திங்கள், 11 மே, 2015

தீட்டென்பது

பருவம் பூத்த நாளிலிருந்து
இடுப்பெழும்பு கீழே ரணமாக
இரவெல்லாம் அடி வயிறு வதங்க
திணித்த துணியில் வந்திறங்கிய சோகம்
பாவமென்று ஒளித்து வைத்து
புதைத்தால் நாய் தோண்டும்
பாம்பு நுகர்ந்தால் மலடியாகும்
பள்ளம் தோண்டி போட்டதை எரித்து
பார்க்காது வா மகளே என்றுரைக்க
தெரிந்து கொண்டேன் அன்று
தீட்டென்பது பெண் என்று  ~~~


- வித்யாசன்

சிறை மீட்ட பொய்

நேர்பட நீதியின்றி குடை சாய்ந்த உண்மையினை கேட்பதற்கு நேர்மையில்லை ;
சீர்கெட்டொழியும் வாய்மையும் சிறை மீட்ட பொய்மையும் நாட்டிற்கு கேடான மெய்மை ;
பாரடா இது பெரும் வேதனையடா :
அறியாப் பாமரராய் வாழ்தல் கொடுமையடா ;
ஊழல் மலிந்த உள்ளம் ஆள்வதாயின் ஒர் நாளும் வறியோர் உயர்வடையார் நிலையே எஞ்சுமடா~~~


-வித்யாசன்