வியாழன், 18 பிப்ரவரி, 2016

சுடரொளி பாயுதடி


சுடரொளி பாயுதடி நெஞ்சினிலே
பெருஞ் சூரியன் எரியுதடி இரு கண் விழியினிலே
கொடுமை யாவும் ஓடிட விரட்டிட வேண்டுமடி இப்பொழுதினிலே
நம் உடமை யாவும் பொதுவினில் ஆக வேண்டும் உண்மையிலே...

மடமை முற்றும் இன்றே மடிந்திட வேண்டும் வீதியிலே
மலரும் பூவாய் நாளும் நல்வினை நிகழ வேண்டும் பாரினிலே
அடக்கும் குணங்கள் அரவே நீங்கி சமமாக வேண்டும் சடுதியிலே
நாம் எதற்கும் யினி அடிமை இல்லை என ஓங்கி ஒலிக்க வேண்டும் இமய மலையினிலே...

மாதரினை முடக்கும் செயல் யாவினையும் ஒடுக்க வேணுமடி நெஞ்சுரத்தினிலே
பெண் பரா சக்தியென்று தீயோரை விரட்டிட வேணுமடி சிறு முறத்தினிலே
எதிர் வரும் படை நடுங்க உடன் தோள் உயர்த்திடடி வீரமகளே
எங்கும் வீழ்வதில்லை பாயும் வேங்கையென மாறிடடி பூ மகளே...

கடல் கடந்தும் நம் மொழி வாசம் வீச வேணுமடி வான் மீதினிலே
கண்ணுறக்கம் இனியில்லை பாரெங்கும் விவசாயம் பேண வேணுமடி நிலத்தினிலே
பசி பஞ்சம் நீங்க எங்கும் நெல் மணிகள் விதைத்திடடி வயலினிலே
வந்தவரெல்லாம் வயிறு நிறைந்து வாழ்த்திடட்டும் மங்கள வாயினிலே...

இங்கில்லை பிரிவு என்று முரசு கொட்டிடு திண்ணத்திலே
யாவரும் இந்திய பிள்ளைகள் என்று நிமிர் மார் தட்டிடு வீரத்திலே
கொஞ்சமும் அஞ்சுவது நிகழாது என்று முட்டிடு வானத்திலே
எங்கள் பிஞ்சுகள் கைகளிலும் வாளுண்டு நீதி கேட்பதிலே...

நஞ்சுள்ளத்தார் தலை கொய்திடு ஒரு வீச்சினிலே
நாளும் பல கலைகள் வளர்த்து களித்திடு காதல் பேச்சினிலே
கொண்டு செல்ல ஒன்றுமில்லை என்பதை பறை சாற்றிடு புவி மீதினிலே
ஏழை இங்கில்லை என்றாகிட யாவையும் பகிர்ந்திங்கு பங்கிடு நேர்மையிலே~~~


- வித்யாசன்

அஞ்சுவோர்

அஞ்சுவோர் யாவரும் அடிமைகளே
எதற்கும் கெஞ்சுவோர்
கோழைகளே~~~

- வித்யாசன்

தேச காதல்

எத்தனை காதல்களின் நினைவுகள்
இக் கடுங் குளிரில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்...

பனிகளின் நிலப்பரப்பில் தங்கள் அன்பை எழுதும் கால் தடங்களின் அதிர்வலைகள் எதிர் கால கனவினை ஓவியமாக்கும்...

கம்பளி ஆடைக்குள் கழியும் ஒவ்வொரு இரவும்
ஞாபகங்களின் விண்மீன் ஆகையில் நிலா தூது செல்லும்...

எல்லை கோடுகளுக்கு மத்தியில் வேறு அங்கு என்னவாக இருக்க முடியும்
மலை போன்ற தேச காதலை விட மிகப் பெரிதொன்றாக~~~


- வித்யாசன்

நம் ஞாபகங்கள்


நீ ஆதமாய்
நான் ஏவாளாய்
திரிந்த இடங்கள் யாவிலும்
நம் ஞாபகங்கள்
தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது...


அப்படி எளிதாய்
விழுங்கிடவும், துப்பிடவும் இயலாது
தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள் அல்ல
தூண்டிலில் தொங்கும் மீனாகும் நம் பேரன்பு....

இன்னும் எத்தனை முறை யோசித்தாலும் சலிப்பதில்லை
அந்த காதோரப் பேச்சில் கனிந்த முத்தங்களில் நனைந்த தனிமைகள்...

எப்படி பார்த்தாலும் இரவின் கடைசி உரையாடல்
முத்தத்தில் முற்று பெறும்
வேடிக்கை என்னவெனில் துவக்கமும் அதிலடங்கும்...

நவீன தொடர்பற்ற பொழுதுகளில்
தோழமைகளின் துணையுண்டு
மறக்கவில்லை எனக்காக நீ கொடுத்தனுப்பிய பரிசு பத்திரமாய் என் வீட்டு அலமாரியில்...

சுழலும் வாழ்கையில் சூழ்நிலை பிரிவினை தந்த வலி
வழி எங்கிலும் வார்த்தைகளை சுமக்கின்றது
என்றாவது இறக்கி வைக்கப்படும் என்ற நம்பிக்கையில்....

இப்போது
நீ எங்கோ
நான் எங்கோ
ஆயினும் என்ன
தொலைக்கப்பட்ட காதலை
தூக்கித்திரியும் நினைவுச் சங்கிலி என்றும் துருபிடிப்பதில்லை...

இது நரை கூடி தள்ளாடும் பருவம்
கூட நிழல் போல நம் கனவுகள் தொடரும்
மரணத்தின் விழும்பில் நிச்சயம் தவறுவதில்லை
உள்ளார்ந்த அன்பு ஒருபோதும் உதிர்வதில்லை~~~


- வித்யாசன்

காதல் ஆப்பிள்

அத்தனை ஆதாம் இருதய துடிப்பில்தான்
ஏவாளின் முதல் காதல் ஆப்பிள்
பரிசளிக்கப்பட்டது~~~


- வித்யாசன்

ஒற்றை இலை

இரவு குளத்தில்
எண்ணற்ற தலை கீழ் தாமரை
மேக அலையில் நகர்கிறது
அவ் ஒற்றை இலை~~~


- வித்யாசன்

** கட்டங்களில் கவிழ்கிறது **

துவக்கத்திற்காக காத்திருக்கும் கவிதையைப் போல்
வருகைக்காக காத்திருக்கின்றேன் உன்னிதழ் சாலையில் ;

தற்கொலை செய்யவியலா நினைவுகளைச் சிறைபடுத்தி
ஆயுள் கைதியாக்கி நிரம்பியச் சிறைச்சாலையில் கம்பிகளில்லை ;

நின் புருவத்தின் மேலடுக்கில் அமர்ந்து கல் எறிகின்றேன்
விழிக்குளத்தில் விழாதிருக்க நீயோ இமைகளால் தட்டி விளையாடுகிறாய் ;

சாத்தப்பட்ட சந்தர்ப்ப சன்னல்களை திறப்பதற்கான வித்தைகள்
ஏதுமற்ற விரல்களின் நுனியில் கசிகிறது தீண்டலின் ஏகாந்தம் ;

மிச்சம் வைக்கப்பட்ட பருக்கையைப்போல் தனித்திருக்கும் கனவினை
கழுவி ஊற்ற படர்ந்திடும் வேரினில் எங்கிருந்து பூப் பறிக்க ;

எஞ்சியிருக்கும் மீத நிமிடங்களின் நீளகல வெளிபரப்பில்
நில்லாது சுழன்று கட்டங்களில் கவிழ்கிறது கருவிழிப் பந்து~~~


- வித்யாசன்

அழகிய பறை

இரவு அதிர
வானம் இசைக்கும்
அழகிய பறை~~~



- வித்யாசன்

தேவதை

தேய்கையில் புன்னகைக்கும்
தேவதை இவள் அல்லவா~~~


- வித்யாசன்

நந்தலாலா

நதிக் கரையினிலே
நந்தலாலா
மனம் துள்ளி குதிப்பது ஏன்
நிந்தன் வருகையாலா

பனிப் பொழிவினிலே
நந்தலாலா
இமை குடை விரிப்பது ஏன்
நிந்தன் சிரிப்பினிலா

ஒளி பரப்பினிலே
நந்தலாலா
இருள் விழிப்பது ஏன்
நிந்தன் பார்வையிலா

எழில் வனப்பினிலே
நந்தலாலா
புது ஏகாந்தம் பிறப்பது ஏன்
நிந்தன் ரசிப்பினிலா

ஒலி இழப்பினிலே
நந்தலாலா
நிதம் எனை இழப்பது ஏன்
நிந்தன் மௌனத்திலா

பதில் சொல்லடி
எந்தன் வானத்து
வெண்ணிலா~~~


- வித்யாசன்

அடிமை

அந்த ஒற்றை சிரிப்புக்கு
அத்தனை நட்சத்திரமும்
அடிமைதான் ~~~




- வித்யாசன்

சிம்மமாவேன்

துடிதுடிக்க
குரவளை குதறி
குருதி வழிய
உஷ்ணம் குறையாது
இரை ருசிக்க

உயிரற்று ஒதுக்கிய பின்
மிச்சத்தை நக்கும் நரியல்ல
நான்....
நர சிம்மமாவேன் ~~~


- வித்யாசன்

ஏ குளத்து தாமரையே....


ஏ குளத்து தாமரையே
உன்ன நெனச்சு கண்ணு தூங்கலையே
ஏ பருத்தி பூ காடே
ஓ ஒருத்திக்கு நா குறும்பாடே

கல்வாழை பூவப் போல
காதல சொல்லிப் போன
தல காலு புரியாமத்தான்
வௌவாலா மாறிப்போனே
நெல்ல குத்தும் உலக்கையை போல
நெஞ்சுக் குழியில குதிக்கிறியே....

துள்ளிப் பாயும் நதியாட்டம் என
அள்ளிப் போன துவைக்கும் துணியாட்டம்
ஓடையில் உன் பெயர
ஓயாம நா எழுத
பெரும் கோடையில் நீர் கரைய தவிச்சேனே அது காணாம
கம்பு கதிரா நீ சிரிச்ச
சொம்பு கூலா எனக் குடிச்ச...

நம்மூரு திருவிழாவில் அம்மனா நீயும் வர
உன்னோட பக்தனான என்ன கண்டுக்காம ஏ நாத்தீகனான
தலை வாழை தோப்புக்குள்ள மறைவாக உன்ன பார்க்கையில
சரியாத தாவணிய சரி செஞ்ச அது ஞாயமில்ல
மொட்ட பனைய ஒடிச்ச
இரட்ட ஜடையில் என்ன மடிச்ச...

வயக்காட்டு வரப்பு மேல
ஊரும் ரயில் பூச்சிபோல
சுண்ணாம்பு கலக்காம பதநீரா நா ஆனே புள்ள
கிழக்கால போகும் வீட்டு பாதை மறந்து
வடக்கால மாறிப் போனதென்ன
உழுவும் மாடா நானிருக்க
அதில் விழும் கோடா நீயிருக்க...

ஏ.......
குளத்து தாமரையே
உன்ன நெனச்சு கண்ணு தூங்கலையே....


- வித்யாசன்

ரத்த வெள்ளத்தில்

மொத்தமாக முத்தமிட்டு ரத்த வெள்ளத்தில் 
மிதக்கிறது ரோஜாப்பூ இதழ்கள்

- வித்யாசன்

உனக்கே நான் எப்போதும்


விழி தொடும் இமையாவேன்
வலி தாங்கும் தோளாவேன்
நெடுந்தூர பயணத்தில்
உன்னிரு பாதம் நானாவேன் ...

உள்ளங்கை விரலாவேன்
உள்ளத்தின் நிழலாவேன்
உனக்கே நான் எப்போதும்
தாலாட்டும் தாயாவேன் ...

அந்த நிலாவின் ஒளியினில் மறைந்து உனை ரசித்திடுவேன்
தூக்கம் வராத கனவிலும்
விழித்திருந்து கதை பேசிடுவேன்
மறுபடியும் நான் பிறப்பதென்றால்
உனை அகலாது வரம் கேட்டிடுவேன்...

சொல்லாத ஆசைகள் ஒவ்வொன்றாய் நீ செய்ய மயங்கிடுவேன்
நீ இல்லாத பொழுதுகள் மீது கோபம் கொண்டு அழுதிடுவேன்
தொடரும் நிழலும் உனைத்
தொடவே நான் துடித்திடுவேன்...

மடி மீது உனை சாய்த்து
தலை முடி நீவி முகம் பார்த்து
பிடிவாத முத்தம் கேட்டு
இடை பிரியாது யுத்தம் நடத்து
புது மலராக எனை பறித்து
மார் மீது நீ உடுத்து...


- வித்யாசன்

தித்தோம்... தித்தோம்...


காலை கதிரினிலே
காக்கை குருவி சிறகினிலே
கொண்டை சேவல் கூவும் அழகினிலே
மனம் இன்பமாகி கொள்ளை போகிறதே ;

சுடரொளி கடல் மூழ்கி எழுகையிலே
இளம் தளிர் இலை மீது தலை மோதுகையிலே
எங்கும் சுகந்த காற்று படர்கையிலே
மேனி சுடச்சுட குளிர் மெல்லென நீங்கிடுதே ;

கானக் குயில் காதல் ராகம் இசைக்கையிலே
கன்று காம்பு முட்டி பால் குடிக்கையிலே
மேகம் ஓடி ஆடி பந்தாடுகையிலே
புது மோகம் பிறந்து நெஞ்சமது துள்ளுகிறதே ;

ஆனை அழகு அம்புட்டும் போகையிலே
வெண் பானை எங்கும் பொங்கி வழிகையிலே
ஆரம்பமாகுது யாவும் மலர் சோலையிலே
நானோ அடிபணிந்து பம்பரமாய் ஆடினேன் ஆனந்தமே...

தித்தோம்... தித்தோம்...
ஆனந்தமே....

- வித்யாசன்

மலைப் பாம்பு


அன்னை வயிறு ஆழமாக தோண்டப்படுகிறது
விதை விதைப்பதற்கு அல்ல
எண்ணெய் குழாய்கள் புதைப்பதற்கு ;

இந்த மலைப் பாம்பு விளை நிலங்களை மட்டுமல்ல
விவசாயிகளை வேரோடு விழுங்கும் ;

பருத்த குடல் நச்சு வாயுக்களோடு
செல்லும் வழியெங்கும் விவசாயத்தை மெல்ல மெல்ல நசுக்கும் ;

இனி மண்ணில் பயிர்கள் முளைப்பதற்கு பதிலாக
நிலமெங்கும் மலம் கழிக்கும் கெயில் வீற்றிருக்கும் ;

துரியோதனன் தொடையாய் நீண்டிருக்கும் உருளையில்
பாஞ்சாலிக்கு மாற்றாக பச்சை வயல் அமர்த்தப்படுகிறது ;

மழைக்காக காத்திருக்க அவசியமில்லை
இது பெரும் சொட்டு நீர் பாசனம்
என்ன....
நீருக்கு பதிலாக நிலம் உறிஞ்சப்படும் ;

இலக்கணமாகும்

இறுமாப்பு யாவும்
இறை தேடுகையில்
இளகுவதே வாழ்வின்
இலக்கணமாகும்~~~


- வித்யாசன்

தலை வணங்க

பூக்களுக்கு தெரியும்
தலைசிறந்தவரின்
தலை தாழாது - தான்
தலை வணங்க~~~


- வித்யாசன்

குன்றுவதில்லை

தனித்திருப்பினும்
தன்னொளி குன்றுவதில்லை~~~


- வித்யாசன்