வெள்ளி, 15 அக்டோபர், 2010

இனி எப்ப வருவாக ?

முள்ளா கிடந்த ஏ முகத்துல
அவுக மெல்ல..
நல்லா எடுத்து சுத்தஞ் செஞ்சவுக!

கல்லா கிடந்த ஏ மேனியில
அவுக வந்து...
நில்லாம கமல எறச்ச கடவுளவுக!

செல்லா காசா இருந்த ஏ உடல
அவுக நின்னு...
வில்லா வளைஞ்சு உழுதவுக!

புல்லா விளைஞ்ச ஏ உசுருல
அவுக தானே...
நெல்லா விளைய விதை விதச்சவுக!

வெடிப்பு பாதம் பட்டு
வரப்பு மடிப்பு நோகுமுன்னு...
பைய்ய அடி எடுத்து வச்சவுக!

மேகம் கருக்கும் முன்னே
தேகம் கருத்து ...
வியர்வை மழைய நில்லாம பொழிஞ்சவுக!

ஒத்த தோகை வாடிச்சுனா போதும்
கொத்து, கொத்தா கண்ணீர் விட்டவுக!

தலைப்பா கட்டிக்கிட்டு
விரப்பா நின்னுக்கிட்டு ஐய்யனார்
மீசையை முருக்கிக்கிட்டு என்ன
ஆசையா பார்த்தவுக!


எனக்கு ஏதாச்சு நோய்
வந்துச்சுன்னா...
தனக்கு வந்ததாச்சுன்னு
மருந்து குடிச்சவுக!

நா...
அரும்பு விட்டு நிற்கையில
அவுக...
இரும்பு மீசைய ஒதுக்கி விட்டவுக!

கதிரு முத்தி நிற்கையில
கஞ்சி தண்ணி குடிக்க மறந்தவுக!

குருவி கொத்தி,குருதி வருமோன்னு
இராவு,பகலா என் கூட படுத்தவுக!

கன மழை பெய்யாம
கருப்பசாமி காத்திருச்சு

கதிரு முத்தி...
கழுத்து வரைக்கும் வளந்துருச்சு

காலம் இப்ப கனிஞ்சிருச்சு
கஷ்டம் எல்லாம் தீர்ந்து போச்சு!

அன்றைக்கு வித்த ஆட்டுக்குட்டி
ஏழுமாசமான ஏ அருமை பசு கன்னுக்குட்டி
அடகு வச்ச பொஞ்சாதி தாளி
அழுது கேட்ட மூத்த பிள்ள கோழி!இளைய பிள்ள
பார்த்து வச்ச டவுனு சொக்கா
நல்லவனுக்கு
நேந்து விட்ட மூகக்காயி மொட்ட
கடைசியில்ல
கையில்ல காது குத்த காத்திருக்கு
ஒரு பிள்ள பொட்ட
வைத்துல சுமக்குரா ஏ எஜமானி
மூக்குக்கு வளையல் மாட்ட!

எல்லாம் வாங்க
வந்ததிப்ப காலமுன்னு
கைவிரலால என கட்டி அனைச்சவுக!

சூரியன சுத்தியாச்சு
குலசாமிக்கு நேந்தாச்சு
படையல் முடிஞ்சுருச்சு
பாட்டி குலவ போட்டாச்சு!

என்ன...
அருவ கொண்டு அருக்கையில்ல
உசுர விராகட்டாம் எரிச்சவுக!

அலுங்காம, குலுங்காமா
அருத்து போட்டு
கை தூக்கி கதிரு அடிச்சு
புல்ல மட்டும் தனியா பிரிச்சு
நெல்ல மட்டும் கொண்டு போக
நினைக்கையிலே!

வந்து நின்னா விரசா
வயிறு மட்டும் யானை பெருசா
பட்டு வேட்டி, பவுசு சொக்கா
பக்கத்துல்ல இரண்டு அடியாளு மக்கா!

ஏம்...
பக்கம் வந்தா சொகுசா
பன்னையாரு அள்ளி பார்த்தான்
நைசா!

வாங்கிய
வட்டி கடனுக்கு
இந்த வருசம் இது பத்தாதுன்னு
நெல்லோட சேர்த்து
புல்லையும் வண்டியில்ல
ஏத்திக்கிட்டு போயிட்டா!

நெல்லா வீட்டுக்கு கொண்டுபோயி
எல்லாம் வாங்கலாம்முன்னு
தில்லா சொன்னவுக

இப்ப...

வானத்து நிலாவ பார்த்து
நிலத்துல மல்லாந்து படுத்திருக்காக!

வீட்டுல்ல நெல்லு வருமுன்னு
காத்திருக்க!

இப்ப புல்லு கூட இல்லாம
போராக!

ஏ ராசா


இனி எப்ப வருவாக ?


அழுகை