புதன், 20 ஜூலை, 2011

வரம் தருவாயா ?

உன் கை பிடித்து ஊர் சுற்ற வேண்டும்
உன் விழி படித்து மனப்பாடம் செய்ய வேண்டும்
உன் மொழி கேட்டு இமை மூட வேண்டும்
உன் மடி சாய்ந்து சொர்க்கம் தேட வேண்டும்
உன் தோள் பற்றி கதை சொல்ல வேண்டும்

உன் நகம் கடித்து விரல் குடிக்க வேண்டும்
உன் கால் பிடித்து முத்தமிட வேண்டும்
உன் இடை வளைத்து இதயம் இணைக்க வேண்டும்
உன் முடி மீது முகம் நுழைத்து வாசம் நுகர வேண்டும்
உன் உள்ளங்கையில் என் எதிர்காலம் பார்க்க வேண்டும்

உன் உறக்கத்தில் என் உறக்கத்தை தொலைக்க வேண்டும்
உன் பக்கத்தில் உரசிக் கொண்டு உயிர் பேச வேண்டும்
உன் மூக்கோடு என் மூக்கு சண்டையிட வேண்டும்
உன் கூந்தழில் பூச்சூடி அதிசயிக்க வேண்டும்
உன் கைவளை ஒலியிலே என் காலை விடிய வேண்டும்

உன் இதழ் இரண்டும் என் பசி தீர்க்க வேண்டும்
உன் உலகம் என் உலகமாக வேண்டும்
உன் இமையோடு என் இமை புன்னகைக்க வேண்டும்
உன் உடல் முழுவதும் என் விரல் நீந்த வேண்டும்
உன் திட்டலுக்கு பின் எனை கட்டி கொள்ள வேண்டும்

உன் உயிரோடு என் உயிர் இணைய வேண்டும்
உன் கருவில் நம் உயிர் உருவாக வேண்டும்
உன் தாய்மை முழுவதும் நான் தாலாட்ட வேண்டும்
உன் கனவுக்கு தலையணை ஆக வேண்டும்
உன் சுமை கண்டு நான் சுகம் காண வேண்டும்

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்
உன் உயிராக என்னாக ஒன்று நீ பெற்றெடுக்க வேண்டும்
நம் உயிர் கண்டு என் கண்கள் ஈரமாக வேண்டும்
தொட்டிலுக்கும், கட்டிலுக்கும் நீ கவி பாட வேண்டும்
என் காலம் முழுக்க நீ கற்கண்டாய் வேண்டும்

கண்ணே...
என் உயிர் இறுதியில் உன் முகம் பார்த்து பிரிய வேண்டும்
வரம் தருவாயா ?