திங்கள், 11 மே, 2015

தீட்டென்பது

பருவம் பூத்த நாளிலிருந்து
இடுப்பெழும்பு கீழே ரணமாக
இரவெல்லாம் அடி வயிறு வதங்க
திணித்த துணியில் வந்திறங்கிய சோகம்
பாவமென்று ஒளித்து வைத்து
புதைத்தால் நாய் தோண்டும்
பாம்பு நுகர்ந்தால் மலடியாகும்
பள்ளம் தோண்டி போட்டதை எரித்து
பார்க்காது வா மகளே என்றுரைக்க
தெரிந்து கொண்டேன் அன்று
தீட்டென்பது பெண் என்று  ~~~


- வித்யாசன்

சிறை மீட்ட பொய்

நேர்பட நீதியின்றி குடை சாய்ந்த உண்மையினை கேட்பதற்கு நேர்மையில்லை ;
சீர்கெட்டொழியும் வாய்மையும் சிறை மீட்ட பொய்மையும் நாட்டிற்கு கேடான மெய்மை ;
பாரடா இது பெரும் வேதனையடா :
அறியாப் பாமரராய் வாழ்தல் கொடுமையடா ;
ஊழல் மலிந்த உள்ளம் ஆள்வதாயின் ஒர் நாளும் வறியோர் உயர்வடையார் நிலையே எஞ்சுமடா~~~


-வித்யாசன்

ஞாயிறு, 10 மே, 2015

மலரும் பூக்கள்



உழைப்பவர் கூட்டம் யாவும் நாளும்
முதலாளி வீட்டுத்தோட்டத்தில் வாடி மலரும் பூக்கள் *

- வித்யாசன்

மொத்தமும்

உண்மையற்ற பொம்(ய்)மையின் மீதே
உயிர் எப்போதும் மொத்தமும் ~~~

- வித்யாசன்

ஆணுக்குமுண்டு

மூத்திரம் ஒளித்து வைத்திருக்கும் பாதைக்கும்
முன்னால் வளர்ந்திருக்கும் பாலுறுப்புக்கும்
காத்திரம் கெட்டு மனப் பாத்திரம் நழுவிடலாமோ
காம ஆத்திரத்திற்கு இறையாய் பெண்ணை பலியிடலாமோ
சத்தியமாய் கற்பென்பது ஆணுக்குமுண்டு~~~


- வித்யாசன்

மேலோனே

உழைத்து இன்னும் உயரப் போகவில்லை என்று
சலித்து அயர்ந்திடாது நித்தமும் கலப்பை பிடித்து
நிலத்தில் கேள்விக்குறியாய் விரல்கள் காய்த்து
மலையென தேகம் கருத்து மழைக்காக காத்து
பிழையாவும் பொறுத்து நல் நெல் மணிகள் அறுத்து
பசியாற உணவளிக்க மேலாடை துறந்த மேலோனே
நின் உழைப்புக்கு ஈடாகுமோ இங்கு வேறேதுமே ~~~


- வித்யாசன்

அகமது நாமே

கை நிறைய வலிகள் நில்லாது வழிந்தோடுகிறது
தேடிக்கொண்டிருக்கின்றேன் பகிர்ந்திட நின் ஒற்றை விரலை


எல்லா ஒளியும் கதவடைத்துக் காணாமல் இருளாகையில்
கனவுகளின் தையல் பிரித்து பூப் பறித்து சூடிக்கொள்வது நீதான்


வெறுமையாகும் இருப்பை எப்போதும் நம்புவதில்லை
சூழ்நிலை சுத்தியல் ஆனால் என்ன என் நாற்புறமும் நீயே


நிலைதடுமாறும் வாசலில் அமர்ந்திருந்து அழுதிருக்க
விலையற்ற அன்பை தோள் அணைத்து அள்ளிக் கொடுப்பாய்


சில்லரை சூடிக்கொள்ளும் கல்லறை என்று கதறியபோது
கண்ணாடிச் சில்லென உடையாது சிதராமல் சிரிக்க வைப்பாய்


தடையங்கள் தொலைத்து தொலைதூரம் தனித்தொரு பயணம்
தடங்கள் பார்த்து அருகில் வந்து தலைகோதுதல் தனி சுகம்


பொய் என யாவும் கடந்தேபோகும் புறமது வாழ்வு
மெய் என நாளும் கலந்தே இருப்போம் அகமது நாமே ~~~


- வித்யாசன்

அம்மா

நீ தூளியில் ஆட்டியது முதல்
கடைசியாய் உடுத்தி குளிப்பாட்டியது வரை
எல்லாப் புடவையும் பீரோவுக்குள்
பத்திரமாய் உன் வாசம் வீசுகிறது ;

கோபத்தில் நீ அடித்த அடிக்கு பின்னால்
ஓடோடி வரும் முத்தத்திற்காகவே
நான் அடிக்கடி அழுவதுண்டு ;

என் பிள்ளை ஒவ்வொன்றிலும்
என்னைத் தேடி அப்படியே என உச்சியில் முத்தமிடும்
போதெல்லாம் தேவதை உண்மையாகிறது ;

பசி தாங்கி பால் சோறு ஊட்டிய பாத்திரத்தை
பார்த்தே பசியாறிய உன்னிடம் ஓர் நாளும்
கேட்டதில்லை பசிக்கின்றதா என்று ;

விரல் பிடித்து வீழாது நடை கற்றதை விழா எடுத்து கொண்டாடிய நீ
ஒரு அடி எடுத்து வைக்க முடியாது ஆயினும்
நான் வாழ்வில் பல அடி உயர ஓயாது வழிபட்டவள் ;

ஓர் நொடி காணாது, இமை தூங்காது காத்திட்ட பேரன்பை கைவிட்டு வெகு தூரம் மறைந்தாலும் வேறேதும் எண்ணாது
வேராக எனை எண்ணியவள் ;

வேண்டுவதே வாழ்வென்று எண்ணிடலாகாது
என்னில் ஏதும் வேண்டாது என் அன்பொன்றுக்கும்
அலைபேசி அழைப்புக்கும் நிதம் ஏங்கியவள் ;

எல்லாமே எனக்கு இருக்கிறது
அவை யாவும் உன்னால் ஆனது

நீயிருக்கும் வரை அறியவில்லை
நிஜ தெய்வம் பூமியில் வேறேதுமில்லை

யாருக்கும் என்மீது உன்போல் அன்பில்லை
இனி எங்கே தேடிக் கண்டுபிடிப்பேன் என் கோவிலை

அம்மா என்றழைக்கின்றேன்
எனை அழவைக்காது வா வா என் அருகில்~~~


- வித்யாசன்

ச்சியஷ்

இரவு கோப்பையில்
உருகும் பனி கட்டி மேகம்
தள்ளாடும் விண்மீன்
தாராளம் வெள்ளை ஒயின்
பருகி மயங்கும் விழிகள்

சீக்கிரம் சொல்ல வா
ஒரு ச்சியஷ் ~~~

- வித்யாசன்

தனத்தந்தோம்

பூவினில் தேனாய் ஆடுகிறாய்
பூப் பந்தாய் துள்ளி ஓடுகிறாய்
பூலோகம் யாவும் நீ ஆகுகிறாய்
பூ மழையாய் என்னில் தூறுகிறாய் ;l

வானம் நிமிர்ந்து மேகம் பார்த்தால்
உந்தன் முகமாய் மாறுது ;
பூமி சாய்ந்து இமைகள் மறைத்தால்
உந்தன் ஞாபகம் கீறுது ;

பொய்யென ஆன பின்னும்
பெய்யெனப் பெய்ந்து - நெஞ்சம்
மெய்யென இனிக்குது
தனத்தந்தோம் ~~~


- வித்யாசன்

ஆவதேன்

நின் வருகையின் ஆவலில் என் மனதானது ஆவதேன்
மழைக்கு முந்தி தோகை விரித்தாடும் மயிலென ~~~


- வித்யாசன்

ஓடி ஓடி

ஓடி ஓடி மார்பினை மேகம் மூடி மறைக்க
மோகம் கொண்டு காற்று முந்தானை பிடித்து இழுக்க
இரவு முழுவதும் பொழிந்த பாலினை குடித்து விடிந்தது வானம் கண்கள் சிவக்க ~~~

- வித்யாசன்

பேரழகு

என்னை உள்வாங்கி பிரதிபலிக்கும்
பாதரசமில்லா பேரழகு கண்ணாடி நீ ~~~


-வித்யாசன்

மோகம்

எனதற்ற எதுவாகினும் அதன் மீது மோகம் கொள்ளுதலானது
கடலில் கலக்கும் வான் மழையானது ~~~


- வித்யாசன்

நல் காலப் பொழுதினை

நல் காலப் பொழுதினை
ஆழ உழுதினை செய்து
அங்கே நாம் அன்பை விதைப்போம் ;

பேதமற்ற நீர் ஊற்றி

உறவெனும் உரமேற்றி
நம்பிக்கை வேரிட்டு இலை நீட்டுவோம் ;

உண்மையின் கிளை விட்டு
உரிமையின் உயரம் தொட்டு
நாளைய மரமாவோம் ;

பேராசைப் புயல் காற்று
பெயர்த்திட வரினும் அசையாது
அடை மழையின் குடையாவோம் ;

நம்மினத்தவர் வந்திங்கு
கனியுண்டு இளைப்பாற
நம்மாலான நிழலும் கொடுப்போம் ~~~


- வித்யாசன்

எனக்கானது

எனக்கானது யாவும்
உனக்கானதில் சூல் கொண்டு சுடர்விட்டெரிகிறது ~~~

- வித்யாசன்

நான்

நின் அட்ஷய பாத்திரத்தின்
நம்பிக்கை


நான் ~~~

-வித்யாசன்

சிற்றெறும்பென

சிற்றெறும்பென
சீரிய நரித்தனம் புரிகின்றாய்
கற்றுணர்ந்த கர்வமற்ற மனதிடம்
கள்ளத்தனம் செய்கின்றாய்
முற்றுணர்ந்தோனென

முட்டாள் ஆக நினைக்கின்றாய்
காலம் கற்பித்த பாடம் தனை மறந்து
காதினில் பூ சுத்துகின்றாய்
உழைப்பினை உணராது
ஊதியத்தில் ஊனமாகிறாய்
உண்மையினை உணராது
உன்பாட்டிற்கு உளறுகின்றாய்
இனியும் தப்பாட்டம் ஆடினால்
தப்பிடாது தலை மாட்டுவாய்
உன்னுடன் மழைக்கு மட்டுமே துள்ளியாடும்
தவளைகளை கூட்டு சேர்த்து நிச்சயம் பாம்புக்கு இரையாவாய் ~~~


- வித்யாசன்

நீ பாராது

நீ பாராது
இரவு பாழாய் கழிகிறதே
வேதனை தாராது
வா வா பால் நிலவே ~~~


- வித்யாசன்

வதை

வெள்ளைச் சுடரொன்று
வெட்ட வெளி வீதியிலே உலவுகிறது
கொள்ளை அழகுண்டு
கோபத்திலே தனித்து முகம் திருப்பியிருக்க - அன்பு
இல்லையென நம்புவதற்கில்லை

இரவு முழுவதும் விழித்திருக்கு - மிகு
ஏழை என்னை வெகு தூரத்திலிருந்து
வேதனை செய்திடலாகாது -ஒரு
கள்வனைப் போல்
ஓர் நாள் காணாது ஒளிந்திருக்க
முள் அதனை விழியெல்லாம்
சொருகியதாய் வலியெடுக்க
சொல் உடனே
என்மீதுண்டானக் காதலை
இல்லையெனை எப்பொழுதும்
நின் எல்லையில் நின்றே வதை~~~


- வித்யாசன்

சொல் பேச்சுக் கேட்காத



சொல் பேச்சுக் கேட்காத கற்பனையின் கழுத்தறுக்கின்றேன்
வலியின்றி சிரிக்கின்றது கனவு ~~~

- வித்யாசன்

கனவது



கண்ட கனவது விதையாகி, வேர் விட்டு, இலையாகி, செடியாகி, படர் கிளையாகி, பூத்து, காய்த்து, பழமாகி, தொண்டையில் இறங்க உறங்காது காத்திருக்க ...

கொண்ட கோலமது உண்ண முடியாது போனதடி கோல மயிலே ;
நாம் வாழும் வாழ்கையானது கொண்டு போக ஒன்றுமில்லா சாம்பல் அல்லது சில அடி ஆழமடி ;

இதில் சொந்தமென்ன, பந்தமென்ன உயிர் உடல் விட்டு சுடுகாட்டில் வெந்து தணிந்த பின், சுயநலமும் சுயமும் சுகமும் வேறு கூட்டில் ஒலியும் மாயமென்னடி ;

மண்ணில் புழுத்துப்போகும் தேகமது இதற்கு பூரண அழகு ஏதடி; புத்திக்கு எட்டிய இது பூமியில் அடங்கும் வரை ஓய்வதில்லை; கத்தியே சொன்னாலும் ஆசையின் செவிட்டுக் காதினில் ஏறுவதில்லை ;

சத்தியமாய் சொல்லுகின்றேன் சாவதற்கு அச்சமில்லை; எவனாக இருப்பினும் எமனுக்கு பேதமில்லை; சுற்றும் இந்த பூமியிலே முற்றும் கற்றவர் ஒருவருமில்லை ஆதலால், தொற்றிய கவலையை தூற்றித் தொடர்ந்து பற்றிடுவாய் பாதகமற்ற பாதையை ;

பத்திரம் பத்திரம் மனப்பாத்திரம் அது நிறையா நிலையில்லா காத்திரமற்ற கோத்திரமடி ~~~

- வித்யாசன்

ஏதுமுண்டோ

நின் பரத்தை வார்த்தையால் பயனேதுமுண்டோ
தின பாரா முகத்தால் நிலை மாறுதல் ஏதுமுண்டோ
பிடி வாதத்தால் பேதமை நீங்குவதுமுண்டோ
மன பிணமாகி பிறழ்கையில் சீண்டுவோருண்டோ ~~~


- வித்யாசன்

முத்தக் கவிதை

என் எண்ணக்காட்டில்
கன்னங் கிளை அமர்ந்து
இச் ... இச் .... எனக் கத்தும்
இப்பைங்கிளியின் பசியாற
இப்பொழுதே உண்ணத்தருகிறேன்

என் முத்தக் கவிதைகளை ~~~



- வித்யாசன்

வழி

மூங்கில் காடழித்து ஒரு புல்லாங்குழல் செய்துவந்தேன்
வாசித்து மூழ்கடித்து துளை
வழி தொலையவைப்பாயா வாசுதேவா~~~


- வித்யாசன்

பெண்ணெனும்

முள் கட்டிலில்
புழுவாய் நிதமிரவில்
தீயாய் படர்ந்து
நாயாய் புணர்கையில்
காமப் பேயாகி
பிறப்புறுப்பும்
மாரிடுப்பும்
பிணைகையில்
பெண்ணெனும் பேரின்பம்
வெறும் சதையாகையில்
கருப்பை அறுத்தெறியும்
கத்தியென ஆணுறுப்பாகினால்
மீண்டும் பிறப்பெடுப்பதில்லை
மண்ணில் இன்னுமொரு
பெண்ணடிமை ~~~


- வித்யாசன்

ஞானம்

நல் ஞானம்
சொல் தேடல்
இல்லாதார் நாடும் நின் ஏடு
பொருளற்று ஏந்திடும் திருவோடு ~~~


- வித்யாசன்