திங்கள், 18 ஜூன், 2012

தீரா- மீரா 17

வானம் உடைந்தால்
மழையாகும்

நட்சத்திரம் உடைந்தால்
தீப் பொறியாகும்

சிப்பி உடைந்தால்
முத்தாகும்

அலை உடைந்தால்
நுரையாகும்

காற்றுடைந்தால்
வெற்றிடமாகும்

நிலா உடைந்தால்
தேய்பிறையாகும்

கண்ணாடி உடைந்தால்
காட்சி பலவாகும்

வெயில் உடைந்தால்
குளிர் கொண்டாடும்

மனம் உடைந்தால்
உயிர் திண்டாடும்

உயிர் உடைந்தால்
உடல் விடைபெறும்

காதல் உடைந்தால்
கண்ணீர் உண்டாகும்

தீரா- மீரா- வின்
காதல் உடைந்தது
உறவுகள் கண் தொட்டதால்;

ஒரு பெண் எப்போது
மென்மையை உடைப்பாள்?
பெண்மை மீது பேய்களின்
நகம் கீறும்போது;

ஒரு பெண் எப்போது
மென்னையை மேலும் உடுத்துவாள் ?
உண்மை காதல்- உறவுகளின்
விரல்களால் பிரித்தெடுக்கும்போது;

மீரா-தீரா விடமிருந்து
பிரித்தெடுக்கப்பட்டாளா?
இல்லை...
இல்லை....
பிய்த்து எடுக்கப்பட்டாள்;

வலை
கிழிபட்ட சிலந்தியாய்
துடித்தால் மீரா;

மீரா துடிக்க
தீரா வெடித்தான்;

தீராவின் விழிகள்
சிகப்பு வானமானது;
கர்ஜித்தான்...
விடுங்கள் தீரா-வை
காட்டுச் சிங்கமாய்;

மீரா-வின் உறவுகள்
உறுமியது;
தீரா-வின் கர்ஜிப்பிக்கு
எதிர்ப்பு கிளம்பியது;
சற்று நேரத்திற்குள்
ஊர் கூடியது;
இரு தேசத்தின் படை மோதிய
சப்தம் அங்கே எழுந்தது;

பூ-வின் இதழில் சாட்டையடியாய்
மீராவின் கன்னத்தில் விரல் காயம்;
புலி-யின் கொடூர தாக்குதலாய்
தீராவின் தேகம் அடித்த உடலில்;

நடுக்கம் அதிகமானது
பதற்றம் பதறிப்போனது
திடுக்கிடும் நேரத்தில்
தீராவை ரத்த வெள்ளமாக்கியது
மீராவின் உறவுகள்;

தீரா மயங்கியபடி
புலி யயன புலம்பினான்
மீரா... மீரா... மீ...ரா.....

மீரா உருகியபடி
இழுத்துச் செல்லப்பட்டாள்
தீரா... தீரா... தீ..ரா....

(தொடரும்)