திங்கள், 18 ஜூன், 2012

தீரா- மீரா 17

வானம் உடைந்தால்
மழையாகும்

நட்சத்திரம் உடைந்தால்
தீப் பொறியாகும்

சிப்பி உடைந்தால்
முத்தாகும்

அலை உடைந்தால்
நுரையாகும்

காற்றுடைந்தால்
வெற்றிடமாகும்

நிலா உடைந்தால்
தேய்பிறையாகும்

கண்ணாடி உடைந்தால்
காட்சி பலவாகும்

வெயில் உடைந்தால்
குளிர் கொண்டாடும்

மனம் உடைந்தால்
உயிர் திண்டாடும்

உயிர் உடைந்தால்
உடல் விடைபெறும்

காதல் உடைந்தால்
கண்ணீர் உண்டாகும்

தீரா- மீரா- வின்
காதல் உடைந்தது
உறவுகள் கண் தொட்டதால்;

ஒரு பெண் எப்போது
மென்மையை உடைப்பாள்?
பெண்மை மீது பேய்களின்
நகம் கீறும்போது;

ஒரு பெண் எப்போது
மென்னையை மேலும் உடுத்துவாள் ?
உண்மை காதல்- உறவுகளின்
விரல்களால் பிரித்தெடுக்கும்போது;

மீரா-தீரா விடமிருந்து
பிரித்தெடுக்கப்பட்டாளா?
இல்லை...
இல்லை....
பிய்த்து எடுக்கப்பட்டாள்;

வலை
கிழிபட்ட சிலந்தியாய்
துடித்தால் மீரா;

மீரா துடிக்க
தீரா வெடித்தான்;

தீராவின் விழிகள்
சிகப்பு வானமானது;
கர்ஜித்தான்...
விடுங்கள் தீரா-வை
காட்டுச் சிங்கமாய்;

மீரா-வின் உறவுகள்
உறுமியது;
தீரா-வின் கர்ஜிப்பிக்கு
எதிர்ப்பு கிளம்பியது;
சற்று நேரத்திற்குள்
ஊர் கூடியது;
இரு தேசத்தின் படை மோதிய
சப்தம் அங்கே எழுந்தது;

பூ-வின் இதழில் சாட்டையடியாய்
மீராவின் கன்னத்தில் விரல் காயம்;
புலி-யின் கொடூர தாக்குதலாய்
தீராவின் தேகம் அடித்த உடலில்;

நடுக்கம் அதிகமானது
பதற்றம் பதறிப்போனது
திடுக்கிடும் நேரத்தில்
தீராவை ரத்த வெள்ளமாக்கியது
மீராவின் உறவுகள்;

தீரா மயங்கியபடி
புலி யயன புலம்பினான்
மீரா... மீரா... மீ...ரா.....

மீரா உருகியபடி
இழுத்துச் செல்லப்பட்டாள்
தீரா... தீரா... தீ..ரா....

(தொடரும்)

வெள்ளி, 30 மார்ச், 2012

தீரா - மீரா 16

நீள ஆற்றின் ஓரத்தில்
வீங்கிக் கிடந்த பாறையாய்
மீராவின் இதழ்கரை ஓரத்தில்
 மலையயன உயர்ந்திருந்தது காயம்...

மீரா- தீராவிடம்
வீட்டில் கேட்டால் என்ன சொல்ல?
தீரா- மீராவிடம்
பழம் என்று நினைத்து பறவை ஒன்று கொத்தியது என்று...!


மீரா....
முறைத்து சிரித்தாள்

தீரா...
சிரித்து சிறகடித்தான்...!

நிலா
மறைத்து வைக்கப்படுகிறது
பகல் முழுவதும்...

சூரியன்
மறைத்து வைக்கப்படுகிறான்
இரவு முழுவதும்...

மேகம்
ஒலித்து வைக்கப்படுகிறது
கடல் நீராக...

மழை
ஒலித்து வைக்கப்படுகிறது
மேகமாக...

ஸ்வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
உடலுக்குள்ளே...

வாசம்
ஒலித்து வைக்கப்படுகிறது
இதழுக்குள்ளே...

இப்படி...
பல ஒலிந்தே
பிறர் தெரிய
ஒளிர்கிறது...

சில ஒலிந்தே
பிறர் தெரியாது
மறைகிறது...!

தீராவின்- மீராவின்
காதலும் அப்படித்தான்
பல காலமாக மறைக்கப்பட்டிருந்தது...


வானுக்கும், மண்ணுக்கும்
நிலவுக்கும், ஆதவனுக்கும்
வெயிலுக்கும், மழைக்கும்
இனிப்புக்கும், கசப்புக்கும்
பிரிவுக்கும், அனைப்புக்கும்
இமைக்கும், விழிக்கும்
நாவுக்கும், தொண்டைக்கும்
விரலுக்கும், உடலுக்கும்
இலைக்கும், நிழலுக்கும்
நினைவுக்கும், கனவுக்கும்
காற்றுக்கும், ஆடைக்கும்
நதிக்கும், கரைக்கும்
குயிலுக்கும், கிளைக்கும்
மலைக்கும், குளிருக்கும்
தீரா- தோலுக்கும்
மீரா- மடிக்கும்
மட்டுமே தெரிந்த காதல்...


முதல் முறையாக தெரிந்தது...?

(தொடரும்...)

தஞ்சுவும் தாத்தாவும் 2

கரையை கண்டதும் தஞ்சு மீனுக்கு பயங்கர சந்தோசம். துள்ளி குதித்து கரையின் மேற்பரப்பில் உள்ள அழகை கண்டு ரசித்தது. அங்கேயும், இங்கேயுமாக பாய்ந்து நீந்தியது. மற்ற மீன்கள் தஞ்சுவின் சேட்டையை கண்டு சிரித்தன.

சற்று தூரத்தில் ஒரு மீன் நீந்த முடியாமல் தள்ளித்துக் கொண்டிருப்பதை தஞ்சு பார்த்தான். யார் என கேட்டான். மற்ற மீன்கள் இதுதான் முரட்டு முதிய மீன் என்று பயத்தோடு கூறின. தஞ்சு ஏன் இப்படி தள்ளாடி நீந்துகிறது என கேட்டான். அது நடிக்கிறது கிட்ட போனால் கடித்துவிடும் என்றன மற்ற மீன்கள். ஆனால் தஞ்சுவுற்கு அது உண்மையாக தென்படவில்லை.

தஞ்சு முதிய மீனிடம் சென்றது. மற்ற மீன்கள் அனைத்தும் தடுத்தன. ஆனால் தந்திரமாக தாத்தா மீன் அருகில் சென்றது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தாத்தா மீன் உயிருக்கு போராடி கொண்டிருந்து. அருகில் சென்ற தஞ்சு என்ன வேண்டும் தாத்தா என்றது... பசி பசி என்றது தாத்தா மீன்... தஞ்சு மற்ற மீன்களுக்கு ஆணையிட்டது. சீக்கிரம் இரை கொண்டு வாருங்கள் என்று. அனைத்து மீன் குஞ்சுகளும் இரை தேடி சென்று ஒரு வழியாக ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தது.

தஞ்சு அந்த ஆகாரத்தை தாத்தா மீனிற்கு கொடுத்தான். சில மணி நேரம் கழித்து தாத்தா மீன் கண் விழித்தது. செதில்களுக்கு புத்துயிர் கிடைத்தது. தாத்தா மீனின் விழிகளில் நீர் வழிந்தது நன்றி என்று. இதனை கண்ட மற்ற மீன்கள் மெல்ல நெருங்கி வந்தன ஆச்சர்யத்துடன்.

தாத்தா மீனை பார்த்து தஞ்சு கேட்டான் உங்களது பெயர் என்ன என்று? என் பெயரா வீரா என்றது.. தஞ்சு பயங்கரமாக சிரித்தது. கடலே அந்த சிரிப்பில் சற்று உள்வாங்கியது. வீரன் கேட்டான் ஏன் இந்த சிரிப்பு என்று. இல்லை தாத்தா உங்களை முரட்டு மீன் என்று தானே கூப்பிடுவார்கள் நீங்கள் என்னவென்றால் வீரா என்கிறீர்களே என்று... இதை கேட்டதும் வீராவும் சிரிக்க மற்ற அனைத்து மீன்களும் சிரித்தன கடல் அலைபோல.


( தொடரும்...)

தஞ்சுவும் தாத்தாவும் - 1

கண்கள் எட்டும் தூரம் கடற்கரை மணல்வெளி சிரிப்பு, மனித கால்தடம் அற்ற பகுதி. அற்புதங்கள் நிரம்பி வழியும் இயற்கையின் பொக்கிசம், கம்பீரமாக பாய்ந்து வரும் நீல அலைகளுக்குள் ஆதவன் எழுந்து, விழுந்து விçயாடும் அழகிய கடல் அது...

அந்த கடலுக்கு ஒரு புதிய மீன் குஞ்சு பிறந்தது பெயர் தஞ்சு. மிகவும் சுட்டியான மீன் குஞ்சு அது. மற்ற குஞ்சுகளை போன்றுஅமையானதாக இருக்காது. பயப்படாது. எல்லாவற்çயும் விட அழகிய கடலை விட தஞ்சுவே அழகானது ஆதலால். அத்தனை மீன்களுக்கும் தஞ்சு செல்லப்பிள்ளை. கடல் அலையே தஞ்சு... தஞ்சு... என்று சொல்லிக் கொண்டே  கரையில் உடையும்.

அந்த ஆழமான கடலில் கணக்கில் அடங்காத வண்ண மீன்கள் வாழ்ந்து கொண்டிருந்தது வளையிட்டு பிடிக்க யாரும் இல்லாததால் இனிமையாக. கடல் மீன்களின் குஞ்சு (குட்டி) மீன்கள் தினமும் கரையில் வந்து விளையாடிச் செல்வது வழக்கம். அப்படி விளையாடி செல்லும் போது தாய் மீன்கள் குஞ்சு மீன்களுக்கு சொல்லும் ஒரே விசயம். கரையில் இருக்கும் முரட்டு முதிய மீனின் பக்கம் செல்லவோ, பேசவோ கூடாது... மீறி சென்றால் கடித்து தின்று விடும்.

ஆகையால் கரைக்கு  விளையாடப் போகும் குஞ்சு மீன்கள், பயத்தில் முதிய மீன் இருக்கும் பக்கத்தில் செல்வதே இல்லை.
அதே போன்று அந்த முதிய மீனும் மற்ற மீன்களுடன் பேசாது. கரையோரத்திலே நீந்திக் கொண்டிருக்கும்.  கடலுக்குள் வராது.

இப்படியே  சில ஆண்டுகள் கழிந்தன. தஞ்சு மீன் வளர்ந்துவிட்டான். மற்ற மீன்கள் போல தானும் கரைக்கு சென்று விளையாடும் பருவத்தை எட்டி விட்டான். ஆனால் தஞ்சுவின் தாய்க்கு அது பயத்தை கூட்டியது. தஞ்சு சேட்டை காரன், சொல் பேச்சை கேட்காதவன். அவன் முரட்டு முதிய மீனிடம் ஏதாவது வம்பு செய்து ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தாள். இதனால் தஞ்சுவை கரைக்கு அனுப்ப மறுத்தால்.

ஒருநாள் தஞ்சு தாய்கு தெரியாமல், மற்ற குஞ்சு மீன்களுடன் கரைக்கு வந்துவிட்டான் விளையாட. மற்ற மீன்கள் கடலிலிருந்து கரை வரும் வரை தஞ்சுவிடம் சொன்னது முரட்டு மீன் பக்கம் செல்லாதே என்று. தஞ்சு தçயை ஆட்டிக் கொண்டே கனவுகளோடு நீந்தி வந்தான். கரையை காணப்போகும் நினைவில்.

தஞ்சு மீன் மட்டும் தாத்தா மீனின் அருகில் தயிரியமாக வந்து பேசியது. மற்ற மீன் குஞ்சுகள் ஐ...ய்...யோ... என்று பயத்தில் மிரண்டு தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கரை வந்நது... ?

(தொடரும்...)

செவ்வாய், 27 மார்ச், 2012

தீரா மீரா 15

மீரா -வின்
கேள்விக்கு
தீரா-வின் பதில் என்னவாக
இருக்கும்...?


புல்லாங்குழல் துளை மீது
ஈரம் படாமல் ஊதினால்
பிறப்பது ராகம்.

இலை இரண்டும்
ஈரத்தோடு உறிஞ்சினால்
உதிப்பது காமம்...!


மீராவின் கேள்விக்கு
தீராவின் பதில்...?

பட்டாம்பூச்சி கூட்டை விட்டு
புறப்பட்டதாய்
தோல் உரிக்கப்பட்டது
மீராவின் உதடுகள்...!

பிரிவின் இடைவெளி
எவ்வளவு சுகமானது
என்று தெரியுமா?

கோடை காலம்
மேடை போட்டால்
 கரை ஓரத்தில் மட்டுமல்ல -ஆற்றின்
நடுவிலும் மணல்களே கும்மாலமிடும்

இங்கே தகிக்கிறது
மழையின் பிரிவு...!

இலையுதிர் காலம்
இயங்க ஆரம்பித்துவிட்டால்
 கிளைகள் மட்டுமல்ல மரமே
நிர்வாண கோலமாகிவிடும்

இங்கே உதிர்கிறது
வசந்த காலத்தின் பிரிவு...!

இயற்கையின் பிரிவு
எதார்த்தமானது
இதயங்களின் பிரிவு
பயங்கரமானது...!

பிரிவு
சரிவை
ஏற்படுத்துவதில்லை
மாறாக...
உயர்வையே
ஏற்கிறது...!


தீரா...
உதடும்
மீரா..
உதடும்
ஈரம் வற்றத்
தொடங்கியது.

நீரில்லா
கடலில்
மிதந்தன
நான்கு படகுகள்
அலை மோதிக் கொண்டே...!

திடுக்கென
முகத்தை
வெடுக்கென
எடுத்தால்...

தீரா
படக்கென
மீரா இதழ் பார்த்து
சிரித்தான்...

உன் இதழுக்கு
யார் மருதாணியிட்டது என்று...!


மீரா...
வானம் மண்ணை தொட்டதாய்
நாணம் கொண்டு சற்று
தூரம் சென்றால்...!


தீரா...
அழைத்தான்
உயிர் மூச்சு பொங்க
மீரா... மீரா... மீரா... என்று...!

மீரா...
மறு கணம் உரைத்தாள்
உதடு எரிகின்றது..!

தீ
அணைக்கவா என்றான்
தீரா...!


ஐ..யோ....

(தொடரும்....)

சனி, 17 மார்ச், 2012

தீரா மீரா 14


பாலைவனத்தில்
கன மழை
பனிக்கட்டிக்குள்
சூரிய இழை
எப்படி இருக்கும்...
அப்படி இருந்தது
மீராவிற்கு தீராவை பார்த்ததும்....

இடைவெளியின் நீளத்தை
எப்போது உணர முடியும் என்பது தெரியுமா?
அது...
தூரங்களின் அளவில் அல்ல
நெருக்கத்தின் இருக்கத்தில்...!

கண்ணீரின் சுவையை
நா எப்போது ருசிக்க முடியும் என்பது தெரியுமா?
அது...
சுவையை தீண்டுவதால் அல்ல
எதனால் தோன்றுவதை பொருத்து...!

மெளனத்தின் ஆழத்தை
மனம் எப்போது உருக்கிபோடும் என்பது தெரியுமா?
உதடுகள் பேசாதிருத்தலால் அல்ல
ஊமையின் நிலையை வருடும் இடத்தில்....!

இத்தனையும்...
ஒன்றாக
நின்றால் தீரா...!

உயிர் சருகு உருகியது
மயிர் முனைகள் மருகிறது
கை விரல்கள் அதிர்ந்தது
கால் தடங்கள் கண் திறந்தது
உதடுகளின் கதவுகள் சிவந்தது
உள் மூச்சு பேச்சறுந்து நின்றது
நாவுக்குள் ஆதவன் புகுந்தது
நரகமும், சொர்கமும்
நடுவில் தெரிந்தது
மீராவிற்கு...!


தீரா....
தூரத்தில்....

இதயத்தில் துளையிட்ட
அம்பாக தீராவை நோக்கி வந்தான்...!

அம்பு
நெருங்க, நெருங்க...

குருதி கொட்டியது
மீரா
விழிகளில்...!

மேகமும், வானமும்
முதல் முறையாக பார்ப்பதாய்...

தேகமும், ஆத்மாவும்
முதல் முறையாய் உரசுவதாய்...

மழையும், மண்ணும்
முதல் முறையாய் ஒட்டுவதாய்...

காற்றும், இலையும்
முதல் முறையாய் மோதுவதாய்...

பருவமும், காலமும்
முதல் முதலாய் முத்தமிடுவதாய்....

தங்கமும், நெருப்புமும்
முதல் முறையாய் முட்டுவதாய்...

இப்போது
தீரா, மீரா
அருகருகில்....

அகல துடுப்பான
இமைகளை நனைத்து கொண்டு
மீரா...
தீரா வை பார்த்தாள்...

அடுத்த கணம்
தீரா...
மீராவின்
உடலை பின்னிக்கொண்டிருந்தான்
முதுகின் எழும்புகளை எண்ணியபடி...!

பிரிவின் உச்சம் அறிந்த
புரிவின் அர்த்தம் புரிந்து
ஆழ தழுவினான் தீரா...

இது...
தீராது.. தீராது...தீராது....
போதாது...போதாது..போதாது..
தீ யாக பற்றிக் கொண்டால்
தீராவை முழுவதுமாக மீரா...!


சில நிமிடங்கள் மயங்கியது
பல இலைகள் தலை கவிழ்ந்தது
சில மைல் கடந்தது நதி நீர்
பல குயில் பறந்தது வான்வெளியில்
சில மேகம் சிதைந்தது திடுக்கென
பல மோதலில் விழி-த்தன படக்கென
தீரா- மீரா


மீரா நீள் முடியைபோன்று
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மீண்டு கேட்டால்
ஏன் இவ்வளவு காலம்
வரவில்லை என்று...!

பெண் என்பவள்
தெரிந்தே (புரிந்து)
வேகமாக நுழைவாள் ( யாருக்கும் தெரியாது)
அதை விட பன்மடங்கு வேகத்தில்
மீண்டு விடுவாள்...


தீரா நீந்திக் கொண்டிருந்தான்
விரல் இடுக்கில் எப்படி
சூரியன் சுருண்டு கிடக்கிறான் என்று
தீராவின் கைகளை பற்றிக் கொண்டே
மீராவின் கேள்விக்கு
பதில் கூறாது....

ஆண் என்பவன்
ஆழம் அறியாது
புயலென நுழைவான்
ஆனால்...
மீளத் தெரியாது
அதிலே வீழ்ந்து
ஆளவும் செய்வான்
மாளவும் செய்வான்...!

(தொடரும்)

தீரா-மீரா -13

நிலா...
உடை களையும் நேரம்
பொழுது புத்துணர்வு பெறும்!

வானம்...
கண் மை யை கழுவும் நிமிடம்
பூமி பிரகாசமாகும்!

தீரா - மீராவின்
உரசலில்...
இயற்கை தன்னை
சருகுகளாக உதிர்த்து கொண்டிருந்தன!

நதிக் கரையின்
இடைவெளிக்கு பின்
கரைகளின் வார்த்தைகள் எழுதப்படும்!

மழைத் துளியின்
இடைவெளிக்கு முன்
வானவில் அர்த்தங்களை பொறிக்கும்!


உளி முனையின்
இடைவெளிக்கு இடையில்
சிந்தனையின் சிலை புலப்படும்!

தீரா - மீராவின்
உரசலின் நீள் இடைவெளிக்கு
முன், பின், இடையில்
மெளனங்கள்!


ஒரு கணம்
உரைந்த பணி
உருகியதாய்
உதடு திறந்து
ஆரம்பித்தான் தீரா!


சுற்றும்முற்றும்
பார்த்தான்
சூழ்நிலைகளை
சுழற்றி போட்டுக் கொண்டு
கற்பனைகளை
கழற்றி கொண்டிருந்தான்
மீராவிடம், தீரா!


மலையை பார்...
அசையாத கருப்பு நதியாய்
நீள்கிறது!

வானை பார்...
விதவிதமாய் ஓவியங்களை
வரைகிறது மேகம்!

காற்றை உணர்...
தீண்டலின் ஆழத்தை
சொல்கிறது!

உன்னை கண்ட நிலா
முகம் காட்ட
மறுக்கிறது!

வண்டுகள்
தேன் குடித்து
பூ இதழ் மடியில் நீந்துகிறது!

நதிக் கரைகள்
நீரில் கால் கழுவி
சுத்தம் செய்கிறது!

விரல்களா ?
இல்லை
புல்லாங்குழலா ?
என் உதடுகளுக்கு
சந்தேகம்!

அசையும்
தீபமாய் நீ!
வெளிச்சத்தின்
ஈரமாய் நான்!

அதோ...
பறக்கிறது பறவை
எப்படி?
ஒரு பழம்
அமர்ந்திருக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்!


அதோ...
அலைகிறது முகில்
எப்படி?
வானவில்
மண்ணில் முகாமிட்டுக்கிறது
என்ற தடுமாற்றத்தில்!

அடிக்கொரு முறை
இமைக்காதே!
துடிக்கின்ற
இருதயத்தை நறுக்காதே!

தொடர்ந்தான்
விடாது
கற்பனையை
பொழிந்தான்!

கடல்
வெப்பம்
அலை
கிளை
குளிர்
அழகு
சிலிர்ப்பு
சிரிப்பு
உயிர்ப்பு
தவிப்பு
கதகதப்பு
என
எல்லாவற்றையும்
எல்லையில்லாது
இறுதியில்
இளைத்து
பார்த்தான்
தீரா - மீராவை !


ஆண்
எப்போதுமே
அழகை கண்டதும்
ஆழ விழுந்து அமிழ்ந்திடுவான்!

பெண்
அப்படி இல்லை
எதிர்மாறானது!

தீரா
விழுந்து
வார்த்தைகளில்
மூழ்கி
விழுங்கிக் கொண்டிருநதான்!

இத்தனையும்
கேட்ட மீரா
ஒரே
வார்த்தை
ம்.......


தீரா
திகைக்கவில்லை!
நகைக்கவில்லை!
பரிதவிக்கவில்லை!
பரவசபடவில்லை!
கோபபடவில்லை!

மாறாக...
ரசித்தான்!

எத்தனையோ
கற்பனைகளை விதைத்தேன்
அத்தனையும்
அர்த்தமில்லை என்று அறிந்தேன்

ம்...
என்ற ஒரு வார்த்தைக்கு முன்
மொத்தத்தையும்
சமர்ப்பனம் செய்தேன்
என்றான் தீரா!

(தொடரும்...)

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்

இது சடுதியில் நிகழட்டும்;உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு

அழுவதே என்ற நிலை மாறட்டும்;இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்

இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்

எழும் தோல்விகள் தோற்கட்டும்;துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்

நம் துன்பங்கள் மூழ்கட்டும்;மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்

நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;வானம் எட்டி கிழியும் அளவு

கைகளில் வெற்றிகள் குவியட்டும்;பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்

இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று

இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!