என்னோடு வா...

கொட்டும் மழையில் விழிகள்
எட்டும் தூரத்தில் யாரும்
இல்லாத இடத்தி
ல் நீயும், நானும்
மட்டும் நனைந்தே நடப்போம் வா...


கனல் தகிக்கும் பாலையில்
ஒரு சொட்டு நீரில் நானும், நீயும்
ஒட்டி படகில் பயணிப்போம் வா...

 
புல்லின் நிழலில் உறங்கும் கல்லில்
அமர்ந்து இருவரும் புன்னகை புரிந்து
புகைப்படம் எடுப்போம் வா...

 
பறவை கூட்டில் ஓர் நாள்
படுக்கை விரித்து படுத்துக் கொண்டே
பழங்கதைகள் பேசி ரசிப்போம் வா...

 
விண்ணின் வெள்ளை குளத்தில்
துள்ளி குதித்து இரவு நீளும் வரை
இருவரும் வெப்பம் தனிப்போம் வா...

 
விண்மீன் பறித்து மண்ணில்
வீடு கட்டி விடியும் வரை
விழித்திருந்து கவி வடிப்போம் வா...

 
இலையின் பாதை வளைவில்
இளைப்பாற உனக்கும் எனக்கும்
ஒற்றை இடம் பார்ப்போம் வா...

 
ஓடும் நதியில் நீந்தும் சருகாய்
நாம் இருவரும் மாறி மீதி காலத்தை
மிதந்தே கழிப்போம் வா...


இந்த உலகம் அழிந்த பின்னும்
பறந்து செல்லும் பறவையாவோம்
நீ என்னோடு துணிந்து வா...

 
மு.வித்யாசன் .