வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மே 1

இந்த மே தினமாவது உழைத்து காய்த்துபோன விரல்களுக்கு
ஒளி கொடுக்கும் மோதிரமாகட்டும்


வியர்த்து கறுத்து சலித்துப்போன இனத்தவருக்கு
விண்ணும், மண்ணும் விழா எடுக்கட்டும்

 
புது எந்திரமாய் தினமும் சுழலும் உடலுக்குள்
மெல்லிய இருதயம் இயங்குவதை யாவரும் உணரட்டும்


வெயில் அணிந்து, பசி சுமந்து ஒட்டிய வயிறுகளுக்கு
சுதந்திரமாக தண்ணீர் பருக சிறிது நேரம் கிடைக்கட்டும்

 
அடிமை பொருளாய் நாளும் அடங்கி கிடக்கும் கூட்டத்திற்கு
முட்டும் சிறுநீர் கழிக்கவாவது உரிமை கிடைக்கட்டும்


வழிகள் தொலைத்து, வலிபொறுத்து உழைக்கும் வர்க்கத்திற்கு
புதுப் பாதைகளின் கதவுகள் திறக்கட்டும்


தூக்கம் விடுத்து, ஏக்கம் மறைத்து வாழும் தொழிலாளர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்டட்டும்

 
ஏய்க்கும் குணத்தவரின் முச்சை நிறுத்தி
உழைப்பவர் பக்கம் காற்று உரக்க வீசட்டும்

 
நாளும் முதலாளி காரில் பறக்க காரணமான
தொழிலாளிகளின் கால்கள் ஓய்வெடுக்க
இன்று ஒருநாளாவது விடுமுறை அறிவிக்கட்டும் !!

வியாழன், 28 ஏப்ரல், 2011

துளி துளி


தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

ஒரு நாள்

ரகசியத்தின் ரசிகர்களை ஒலித்து வைத்திருக்கும் 24 மணி நேரம்
தேடல்களை புதைத்து வைத்திருக்கும் 86400 விநாடிகள்
தன்னை அழங்கரித்து கொள்ளும் அதிகாலை
அயராது விளையாட்டு காட்டும் நண்பகல்
மயக்கத்தை வருட மலரும் மாலை
விந்தைகள் புரியும் விசித்திர இரவு
இளைப்பாராத ஒற்றை வழி பயணம்
கனவுகளை உற்பத்தி செய்யும் களம்
கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கும் கருவறை
இழப்புகளை சொல்லித் தரும் புத்தகம்
கரைய கரைய உருவெடுக்கும் ஓவியம்
கூட்டல் கழித்தல் சொல்லித் தரும் சூத்திரம்
எல்லாவற்றையும் சுமக்கும் அழகிய பாத்திரம்
நினைவுகளை அசைபோடவைக்கும் ராட்டினம்
கழியும் காலங்களை உருளச் செய்கிறது
சுழலும் சக்கரமாக
ஒரு நாள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

யார் அறிவார் ?

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி
...
இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ‡நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ‡ கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!

payanam


புதன், 6 ஏப்ரல், 2011

அன்றையதாய் ஆனேன்




உன் தோள் சாய்ந்த அந்த நிமிடம்
என் துயரங்கள் யாவும் தூரம் சென்ற மாயம்

...உலகம் புரியாத புதிராய் சுழன்ற காலம்
என்னை அழைத்து சென்று காண்பித்தாய் நட்பெனும் அழகிய உலகம்

எதை எதையோ காட்டி உனக்கு வேண்டுமா என்பாய்
எப்போதும் என்னிடம் நீ மட்டும்தான் இருந்தாய் அன்பாய்


உன் விரல் கோர்த்து விளையாடிய காலம்
விழி மீது அலையாடி ஏற்படுத்துகிறது நினைவுகளாக காயம்

எதற்கெடுத்தாலும் உன்னையே தேடும் என் மனம்
ஏனோ மறந்தது தோழா துருவம் பிரிந்து பருவம் தீண்டியதால்

இது நாள் வரை தென்பாடாத உனதுருவம்
விதி விளையாட்டாய் வீதியில் நாம் சந்திக்க

கொட்டி தீர்த்து விட்டாய் அந்த நாள் முதல் எனை கண்ட நிமிடம் வரை நீ:
எல்லாமே சொல்லாமல் கேட்டறிந்தேன் உன் முகவரியை நான்

வீடு வரும் முன் இது வரை தொடர்ந்து வந்த துயரங்கள் நடந்து வந்தது
இமை மூடி சற்று சுவற்றில் சாய்ந்தேன்,தோள் கொடுத்து கண்ணீர் துடைத்தாய் அன்றையதாய் ஆனேன் நான் !!
vidhyasan@gmail.com

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நமக்கான உரையாடல்


உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!

திங்கள், 4 ஏப்ரல், 2011

சுகமாகவே

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்