வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மே 1

இந்த மே தினமாவது உழைத்து காய்த்துபோன விரல்களுக்கு
ஒளி கொடுக்கும் மோதிரமாகட்டும்


வியர்த்து கறுத்து சலித்துப்போன இனத்தவருக்கு
விண்ணும், மண்ணும் விழா எடுக்கட்டும்

 
புது எந்திரமாய் தினமும் சுழலும் உடலுக்குள்
மெல்லிய இருதயம் இயங்குவதை யாவரும் உணரட்டும்


வெயில் அணிந்து, பசி சுமந்து ஒட்டிய வயிறுகளுக்கு
சுதந்திரமாக தண்ணீர் பருக சிறிது நேரம் கிடைக்கட்டும்

 
அடிமை பொருளாய் நாளும் அடங்கி கிடக்கும் கூட்டத்திற்கு
முட்டும் சிறுநீர் கழிக்கவாவது உரிமை கிடைக்கட்டும்


வழிகள் தொலைத்து, வலிபொறுத்து உழைக்கும் வர்க்கத்திற்கு
புதுப் பாதைகளின் கதவுகள் திறக்கட்டும்


தூக்கம் விடுத்து, ஏக்கம் மறைத்து வாழும் தொழிலாளர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்டட்டும்

 
ஏய்க்கும் குணத்தவரின் முச்சை நிறுத்தி
உழைப்பவர் பக்கம் காற்று உரக்க வீசட்டும்

 
நாளும் முதலாளி காரில் பறக்க காரணமான
தொழிலாளிகளின் கால்கள் ஓய்வெடுக்க
இன்று ஒருநாளாவது விடுமுறை அறிவிக்கட்டும் !!