வியாழன், 25 ஜூன், 2015

ஓர்நாளும்

வாழ்க்கை எனும் பெரும் கடலில்
ஓயாது அலையென எழுவேனே அன்றி
ஓர்நாளும் நுரையென கரை ஒதுங்கேன் ~~~


- வித்யாசன்

உன்னை

நான் உன்னை காதலிப்பதால்தான்
தமிழ் என்னை காதலிக்கிறது


- வித்யாசன்

தந்திடாது

முன்னது புகழ் பேசியே இந்நாள் கழித்திடும் கூட்டத்தின் நடுவினில்
தன்னிலை மறந்து துதிபாடும் அவநிலை எனக்கென்றும் தந்திடாது
தனி ஒரு வையகம் படைத்திட பெரும் சக்தி அளித்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

ஞாபகங்கள்

நொறுங்கியப் பின் சிதறிய சில்லரைகளை உடைபட்ட உண்டியலில் சேமித்துவைக்க இயலாததாய் முறிந்த ப்ரியங்களின் உணர்வினை எங்கே சேர்த்து மீண்டும் மூடிவைப்பது என்பது கேள்விக்குறியாகிட பெரும் பாரம் வந்தமரும் நேசத்தின் உடலெங்கும் ரணங்களின் தீராக் காயங்களில் ஞாபகங்கள் முள்ளாய் சொருகிட வலியும் உவர் குருதி மெழுகாய் உரைந்திட நிலை தவறிய நிமிடங்களில் பெருக்கெடுத்த வார்த்தையின் கீழ் பகுதியில் பீறிட்டழுகும் புலம்பலனின் தனிமை மெளனம் நீடித்திட இருள் கவ்வும் வெளிச்சத்தின் சொற்பம் சர்பமாகிட சொற்களின் விசம் வீரியமாகி விழுங்கி குதூகலிக்க இயலாது கிடைபொருளாய் செயலிழந்து செரித்தல் மறந்திட்ட காலத்தின் கட்டமற்ற காய்களற்ற தாயமற்ற ஆட்டத்தின் மத்தியில் நிறுத்தி பேரன்பே இழப்பின் பெரும் காரண முகம் காட்டி பின் இருளில் தாளிட்டு தலை சாய்த்து சாய்ந்திருக்கும் சடலமதில் சவமாய் தவமிருக்கும் நினைவு மெல்லமாய் கழுவேற்றி துயில் குடிக்கிறது அறையின் நாற்புறமும் நீளும் நரக நாகமாய் ~~~

- வித்யாசன்

ஓம்...

பெரு ஞாயிறு ஒளி முகமே
அருள் தரும் திரு உருவமே
எம் நாக்கினை மெய்யாக்கிடு
நல் வாக்கினைத் தந்திடு
உலகில் உள்ளது யாவும் அறியேன்
உள்ளம் தெளிந்து நின் திருவடி தொழுதேன்
கள்ளம் மறந்து கனியாய் மாறிடவே
கசந்த வேப்ப மரத்தினில் இனிப்பானவளே
சிந்தை மறந்து நின் செவ்விதழ் காண்கையில்
சிரித்தெனைச் சேர்த்தனைத்திடும் செந்தமிழ் தாயே
சொல்லும் செயலும் சிறப்பாகவே
இந்நாள் செய்வது நின்னாள் ஆகுவதே
ஓம்.... ஓம்... ஓம்...


- வித்யாசன்

குரைக்கும் அனாதை

பொழுது கவிழ்ந்த இருள் முகத்தின் வனாந்திர மடியினில் தொலைந்துபோன வேகம் யாவும் கூட்டிற்குள் அடைபட்டிருக்க வீதி எங்கும் வெளிச்ச முகாமிட்டிருக்கும் உறக்கமற்ற விழியின் நிழலில் அடங்கிய ஒலிகளின் குறுக்கெலும்பில் அமர்ந்து கூர்ந்து பார்வை வீசும் எச்ச ஓசைகளின் மிச்சங்களில் நிகழும் புணர்தலின் கலைந்த கூந்தலில் அவிழ்ந்த மலர்களின் மங்கிய வண்ணமதில் தோய்ந்தாடும் ரசனையின் பெருவெளியில் முகம் அலசி தடவுகிறது சதுரங்க பெட்டியில் நிர்வாண பாசையை மென்றுவிட்டு அந்தரங்க பாடம் வாசித்த புத்தகம் திறந்த நிலையில் தீராதுப் பரவிக்கிடக்கும் வெற்றிடத்தில் மழித்த நினைவுக் காம்பிலிருந்து விரிகிறது முன்னதனின் முதத்தங்களும் முடிவில்லா சப்தங்களும் எல்லா வரைமுறையும் கோடுகளற்ற பாதையாவதன் தடையங்களை அழித்த பின்னும் சிந்திச் சிதறி ஞாபக் கதவின் ஓரத்தில் குத்தவைத்து அமர்ந்த புலம்பிக் கொண்டிருக்கும் பேரன்பின் பேசமுடியா மெளனங்கள் ஆடைகளற்று ஒவ்வொரு இரவிலும் குரைக்கும் அனாதை நாய்களின் அழுகையாய் ~~~

- வித்யாசன்

அறுத்திடு

ஆடையற்று அருவியில் நீராடிட
ஆசையற்று குருவியாய் பறந்திட
அமைதியில் நல் ஞானம் விளைந்திட
கேட்டது யாவும் கைகளில் கிட்டிட
பார்ப்பது யாவும் பரம் பொருளாகிட
நோய்மை வாட்டா வாழ்வது வாழ்ந்திட
பொய்மை சூட்டா வாய்மை பேசிட
பேதமைக் காட்டா பேரன்பு பெருகிட
பெரியவர் தம்மை தாழ்ந்து வணங்கிட
வஞ்சகம் கூட்டா நெஞ்சகம் பண்பட
வறுமை தீட்டா வளமது பொங்கிட
புண்படும் சொல் இதழ் சேராதிருந்திட
பயன்படும் செயல் ஆற்றல் நிறைந்திட
பிறர் குறை கூறா ஒருமனதாகிட
திரையிடா முகமது நேர் ஒளிபட
புகழது தேடா பொழுதுகள் பூத்திட
பகையது வளரா மன்னித்தருளிட
பசியது அறியா பண்டங்கள் கிடைத்திட
பாரினில் யாவரும் ஒன்றென நேரிட
படைத்தவனே மேலது அருளிட முடியாதென உரைத்திட
இவை அனைத்தும் மறந்து உனை தொழுதிட வரமிடு
அஃதில்லையேல் இக்கணமே இப்பிறவிப்பிணியை அறுத்திடு ~~~


- வித்யாசன்

இறகு

பெரும் கூடுடைக்க சிறகுகள் தேவையில்லை
சிறு இறகு போதும் ~~~


-வித்யாசன்

கூழாங்கற்கள்

பெரும் இரைச்சலைப் பிழிந்து காதுகளின் நரம்பு வழியாக செலுத்தி மூளையின் பாதைகளில் நிரம்பியிருக்கும் மூங்கில் காடுகளில் ஓங்கி வளர்ந்திருக்கும் கிளைதனில் துளையிட்டு வண்டு சென்றதை பின்தொடர அது ராகமென உருமாறி உடலெல்லாம் உணர்ந்து பூத்தலின் பின் அதிலிருந்து வெளிப்படும் வாசத்தின் மயக்கம் கள் விட கடு போதை தலைக்கேறி காண்பது யாவும் கற்பனைக் குதிரையின் கடிவாளமற்ற வேகத்தின் மீதமர்ந்து பயணப்படும் தூரங்களின் நுழைவாயில் புதிர்களைச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் எதிர் காலத்தின் தேய், வளர் பிறை பிம்பங்களின் இருள் முடிச்சுக்களை கட்டவிழ்க்கும் மெல்லிய விரல் தொடுகையின் சுகம் யாழினை மீட்டும் நரம்பென மேவிப் பரவும் மன ஆற்றில் மூழ்கி கசிந்துருகும் நீரின் தழுவலானது நின் வண்ணக் கூழாங்கற்கள் ~~~

- வித்யாசன்

அடிமாடாய்

அதீத சுமை இழுக்கும் பொதி வண்டியின் முன்னில் வாயில் நுரை ஒழுகும் எண்ணங்களைக் கடந்து செல்லும் நடை பாதையின் இடையில் நில்லாது நகர்ந்தபடி சிறுநீர் கழிக்கும் சுடுவெயில் தகிப்பில் பிரார்த்தனையின் செரிமான அசைவுகளை சுழற்றும் சாட்டை அடியின் வலி அடங்கும்முன் வால் திருகி விரைந்திடச் செய்யும் நீங்காத் திமில் ரணங்களின் இழுவையில் இரு விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் புழுதிக் காற்றின் பிசுபிசுப்பில் அசையும் கழுத்து மணியின் ஓசையின் நன் இசையில் லகித்திருக்க இயலாது எதிர் வரும் பள்ளங்களில் முகம் விழுங்கி கடந்திட அடுத்தடுத்த மேடுகளின் பெருத்த செங்குத்துக் கோடுகள் தாழ்வினை சுட்டிக் காட்டி தலை தொங்க விடுவது இயல்பாகையில் நிழல் மிதக்கும் மரங்களின் இடைவெளியில் துளியும் கிட்டாத ஓய்வின் நிலையதனை தழுவிடும் ஊமையின் சொற்கள் எந்த வடிவினில் மொழி பெயர்ப்பதென்பது புலப்படாத நீள் பயணத்தின் இரு கைகோர்பின் பிடியில் பங்கிட்ட தூரங்களின் சிலுவை வடிவினை தொழுவதற்கு மனமிறங்கிடா ஐந்தறிவுக் கூற்றில் ஆறறிவு கூட்டில் அடைப்பட்டு அளவற்ற வியர்வையறியா இளைப்புற்ற பெரும் மூச்சு சப்தத்தில் முனக்கும் மூக்கணாங்கயிற்றின் எரிச்சலின் துயர் களையாது தூக்கிச் சுமந்த எல்லையின் முடிவில் அவன் கையிலிருந்து அவன் கைகளுக்கு அடிமாடாய் ~~~

- வித்யாசன்

பரம்பொருளே

பரண் மேல் வீற்றிருக்கும் பயனற்ற பொருளாய் பாழாகிடாது
பரவிக்கிடக்கும் பகலவனாய் எங்கும் சுடர்விட்டு பிரகாசிக்க
பலம் தருவாய் பரம்பொருளே ~~~


- வித்யாசன்

** கண்ணனுக்கு சமர்ப்பனம் **

ஓடோடி வருவாயடா
கண்ணா....
ஓடோடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ;

நீராடும் போதினிலே
பொய்கையில் நீராடும் போதினிலே
கள்வனாய் ஆடை கொய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


சபை முன்னிலே
பெரும் சபை முன்னிலே துகிலுரிகையிலே
பெண்ணவள் மானம் காக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;

நிலை மாறிப்போகையிலே
மனம் நிலை மாறிப்போகையிலே
சிறு பிள்ளையாய் என்னுடன் விளையாட
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


சிலை போல நிற்கையிலே
செய்வதறியாது சிலை போல நிற்கையிலே
பக்கத்தில் மலைபோல துணையாக
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


பிழை செய்து பிசைகையிலே
அறியாப் பிழை செய்து கையைப் பிசைகையிலே
நிலையறிந்து துயர் துடைக்க
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


கவலை மீளாது நேர்கையிலே
தீராக் கவலை மீளாது துன்பம் நேர்கையிலே
குழல் ஊதி மனம் குளிரவைக்க
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


காதல் பொங்கிப் பெருகுகையிலே
காணாது காதல் கண்ணில் பொங்கிப் பெருகுகையிலே
மாயவனாய் மறையாது கடல் அலையாய்
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;

கோபத்தில் நானிருக்க
கடும் கோபத்தில் வார்த்தை போர்தொடுக்க
கட்டியணைத்து இதழ் காயம் செய்ய
ஓடடோடி வருவாயடா
கண்ணா...
நீ... ஓடோடி வருவாயடா ;


மோகத்தில் மூழ்குகையிலே
பருவ மோகத்தில் தேகம் தீயாய் சுடுகையிலே
கருமேகமென உருவெடுத்து மழையாய் நனைத்திட
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா

 
போ எனச் சொன்னாலும்
பொய்யன் என வசைபாடினாலும்
கள்வன் என நிந்தித்தாலும்
மனம் கல்லெனக் கடிந்துரைத்தாலும்
மறந்தேன் என மறைத்தாலும்
ஒரு கணம்
நான் அழைக்க மறுக்காது
மறு கணம்...
ஓடோடி வருவாயடா
கண்ணா...
நீ ஓடோடி வருவாயடா
கண்ணா....
எனைக் காண நீ ஓடோடி வருவாயடா ~~~


- வித்யாசன்

அவன்

அவன் என்பதால்
அவனால் நிகழ்ந்தது என்று
அறியாதவர் கூறிடலாம்
அவ்வியங்குதல்
அனைத்தும் அறிந்த
அவனால் அன்றோ ~~~


- வித்யாசன்

ஏதுமுண்டோ

என் எழுத்து என்று தனித்து
ஏதுமுண்டோ
நின்னகத்தே காதல் கொண்டே யாவும் பிறந்ததிங்கே
பின் தேடியும் பிரிவினைக் கிடைப்பதுண்டோ
தன்னகத்தென்று சொல்வது தகா தவறிங்கே
முன்னகத்து முகர்ந்து மூர்ச்சையாகுவதுண்டோ
பெண் மனது பித்தென்று மறைந்தாய் அறிந்திங்கே
எண்ணகத்தில் எனைவிடுத்து வேறு யாருமுண்டோ
விரைந்திங்கு நேர்கொண்டு சொல்லடா கண்ணா
வேதனை தாராது பேதையை தோளினில் தாங்கடா ~~~


- வித்யாசன்

எம் கண்ணா

சூதென்பது யாதென்பது
நானறியேன் மதுசூதனா
அது கவ்வினும் நின்னை
சுழலும் என்னைச் சூழாது
நிழலென நீங்காது இன்பக்
குழல் ஊதுவாய் எம் கண்ணா ~~~


- வித்யாசன்

அழியேன்

பெரும் பகலவனாய் எழுவேன்
ஒரு பொழுதும் பாழாய் அழியேன் ~~~


- வித்யாசன்

சுடு... சுடு...

பெருத்த பலமானவன்
பகுதறிவுப் பாவலன்
கனமற்றக் கலைஞன் ;

நிகழும் போரினிலே
ஒவ்வொரு குண்டாய்
ஒரு சேர உடைத்தான் ;

கையிலிருப்பதோ கடைசி...
நடுக்கமில்லை
சுடு... சுடு...

துளைக்கும் தோட்டாவில்
சத்தமற்றுச் சாகப்போவது
முன்னவன் போல்
ஓர் பாமரன்தான்

சுடு... சுடு...

- வித்யாசன்

கூண்டுக் கிளி

இரவில் குதிக்கும் விண்மீன் மழைத்துளி
மெல்ல விரிக்கும் குடையென நிலவொளி
குளிர் மூடி மறைக்கும் மேகம் நாண மொழி
எங்கும் கூட வருவதேன் கூடா கூண்டுக் கிளி ~~~



- வித்யாசன்

மடல் காகிதமாய்

வான் பார்த்த மழையாய்
நீ வந்தாய் சுகமாய்
இருள் சேர்த்த நிலவாய்
நீ இருந்தாய் துணையாய் ;

ரயில் ஜன்னலாய்
என் அருகினில் அமர்ந்தாய்
குளிர் போர்வையாய்
என் உடலினில் இணைந்தாய் ;

கடல் சங்கொலியாய்
காதினில் நிறைந்தாய்
மடல் காகிதமாய்
மனதினில் பதிந்தாய் ;

எனக்குள்ளே நான் இல்லையடி பெண்னே
தனக்குள்ளே பேசிடும் இன்பம் தந்தவள் நீதானே ~~~


- வித்யாசன்

நீள் கனவு

நிரந்தரமாய் நிறைந்திருக்கும் நினைவுகளில்
நீந்திடும் கயலாகையில் அலம்புவதில்லை நீள் கனவுகள் ~~~


- வித்யாசன்

பராசக்தியே

மேடென்று பள்ளமென்று பாராது வீசிடும் தென்றலாய்
நாளென்றும் பேதமையன்று நான் நடந்திட
கேடொன்றும் நிகழ்ந்திடா நன்மைக் கேட்டதும் கிட்டிடும்
நல்லதோர் பாதை வகுத்திடுவாய் பராசக்தியே ~~~


- வித்யாசன்

ஞாபக பொம்மை

என் நினைவுகளின் அலமாரியில்
நீயே நிரந்தர ஞாபக பொம்மை ~~~


- வித்யாசன்

காதல் கண்ணனுக்கு

அழகிய அதிகாலை தாள் பணிந்து
வாடா வண்ண மலர் கொய்து
விரல் படா இதழ் நாரெடுத்து
வாசம் மாறா சரம் தொடுத்து
கட்டிவைத்தேன் பா மாலை ஒன்று
அனுதினமும் கருத்தினில் சூடி ஆடி மகிழ்ந்திட
எம் காதல் கண்ணனுக்கு என்று ~~~


- வித்யாசன்

வியாழன், 4 ஜூன், 2015

** தோழி **


எங்கே போய் மறைந்தான் தோழி
இங்கே காதல் நோய் பெருகுதடி தோழி
கண்ணில் கருவளை விழுவதேனடி தோழி
காணாது இரவுகள் கொடுவாளாவதேன் தோழி ;


எண்ணி எண்ணி நினைவு மெலிந்ததடி தோழி
மண்ணில் வீழ்ந்த கண்ணீர் கடலானதடி தோழி
தூது சொல்லிடத் தென்றல் துணையில்லையடி தோழி
தூக்கத்திலும் மார் சாய்ந்திட கனவு துழாவுதடி தோழி ;


நாட்கள் ஏக்கத்திலே கரைதல் ஞாயமில்லையடி தோழி
பூக்கள் பார்க்கையிலே அது ஏளனம் செய்யுதடி தோழி
கை சேர்த்தல் பிரிப்பதிங்கு தூரம் பெரும் துயரமடி தோழி
பிறிதொரு இன்பம் சூழ்ந்திப்பினும் அது சுகமில்லையடி தோழி ;


முகம் பாராது நிதம் படும்பாடு நீ எடுத்துக் கூறடி தோழி
பாவலன் எழுதா ஏடிங்கு பாலாய் போவதையும் சொல்லடி தோழி
நேசத்தை வைத்தேன் வேறென்ன தீங்கிழைத்தேன் தோழி
எந்நேரமும் அருகினில் அவனது வாசமது போதுமடி தோழி ;


அஃதில்லையேல் இவ்வாழ்வது மரணமடி தோழி ~~~

- வித்யாசன்

** புல்லாங்குழல் **

அவ்வாசுதேவன் இதழ்களுக்கு மட்டுமே புல்லாங்குழல்
ஏனையோருக்கு பெரும் மூங்கில் காடு ~~~

- வித்யாசன்

** காட்சி தந்தாள் காளி **



காலை தூக்கி ஆடி நின்றாள் காலையில் காளி
இந்நாளை நல்வேளை ஆக்கிடுவாள் எம் தேவி
இருளை தூளாக்கி பெரும் சுடரானவள் சூலி
அனலை விழிகளில் சூடி எதிர் நின்றாள் யாதுமாகி ;

மோகம் குடித்து மோட்சம் அருள்வாள் ஆதி சிவனின் பாதி
கருமேகமென உருவெடுத்து தன் கோவம் தீர்த்து பொழிந்திடுவாள் மாரி
பூதகணம் சூழ நாகமென நா நீள நல் வாக்கு தந்திடுவாள் ஓம்காரி
பாதகம் செய்வோரை பாராது நின் பாதங்களால் நசுக்கிடுவாய் பரா சக்தி ;

மண்டை ஓடு அணிந்து மாயை யாவும் கொன்று மகிழ்ந்திடுவாள் மாயி
தொண்டர் தம்மை நாடி வந்து தொழுவோருக்கு இம்மை நீக்குபவளே நீலி
அன்பை ஆயிரங் கரங்களில் அள்ளிக் கொடுக்கும் ஆனந்த ஜோதி
ஆணவம் எங்கும் தலைகாட்டினும் அதனை கொய்யும் அகோரி ;

வானெங்கும் படர்ந்து எம் நாவில் நிறைந்து நிற்கும் வாணி
தீதெங்கு நிகழினும் தானங்கு தயங்காது உதிரம் நனைக்கும் மேனி
பாரெங்கும் கேள் ஒலிக்கின்றது பராசக்தி நின் பெயரை ஓயாது மணி
யாரென்று எனை அறிந்து நின் தாள் பணிந்தேன் தாயே நீயே எனதவனி ;


- வித்யாசன்

** வீணனென **

நீ விட்டெறியும் சில்லறைக்கு தலை கவிழ்ந்து
பொறுக்கிடும் வீணனென நினைத்தாயோ
வீழ்ந்தே ஆயினும் எழுந்திடும் ஆதவன் ஆவேன்
ஒவ்வொரு விடியலிலும் ~~~



- வித்யாசன்

** கெஞ்சேன் **

கையிலே திறமிருக்க
நெஞ்சிலே துணிவிருக்க
காலமே அஞ்சேன்
கடைவரை நின் தாள் பணிந்து கெஞ்சேன் ~~~


- வித்யாசன்

** சுடர் விட்டு **

நின் சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைத்திட எண்ணி பின் சட்டென எரிந்து சாம்பலாகி
பட்டென வீழும் பாமரனே
எட்டுத்திக்கும் என் சொல் சுடர் விட்டு நிற்கும் வந்துபாரேன் ~~~



- வித்யாசன்

** கிழக்கு - மேற்கு **

நீ கிழக்கு
நான் மேற்கு
கோபத்தில்
முதுகு காட்டட்டுமே
வீழ்வதும்

எழுவதும்
நெருக்கத்தில்
நேர் நேர் முகமே ~~~


- வித்யாசன்

** ஞாலமே **

காரிருள் கலைந்திட்டு பேரொளி கனிந்த ஞாயிற்றே
நினைவு யாவிலும் திண்ணமாய் ஞான ஒளி பரவிடச் செய்வாய்
தானென ஆணவம் முழுதாய் சுட்டெரித்தே
ஆனது யாவிலும் நின் அருளென ஆனந்தம் அடையச் செய்வாய்
வீணெனப் பொழுதுகள் வீழ்ந்திங்கு கழிந்திடாது

வீணை நாதமாய் எமை மீட்டி நல் கானம் பூட்டி களிப்படையச் செய்வாய்
காலமே தின்றென்னை கரைத்திடாது
என்றும் மங்காது எங்கும் நிறைந்திடச் செய்வாய் ஞாலமே ~~~



- வித்யாசன்

** பேரன்பு **

பிரித்திட முடியா ப்ரியத்தினை அளந்து பார்க்கும் மனத் தராசில் சமமாக வீற்றிருப்பதில்லை நம்மிருவரின் பேரன்பு ~~~

- வித்யாசன்

** துள்ளிச் சிதறி **

நறுபட்ட நூலிலிருந்து அவிழும் மழைத்துளியாய் நழுவி
தரை மீது மோதி துள்ளிச் சிதறி மனமெங்கும் பரவிச் சுழலும்
நின் நினைவுப் பாசிமணிகளை ஒவ்வொன்றாய் கோர்க்கின்றேன்
சூடுவதற்கல்ல மார்பில் சுமப்பதற்கு ~~~


- வித்யாசன்

** சாகாது சிவப்பொருள் **

உள்ளத்தில் உறுதி கொள்
உடைந்தால் உயிரைக் கொல்
வெள்ளமென கோபம் பொங்கிடின்
பள்ளமென பொறுமை கொள் ;

தெள்ளத் தெளிவுடன்
வார்த்தை சொல்
கள்ளமற்ற நெஞ்சத்துடன்
கனிவோடு கேள் ;

நல்லனவற்றுக்கு நயமுடன்
கொடு தோள்
எதிர் எவரெனினும் தயங்கிடாது
மார் நிமிர்த்தி நில் ;

யாவிலும் பற்றற்று
இன்புற்று ஆள்
அன்பது வைத்தாயின்
அடிமையாகாது மீள் ;

கொடுமை காண்பின்
உயர்த்திடு வாள்
வறுமை உடுப்பினும்
நெறி மாறாது வாழ் ;

சுதந்திரக் காற்றாய்
நாளெல்லாம் சுழல்
சுவர் மோதும் பந்தாய்
வேண்டும் மீண்டும் எழல் ;

மரமென உருமாறி
நித்தமும் கொடு நிழல்
மனமது மலிவாகாது
சூட்சமம் அவிழ் ;

முயலுதல் முடங்காது
தொடர்ந்திடும் அலை கடல்
அதுபோல் அடங்கிடாது
அனுதினமும் வீழ் ;

எது நேர்வினும் வேண்டி
நிகழ்ந்திடாது பிறர் தொழல்
வையத்தில் அழியா அழகது
இயற்கையின் எழில் ;

யாவுமது விலகினும்
துணையிருக்கும் தமிழ்
சிதை மூட்டி சாம்பலாகினும்
சாகாது சிவப்பொருள் ;

ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்

** அழகு அழகு **


காரிருள் அழகு
அதிகாலைக் கதிரொளி அழகு
கூவும் குயில் மொழி அழகு
உதிரும் இலையாவும் அழகு

தேயும் நிலவழகு
பாயும் நதி பல அழகு
சேயின் முகமது அழகு
தாயின் அன்பது அழகு

வாய்மையின் சொல் அழகு
நேர்மையின் வாழ்வது அழகு
வீரத்தின் நடையழகு
நேயத்தின் நிழல் அழகு

வேதத்தில் பொருள் அழகு
சோகத்தில் இறைவன் அழகு
வாதத்தில் தமிழ் அழகு
மோகத்தில் கவியழகு

வானத்தில் மழை அழகு
வனத்தில் மயில் அழகு
தானத்தில் கல்வி அழகு
தாகத்தில் தழுவல் அழகு

பூமியில் பச்சை அழகு
பூவினில் வண்டழகு
பூங்காற்றது புது அழகு
புல்லாங்குழல் மாதவன் அழகு

காமத்தில் காதல் அழகு
சாமத்தில் அல்லி அழகு
மாதத்தில் மார்கழி அழகு
மஞ்சத்தில் பெண் அழகு

ஞானத்தில் உண்மை அழகு
கானத்தில் கடல் அலை அழகு
மானத்தில் மாதர் யாவரும் அழகு
இவ் வையத்தில் பாரதம் மாத்திரம் அழகு

அழகு .... அழகு ... அழகு ...

- வித்யாசன்

நெற்றித் திலகம்

பெரும் சுடரினை நெற்றித் திலகமெனயிட்டு
எழும் பேராசையினை புன்னகையில் புதையிட்டு
நல் ஞான ஒளியதனை நின் திருமுகத்தில் படரவிட்டு
மேன்மையது மெய்யது நின் நாமம் உரைத்திட்டு
வீழும் ஆவியதனை பொய்யற்று நிரை பொருளிட்டு
யாவிலும் பற்றற்று நின் பாதமே எப்பொழுதும் பற்றிட்டு
கெட்டொழியும் தீயதோர் நினைவினை விலக்கிட்டு
முற்றும் நீயென என்பதனை முழுதாய் உணர்திட்டு
விடியும் ஒவ்வொரு காலையிலும் சுடர் விளக்காய் என்னில் எரிந்திட்டு
சூட்சமங்களின் மாயையை சுகமென அனுகாதிருக்கவிட்டு
ஆதி சக்தியே நின் அடிதொழும் மலரென எனை ஏற்றிட்டு
அடியனை துன்பம் பீடிக்காது காத்திடுவாய்
செங்கதிரவனாய் மன வானெங்கும் நிறைந்து அருளிடுவாய்
அன்னை பராசக்தியே என்னில் ஒளிர்ந்திடுவாய்

ஓம்.... ஓம்.... ஓம்....

-வித்யாசன்

** கண்ணா நினக்கு சமர்ப்பணம் **



போயொளிந்தாய் பொறுக்கவில்லை நெஞ்சம் பொசுங்குதடா
தேடியலைந்தேன் வெறுக்கவில்லை மனம் விரும்புதடா

முன்னே வாராது என் கண் மூடி நின்று
தலை பின்னே திரும்பி இமை திறந்திட அதன் முன்னே
நீ மறைந்திட - இதுபோல்
தீராது செய்தல் முறையாகாது
தீயென உள்ளம் எரிகிறது நினைக் காணாது...

ஓவெனச் சிறு குழந்தையாய் அழுகிறேன்
ஓயாது நின் நினைவால் வாடுகிறேன்
புல்லாங்குழல் இசை கேட்டால் எழுந்தோடுகிறேன்
புரிந்தும் நின் மனம் கல்லாகிட நான் கரைகின்றேன்

அன்றொரு நாள் அருகினிலமர்ந்து சொல்லிய சொல் எல்லாம் சொல்லி உளறுகிறேன் ;
ஆசை தீர அணைத்து நானழைக்கும் போதெல்லாம் வருவேனென நீ உரைத்த உறுதி இழக்க கலங்குகிறேன் ;

தோழி எள்ளி நகையாட விடுதல் நலமோ
நினை நம்பி தந்தென்னை வந்து பாராதிருத்தல் தகுமோ
நின் சொல்லில் பொய்யிருத்தல் நியாயமோ
பூவையரைக் கிள்ளி மயிற்பீலியென சூடுதல் வழக்கமோ

என் நிலை சொல்லி தூதுவிட ஆளில்லையே
நான் செய்த பிழை என்ன நீ கூறவில்லையே
நிலைமாறி ஓர் நாளும் நான் போகவில்லையே
நின் மீதுக் குறையொன்றும் சாடவில்லையே

எதுவாயினும் என்னிடம் முறையாக முகம் காட்டிப் பேசிடு
கண்ணா...
அது முடியாது வாராது போவேனென மௌனித்தால்
கண்ணா... இனி
ராதையெனக் காத்திருக்கலாகாது
கோதையென பூத்திருக்கலாகாது
வேதனையது தாங்கிடலாகாது
வந்திடுவேன் இக்கணமே என்னுயிர் நினக்கு சமர்ப்பணமே ~~~


- வித்யாசன்

தேட

மதிப்பெண்கள் பட்டியலில் தொலைத்த
பாலியத்தை எந்த தெருவில் தேட ;

பாடம் மனப்பாடம் ஆக
பட்டாம் பூச்சி சிறகினை உதிர்த்த இடத்தை எங்கே தேட ;

புழுதி விளையாட்டை புதைத்த புத்தகத்தை
எந்த வகுப்பறையில் தேட ;

பட்டங்களுக்கான பாரங்களை பிஞ்சுகள் முதுகில் சுமக்க
இளமையில் முதுமை தேட

கனவுகள் காம்பஸ், கேம்பஸாக கான்வெண்ட் சுவர்களுக்குள்
சில்லரையில் சீட்டுகள் தேட ;

கோர்ட், டை, ஷி வுக்குள் மேலே முகம் சுடச்சுட வீற்றிருக்க
சாக்ஸ் அரிப்பு தடத்தில் ஆங்கிலம் தேட ;

சம்பாதிப்பு , மதிப்பு இவையே கல்வியாக
சரஸ்வதி தாயே நின் அருளை எவ்வாறு தேட ;

முதலை மட்டும் கொண்டாடும் முட்டாள் உலகில்
கடைசியை எப்படித் தேட ;

நீலத்தில் மீள முடியாது மூழ்கிய மீன் குஞ்சுகளின் உயிர்
சிவப்புச் சுழிக் கயிற்றில் ஊசலாட ;

எந்த காகிதப் படகில் மிதந்து
எங்களுக்கான கரையை எங்கிருந்து தேட ~~~


- வித்யாசன்

ஆசை

நிறைவேறா ஆசை ஒன்று
நிதானமாய் வானில் நின்று
நித்தமும் தேய்ந்து வளர்கிறது
நம் நேசம் தின்று ~~~


- வித்யாசன்

மழை

எழுதி வைத்துவிட்டேன்
நீ வந்து ...
பார்த்தால் ஓவியம்
வாசித்தால் கவிதை
கிழித்தால் கண்ணீரல்ல
மழை....

ஓம்...

தீதென்னைத் தீண்டிடாது
கந்தவேல் நிதம் காத்திடும்

நோய்மை வந்தென்னை நெருங்கிடாது
முருகன் நாமம் மருந்திடும்

ஆணவம் அண்டிடாது
ஆண்டியன் அடியது அருளிடும்

வேண்டியது தந்திட மாமயிலோன்
மனமது உடனே இறங்கிடும்

ஆசைப் பற்றது அற்றிட
ஆறுமுகனின் பன்னிரு விழியது சுட்டிடும்

நேசமது நிறைந்திட
நெற்றிப் பிறந்தோனை உள்ளமது ஆழத் தழுவிட விளைந்திடும்

போகமது மோகமது நீங்கிட
ஓம் எனும் மந்திரத்தை ஓதிட அது ஓடிடும்

வடிவேலன் அழகன் எழில் மேனிதனைக் கண்டால்
தனை மறந்து தமிழ் காதல் கொண்டிடும்

ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்ன

ம்...ம்...

வார்த்தையின் வண்ணங்களில் மூழ்கிடும்
எண்ணங்களின் ஒளிச் சிதறலில் மின்னிக் கொண்டிருக்கும் விழிகளிடம் இமைகள் முளைப்பதில்லை

இருளைத் துளைக்கும் மெல்லிய புள்ளிகளின் வளைவு நெளிவு கோலத்தின் விரல் முத்தம் நிசப்தமாய்
அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் மழைத்துளியின் மன்மதப் பார்வையில் மயங்கும் ஈரத்தை எப்படி உணர
வாடா வண்ண மலரெடுத்து சாய்ந்திடா மார்மீது மாலை சூடி வெட்கத்தில் வீதியெல்லாம் சிவந்ததென்ன
கோடிக்கணக்கான கண்கள் வேடிக்கை பார்க்கையில்
கோவில் திருவிழாவில் ஜோடியாய் நீயிருந்து
தனித்திருக்கும் என்னை கேலி செய்யும் காரணம் என்ன

ம்...ம்...

- வித்யாசன்

பரத்தி

தனித்து துரத்தி வந்தேனென கறுப்பு நிறம் காட்டி
முள்ளுடைய அள்ளி மகளென முன்றானை சூட்டி
தள்ளி நின்றே முகத் திரையிட்டு நகை பூட்டி
பல்லினைக் காட்டிடுவோர் மத்தியில் நிறுத்தி
மத்தளம் தட்டி பதம் பார்க்கும் மலைக் குறத்தி

வில்லினது அம்பு வீழ்வதில்லை வீழ்த்திடுமே
சொல்லினில் சூதிருப்பின் பகடைப் பசியாற்றி
கொல்லடி பாதகமேதுமில்லையடி பாலைவன பரத்தி~~~

- வித்யாசன்

சீ.. - நீ

அகல விரித்து இதழ் நீட்டி
பூப்பெய்ததை காற்றினில் பறைசாற்றி
வண்டினை மகரந்தப் பொடியினில் குளிப்பாட்டி
காரணம் நானல்ல என ஏளனம்பூட்டி
மாலையில் வாடி மீண்டும் காலையில்
வா என அழைக்கும் பெரும் போதை கூட்டி
பெயரை தொலைத்த பூ ஒன்று
மெல்லென தலையாட்டி
காம்பினை மறைத்ததென்ன
ஆசையற்றவளா
ச் சீ.. சீ.. - நீ
பாலைவன பனிக்கட்டி ~~


- வித்யாசன்

ஆச்சர்யக்

இருள் கூட்டில் ஊர்ந்து மிதக்கும் நினைவின் இறுதியில்
நிச்சயிக்கப்படா கீழ், மேல் முடிச்சவிழும் துளிச் சிதறலில்
ப்ரியம் பெயர் சூட்டி குலாவுகிறது ஆடையற்ற ஆச்சர்யக் குறியாய் !!


- வித்யாசன்

இறந்ததை

அவ்வளவு எளிதாய் அந்த உயிர் பிரியவில்லை
தொடர்ந்து அனைந்து எரிந்து இறுதியாய் அமைதியாய்
தனது இருண்ட பக்கத்தை ஒளிரச் செய்ய சொன்னது
தான் இறந்ததை ~~~


- வித்யாசன்

ஞானமே

நெஞ்சிலே தெளிவும்
சொல்லிலே வலுவும்
கண்ணிலே கனிவும்
கசடு அழிந்த நல் நினைவும்
உள்ளத்தில் பேரன்பும்

உண்மையில் உறுதியும்
மனக் குளத்தினில் குழப்பம்
ஆகாயத்தாமரை என மறைத்திடாது
ஆதவன் விழிப் பார்வையில் மலர்ந்திருக்கும்
மலரென எமை விரிந்திருக்கச் செய்வாய் ஞானமே ~~~


- வித்யாசன்

மௌன ஒளி

குடைக்கு கீழிருந்து தேடும் விழியின் பார்வை எங்கும் பரவிக்கிடக்கிறது நினைவின் மௌன ஒளி ~~~


- வித்யாசன்

** முரசு கொட்டு **

வெற்றி வெற்றி என முரசு கொட்டு- இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு - இனி
எந்நாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

முற்றும் கற்றறிந்த மூடர் முகத்தை முட்டு
சற்றும் வளைந்திடாது நேர் நின்று கர்வம் தட்டு
கத்தும் கடல் அலையென எழுந்து வானம் தொட்டு
கீறும் மின்னல் வாள் எடுத்து பகைவர் தலை வெட்டு ;

கொடுமை நேரிடின் ஒடிந்திடாது பெருங்குரல் போரிட்டு
வறுமை எதிர்வரினும் கை ஏந்திடேன் என சபதமிட்டு
மடமை உரைப்பின் உண்மை ஒளி நேர் கண்பட்டு
வாய்மை இழந்திடாது உழைப்பினில் திறமை காட்டு ;

நடை எட்டு வைக்கும் இடமெல்லாம் விரல் நீட்டி சுட்டு
மார் நிமிர்த்தி அடிமை எங்குமில்லை என கை கட்டு
ஏர் பிடித்து தாய் நில மண்ணை நெற்றியில் திலகமிட்டு
ஏழ்மை பேதமை எங்குமில்லை படி புதுப் பாட்டு ;

கோழை எவருமில்லை புருவம் உயர்த்தி மீசை சுருட்டு
கோ மகனே ஆயினும் நேர் வழியில்லையேல் உயிர் விரட்டு
பார் எங்கள் புவனம் யாவும் பாசத்தின் தேர் எனப் பூச்சூட்டு
அதில் பாவையரே பாரதத்தின்  தாயென எங்கும் நீ பறைசாற்று ;

வெற்றி வெற்றி என முரசு கொட்டு - இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு- இனி
எந்தநாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

- வித்யாசன்

தென்படும்

மூடன் முன் வரிசையில் வீற்றிருந்து
கடை கோடி பாமரனைச் சாடுகிறான்
நரம்பில்லா நாவால் வார்த்தை சாட்டை சுழட்டுகிறான்
பாவம் கூடிழந்த பறவைகள் என்ன செய்யும்
கூனிய முதுகில் இனி வறுமைக்கோடுகள் ஒவ்வொன்றாய் தென்படும் ~~~


- வித்யாசன்