சனி, 12 செப்டம்பர், 2015

கண்ணம்மா

உள்ளம் கலங்குதடி
கண்ணம்மா...
உண்மை ஊமையாகையிலே ;


நெஞ்சம் பதறுதடி
கண்ணம்மா...
நேர்மை சாகையிலே ;


சொல்லில் வேல் பாயுதடி
கண்ணம்மா...
மிகு ஏழை என்கையிலே ;


கண்ணில் முள் தைக்குதடி
கண்ணம்மா...
அடிமை என்றாகையிலே ...


பள்ளி பல்கிப் பெருகியும்
நம் பாடது தீரவில்லையே ;
கல்வி ஓங்கிப் பரவியும்
நாளும் பேதமை நீங்கவில்லையே ;


கோபம் மூளுதடி
கண்ணம்மா...
நிதம் அஞ்சி வாழ்கையிலே


நெஞ்சம் வேகுதடி
கண்ணம்மா
சிறு கஞ்சிக்கு அழுகையிலே ...


எங்கும் சுதந்திரமா ?
பின் ஏற்றத் தாழ்வது எழலாமா ?
யாவருமிங்கு சமமா ?
பின் வீண் பிரிவினை வரலாமா ?


ஞாயம் என்னம்மா ?
கண்ணம்மா
அது காகித தாளா சொல்லமா ?


பாவம் கூடாதம்மா
கண்ணம்மா
பாரில் பலமதுவே சட்டமா ?


நல் ஏடுகள் இங்கிருந்தும்
நாளும் கேடுகள் விளைவது ஏன் ?
நன்மை யாவிலிருந்தும்
பொல்லாத் தீமை புகுவது ஏன் ?


பேராசை தானடி
கண்ணம்மா
தானெனும் ஆணவமடி


மோசம் செய்வாரடி
கண்ணம்மா
காரிய பாசமது மெய்யோடி ~~~


- வித்யாசன்

பூக்கள்

புகழ் வேண்டி பூப்பதில்லை பூக்கள் ~~~

- வித்யாசன்

யாவர்க்குமிங்கு தகுதியுண்டு

வீதியெங்கும் விழிவுண்டு மங்காச் சுடரொளியாளுண்டு
நாளும் கரைந்து வளர்வதுண்டு கவனிப்பாரில்லாது களிப்புண்டு
பெரும் மலை மோதி புகையாகி நில்லாது போவதுண்டு
காரிருள் தனிமை நீக்கிடக் காதுமடலெனக் கேட்பதுண்டு
நீரோடையில் நிழலுண்டு நிகழ் விரல் சிக்கிடா அருகிலுண்டு
வா வா என தென்னங்கீற்று அழைப்பதுண்டு இளநீர் தவிப்பதுண்டு
வலம் வரும் வண்டுண்டு மலரென்று மொய்த்திடின் தேன் உண்டு
எட்டாக் கூடென்று சிறகசைக்கும் பறவைகண்டு சிரிப்பதுண்டு
பால் குளமுண்டு அழும் குழந்தைக்கிங்கு பசியாற்றுதலுண்டு
பாரினில் பார்த்தவர் பார்வையில் பண் இசைப்பதுண்டு
இதுவே நற் கள்ளென்று பருகியவர் மயங்கிப் புகழ்வதுண்டு
மூளும் போர்வுண்டு, பொழியும் அம்புண்டு
மின்னல் வாளுண்டு, காக்க கேடயமுண்டு
கெண்டை மீனிங்கு துள்ளிக் குதித்து விளையாடுவதுண்டு
மிதக்கும் பந்தொன்று வெடிக்கா காற்றதிலுண்டு
பொழுதை சமைத்துண்ணும் பெரும் தட்டுண்டு
பேரழகுப் பேதையே உனைக் காதலிக்க பேதமையன்று
மண்ணில் யாவர்க்குமிங்கு தகுதியுண்டு ~~~


- வித்யாசன்

** மீரா **

இதழ் கொடியில் காயும் வார்த்தைகள்

உலர்வதற்குள் சீக்கிரம் உதிர்த்திடு
உலறல்கள் முத்தங்களாகட்டும்

நினைவுகளை அடுக்கிவைக்கும் அறைகள்
முழுவதும் வந்தமர்ந்து நிரம்பிவிடு
இரவுகள் யாவும் கனவுகளாகட்டும்

மெளனங்களில் துடிக்கும் ஓசைகளின்
நிச­ப்தங்களில் நீந்திக் கரையேறிவிடு
எழுத்துக்கள் யாழ் மீட்டட்டும்

பார்வைத் தேடலின் தூரங்களை
இரு விழித் தேயும் வரை படரவிடு
மாயங்கள் கைகளில் அகப்படட்டும்

மீளாத் தவமிது சோகம் புற்றாய் வளருது
தீராக் காதலிது சேரா தாகமது
வெண்புறா அழைக்கிறது தம்புரா அழுகிறது

ஏன்
கண்ணா
நான்
மீரா


- வித்யாசன்

கொட்டிவிட்டு

கொட்டிவிட்டு
கொட்டிய வார்த்தைகளை மட்டும்
வெட்டி எடுத்துச் செல்லக் கெஞ்சுகிறாய்
ஒட்டியிருக்கும் வடுக்களை
எதைக் கொண்டு கத்தரிப்பது ~~~


- வித்யாசன்

** நான் அல்ல **


புல்லெல்லாம் புல்லாங்குழலாகி
புது ராகம் காற்றில் இசைக்க

சொல்லெல்லாம் சுடர் ஒளியாகி
வழி எங்கும் வெளிச்சம் முளைக்க

முள்ளெல்லாம் இதழ் முத்தமாகி
உள்ளமெல்லாம் பரவிக் கலக்க

வெல்வதெல்லாம் நான் அல்ல
" முத்தமிழே " நீ என் விரலாகியிருக்க !!


- வித்யாசன்

ஓணம்

மா தோரணம் வாயிலெங்கும்
மா வலி நீங்கி இன்பம் பொங்கும்
வா மணன் அவதரித்த நாளாகும்
வா னம் அளந்த ஓரடி நினைவாகும்
பூ வண்ணம் வீதியெங்கும்
பூ வையர் ஆடை வெண்ணிறமாகும்
ஆ வென ஆவல் வஞ்சிப்பாட்டாகும்
ஆ வணியில் பூக்கும் அத்தப்பூ கோலமாகும்
தா வெனக் கேட்போருக்கு தலை தந்தவனாகும்
மா பலி மன்னன் வருவான் வீடெங்கும்
அத்தம் ஆதாரம் பத்தென நட்சத்திரம்
முற்றும் திருவோணம் வைபவம் - எங்கள்
பெரு ஓணம் ~~~


- வித்யாசன்

பெரும் ப்ரியம்

நின்போல் பேரன்பு பெரும் ப்ரியம்
எமக்கு வேறெந்த நிழலில் வாய்க்கும் ~~~


- வித்யாசன்