சனி, 26 பிப்ரவரி, 2011

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

                            


முடியும் என்ற வார்த்தை சொல்லி - இனி
ஒவ்வொரு பொழுதுகளும் விடியட்டும்
எழும் தடைகள் யாவும் - இனி
திரை விலகிடும் என இமை பிரியட்டும்...

காலமிட்ட கைவிலங்குகள்
கர்ஜித்து அவிழட்டும்
ஞாலம் யாவும் நம் பெயர் சொல்லி
காற்று பயணிக்கட்டும்...


அடிமை, மடமை,கொடுமை; யாவுமினி
அடுப்பு நெருப்பாக எரியட்டும்
நிஜ உரிமை, முகம் கொண்டு;
நிலம்தனில் நம் பாதம் தடம் பதிக்கட்டும்...


படுக்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும்
பிறவி எடுத்த இயந்திர வாழ்க்கை புதையட்டும்
உடுக்கை  என ஆண்கள் கையிடுக்கில்
அகப்பட்டு கண்ணீர் வடிக்கும் அவலம் மாறட்டும்...

படிப்புக்கும், படைப்புக்கும்
நம் பெயர் சொல்லி பிறவிகள் எடுக்கட்டும்
துடிக்கும் மீனினமாய் யிருந்த கதைகள் மாறி
விண்மீன் பிடித்து நம்
விரல்கள் விளையாடட்டும்...


வெறும் பேச்சில் மட்டுமிருக்கும் நம் சுதந்திரம் - இனி
விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் கலந்திருக்கட்டும்
ஏடுகளில் மட்டும் படிந்திருக்கும் நம் உணர்வுகள் - இனி
எல்லோர் இதயங்களிலும் அழுத்தி எழுதட்டும்....


இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட  !!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நீயே யாதும்

மண்ணில் இல்லா இன்பம்
எது வென்று கேட்டேன்

விண்ணில் இடம் பெறா
அதிசயம் எதுவென்று வினவினேன்
...
கண்ணில் உள்ள சோகத்தை எல்லாம்
கரைக்கும் காட்சி எது வென்று விரைந்தேன்

எண்ணி,எண்ணி மகிழும் 
 நான் என்பது எதுவென்று தேடினேன்...

என் கைதனிலே மின்னி மிதக்கும்
மகளே
நீயே யாதும் என்று அறிந்தேன் !!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உன்னைப் போலவே

விழித்துக் கொண்டே
தூக்கம் கொள்கிறது...


ஒளிர்ந்து கொண்டே
ஒலிந்து கொள்கிறது...


சிரித்துக் கொண்டே
சிறிது சிறிதாக தேய்கிறது...


நான்...
இமைகளை மூடி
எங்கே பயணித்தாலும்
என்னுடனே வருகிறது...


வானத்து வெண்ணிலா
உன்னைப் போலவே !!

mvidhyasan@gmail.com