திங்கள், 18 ஏப்ரல், 2016

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நீயோ கண்டுபிடிக்க கண்மூடுகிறாய்
நானோ கட்டியிருக்கும் துணியாகிறேன்~~~


- வித்யாசன்

மயில்

நீயிட்ட மை கண்டு
தன்னிறகு இரண்டு
தோகை விரித்தாடுது என்று
தன்னை மறந்து ஓடோடி உன்னருகே வந்தது
#மயில் கூட்டமொன்று~~~

ஞாபகம்

இருள் கவ்விக்கிடக்கும் மன அறை எங்கும் அமர்ந்திருக்கும் மௌனம் நின் நினைவுப் புள்ளியாய் சுழல்கிறது ;

விழித்திருக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் இரை தேடி அலையும் நாயென பசித்திருக்கிறது நின் ஞாபகம் ;

விரல் தட்டும் கடைசி சாம்பல்

நீ அன்பளித்த ஆஷ்டிரேயில் அனாதையாய் அடக்கம் செய்யப்படுகிறது ;

மறக்கத் துடிக்கும் இதயத்தின் முயற்ச்சியில் தரை முத்தமிட்டு வீழும் நட்சத்திரமாய் நான் ;

படுக்கையில் கசங்கிக் கிடக்கும் தூக்கத்தின் சுருக்கங்களை நிமிர்த்திட எத்தனிக்க கனவின் வாசற்படியாகிறது தலையணை;

பெரும் சாபத்தால் சபிக்கப்பட்ட சாமத்தை சமைத்து காத்திருக்க ருசிக்க வாராது ஆயினும் சபிக்க வா~~~


- வித்யாசன்

மலைமகளே

மரணமே நேர்வரினும் மனதினில் மாறா ப்ரியம் மலரவே எமக்கருள்வாய் மலைமகளே~~~~

- வித்யாசன்

இழிவுரைத்தல்

ருசிக்கும் பண்டத்தில் விதம் விதமிருப்பினும்
கழிக்கும் மலத்தினில் அது பிரித்து காண்பதுண்டோ

பிறக்கும் விதத்தினில் ஒன்றென ஆனபின்
இல்லாப் பிரிவினை கண்டு இழிவுரைத்தல் தர்மமன்றோ~~~


- வித்யாசன்

பிறப்பெதற்களித்தாய்

பிறர் வலி வாங்கிடலாகாது அவர்தம் துயரம் நீக்கிட இயலாது
வெறும் வார்த்தையிலே வாழுமிந்த

பிறப்பெதற்களித்தாய்

உயிர் யாவும் ஓரென படைத்து பின்னதில் உருவம் பல வடித்தே அதற்குள் ஏன் பிரிவெனும் உயர்வளித்தாய்

ஓர்நாள் அனைத்தும் மரித்தே மண்ணாகும் என்பதை வகுத்தும் மனமதனில் தீரா ஆசைதனை அழியாதேன் நிதம் வளர்த்தாய்

இங்கெதும் நிலைக்கும் சக்தியற்றதெனும் உண்மைதனை மறைத்தே காலமே எனை உனக்குள் மீளா சிறைவைத்தாய்

அதை நினைத்தே சற்று நகைத்தே கடந்திட
கற்பதில் இங்கேதும் புதிதில்லை காண்பது யாவும் கானலென்று சத்தியம் உரைத்தாய்~~~


- வித்யாசன்

உயரிய காமம்

பெருத்தவருக்கே உன் அதிரம் அவிழ்வதும்
பிடித்தவருக்கே உன் விரல் நெருங்குவதும்
முடி தரித்தவருக்கே உன் முத்தங்கள் குவிவதும்
எனக்குள் பொருத்தமற்ற வருத்தத்தை அளிக்கிறது
ஓ.... யிது

படித்தவருக்கே உரிய உயரிய காமமது~~~
\


- வித்யாசன்

பேரன்பு

சீண்டல் விடுத்து மௌனம் உடுத்து சுருண்டுக்கிடப்பது நின்மீதான பேரன்புக் குடையன்றி வேறொன்றுமில்லை இவ்வாழ்விலே~~~

- வித்யாசன்

உடுக்கை

என் படுக்கை முழுதும்
 ஓயாது நின் உடுக்கை சப்தம்~~~

இரண்டு கண்ணு

அலையென இரண்டு கண்ணு
அதில் கிறங்குது நெஞ்சம் கண்டு
படபடவென பறக்கும் வண்டு
மனம் சிதறியே சிரிக்கிதின்று
வட்ட விழி முகம் காண மனம் ஏங்குது

கிட்ட கிட்ட வரும்போது இதழ் நாணுது
இது பொல்லாதக் கனவு
யாரும் சொல்லாத உறவு ~~~

தொங்கும் குறி


அத்தனை அபத்தமும் யோனி வழியே ஒழுக இயலாது
முதுகுத்தண்டு துளைக்கும் கடுந்துயர் கசடென வழியாது
அறுத்தெடுக்கும் தொடைகளுக்கு மத்தியில் ஆதிக்க திமிர் சரிபாதியென நகைக்க
தொப்புள் கொடி வளர்க்கும் தொப்பைகளை கரைப்பதில் படிந்திருக்கும் சிவப்புச் சாயங்களை
தீட்டெனப் புறந்தள்ளிய உள்ளங்கையில் கண்களை மூடிக்கொண்டு நெளிகிறது தலைமுறை


ஆம்...

தொங்கும் குறிகளுக்கு தொல்லைகள் ஏதுமில்லை~~~


- வித்யாசன்

ஆவதென்ன

ஆறுதல் சொல்லி ஆவதென்ன
ஆகுதலுக்கான உபாயம் யாரளிப்பார்~~~


- வித்யாசன்

நெற்றிக்கண்

காலகதி கையிலில்லை வாழ்வதுவோ யவர் வசமில்லை சாவது அறிந்தும் ஆசை சரியாது விரிந்திட கழிக்கும் ஆணவ மலத்திற்கோ காவலில்லை

பெரு ஞானமதை சூன்யம் துளிவற்றி தெளிவற்று குடித்திட பிறர் துதி பாடி வீங்கும் தொப்புள் வளைவதுவாய் நியாயம் ஆகிட

இடுவதும் பெறுவதும் யாவும் பிச்சையென ஆகையில் இச் சகத்தினில் நற்செயல் புரிவோர் நானறியேன்


பெரும் பசி நேர்கையில் ஊறும் எறும்பதனை கோடிட்டு கொல்லும் அற்பமாகையில் யான்

#எவன் குற்றமுற்றவனென நெற்றிக்கண் திறக்க~~~


- வித்யாசன்

இறகுதிர்ப்பது

நின் நினைவு இறகுதிர்ப்பது
மெல் மரணமாய் எனைக் கொல்லும் ~~~

நீ

நீ அறைவதாக முடிவெடுத்த பின்
தடையேதுமில்லை
தாங்கிக்கொள்வதில்~~~


- வித்யாசன்

பேரன்பன்

அடைப்பு குறிகளுக்குள் அடைக்க முடியாத ப்ரியத்தை
அகல விரிக்க அது ஆகாயமாகியது பேரன்பனின் பெயர் சொல்லி~~~


#ஆமென்

ஆமென்‬

மலையிடுக்கில் மறைத்துவைக்கப்பட்ட பிதாமகனின் ப்ரியவுடல்
அறையப்பட்ட ஆணிவிடுத்து சிவந்த அங்கி பேரன்பு வெளிச்சமுடுத்தி உயர்ந்தெழ
பாவங்கள் மண்டியிட்டு கையிறுக்கி கண்ணீர் மல்க பிரார்த்திக்க
ஒழித்து வைக்கப்பட்ட முட்டையும் தேடி பிடிக்கும் இனிப்புமாக விளையாடும் குழந்தைகளின் பிஞ்சு விரலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆன்மாவிடம்

அடைக்கலம் தேடும் ஆட்டுக் குட்டியாவோம் நாமனைவரும்~~~

‪#‎ஆமென்‬

சுடலை மாடன்

விறகு வீடதனில் விரைப்பு கூடு ஏதுமற்று நீட்டி
கோட்டான் விழிக்க தீ மூட்டி
அனல் சூட்டில் நரம்புயர்த்தி மீண்டெழ இயலாது
அதிலழியா ஆசை நெஞ்சதனை தணல் பொசுக்க
மயங்கியது யாவும் மங்கி மண்டை ஓடு குருடாகி
சிவந்தே கரும் புகை பூசி எஞ்சிய எலும்பும் அடையாள மிழந்து
கரித்துகளாகிய ஒரு பிடி சாம்பலின்
சர்வமுமாய் இவ்வுலகினை ஆள்கிறான் ஜடா முடியுடைய எம் சுடலை மாடன்~~~


- வித்யாசன்

கோடு

நிதமொரு பாடு
தினமொரு கூடு
வரைவதே வாழ்வெனும் போது
சிறகது இருந்தும் சிக்கினேன்
பறந்திட முடியாது
இது அழியா ஆசையின் சிறைக் கோடு~~~


- வித்யாசன்

ஆயுதப் புள்ளி

நீ
நான்
நிலா
வேரென்ன
ஆயுதப் புள்ளி~~~


- வித்யாசன்

ழுதிருப்பேன்

உன்னைப் போல் விழிகள் எனக்கில்லை
இருந்திருந்தால் அழுதிருப்பேன் மூச்சுக் காற்று நிற்கும் வரை~~~

நம்பிக்கையின் வானமெங்கும்

என் நம்பிக்கையின் வானமெங்கும்
நீ நட்சத்திரமாய் ஒளி சிந்திட அதனடியில் அமர்ந்தபடி நம் ஞாபகங்களை புள்ளியாக்கி விளையாடுகின்றேன் ;


தூரங்களின் இடையில் தொற்றிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை தூதாக அனுப்பிட
நானதை மடியினில் தூக்கிவைத்து முத்தமிட்டுக் கொஞ்சுகின்றேன் ;


விரல் தீண்டிய உஷ்ண நினைவுகளை மாரோடு அனைத்தபடி கண் மூடிட
நீயோ பூவற்ற காம்பினில் புல்லாங்குழல் இசைக்கிறாய் ;


பார்ப்பாரற்ற பாத வெள்ளிக் கொலுசு மணி அகற்றிய இரவினில்
நீ என் கனவினில் வந்து இடைவிடாது சலங்கை கட்டி ஆடுகிறாய் ;


நீயோ காத்திருப்பின் கடைசி கட்டத்தில் சுழன்று கொண்டிருக்கின்றாய்
நானோ காதல் சதுரங்கத்தில் தனித்தபடி தாயமாக வீழ்ந்து கிடக்கின்றேன் ~~~


- வித்யாசன்

வெரிகுட்

நமக்கு ஃபிட்டானவங்க
சட்டுனு பிரிஞ்சுபோய்ட்டா
மனசெல்லாம் ரெட்டாகும்
இதுல நொந்து பட்டுனு வாழ்க்கைய பொட்டுனு போட்டு உடைச்சா
சந்தோசம் கெட் அவுட் னு கழுத்த பிடிச்சு வெளிய தள்ளும்
சூதானமா இதுலாம் லைப்ல ஒரு பார்ட்டு னு நினைச்சு நடையக் கட்டுனா
காலம் நம்ம கைல வந்து ‪#‎வெரிகுட்‬ னு கையெழுத்து போடும்

மெய்யாலும்தான் சொல்லுறேங்க~~~~


- வித்யாசன்

பகத் சிங்

சிஞ்சா ஜால்ரா அடித்து பழகிய மனம்
ஒருமுறை உன் முகம் பார்த்தாவது சுய வீரமென்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும்~~~


பகத் சிங்கிற்கு வீர வணக்கம்.

சீ...

சீ... சீ...
இப்பழம் புளிக்குமென்று
எவர் சொன்னபோதும்
என் கைகள் எட்டிப் பிடிக்கும்
மாதம் ஒர் நாள் முழுதாய் விழி இதழ் ருசிக்கும்~~~- வித்யாசன்

கடற்கரை

கடற்கரையில் அமர்ந்து கொண்டு
கடல் பியானோவிலிருந்து எழும் அலைகளை விரல்களால் வாசித்துக் கொண்டிருக்க
கரை ஒதுங்கிய சங்குகளுக்குள் நீ கீதம் ஊற்றிக் கொண்டிருக்கிறாய் ;


சிதையாது மெல்ல ஒன்றன் மேல் ஒன்றாய் சீட்டுக்கட்டென நினைவுகளை அடுக்கிவைக்க
சிறு காற்றென நீ வந்து கலைத்துச் சிரிக்கிறாய் ;


ஞாபகங்களை எண்ண இயலாது எண்ணங்களில் மூழ்கி தொலைந்திருக்க
இது பூஜ்யம் என்றபடி நீ முற்று புள்ளி வைக்கிறாய் ;

உள்ளங்கை ரேகை பாதை எங்கிலும் ஆறெனப் பாய்ந்திருக்க
சற்று உயர்த்தியதும் நீ நீரென ஒழுகி ஒன்றுமில்லை என்கிறாய் ;


இரவின் வட்ட முனையில் இமை மூடாது வெளிச்சமாய் விழித்திருக்க
இருள் முகட்டினில் நீ தூக்கத்தை வெட்டுகிறாய் ;


தள்ளாடும் நீரலையின் மீது துள்ளி விளையாடும் மீனாகையில்
புது வானவில் தூண்டிலாய் நீ வந்தென்னை துடிக்க வைக்கிறாய் ~~~


- வித்யாசன்

ஆமென்

அறையப்படும் ஆணியின் துயரம் அறிந்தும்
தூக்கி நிறுத்தப்படும் சிலுவையிலிருந்து வழியும் குருதியில் அன்பின் உறுதி சிவக்கிறது

ஆமென்~~~

+ வித்யாசன்

காரணமற்றவளா பாஞ்சாலி

தாமரைத் தடாகம் தவறிட
"ஐ "வரின் தலைவி நகைத்திட
அவமானம் சதுரங்கத்தில் அமர
அடமானத்தில் தாலி சுழல
வந்தமர் தொடை மீதென
அரங்கினில் ஆடை அவிழ
ஆரணிய வாசம் அழைத்திட
அன்றவிழ்த்த கொண்டை
பூசி முடிந்தாள் பிளர் தொடை
பெரும் போர் பலி
காரணமற்றவளா பாஞ்சாலி ~~~


-வித்யாசன்

மானிடா

பொழியும் சிறுநீரில் எவர் குலமும் மணப்பதில்லை
கழிக்கும் மலத்தினில் எவர் மதமும் தெரிவதில்லை
புதைக்கும் நிலத்தினில் எவர்
இனமும் முளைப்பதில்லை
எரிக்கும் நெருப்பினில் எவர்
சாதியும் பிறப்பதில்லை
பின் ஏனடா
பிரித்துப் பார்க்கிறாய்
உன்னையே நீ மானிடா~~~


- வித்யாசன்

எங்கள் பாரதம்

எங்கும் இன்பம் பாயுதடா
அதில் எண்ணம் மூழ்கி நீந்துதடா
துன்பம் யாவும் தீர்ந்ததடா
தூய ஒளி நெஞ்சில் வீசுதடா


நன்மை செய்ய நாம் ஒன்று கூடுவோமே
நாடு வளம் பெற நிதம் பாடு படுவோமே
உண்மை ஒன்றே பேசுவோமே
பொய்யரை கொன்றே ஏசுவோமே


யாவரும் அன்பை போற்றுவோமே
மேலவர் கீழவர் வேற்றுமை நீக்குவோமே
காவலர் இன்றி பெண்டீர் வாழ்ந்திட்டோமே
எங்கள் உயர் பாவலர் சொல்லாய் ஆனோமே


ஆண்டவன் அடிமை இல்லாது செய்தோமே
இங்கு யாவரும் சம்மென உறுதி செய்வோமே
மேன்மைகள் நிறைய நல் ஞானம் அடைவோமே
மேலென யவருமில்லை இதை நாம் உணர்வோமே


வாழ்வெல்லாம் யாவர்க்கும் பகிர்ந்திளிப்போமே
மிகு ஏழைகள் இங்கில்லை என்று பறை அடிப்போமே
சாவது உண்டென்பதை நெஞ்சில் வைப்போமே
அதற்குள் பேதமை இல்லாது பெரும் நேசம் வளர்ப்போமே


பாரெங்கும் மங்கா பாசம் விதைப்போமே
பாவையர் எண்ணம் சிறக்க பாதை வகுப்போமே
பாமரன் ஆளும் அரசமைப்போமே
எங்கள் பாரதம் காக்க இன்னுயிர் கொடுப்போமே~~~


- வித்யாசன்

சுருள்

ஒளி பொங்கும் அனுபவ பார்வையில்
அத்தனையும் இருள் சுருள்~~


- வித்யாசன்

கண்ணா...

எத்தனை முறை கேட்டாலும்
நின் முகம் காட்ட மறுத்தாயடா
கண்ணா....
என் முகம் வாடுதடா
கண்ணா....
நின் இன்முகம் காட்டிடடா
கண்ணா...
இன் முகம் காட்டிடடா....

எத்தனை முறை கேட்டாலும்
உன் பெயர் சொல்வேனடா
கண்ணா...
அத்தனை பிரியமடா
கண்ணா...
அணுவும் பிரியேனடா...

கத்தி நான் அழைக்கின்றேன்
காணாது தவிக்கின்றேன்
கட்டி எனை தழுவ வருவாயடா
கண்ணா...
நானுமுந்தன் யசோதையடா...

பட்டது போதுமடா
பற்றது தூரமடா
பற்றியெனை காக்க வருவாயடா
கண்ணா...
நானுக்கு தோழனடா...

பூவுடல் முள்ளாகுதடா
பூலோகம் தள்ளாடுதடா
விட்டு எனை நீ விலகாதடா
கண்ணா...
நீயெனக்கே காதலனடா...

சுட்டுடல் தானடா
சுகமது பொய்யேடா
சூட்சுமம் அவிழ்ப்பாயடா
கண்ணா...
மது சூதனன் நீயேடா...

பேதமை தவிர்ப்பாயடா
வேதனை தீர்ப்பாயடா
நல் கீதை நீ உரைப்பாயடா
கண்ணா...
நீயெந்தன் கண்ணனடா...

கிருஷ்ணா...
நானுந்தன் ராதையடா...


- வித்யாசன்

சாதி

சாவற்ற சாதி வெறியர்களின் கொடும் கொலையினை நின்றொதுங்கி
ஒரு ஓரத்தில் வேடிக்கை பார்க்கவோ எமக்கு சக்தி அளித்தாய்
பெரும் காளிக்குள்ளது போல் கரம் வேண்டியோ காத்துக்கிடந்தீர்
சக மானிடர் என எண்ணிடாது சாதிச் சந்தையில் வீழ்த்திட கண்மூடிச் சென்றீர்
பாதகம் செய்வோருக்கு பாதை கொடுத்து யாவரும் பயமுடுத்திக் கொண்டோம்
இனி பாரெங்கும் கை கட்டி பார்
பலமற்ற நெஞ்சினாய் பயனற்ற வீணராய்~~~


- வித்யாசன்

கிளிஞ்சல்

மணல் அள்ளி விளையாடும் அலையென மாறிடும் மனதிடம் 
கரை ஒதுங்கிக் கிடக்கும் கிளிஞ்சல்கள் ஏராளம்~~~


- வித்யாசன்

கண்ணா...

உள்ளம் காற்றில் ஆடும் பூவாய் ஆடுதடா
கண்ணா...


உன்னைக் காணும் கண்ணிமைகள் ஊஞ்சலாய் ஆடுதடா

சொல்லச் சொல்ல இன்பம் கூடுதடா
கண்ணா...


உந்தன் பெயரை உச்சரிக்க எந்தன் நெஞ்சில் ஆவல் கூடுதடா

காணும் காட்சி யாவிலும் நிந்தன் உருவம் தோன்றுதடா
கண்ணா...


எங்கும் நானிருக்க என்னில் பாதி நீயிருக்க தோன்றுதடா

உன்னை எண்ணி பூ பறிக்க மயிலிறகாய் ஆகுதடா
கண்ணா...


அதை அள்ளி சூடி நீ மணக்க கூந்தல் கருநாகம் ஆகுதடா

புல்லாங்குழலெடுத்து நீ இசைக்க நெஞ்சம் புது மோகம் கொள்ளுதடா
கண்ணா...


சிறு புல்லிடைவெளி நீ பிரிந்தாலும் சோகம் உயிர் கொல்லுதடா

மாயம் யாவும் செய்தபோதும்
கண் கலங்க துள்ளி ஆடி வருவாயடா
கண்ணா...


என் மானம் வேண்டி கை உயர்த்த காக்க ஓடி வருவாயடா

இவ்வுலகில் இருப்பதெல்லாம் மிகு சிறிதாக மாறுதடா
கண்ணா...


நின் மீதுள்ள பெரும் காதல் ஏதாகினும் ஒருபோதும் மாறாதடா

‪#‎கண்ணா‬~~~

- வித்யாசன்

மங்கையர் தின

மண்ணில் மா தவம் செய்தாலும் மாதராய் பிறக்கு மின்பம் கிட்டிடுமோ
இவ்வையகத்தில் வேரென ஆன இவளுக்கிணை வேரொன்று உண்டோ
வீதிக்கொரு ஆலயமதில் மூலவருண்டு கருவறை சுமக்கும் கடவுள் இவளன்றோ
பாதகம் செய்திங்கு நாளும் பார்ப்போர்க்கும் சாதகமாய் துணை நிற்கும் ஆயுதம்
வேண்டுதல் ஏதுமற்று வேண்டுவன கேட்கு முன் கொண்டு ஓடோடி வரும் ஆலயம்
நாடாளும் வீரரும், பாராளும் பாவலரும் யாராயினும் பரிபூரணமாய் காப்பவள் பெண்~~~

மகளிர் அனைவருக்கும் மங்கையர் தின நல் வாழ்த்துக்கள்

- வித்யாசன்

பேதம் காணடி

மனிதனை தாண்டி
சிறப்பதனை வேண்டி
புகழினை தூண்டி
பேதம் காணடி - என்று
வையத்தில் சொன்னவர் யாரடி

இருப்பதும், இல்லாதிருப்பதும்
பெறுவதும், இழப்பதும் வாழ்வின் நியதியடி - இதில்
உயர்ந்தோர், தாழ்ந்தோர் உண்டான கதை வீணடி

பயமுற்று சுயநல கூட்டில் பழுதுற்றிருக்கும் உள்ளதை நல் எண்ணங்களால் உழுது சமன்படுத்து
பின்னதில் விதைக்கும் விதையாவிலும் முளைக்கும் நல் முத்து ~~~
- வித்யாசன்

அங்குசம்

பேரன்பின் பெருவுள்ளம் அங்குசத்தில் அடங்குவதல்ல
அதை அறிவது மிகு எளிதல்ல~~~

அவ்வளவு சுலபமல்ல

அவ்வளவு சுலபமல்ல
தீப்பிடித்தெரியும் ஞாபகங்களில் பிடில் பிடித்து வாசிப்பது...


அத்தனை எளிதல்ல
பெரும் மணி ஓசை கேள்விக்கு தேர்க்காலில் சிரம் பதிலாவது...


யாவிலும் ஒற்றை பொய்யல்ல
நேர்பட வாழ்தலில் யாவுமிழந்தும் இடுகாட்டில் கூலியாக தாளி தெரிவது...


இது நிகழ்தல் சிறிதல்ல
படர்கொடிக்கு இடர்நேரிடாது ரதம் கொடுத்து பாதி வழியில் பாதம் நடந்திட பாரியாவது...


இவ்வளவு கருணை காண்பது எளிதல்ல
குருதி பொங்கும் பசிக்கு தன் பங்கென தொடை அறுத்து தராசு நிறுத்தும் சிபியாவது...


இத்தனை வாஞ்சை இயல்பல்ல
நடனமில்லை கடுங்குளிரில் நடுங்கிடும் தோகையென போர்வை கண்ட பேகன் ஒருவன் பேரன்பானது....


எவர் நீதியும் மாறுவதல்ல
பெரும் சபை நடுவே உண்மை இடியென முழங்கிடவே சிதறிய சிலம்பொலியினில் உண்மை மன்னன் மடிவது~~~


- வித்யாசன்

கண்ணம்மா

கள்ளமில்லா பார்வையிலே
கண்ணம்மா
காதல் கள்ளத்தனம் செய்திடவே
தூண்டுதடி...

எந்த நேரமும்
உந்தன் ஞாபகமே
எந்தன் உயிரென மாறிடவே
கண்ணம்மா
எனக்கோர் சாவது இல்லையடி...

நிதமும்

மண்ணில் மலர் மலர்வதுண்டு
அது உதிர்ந்த பின்னும்
அதை எண்ணி நிதமும்
விண்ணில் நகைப்பதுண்டு~~~

தராசு

வாழ்க்கை தராசு தட்டில் எடைபோட
எல்லா கற்களும் படிக்கல்லாகிடாது
இது அனுபவப் படிப்பில் மட்டுமே
அறிந்திடலானது~~~


- வித்யாசன்

வழிகிறது

அதிரச் சிரிப்பின் நினைவிலிருந்து
உதிரமென வழிகிறது கண்ணீர்~~~


- வித்யாசன்

கண்ணீர்...

வெறுமை நிறைந்த இருளொன்றில் தன் திசை திரும்பா பறவையின் கூடொன்று குலுங்கி அழுததின் சத்தத்தில் உதிர்ந்தது சருகல்ல கண்ணீர்...

கனல் எரிக்கும் ஓர் கோடையில் தனதான இரை தேடுகையில் வழிமாறி தனல் சாலையில் கருகிட வெந்தது எறும்பல்ல வியர்வை...

கொடும் மழையில் தவமிருந்த சிறு செடியின் மீது விழுந்த மழைத்துளியில் கழுத்துடைந்து தலை கவிழ்ந்திட நிகழந்தது பேதமல்ல சிறு மோதல்...

பெரும் பலம் உண்டென பிளிறும் ஓசையின் பாசையில் கரைபுரண்டு ஓடுவது வீரமல்ல தலை தூற்றும் புழுதி மண்~~~

- வித்யாசன்

பேரொளி வீசிடடி

பேரொளி வீசிடடி
உள்ள பேதமை நீக்கிடடி
பாரெங்கும் பரவசமடி
உனை பார்த்தல் பேரின்பமடி ...


வட்ட முகம் வடிவழகடி
கிட்ட வர எட்டிப் போவதேனடி
பட்டு தேகம் தேய்வதேனடி
கட்டுக் கடங்கா காதல் பிரிவோடி ...


சற்றே மேகத்தில் ஒழிந்தாயடி
கடல் தொட்டே குளிர்ந்தாயடி
விழி பட்டே உடல் மெலிந்தாயடி
எனை விட்டே ஓர் நாள் ஓடி மறைந்தாயடி...


என் ஆசை உன்போல் சிறியதடி
உன்போல் அதிரம் உருக சிரிப்பவர் யாரோடி
தூங்க இமையும் நீயோடி
உனை நீங்கா இரவும் நானோடி~~~- வித்யாசன்

கனவுக் கோட்டை

எம் கோட்டையை
உடைப்பதென்பது
உங்களுக்கு
வெறும் கனவுக் கோட்டையே~~~


- வித்யாசன்

உறக்கம்

மிக நெருக்கமாகும் முன்னே
என் உறக்கம் கெடுக்கிறாய் ~~~~

பாலூட்டுகிறாய்

ஒற்றை மாரினில்
உலகிற்கே பாலூட்டுகிறாய்~~~


- வித்யாசன்

ஆண்டவனைக் கண்டீரோ?

நெருப்பு மூட்ட துணிந்த உங்கள் கரங்களுக்கு முத்தத்தை பரிசாக்குகிறோம்
மூத்திரம் ஊற்றிக் கொடுத்த உங்கள் கோத்திரங்கள் மட்டுமே உயர்வென்போம்
ஆத்திரமூண்டு அடித்துதைத்த போதினிலும் நோகும் உங்கள் பாதங்களை பிடித்திடுவோம்
பார்ப்பனர், பள்ளர், பறையரென பார்த்த போதிலும் பேதமற்று உங்களை தொழுவோம்
ஆயினும் நீங்களோ
எங்களை தலித்தென தள்ளிவைத்தீர்
சொல்லில் முள் தைத்தீர்
கண்ணில் நீர் வரவைத்தீர்
காலமெல்லாம் இழித்தே காரி உமிழ்ந்தீர்
அத்தனையும் செய்தீர்
பின் ஆலயம் சென்றீர்
ஆண்டவனைக் கண்டீரோ?
எக் குளத்திலும் முங்கினாலும்
எம் குலத்திற்கு நீர் செய்த அழுக்கது நீங்குமோ ?
பிறப்பென்பது ஒரு வழியானபின்
சிறப்பென்பது இனத்தால், மதத்தால் வேறுபடுமோ ?
நினைத்தால் நெஞ்சு கண் மூடுமோ~~~

- வித்யாசன்

ஆட்டு மந்தையென

சிந்தை யாவும் ஆட்டு மந்தையென திரிகிறது
அது வந்த வழி பள்ளமென்று அறிந்த பின்னும் மதி அவ்வழி செல்கிறது
அதனாலான துன்பம் பல நேரிட்டும் அதுவே விருப்பம் என்கிறது
கொன்று போட திறனின்றி ஆசை கூடவே வருகிறது
ஆக...
வெந்த பின்னும் சாம்பல் வருந்தவியலா செயலாகிறது
திருந்திடா
நிந்திக்கவியலா வாழ்வானதை யான் எங்கனம் நொந்து கொள்வது
எண்ணமே என் தவறிழைத்தேன்
நல் ஞானமே எனை நெருங்கிடா
நீ விலகிடக் காரணம் ஏது ?


- வித்யாசன்

பெருந் தீ

பெருந் தீ அருந்திய இதழது சிவந்திட
சுடரொளி அணிந்த மாரினில் கரமாடிட
அமுத விழியது தீரா ஆசை பூசிட
நித்தமும் தந்திடு ஆனந்த முத்தமே~~~


- வித்யாசன்

சம்மணமிட்டு

என் அத்தனை பிடிவாதமும்
உன் ஒற்றை பிடிக்குள்
சம்மணமிட்டு அமர்கிறது~~~


- வித்யாசன்

** இனி எப்ப வருவாக ? **


முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!

எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!

இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவா கொண்டு அறுக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அறுத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...
வானத்த பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா
இனி எப்ப வருவாக

- வித்யாசன்