திங்கள், 4 அக்டோபர், 2010

காதல் கடிதம்.



நீ கேட்ட அந்த நிமிடம்

வானம் வெள்ளை தாளானது

வானவில் எழுதுகோலானது

விண்மீன்கள் வார்த்தையானது

வெண்ணிலா, சூரியன் புள்ளியானது

அனுப்பிவைக்க காற்று தகுதியானது

படித்து பார்க்க உனக்கே உருவானது

படைத்து விட்டேன் அது உனக்கென்றதும்
ஏனோ கவிதையானது.

உன் முத்தம்




இரட்டை  அலை 

 
ஒற்றை முறை

 
என் மீது மோதியதில்

 
உடைந்தே போனது

 
என் மனக்கரை !!

தொலைவில் உன்னை

எனது நெடுந்தூர தனிமை பயணத்தில்
உன் நினைவே துணை....

மெளனம் நிலை கொண்டிருக்கும் தருணத்தில்
உன் பேச்சின் நினைவே இசை...

கனவுகளின் மடியில் நான் கைதாகும்போதெல்லாம்
உன் வருகையின் எதிர்பார்ப்பே சுகம்...

தென்றல் உரசி போகும் வேளையில்
உன் சுவாச நுனி தொடும் இதம்...

ஏதேதோ மாற்றம் நிறைந்த வழித்தடம்.
அந்த வழி எங்கும் நான் தேடி அலைவது
உன் கால் தடம்...


கலையும் மேகம் ஓவியம் கோடிவரைந்தாலும், 

மேகம் கூடி வரும் போதெல்லாம்
இமை எனும் தூரிகை உன்னையே வரைகிறது...

இயலாமையின் கொடுமை
இழப்பின் அருமை
பிரிவின் ஆழம்
துயரின் துயரம்
உணர்கிறேன்
நீ தூரம் சென்ற நிமிடம்...

கதை சொல்ல உதடுகள் காத்திருக்கிறது
எங்கே உன் செவி ?

பார்த்தே அதிசயிக்க துடிக்கிறது விழிகள்
எங்கே உன் முகம் ?

நனைந்து கொண்டே நடக்க பொழி
கிறது மழை
எங்கே உன் வருகை ?

தொலையும் வாழ்க்கையின் கரையில்
தொலைந்து, தொலைத்து தேடுகிறேன்
தொலைவில் உன்னை !!



பாடகன்