரியுமா?
பரந்து விரிந்த கிளையில்
படுத்துறங்க பறவைகள் கூடு கட்டுவதால்
பாய்ந்து வரும் சூரியனின் பார்வையை சலித்து
மண்ணிற்கு நிழல் தருவதால்
அசுத்தம் முங்கி வரும் தென்றலை
வடிகட்டி வசந்தமாக அனுப்பவதால்
பசி யயனும் பரம்பரை நோய்க்கு
பழம் எனும் வைத்தியம் பார்ப்பதால்
விளை நிலம் ஓங்கி செழிக்க
மழைக்கு சேதி அனுப்பவதால்
களைப்பாறி வரும் மானிடர்கள்
இளைப்பாறும் இடமாக இருப்பதால்
ஒரு பொழுதும் சோர்வின்றி
ஏதும் எதிர்பாராது உழைப்பதால்
இதுஏதும் அறியாது நாம் நறுக்கும் போதும்
விரகாய், வீடாய், கட்டுமரமாய், காகிதமாய்
எல்லாமாய் மறித்து மீண்டும் பிறப்பதால் !!
அப்படி ஒரு கிழம் வயது நிரம்பிய
மரத்தின் வேர் படியில் அமர்ந்து கொண்டு
நினைவுகள் எனும் பம்பரத்தை சுழல விட்டான் தீரா.....
என்றுமில்லாதபடி....
குருவிகள் கும்மாலமிட்டன
நதி நாணம் கொண்டன
மீன்கள் ரகசியம் பேசின
மர இலைகள் இறகுகளாக பறந்தன
காற்று கிசுகிசுத்தன
வானம் இளஞ்சிவப்பு வர்ணம் வார்த்தது
பூக்கள் புது நடனமாடியது
கரைகள் கவிதை எழுதிக் கொண்டிருந்தது
நத்தைகள் வித்தைகள் செய்தது
பாறைகள் குண்டு விழிகளாக மாறியது
கொடிகள் வானத்தை தீண்ட முயன்றது
செடிகள் தலை சாய்த்து தாளமிட்டது
தவளைகள் சங்கீதம் பாடியது
மணல் மகரந்த பொடியானது
நிமிடங்கள் தாமதமாக நகர்ந்தது
தீராவின் நினைவுக்குள் நடப்பது யாவும் வசப்பட்டது...
தீடிரென ஒரு ச..ப்...த...ம்
சட்டென நதிகரையானது நி..ச...ப்...த...ம்
தீரா சுற்றும் முற்றும் பார்த்தான்...
குயிலா? மயிலா? புள்ளி மானா ?
துள்ளி வந்த சப்தம் எதுவாக இருக்கும் என்று ?
எங்கிருந்து வந்தது...
திசைகள் முழுக்க விழிகள் திமிறி திமிறி தேடியது...
சற்று நிமிடத்தில் மீண்டும் அதே சப்தம்
இம்முறை சோவிகள் வானத்திலிருந்து மலைமீது
மோதியதாய் தீரா செவிகளை துளைத்தது சிரிப்பொலி...
வில்லில் இருந்து புறப்படும் அம்பாய்
வேர் படியிலிருந்து பாய்ந்தான்...
பாதம் தரையில் இல்லை
விழிகள் இமைகளுக்குள் அடைக்கப்படவில்லை
எண்ணங்கள் நரம்புகளை மீறி வரம்புகளை கடந்தது
தூரத்தில் ஒரு வெளிச்சம்
கோவில் திருவிழா பளிச்சிட்டது...
இன்று என்ன கோலாகலம் ?
என்ன நாள் ?
பண்டிகையா?
குடமுழக்கா?
திருமணமா?
என்ன? ? ? ? ?
கேள்விகள் கேட்டபடி
நகர்ந்தான் கோவில் நோக்கி...
சோவிகளை உருட்டிய சப்தம் மீண்டும்
தீராவின் செவிகளை நனைத்தது
அது குளக்கரையில் இருந்து ஒலித்தது
தீராவின் பாதங்கள் மெல்ல திரும்பியது
முயலென பதம் பார்த்து நடந்தது...
மண்டபத்தை தாங்கி கொண்டிருந்த தூண்கள்
மறைந்த வண்ணமாய் பார்த்தான் அங்கே சில மான்கள்
சில்லென காற்றில் சட்டென வியர்த்தது தீராவின் உடல்
ரோமங்கள் முள்ளென மாறி சிலிர்த்தது
யார் அது?
அந்த மான் கூட்டத்தில்
யார் அந்த மீன் ?
மலைத் தேன்?
புது வான்?
வாசம் வீசும் மண் ?
இல்லை... இல்லை...
தேவ குலத்து பெண்..
ச்...சீ..ச்சீ... நான்னல்லா
நான இப்படி ?
இமை மூடி யோசித்து
விசிறியாய் விழி திறந்தான்...
மான் கூட்டம் மறைந்தது
மீன் மட்டுமே தீராவின் விழியில் மிதந்தது
மின்னலை பார்ப்பது என்பது கடினம்தான்
புரிந்து கொண்டான் தீரா...
மனம்...
சில நேரம் மன்னராகவும்
சில நேரம் மகானாகவும்
சில நேரம் மாமிச மலையாகவும்
சில நேரம் மனிதனாகவும்
சில நேரம் கல்லாகவும்
சில நேரம் காற்றாகவும்
சில நேரம் நதியாகவும்
சில நேரம் விதியாகவும்
சில நேரம் புவியாகவும்
சில நேரம் கவியாகவும்
சில நேரம் காதலாகவும்
மாற்றிவிடும் சக்தி கொண்டது...
திருடனிடமும், கொலைகாரனிடமும்
உள்ளிருக்கும் இதயம் ஒரே மாதிரி துடிப்பதைபோல...
இருந்தும் தொலைந்ததாய்
தொலைந்ததும் இருந்ததாய்;
உடைந்தான்,
நெளிந்தான்,
வழிந்தான்,
நனைந்தான்,
வியர்த்தான்,
விழுங்கினான்,
நடுங்கினான்,
மிதந்தான்,
சிதைந்தான்,
நைந்தான்,
நொந்தான்,
தவழ்ந்தான்,
துடித்தான்,
தானா... தானா...
என்று தவித்தான்
தனக்குள்ளே புலம்பினான்...
மனம் என்ன சொல்லுகிறது என்பதை உணரமுடியாது
கிரங்கிபோனன் தீரா...
காலம் சுற்றும் சுழற்சியின் படி தானே
நமது கால்களும் பயணிக்கும்...
அப்படிதான் தீரா தேட ஆரம்பித்தான்
தானே தொலைய...
தொலைந்து கொண்டு !!
(தொடரும்...).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக