திங்கள், 30 நவம்பர், 2015

இறைவன் சொன்னது

இன்பமென்று நாடுவதெல்லாம் ஓர் நாள்
துன்பமாகும் என்றால் - இறைவா
அதை துணிந்து செய்ய மனம் ஏன் கொடுத்தாய் ;


இப்பூத உடல் மண்ணிலும், நெருப்பிலும் ஓர்நாள்
அழிந்திடும் என்றால் - இறைவா
அதற்குள் ஏன் அனையா ஆசை தீயை வளர்த்தாய் ;


பொய்மை முன்னும், உண்மை பின்னும்
வெல்லும் என்பதே நியதி எனில் - இறைவா
நன்மை செய்ய ஏன் பல தடைகளை விதித்தாய் ;


ஆணும், பெண்ணும் சமமென ஆகாது
அதில் ஆயிரம் பிரிவுகள் உண்டெனில் - இறைவா
பிறப்பிடம் மட்டும் ஏன் ஓரிடம் வைத்தாய் ;


நாளும், பொழுதும் நம்மிடமில்லை
அது நிகழ்வது யாவும் நின் நிலை எனில் - இறைவா
நான் எனும் ஆணவத்தை ஏன் சமைத்தாய் ;


கூடுவதும், பிரிவதும் நின்றிடாது
வாழ்வெல்லாம் தொடர்வது சத்தியமாயின் - இறைவா
உறவென்னும் பின்னலை ஏன் வடித்தாய் ;


இளமையும், முதுமையும் இயல்பே
இது யாவர்கும் நிகழ்வது உறுதியாயின் - இறைவா
அதை உணராது பருவத்தை ஏன் வகுத்தாய் ;


இனமும், குணமும் ஒன்றல்ல
அதில் கொலையுண்டு, கோவிலுண்டு எனில் - இறைவா
மனம் தனில் ஏன் இத்தனை மாற்றம் கொடுத்தாய் ;


யாவும் அறிய, புரிய நிலையதனை
தந்துவிட்டு எதிலிருந்தும் விடுபடாது தத்தளிக்க - இறைவா
மனிதனை மட்டும் ஏன் படைத்தாய் ;


இதனை ...
விதி என்று சொல்லலாகாது
கர்ம வினை என்று கருதலாகாது
ஆன்மா அழியும் வரை
அனுபவத்தால் அளப்பதனால்
மனித வாழ்வென்பது அவரவரால் ஆனது
இது இறைவன் சொன்னது ~~~~


- வித்யாசன்

விழிகள்

கொலை செய்யும் நினைவினை
விலைக்கு வாங்கும் இரவினை
விற்க முடியாது
கனவை பழிக்கிறது
விழிகள்~~~ 


- வித்யாசன்

தீரா நம் பேரன்பு

தீர்ந்துபோன சொல்லில்
ஊர்ந்து போகும் நினைவுகள்
தூர்வாரும் நிமிடங்களிடம்
கை கோர்க்கையில்
அகப்பட்டது....

தீரா நம் பேரன்பு~~~

- வித்யாசன்

தூண்டில் புழுவா தொங்கவிட்ட

காட்டு நிலவா
அவ பாட்டுக்கு வந்தா
ரோட்டு கடையா இருந்த மனசில்
புது நோட்டு மழையா பொழிஞ்சு போனா
அவ முன்னால நான் சிறு பொம்மையா ஆனேனே
உண்மையாவே நான் பொய்யாகிப் போனேனே...


எழுத்து கூட்டி ஒரு வார்த்தை படிக்க எனக்கு தெரியாது
இப்ப...
அவ பெயரும் ஏ பெயரும் சேர்த்தா கவிதையினு சொல்லுது ஊரு
ஒதுங்கும் மீசை
ஒரக் கண்ணில் பதுங்குது
சீவி எடுத்த நொங்கு போல
இதயம் வெளிய தூங்குது...


பனை மரத்தபோல வளந்துபுட்டேன்
நிழல் கொடுக்க தெரியாது
இப்ப...
ஆலம் விழுதா மாறிபுட்டேன்
நீ ஊஞ்சலாட வருவது எப்போது
தாறுமாற பேசிய நானும்
தானா ஊமை ஆகிட்டேன்
சண்டியருனு சுத்துன நானும்
சாதுவாகி சாமிய தூக்கிட்டேன்...


கோடாரி நெஞ்சுக்குள்ள
கோழிக் குஞ்சு சத்தம் கேட்குது
ஊதாரினு சொன்ன வாயி
மகா ராசானு சுத்தி போடுது
கத்தி பிடிச்ச கையிது
ஒரு பூவ பறிக்க யோசிக்குது
இரட்ட விழி சிவக்க வரும் கோவமது
பச்ச பிள்ளையாட்டம் பார்த்து சிரிக்குது....


நீ...
ஏன்டீ என்ன மாத்திப்புட்ட
தூண்டில் புழுவா தொங்கவிட்ட ~~~


- வித்யாசன்

கேட்காம தலை ஆட்டுற

நீ என்ன செஞ்ச ஏ மனச
நா உன்ன சுத்தும் நிழலாக ;
கண்ணுக்குள்ள தூக்கமில்ல
கடுக கூட தூக்க முடியவில்ல;
பறந்த ஏ வானம்
சுருங்கிதான் போச்சு
கிழிஞ்ச துணியாக
பேச்சு ஆச்சு
இன்னும் என்ன சொல்ல
காரணம் ஏதும் புரியவில்லை...


கிளையில் ஆடும் இலையா போனேன்
தரையில் கிடந்து அழுகும் குழந்தையா ஆனேன்
தனியா பேசத் தானே
நிலவ அழைச்சேன்
கவிதை ஒன்னு எழுதி பார்த்து அத நான் கிழிச்சேன்
உள்ளம் போகும் பாதை எல்லாம்
உன்ன மட்டும் தானே இறக்காம உசுருக்குள்ள சுமந்தேன் ...


காக்கா பொட்டு சிகுனா ஒட்டி கண்ணாடி ரசிச்சேன்
ஓ பெயர எழுத்தத் தானே கை முழுக்க மருதாணி வச்சேன்
அடங்கா அலை போல
வந்து விழுகிற ஏ மேல
தர முடியா கடன் போல
நினப்பத்தான் துரத்துற
மடங்கும் ஆடைக்குள் விரலா நுழைஞ்சு பாக்குற
உரலில் இடிக்கும் புது நெல்லா என்ன பார்த்தா குதிக்கிற...


அதிகாலை போர்வை போல
அகலாம நீ இருக்க
சதிகாரன்னு ஒன்ன சொன்னா
சலிக்காம நீ சிரிக்க
மடியில் படுத்து
மனச கெடுத்து
நீ வலிக்காம இதழ் மூடுற
வழிய மறித்து
வம்பு இழுத்து
வரப்பு நீராக வளச்சு என்ன பிடிக்குற....


போடானு நா சொன்னா வாடித்தான் நீ போகுற
வாடானு நா சொன்ன ஏனென்னு கேட்காம தலை ஆட்டுற~~~


- வித்யாசன்

வீழ்வதற்கு

எல்லா
கட்டங்களிலும்
வெட்டுண்ட போதும்
தாயத்தை மட்டும்
சுழற்றுகிறாய்
விழிகளில் ;

ஆயத்தமாகினேன்
வீழ்வதற்கு ~~~~ 


- வித்யாசன்

மாறா காதல் இதுதானோடி~~~

என்றும் கூடாத போதும்
என்னுடன் கூடவே வருவதேனடி
சிறு ஊடல் நான் கொள்ளாத போதும்
பெரும் இடைவெளி ஏனடி
இது தீராக் காதல் என்ற போதும்
பகலினில் நீ மறைந்து திரிவதேனடி
மாறாத உயிர் நேசம் கொண்ட போதும்
மாதம் ஓர் நாள் மறந்தே போவதேனடி ;


உனைப் பாராது நானிருந்த போதும்
சுடர் பார்வை இவ்விடம் வீசுவதேனேடி
இணை சேராது இமை மூடிய போதும்
விழி மூடாது காத்திருப்பதேனடி
பசி வாட்டி எனை வதைத்திடும் போது
மேனியில் பால் சுரந்து தாகம் தீர்ப்பதேனடி
மோகத்தில் நெருப்பாய் இதயம் வெந்திடும்போது
மேக முந்தானை விலக்கி மார் மழை பொழிவதேனடி ;


ஒரு பறவையாய் சிறகு விரித்திடும்போது
அழகிய கூடாய் காட்சி அளிப்பதேனடி
ஓயாது பொழியும் கடும் பனியில் உடல் நடுங்கும்போது
உயர விரிக்கும் நிழற் குடையாய் ஆவதேனடி
வீணாய் இரவுப் பொழுதது நகர்ந்திடும்போது
மடியினில் வீணையாய் வீழ்வதேனடி ;


மன நோயால் சூள் கொண்டு உள்ளம் வாடிடும்போது
நீ தாயாய் நான் சேயாய் மாறிடுவதேனடி
யாவும் பொய்யாய் புவியில் உலாவிடும்போது
விண்ணில் மெய்யாய் என்னில் விளையாடுவதேனடி
நீ காயா, பழமா அறந்திட முடியாத போது
கையில் சிக்கிடா காற்றுனை உறிஞ்சி குடித்திடுதல் ஞாயமாடி
ஏடால் இன்ப பாடலால் உனை நிரப்பிட இயலாதபோது
நீ என்னிடம் மட்டும் இயல்பாய் வசப்படுதல் ஏனடி ;


வெண்ணிலவே....
மாறா காதல் இதுதானோடி~~~


- வித்யாசன்

எம் தாயே

வீணென பொழுதுகள் விரைந்திங்கு கழிந்திடாது
வெறும் சொல்லரென நாளும் இயலாதிங்கு கவிழ்ந்திடாது
செயல் வீரமெனக்கு தந்தருள்வாய் தாமதிக்காது தந்திங்கு தயைபுரிவாய்
எம் தாயே....

மனக் காட்டுக்குள்ளே


மனக் காட்டுக்குள்ளே
இருள் வீட்டுக்குள்ளே
விழி கூட்டுக்குள்ளே
பொத்தி உனை வைத்தேனடி

புத்தியது மயக்கத்திலே
பூத்த இமைகள் கவிழ்கையிலே
காத்திருந்த கனவெல்லாம் கதை சொல்லி ஓய்கையிலே
பாதி தூக்கத்திலே
கண் திறந்து பார்த்தேனடி

நீயோ...
மாயவில்லை மறையவில்லை மாறாது மனதிலிருந்தாய் என் பக்கத்திலே ~~~


- வித்யாசன்

இது என்ன நேசமடா

இது என்ன நேசமடா
எங்கும் மோசமடா
பொய்மை பேசுதடா
யாவும் வெறும் வேசமடா ...


மிகு ஏழை என்பாரடா
நிதம் ஏசிப் பழிப்பாரடா
பலவீனன் என்பாரடா
பயமுடையோ ரென எள்ளி நகைப்பாரடா...

நம்பிக்கை நாசம் செய்வாரடா
மன நஞ்சை நெஞ்சில் விதைப்பாரடா
நல்லவன் போல் நாளும் நடிப்பாரடா
நாடகம் முடிந்ததும் நாணயம் இழப்பாரடா ...


நாயென குரைப்பாரடா
அதுவுமல்ல நன்றி மறப்பாரடா
பேயென ரத்தம் குடிப்பாரடா
பேதமை மறைத்தே ஓரினமென்பாரடா ...


மெய் மானம் இல்லாரடா
செய் உதவி மறைப்பாரடா
பெரும் மேலோன் என்பாரடா
சுய பெருமை பேசியே பொழுதழிப்பாரடா ...


மிகு கோவம் கொள்வாரடா
கொடு மிருகம் விட தாழ்வாரடா
யானே பலமுடையோன் என்பாரடா
பாவம் அவரே பழமானபின் தடுமாறி வீழ்வாரடா ...


யாதும் அறிந்தவனென் பாரடா
எப்போது வருவான் எமன் என்பதை அறியாரடா
சூது பகை மாது மது மதி இழப்பாரடா
ரத்தம் சுண்டியபின் சுருண்டே கிடப்பாரடா ...


கொண்ட கோலம் பணமென்பாரடா
கோ மகனென்று முரசு கொட்டுவாரடா
யாவும் என்னால் முடியும் என்பாரடா
முடிந்து போகும் போது கோவணமின்றி எரிவாரடா~~~


- வித்யாசன்

புலவனாய் தவிக்கின்றேன்

தவழ்ந்து வந்த வார்த்தையை மறந்து தேடிய புலவனாய் கிடந்து தவிக்கின்றேன்
கனவில் எனை பிரிந்த பொழுது~~~


- வித்யாசன்

நெருக்கமாக

சபிக்கப்பட்ட தனிமையில்
தானியக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்ட நெல் மணியாய் காத்துக்கிடக்கிறது
வார்த்தைகள் மிக

நெருக்கமாக ~~~


- வித்யாசன்

என் காதலது மிகுதியாலே

வானது சூல் கொண்டு
பெரு வயிறு வளர்கிறது
மேகமது மேவி படர்ந்து
பேருகால தடமாகிறது
வெண் பாலது சுரந்து
மெல் மார்பது இளகுகிறது
இதனை யாரேனும் காணுவாரென்று
கார் முன்றானை ஊடே ஒளிகிறது
என் காதலது மிகுதியாலே
கண்முன் காட்சியாய் ஒளிர்கிறது~~~


- வித்யாசன்

தனக்கென கூட்டம்

தனக்கென கூட்டம் அமைப்பார்
அதற்கு தானே தலைவனென தம்பட்டம் அடிப்பார்
மனதில் உள்ளதை மன்றத்தில் வைப்பார்
அதுவே மன்னவன் முடிவென ஆணையிடுவார் ;


நிமிடம் ஒருமுறை முடிவெடுப்பார்
வாழ்வின் நிதர்சனம் இதுவென பொய்யுரைப்பார்
நாளும் உழைப்போரை நைய்ய புடைப்பார்
வெறும் வாயில் ஓதுவோருக்கு பொருள் வாரிக் கொடுப்பார் ;


தானும் ஏழை சாதி என்பார்
யாவரும் சரிசமமென்பார்
நீதி கதைகள் பல உரைப்பார்
நித்தமும் பல வேசமிட்டு நமை ஏய்ப்பார்;


ஏடுகள் பல கற்று கேடுகள் பல புரிவார்
ஏழையர் வாடிடும் நிலையறியாது ஏன் முடியாது என்றுரைப்பார்
நாளும் நிகழாததை நாளை நடக்குமென நம்பிக்கை வளர்ப்பார்
அதில் நல்ல பொழுதையெல்லாம் நாசம் செய்வார் ;


காவி அணிந்தவராய் ஆசை இல்லையென்பார்
கடை வீதிபோகாததை நல் பொருள் என்பார்
புத்தியில் ஒன்றை வைத்துக் கொண்டு பத்துவிதம் செய்வார்
அது புற்றாய் வளராது புதைகுழியானால் மற்றவரை பழிப்பார் ;


எட்டாக் கனி என்றபோதும் அது எனதென்பார்
தான் ஒரு முட்டாளா என யாவரையும் குற்றம் வுரைப்பார்
புண் பட்டபோதும் அதற்கு மருந்திடாது மறந்திடு என்பார்
வெண் சங்கு சுட்டாலும் நிறம் மாறுமா என சபதமிடுவார் ;


கெட்டாலும் காரணம் நானல்ல அது நின்னதால் என்பார்
விடுபட்டோர் காரணமறியாது வீழ்ந்தும் வீரம் பேசுவார்
சுமை தாங்காத மாடுகளையே சாட்டையால் சூழற்றுவார்
நிலை மாறாத போதனைகள் கூறுவோரை சாடுவார் ;


கண் மூடிக் கொண்டு வெளிச்சம் பக்கம் என்பார்
கடவுளை கை நீட்டி கானல் நீரில் மீன் பிடிப்பார்
கையாலாகதவர் கைத்தலம் பற்றி கரை சேருவேனென்பார்
இன்று வழியும் கண்ணீரை துடைக்காது நாளை கனவு பலிக்குமென்பார் ;


இப்படியே
பல காலத்தை கடந்தார்
இதை பார்த்தே பலனின்றி உழைத்தோர் நொந்தார்
நம்பிக்கை இழந்தும் வேறு வழியில்லாது வாழ்வை இழந்தார்

நாமெப்போது முன்னேற
நம் நாடெப்போது முன்னேற ?


- வித்யாசன்

பாப்பா

முழு சுதந்திரம் வேணுமடி பாப்பா
அதில் மூழ்கி சுகம் காண வேணுமடி பாப்பா
அடிமை இனத்தவர் நீங்க வேணுமடி பாப்பா
நாமனைவரும் சமமென்று நீ உரைக்க வேணுமடி பாப்பா ;


கொடுமை, மடமை ஓடி ஒழிய வேணுமடி பாப்பா
மண்ணில் எதற்கும் நாம் குறைந்தவரில்லை என்று கொட்டடி பாப்பா
சாதி, மதம் ஏதுமில்லையடி பாப்பா
அது உண்மையாகிட கல்விச் சாலையிலே அதை நீக்கிட வேணுமடி பாப்பா ;


நீதி நிலைத்திட வேணுமடி பாப்பா
அதற்கு நீ நித்தமும் சத்தியம் உரைத்திடடி பாப்பா
பாவங்கள் நிகழ்வதைக் கண்டு பயந்திடாதே பாப்பா
பார்வையில் வீரம் கொண்டு புது உலகை படைத்திடு பாப்பா;


யாவரும் கூறிடும் வார்த்தையினை உடனே நம்பிவிடாதே பாப்பா
அதில் நல்லவை, தீயவை யாதென கண்டுணர வேணுமடி பாப்பா
வீண் பிடிவாதங்கள் என்றும் கூடாதடி பாப்பா
வெறும் அனுமானத்தில் எதையும் உறுதி செய்தலாகுது பாப்பா ;


அதட்டுச் சொல்லுக்கு ஒருபோதும் அஞ்சிடாதே பாப்பா
அது எமனென்றாகினும் எதிர்த்து நின்றிடு பாப்பா
வஞ்சகர் வழியினில் வந்தால் நெஞ்சு நிமிர்த்திடு பாப்பா
அவர்தம் வார்த்தைகளில் மயங்கிடாது நேர் நடை போட்டிடு பாப்பா ;


நம் பண்பாடு, பரம்பரைத் தொழில் ஏரினை மறந்திடாதே பாப்பா
பெரும் பஞ்சம் வந்தபோதும் அண்டி கை தொழுதிடாதே பாப்பா
எங்கும் நீ சென்றபோதும் தரம் மங்கிடாதே பாப்பா
பாரெங்கும் வியக்கும்படி நம் பாரத புகழ் பேச வேணுமடி பாப்பா ;


இல்லையென்று இங்கு ஏதுமில்லையடி பாப்பா
தொல்லை செய்வோரை வேரோடு சாய்த்திடு பாப்பா
கொள்ளை அழகது மயங்கிட புன்னகை சிந்திடு பாப்பா
கொள்ளையர்களை குறைகூறாதே கொலை செய்திடு பாப்பா ;


கொஞ்சும் தமிழினை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றிடாதே பாப்பா
அந்நியர் விட்டுச் சென்றதை அனைத்தையும் தீயிலிடு பாப்பா
கொஞ்சும் மொழியினில் கவிதை சமைத்திடு பாப்பா
நமை மிஞ்சியவர் இங்கு எவருமில்லையென கர்வம் கொண்டிடு பாப்பா ;


இதனை என்றும் மனதினில் இறுத்திடு பாப்பா
இதை எவர் பொய்யென்று கூறினும் அவரைக் கொன்றிடு பாப்பா~~~


- வித்யாசன்

கூடாதோர் கூட்டத்தில்

கூடாதோர் கூட்டத்தில் கூடினால்
கோடான கேடெல்லாம் தேடிவரும்
படாதபாடு பட்டுணர்ந்த பின்னும்
அவர்தம் இழிசெயல் உரைத்து நொந்தால்
இருக்கின்ற நிம்மதியும் கெடும்
அதுமீறி பெரும் கோபம் கொண்டால்
கொலை பாதகச் செயலது விளையும்
ஆகவே விட்டொழிந்தது கர்மமென்று
தூர விலகிடு துஷ்டனைக் கண்டு
நற்செயல் புரிய இங்கிடம் பலவுண்டு
அது நாடி செல்
நாளும் பெருநிம்மதி அங்குண்டு~~~


- வித்யாசன்

உந்நிதழ் ஞாபகம்

நேர் பொய் சொல்லெடுத்து
அதன் பிழை மெய் திருத்தி
கார் மழை குடை விரித்து
வரும் நாளதற்கு காத்திருக்க
பாரிருவிழியில் நீ புகுந்திங்கு
நீங்காது பேராசை நிதம்தந்து
நடு இரவில் தூங்காது சுகித்து
கடுங் குளிரில் தாங்காது பூத்திருக்க
கரையுதடா என்தேகம்
கழுத்தடுத்து யாவையும்
காவு கேட்குதடா உந்நிதழ் ஞாபகம்~~~


- வித்யாசன்

தீபாவ(லி)ளி

ஒரு நரகாசுரனை கொன்றதற்கு 
ஓராயிரம் நரகாசுரனுடன் கொண்டாடும் திருவிழா...

சிவகாசி பட்டாசு ஆலையில் கருகிய உடலை மறந்துவிட்டு
தெருவெங்கும் வேட்டு சப்தம் சிதறவிழும் காகித பண்டிகை...


விடிய விடிய துடிதுடிக்க கணக்கற்ற மிருக கழுத்தறுபட்டு
வெந்து, வறுத்து தின்று ஜீரணிக்கும் வேதனையற்ற பெரு விழா...


பழைய ஆடை யார் தருவார் என்று ஏங்கும் குழந்தைகளுக்கு மத்தியில் புதுத் துணி பல உடுத்தி புன்னகைக்கும் புதுநாள்...

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் வக்கற்ற ஏழ்மைக்கு காரணம் எண்ணாது பலகாரம் ருசிக்கும் பரிவற்ற சந்தோச பொழுது...

ஒலியில் சியர்ஸ் பருகி மதுவில் வாழ்வை தொலைத்துவிட்டு மகிழ்ச்சியை பறைசாற்றும் இருள் சூழ்ந்த ஒளி வெள்ளமிது...

உறவுகளை மறந்து உள்ளங்கையில் மிதந்து சமூக வளைதளத்தில் வாழ்த்துக்களை பகிரும் கலிகால தீபாவளியிது...

என்ன செய்வது ?
தீபாவ(லி)ளி வாழ்த்துக்கள்~~~

- வித்யாசன்