திங்கள், 24 ஜனவரி, 2011

அவளும் நானும் உரையாடல் - 5

அவள்
என்னை மறந்து விட்டீர்களா ?

நான்
என்னை எப்பொழுதும் நான் மறப்பதில்லை

அவள்
நான் என்னை கேட்டேன்

நான்
நானும் அதைத்தான் சொன்னேன்

அவள்

ம்ம்ம்...

நான்
ம்

அவள்
போதும், போதும் இன்று என்ன வருணனை

நான்
எனது கவிக்காக காத்திருக்கும் உன் செவி பற்றி

அவள்
ம்ம்... கேட்க காத்திருக்கு என் செவியே

நான்

ஒரு பக்க சிப்பி
ஒட்டி வைக்கப்பட்ட இரட்டை ரோஜா இதழ்
வண்ணத்து பூச்சியின் ஒற்றை சிறகு
தொங்கிக் கொண்டிருக்கும் கேள்விக் குறி ?
குடைந்து செதுக்கப்பட்ட குகை
இரண்டாக நறுக்கப்பட்ட மாதுளை
ஒலிகள் நடந்து செல்லும் சாலை
பறவைகள் கட்ட துடிக்கும் கூடு
முழுமையடையாத கருவறை
ஊர்ந்து செல்ல முடியாத நத்தை
கடலில் கிடைக்காத சங்கு
முளைக்காத விதை
மெல்லிய மேக இலை
வண்ணமில்லாத மயில் தோகை
படமெடுத்தாடும் நாகத்தின் தலை
அழியாத கால் தடம்
நாண்ஏற்றாத வில்
ஆணவம் கொள்ளும் ஆங்கில எழுத்து 3,21
காற்று ஏங்கும் அழகிய விசிறி
நான் மட்டும் நீந்தி குளிக்கும் குளம்

அவள்
அடடா செவிக்கு இத்தனை அர்த்தம் உண்டா?

நான்
நான் கண்டது குறைவுதான்
உன் செவி கொண்ட அழகு கோடிதான்

அவள்
ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்களே

நான்
ம்ம்ம்... கண்டுபிடித்து விட்டாயே

அவள்
அது என்ன ? என்ன ? சொல்லுங்க !

நான்
வழியும் துளி
அதன் நுனியில் ஆடி, பாடுது தோடு எனும் தோழி

அவள்
ம்ம்ம்....

நான்
ம்ம்ம் என்றால்

அவள்
ம்ம்ம்ம்ம்ம்ம......... தான் !