வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தாய்மையோடு ஒருத்தி

இதில் மட்டும்தான்
சுமைகள் கூட, கூட
சுகங்கள் அதிகரிக்கும்...

ஒவ்வொரு நிமிடமும்
கடந்து செல்வதற்குள்
ஓராயிரம் யுகங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்படும்...

முதன் முதலாக
வீட்டு தேதிகள் கிழிப்பதற்கு
கைகள் தவமிருக்கும்...

அடிக்கடி
பயமும், பரவசமும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்...

ஒவ்வொரு...
செயல்களிலும் ஈடுபடும்போது
எச்சரிக்கை ஒலிகள்
அலைகளாக வந்து சேரும்...


இளமைப் பருவத்தில்
முதுமைப் பருவத்தின்
அனுபவம் கற்றுக் கொடுக்கப்படும்
தள்ளாடி நடக்கையில்...


உறங்கும் வேளையில்
எட்டி உதைத்து எழுப்புவதுண்டு
குட்டி பாதச்சுவடுகள்
உலகத்திற்குள்...

அங்கும் இங்குமாய் நிகழும்
அசைவுகளும்,நெழிவுகளும்
அழகிய கவிதையாகிறது...

கண்ணாடி வளையல்களுக்குள்
ஒலிந்து கொண்டது கைகளும்,
கைரேகைகளும்...

பெயர் சூட்டுவதற்கு
இப்பொழுதே மனதிற்குள்
மாபெரும் மாநாடு நடக்கும்...

தாயின் தன்மையை
உணர்கிறேன் கருவில்
உருவை சுமக்கையில்...

இன்னும்
சில தினங்களில்
விதைக்கப்போகிறேன்
இன்னொரு தலைமுறையை
(இல்லை)
மீண்டும் என்னை...

உலகத்தில்
உயர்ந்தது இதுதான்
படைப்பதால், கடவுளாவதால்...

கனவுகளின் பிம்பங்களோடு
காலத்தடங்கின் சின்னங்களோடு
காத்திருக்கிறாள்..

அம்மா என்று அழைக்கும்
அந்த நிமிடத்திற்காகவும்
தனக்கு மட்டும் புரியும்
அழகிய மொழிக்காகவும்...

ஆவலோடு
அடி வயிற்றை தடவிக்கொண்டு
தாய்மையோடு
ஒருத்தி...

ஆமாம்
ஒவ்வொரு
பெண்ணுக்கும்
இது ..
தன்னை அளந்து பார்க்கும் காலம்
தனக்குள் நிகழும் மாற்றங்களை
உணர்ந்து பூக்கும் தருணம்...

பூமிப்பந்தின் பேரானந்தம்
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இது...
புது ஜென்மம்தான் !!

வித்யாசன்.
ஐ லவ் யூ