வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வாழ்வின்

தன்னந்தனியென்ற தவிப்பெதற்கு
தகுதிவுடையோர் எவருமில்லை உண்மைக்கு
துன்பம் ஏதுமற்ற வாழ்வெதற்கு
துணிந்தே எதிர்நில் நம்பிக்கை கையிலிருக்கு
இடர் வந்திங்குப் பந்தாடினாலும் பயமில்லை நமக்கு
இங்கெவர்க்கும் சொந்தம் ஏதுமில்லை
இதுவே வாழ்வின் கணக்கு ~~~


- வித்யாசன்

பரா சக்தி

நல் ஞானம் வேணுமடி
பராசக்தி - அதை நீ
நாளும் தர வேணுமடி
பராசக்தி

யாவும் தர வேணுமடி
பரா சக்தி - அதை நான்
யாவருக்கும் தர வேணுமடி
பரா சக்தி

பலம் தர வேணுமடி
பரா சக்தி - பாரினில்
பாமரனைக் காத்திடுவேன்
பரா சக்தி

ஆயிரம் கரம் வேணுமடி
பரா சக்தி - காத்திருக்கலாகாது
கெட்டதனை வீழ்த்திடுவேன்
பரா சக்தி

மன உறுதி வேணுமடி
பராசக்தி - எந்த நிலையிலும்
மாறாது நின்றுடுவேன்
பரா சக்தி

நிலை அன்பு வேணுமடி
பரா சக்தி - அதில் என்றும்
நீங்காது நீந்திடுவேன்
பரா சக்தி

நல் கலை வேணுமடி
பரா சக்தி - அங்கு களித்து
உனைக் கண்டிடுவேன்
பரா சக்தி

தகு பிழை வேணுமடி
பரா சக்தி - அதன் வாயில்
மிகு உண்மை உரைத்திடுவேன்
பரா சக்தி

தமிழ் மொழி வேணுமடி
பரா சக்தி - கவி எழுதி
புவி யாவும் கலப்பேன்
பரா சக்தி

தெளி மதி வேணுமடி
பரா சக்தி - பழி செய்யாது
பாவமது நீக்கிடுவேன்
பரா சக்தி

சுடர் ஒளி வேணுமடி
பரா சக்தி - எச் சூழலிலும்
பொய் சுட்டெரிப்பேன்
பரா சக்தி

நற் கதி வேணுமடி
பரா சக்தி - நின்னை நாளும்
நாடித் தொழுவேன்
பரா சக்தி

கோபக் கனல் வேணுமடி
பரா சக்தி - கொடுமை எரித்தே
துகள் சாம்பல்  செய்திடுவேன்
பரா சக்தி

குழந்தை சிரிப்பொலி வேணுமடி
பரா சக்தி - குறை யாவையும்
நிதம் கொன்றுக் குவிப்பேன்
பரா சக்தி

மதமில்லா மண் வேணுமடி
பரா சக்தி - அங்கே சமம்
மானுடன் ஒன்றென பாட்டுப் படிப்பேன்
பரா சக்தி

விதை பல வேணுமடி
பரா சக்தி - வீதியெங்கும் விதைத்தே
பசி அறுவடை செய்வேன்
பரா சக்தி

வீணை ஒன்று வேணுமடி
பரா சக்தி - விரல் மீட்டியே
வேணு கானம் இசைத்திடுவேன்
பரா சக்தி

மழை எங்கும் வேணுமடி
பரா சக்தி - மா மரங்கள்
பூத்துக் குலுங்க துள்ளி குதிப்பேன்
பரா சக்தி

காதல் கிளி வேணுமடி
பரா சக்தி - ஏற்ற தாழ்வது
மாறி ஓர் கனி சுவைத்திடுவேன்
பரா சக்தி

சொல் ஒன்று வேணுமடி
பராசக்தி - அதைக் கொண்டு
இச் ஜெகத்தினை வாழ வைப்பேன்
பரா சக்தி

கேட்டது யாவையும்
தந்தருள்வாய்
பரா சக்தி
இதில் ஏது குறைந்தாலும்
உனக்கென்னை பலித்தே
உயிர்  நிறுத்திடுவேன்
பரா சக்தி ~~~

- வித்யாசன்

நீளுதடி ~~~

என்ன நினைவிதுவோ
என்னை ஏளனம் செய்வது முறையோ
கண்ணை இமை அடிப்பதோ
உன்னை எங்கணும் நான் மறப்பதோ
உடையும் நிமிடம் யாவிலும்
உன் முகமே தோன்றுதடி
எரிந்தே சாம்பலாகினும்
ஏழ் பிறப்பும் பிரிவேதடி
பறந்தே சென்றாயோ - மாறாது
அன்பு வேரிங்கு நீளுதடி ~~~


- வித்யாசன்

வாழ்வு

இருளது ஒளியது
நாளது வீழ்வது
அல்ல...
பொருளெது நிலையெது
புரிந்து நல்வினையது

நாடா செய்தலே
வாழ்வு ~~~


- வித்யாசன்

தோழி

நம்பிக்கை வைத்தாயடி தோழி புவி யெங்கும்
நாளெல்லாம் விதைத்தாயடி
துன்பம் கை பிடித்தாயடி தோழி தவிக்காது
அதை துணிவுடன் எதிர்த்தாயடி
கண்ணீர் கதை படித்தாயடி தோழி அது யாவும்

புறந்தள்ளி வாடாப் பூவென சிரித்தயாடி
செந்நீர் நிதம் வடித்தாயடி தோழி துயர் அள்ளி
கார் குழலில் முடிந்தாயடி
தன்னந்தனி நின்றே தவித்தாயடி தோழி பிறர்
தயவேதுமின்றி முன்னே எட்டு வைத்தாயடி
மெய் நேசம் தேடித் துடித்தாயடி தோழி யாவரும்
பொய்யென்ற போதும் கட்டி அனைத்தாயடி
கன்னம் கனக்க அழுதாயடி தோழி உனக்கெனச்
சின்ன உள்ளம் இருப்பதை ஏன் மறந்தாயடி
நின் எண்ணம் நான் அறிவேனடி தோழி
நீ கண் மூடி சாய்ந்திட என்றும் என் தோள் உள்ளதடி ~~~


- வித்யாசன்

எது எது எனது....

பிறப்பு என்றால் இறப்பு தானே
இடையில் யாவும் மாயையே
இனிப்பில் துவங்கி கசப்பில் முடியும்
வாழ்க்கை என்பதே துயரமே
எது எது எனது....

ஏதுமில்லை
அது நிதம் உணர்ந்தால் துன்பமில்லை
போவதும் வருவதும் கணக்குப் பார்த்தால்
நினைவு நிம்மதி அடைவதில்லை
நடப்பது யாவும் நம் கையில் இல்லை
நாடக மேடையில் நாம் யாவரும் பொம்மை
போதும் ... போதும் ... என்றே சொல் - உயிர்
விட்டுப் பிரிந்தால் உடல் வெறும் மண் ~~~


- வித்யாசன்

காதல் செய்தலே பாவமா

காலை பொழுதினிலே
காக்கை கரைகையிலே
நீர் பாயும் ஆற்றங்கரையினிலே
நீராட வந்தேனடி .... கண்ணம்மா
நீ அங்கு இல்லையடி
மனம் பாலையாய் ஆனதடி ...

தென்றல் பாட்டுப் படிக்கையிலே
தென்னை கேட்டு தலை அசைக்கையிலே
கூட்டுப் பறவைகள் விண்ணில் பறக்கையிலே
கண்கள் தேடுதடி... கண்ணம்மா
நின் முகம் காட்ட மறுப்பதென்னடி
என் முகம் கண்ணீராகுதடி....

நேற்று நிகழ்ந்தவை நினைக்கையிலே
உயிர் கூட்டுக்கிளி கொத்தி ரசிக்கையிலே
தனிப் பாட்டு ஒன்று பிறக்கையிலே
அதைப் பாடி நின்றே எனை மறக்கையிலே... கண்ணமா
நீ ஓடி வந்து ஆடியதேன் சொல்லடி
இதயம் தனத் தானத் தந்தா சந்தம் போடுதடி...

காலம் கூட்டிக் கழித்துப் பார்க்கையிலே
காதல் கட்டை விரலில் புதுக் கோலம் போடுகையிலே
காட்டுத் தீயென ஆசைப் பற்றி எரிகையிலே.... கண்ணம்மா
நீ கள்வனென மறைதல் ஞாயமா
உண்மைக் காதல் செய்தலே பாவமா ~~~


- வித்யாசன்

கண்ணன் .....

காக்கை நிறத்தவனே - எனில்
காதல் சுடர் வளர்த்தவனே
யாக்கை எடுத்தவனே - பெரும்
ஏக்கம் அளித்தவனே
காக்கப் பிறந்தவனே - என்
கண்ணிரண்டாய் ஆனவனே

கண்ணன்....

பூக்கள் கிறங்கிடவே புல்லாங்குழல் இசைப்பானே
பாக்கள் ரசித்திடவே பாத நடனமிடுவானே
பாசை ஏதுமின்றி பார்வையில் ஆசை எழச் செய்வானே
பல கதை பேசி கண்ணுறங்க காற்றாகி காணாது அழ வைப்பானே

கண்ணன்....

ஏழையென்று பாராது மடிமேலே தூக்கி கொஞ்சிக் களிப்பானே
தேளைப்போலே துயர் வந்தால் தேடிவந்து தோள் கொடுப்பானே
நாடி வந்து உதவிக் கேட்போருக்கு நாளும் அருள்வானே
கூடி நின்று குரல் எழுப்பினால் கோபாலன் வருவானே

கண்ணன்.....

ஓடியாடி உடல் தழுவி நாளை எனும் ஆவல் தருவானே
மாலை இருள் சூழ மார்பில் சாய்த்து மஞ்சம் தருவானே
சேவல் கூவி விடியும் பொழுதில் சேலையாகி சேவை புரிவானே
கோவை இதழில் கொத்தும் கிளியாகி முத்தம் சுவைப்பானே

கண்ணன்....

காலம் யாவும் கைவிடாது காலடியில் தஞ்சம் அளிப்பானே
கார்மேகமென உருமாறி இடைவிடாது அன்பைப் பொழிவானே
நிலையற்ற வாழ்வெனினும் மனத்தில் நிலைத்தே நிற்பானே
பிழையேதும் செய்தாலும் அது புரிந்து சிறு பிள்ளையாய் சிரிப்பானே heart


கண்ணன் .....


- வித்யாசன்

கிருஷ்ணா வா வா வா

ஆயர்குல அழகனே வா வா
ஆசை தீர அனைக்கவே வா வா
மனக்காயங்கள் ஆற்றிட வா வா
மயிலிறகால் நீவிட மாதவா வா வா வா.....

குழல் ஓசையிலே குழப்பங்கள் தீர்க்க வா வா
நான் கொஞ்சிட குழந்தையாக வா வா
நடுக்கமது நீங்கிட நந்த கோபாலா வா வா
நாளும் உனை நம்பினேன் நாராயணா வா வா வா...

மயக்கமது தந்திடும் மாயவனே வா வா
நல் மாலையது சூடிக்கொள்ள மதுசூதனனே வா வா
வானமது அளந்த வாமனனே வா வா
வாயில் தின்பண்டமென அண்டம் மென்ற அன்பனே வா வா வா ...

கோபம் கொண்ட கோபியரைத் தேட வைக்கும் கோபாலனே வா வா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் வாசுதேவா வா வா
வெண்ணெய் திருடனென்று சொல்பவரை வாழ வைக்கும் ரமணா வா வா
கண்ணில் கன்னியரை கரைத்திடும் காதலனே வா வா வா...

எண்ணி எண்ணி தவிக்கின்றேன் ஏகாந்தனே வா வா
எல்லையில்லா பேரன்பு கொண்டேன் யசோதையின் மைந்தனே வா வா
சிறு கலக்கமது வந்தபோது காத்திடுவாய் கண்ணா வா வா
நின்னை கை தொழுது வணங்கினேன் என் முன்னே கீதை உரைத்திட கிருஷ்ணா வா வா வா ~~~


- வித்யாசன்

வளைந்திங்கு

வளைந்திங்கு தொழுது வாழுதல் சுகமாகுமோ
வளையாது வறியவர் மதியாதல் தலையாகுமோ
கனிந்து பணிந்து துணிந்தெழுதல் தவறாகுமோ
தமிழகமே ....
குனிந்து பயந்து கரம் கும்பிடுதல் சுதந்திரமோ ~~~


- வித்யாசன்

குலுங்கும் உள்ளம்

நீண்ட சாலை போன்றது சமூகம்
மேடு பள்ளம் கடந்த பின்னும் குலுங்குகிறது உள்ளம் ~~~


- வித்யாசன்

சாம்பல் பறக்கும்

சாம்பல் பறக்கும் மேக நினைவுகளின் இரவுக் குவியல் வெளிச்சப் புள்ளியில் சுகிக்கிறது துளித் துளியாய் பனித் தூவி ~~~

- வித்யாசன்

பூஜ்ஜியம்

இரவு
பள்ளியில்
நீ மட்டுமல்ல
நானும்
பூஜ்ஜியம் ~~~



- வித்யாசன்

நெடுஞ்சாலையாகும்

உன் விரல் பிடித்து நடப்பது என்றால்
கை ரேகை நெடுஞ்சாலையாகும் ~~~


- வித்யாசன்

தனி

தனித் தனி இரவாயினும்
தேயா ஓர் நிலவு
நம் நினைவு ~~~


- வித்யாசன்

அறியா ஆடாய்

விடுமுறையற்ற நின் நினைவுகளை
விழுங்க இயலாது அசைபோடுகின்றேன்
அறுப்பது அறியாத ஆடாய் ~~~


- வித்யாசன்

பால்யம்

பிடிபடா பயணம்
பெரு மழையில் ஆரம்பம்
கரை தேடா ஓடம்
மூழ்குதல் அறிந்திடாக் காகிதம்
சிறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பால்யம்

இன்னமும் வண்ணமாய்
நினைவலையில் மிதக்கிறது ஒவ்வொரு தூரலிலும் ~~~


- வித்யாசன்

நியதியது

பெரும் புகழென்னைத் தின்னாது
பேதமை பாத்திரம் பொருள் கொள்ளாது
தானெனும் அகந்தை அனுகாது
பிறிதொன்று வேண்டிக் கைமாறு செய்யாது
மண்ணில் யாவரும் என்போலென்று எண்ணுதலே இம் மானிடப் பிறப்பின் நியதியது ~~~


- வித்யாசன்

ஏற்பதில்லை

கோபம் நிறைந்து வழியும் கோப்பையின் கண்களில் செயலறுந்து வீழ்ந்த நிமிடங்களின் உராய்வற்றத் தேய்மானம் எவ்வித உத்தரவாதத்தையும் ஏற்பதில்லை ~~~

- வித்யாசன்

நீர்மமாய்

கால் வழி கசிந்த சிறுநீராய்
கடைசி கனவு ஒழுகியது
இளம் சூட்டில் நினைவு
நீர்மமாய் ~~~

- வித்யாசன்

தலையனை

கனவு தூங்கும் தலையனை ~~~

- வித்யாசன்

பாலூட்டுகிறது நிலவு

ஒவ்வொரு இரவிலும் சூல் கொண்ட கருவாகிறேன்
மார் நிமிர்த்தி பாலூட்டுகிறது நிலவு ~~~


- வித்யாசன்

அஸ்ஸலாம்

மலை உச்சியில் ஏறி நின்று
அழகை முக்காடிட்டு
புன்னகைக்கும் இதழுக்கு
அஸ்ஸலாம் ~~~


- வித்யாசன்

சவக்குழி

பெரும் புள்ளியென சிறிதும் பேதம் பார்ப்பதில்லை
சவக்குழி ~~~


- வித்யாசன்

கவிதை ஆவோமா

என் ஆசைக் கண்ணம்மா
உன் மீசை பாரதி நானம்மா
கொஞ்சம் பேசம்மா
நீ கொஞ்சும் தமிழ் நானம்மா
இதழ்களில் இலக்கணப் பிழை செய்வோமா

இருவரும் சேர்ந்து புதுக் கவிதை ஆவோமா


- வித்யாசன்
தேவகி மைந்தா
ஆயர்குல அழகா
பிருந்தாவன முகுந்தா
நின் பிஞ்சு விரல் தீண்டும் வரம் தா

ராதையின் காதலா
குழல் ஊதும் மாதவா
மயிர்பீலி மாயவா
நின் கண்ணிமையாக நான் ஆகவா ~~~


- வித்யாசன்

தனிமையில்

மேயும் நினைவது மீனென நீந்திட
பாயும் மனமது படகெனத் ததும்பிட
காயும் நிலவது இலையென மிதந்திட
உதிரும் விண்மீன் மலரென மலர்ந்திட
மன்னவனே நீ எங்கே

மங்கையிவள் தனிமையில் இங்கே ~~~

- வித்யாசன்

வாழ்வதனின் பொருள் என்ன ?

பக்தன் :
சாயலற்ற நேர்கோட்டு வாழ்வது சாதலுக்கான மார்க்கத்தை காட்டுவதேன் சர்வேசா ?

வாழ்வதனின் பொருள் என்ன ?

நமது ஆதாரம் எங்கிருந்து வேர்விடுகிறது. ஆசையின் ஈரத்திலா அல்லது அறியாமையின் ஆழத்திலா ?

மனித பிறப்பின் மர்ம நிலை யாதென்பதே மாயை என்பதானால் வாழ்தலின் வழிமுறை மாறுபடுதல் ஏன் ?

கர்மங்களைக் கொண்டு கணக்கிடும் இன்ப துன்பங்கள் சுயநல எண்ணத்தால் பெருகுமெனில் மனம் பக்குவப்படுதலின் மேன்மையை எவ்வாறு அறிவது ?

எல்லா உணர்ச்சிகளும் அறியப்பட்ட பின் அதனை ஆள்வது எல்லா தருணத்திலும் சாத்தியமாதல் சத்தியமாகுமா ?

கழிவதே ஜனனம் எனில் நிலைத்தல், நிலையாமை இவ்விரண்டுக்குமான உண்மை எது ?

தர்மமே உயர்வெனில் அதர்மத்தின் செயல் அழியாதிருப்பதின் மர்மமென்ன ?

பிறப்பும் இறப்பும் இயற்கையின் இயல்பு எனில் இடையினில் இளமை மூப்பு நோய்மை என பின்னல் ஏன் ?

உணர்தலே இவ்வாழ்வின் முழு தத்துவமெனில் இறைவா நீ உணர்த்துவது இங்ஙனம் எது ?

கடவுள் :
மானிடா புரிதலை அறிய முற்படுவதே யாவற்றுக்கும் ஆதாரக் காரணம்.

அனுபவம் உணர்த்தும் மெய்யறிவினை ஆக முழுவதும் மனம் ஏற்று நடப்பதில்லை.

நிகழ்வின் காட்சிக்கு ஏற்ப நிலையது உருமாறும்.

உண்மையினை பக்குவமாக்குதல் ஞானத்தின் பெரும் சுடர். அது அமைதி எனும்பொழுதும் அதன் பிரகாசம் பாரபட்சமற்ற விசாலமானது.

நினைப்பதும் மறப்பதும் நீடித்திருப்பதில்லை. இதுவே மாயை.

பிறப்பென்பது யாதெனில் தனித் தனி பிரபஞ்சத்தின் பொருளாகும். அது இன்னொன்றின் நன்னெறிக்கு வித்திடின் காலம் உள்ளவரை நிலைத்திடும். அஃதில்லையேல் அடித்துச் செல்லப்படும் கால வெள்ளத்தில் காணாமல் போய்விடும்.

இயலாமையும், இருளும் வாழ்வின் வடிவங்களாகும். எது நேர்வினும் அதை தாங்கும் மனமாய் மாறும். அது முடியாதபோது மூர்ச்சையாகும்.

ஆதலால் மனதை பத்திரப்படுத்தி வைக்காதே அதன் பாதையில் செல்ல விடு, வரும் வழியெங்கும் எதிர்படும் மேடு பள்ளங்களில் உன் பங்கினை அளி, பயணம் வேறுபடினும் பாதை யாவருக்கும் ஒன்றே.... மறவாதே மனமே ~~~


- வித்யாசன்

இடையில்

இருளின் இடையில் பாலருந்தும் மேக உதட்டின் ஈரத்தில் குளிர்கிறது கதகதப்பின் பெரும் பசி ~~~

- வித்யாசன்

எங்கள் தேசம்

எங்கள் தேசம்
இது எங்கள் தேசம்
எங்கெங்கு காணினும் சுதந்திர வாசம்
எங்கள் தேசம்
இது எங்கள் தேசம்

எங்கெங்கு கேளீர் சுதந்திர கோசம் ;

ரத்தம் சிந்தி கையில் ஏந்தினோமே
யுத்தம் பல செய்து வாங்கினோமே
சித்தம் கலங்கி நில்லோமே
எங்கள் சக்தியாவும் வந்தே மாதரம் என்போமே ;

அடிமை விலங்கை உடைத்தோமே
அன்னியர் உடமையினை எரித்தோமே
மடமையினை முறித்தோமே
கொண்ட கடமையினை செய்து முடித்தோமே
யாவரும் சமமென உரைத்தோமே
எங்கும் பொங்கும் மகிழ்ச்சியினை விதைத்தோமே ;

கண்ட கனவது பலித்ததே
காற்றென சுதந்திரம் இந்நாள் கிடைத்ததே
காலம் மாறினும் கைகள் ஒன்றாய் சேர்த்ததே
கண்டவர் மயங்கிட யாவிலும் வென்றோமே
காரியமதில் உறுதியுண்டு விண்ணில் பறந்தோமே ~~~


- வித்யாசன்

** வந்தே மாதரம் **

பச்சையாவும் மழை வேண்டி பிச்சை ஏந்தும் விவசாய காடு
வெள்ளையர்களை விரட்டி கொள்ளையடிக்கும் வெட்க கேடு
ஏழைகள் அடிவயிற்றில் எரியும் அணையா அனல் சுவடு

இதுதான் நம் தேசியக் கொடியின் மூவர்ண நிலை பாடு


சுரண்டலுக்கு நிதானமாய் இரையாகும் நமது சுதந்திர நாடு ~~~



- வித்யாசன்

வெட்கம்

நேர்த்தியாக நெய்யும் வார்த்தைகளை உதிர்க்கும் நின் உதட்டுக் காயத்தில் ஒட்டியிருக்கும் மருதாணி வண்ணத்தில் வெட்கம் உறைந்து கண்ணாடியில் விரல் மீட்டுகிறது நரம்பற்ற காதல் ராகத்தை ~~~

- வித்யாசன்

இறைவன்

நாம் ஆபத்தையும், கடும் துயரையும் சந்திக்க நேரிடுகையில் ஆண்டவனை அழைக்கின்றோம், அவனது அடி விழுகின்றோம், அபயக்குரல் எழுப்புகின்றோம் .....

ஏன்....

இறைவன் அடுத்த நிமிடம் ஓடி வருவான் என்றா ?

ஆறுதல் தருவான் என்றா ?
அடைக்கலம் அளிப்பான் என்றா ?
கண்ணீர் துடைப்பான் என்றா ?
கதவு திறப்பான் என்றா ?

இல்லை....

எந்த ஒரு எதிர் பார்ப்பிலும் அவன் அடங்கியிருப்பதில்லை. பிறகு ஏன் அழைக்கின்றோம் ...

எது நேர்ந்தபோதும் நமக்கு துணையாக நிற்பான் , தோள் கொடுப்பான், தனியென தவிக்கவிடாது பக்கத்தில் பாரம் சுமப்பான், இவைவிட யாரும் நமக்கில்லை என்கின்ற கவலை தீர்க்கும் அருமருந்தாவான் அவரவர் இறைவன் ~~~


- வித்யாசன்

சிறகென்பது

இறகொன்று பறவையாம்
சிறகென்பது வானமாம் ~~~


- வித்யாசன்

மௌனமாய்

மலர்ந்திருக்கும் இதழ்களில்
மௌனமாய் அமர்ந்திருக்கும் நம் வார்த்தைகள் உதிர்ந்தாலும் உயிர் நீப்பதில்லை ~~~


- வித்யாசன்

சுண்டிவிட

நாணயமற்ற இரவை நினைவுகள் சுண்டிவிட
வீழாது அந்தரத்தில் அடவுகட்டி அரங்கேற காத்திருக்கிறது கனவு ~~~


- வித்யாசன்

மார் ...

மார் மறைக்கும் மேகத்தின் இடையில் பால் சுரக்க
இருள் குடித்து பசியது தீர்கையில் முடிகிறது மோகம்
ஆடை அள்ளி சூடிக்கொண்டு விடிகிறது வானம் ~~~

- வித்யாசன்

பலம் தெரியும்

உதவியென்று செல்லும் போதுதான்
ஊரார் உள்ளம் புரியும்
பதவியொன்றை இழந்த பிறகுதான்
பலம் தெரியும்
பணம் இழந்து நிற்கும் பொழுதுதான்

யாவரின் குணம் அறிய முடியும்
முதுமை வந்த பிறகுதான்
வாழ்க்கை என்பது என்னவென்று புலப்படும் ~~~


- வித்யாசன்

பூப் பூவா

சுடும் வெயிலில
தொடும் மழையில
மனம் அண்ணாந்து பார்க்குது
வானம் பூப் பூவா தூவுது ~~~


- வித்யாசன்

ஒத்தையிலே

நெஞ்சமது என்னிடத்தில் கொஞ்சமில்லையே
அது உன்னிடத்தில் வந்து சேரும்வரை ஓய்வதில்லையே

கண்மூடிப் பார்த்தேன் தூக்கம் வரவில்லையே
வந்துவிட்டு மறைய நீ வெறும் கனவில்லையே

உடல் விட்டு உயிர் துடிக்க சொல்லவில்லையே
நான் ஊமையாகி நிற்கின்றேன் ஒத்தையிலே ~~~

வா வா கண்ணா

வா வா கண்ணா
வண்ண மயில் மன்னா
தா தா கண்ணா
தங்க முத்தம் எண்ணா ;

கண் பார்வையாலே சிரிப்பாய்
காந்தமெனக் கவ்வி ஈர்ப்பாய்
ஆயர்குலம் மண் புசிப்பாய்
ஆவென்றால் உலகம் அளப்பாய் ;

குறும்பாலே ஊர்வம்பு இழுப்பாய்
உரலில் கட்டிவைத்தால் அதை உருட்டி விளையாடி மகிழ்வாய்
கோபியர் ஜடை பிடித்து இழுப்பாய்
கோபம் கொண்டு அடிக்க வந்தால் காற்றாய் ஓடிடுவாய் ;

குமரிகள் குளத்தினில் குளிக்க ஆடை கொய்திடுவாய்
கண்டது கை கூப்பிக் கெஞ்சினால் மறுகணமே தந்திடுவாய்
உறியினில் கட்டிவைத்திருக்கும் வெண்ணெய் ருசிப்பாய்
யாரேனும் திருடன் என்றுரைத்தால் இல்லையென்று மறுப்பாய் ;

புல்லாங்குழல் இசைத்து நெஞ்சுருக அழைப்பாய்
பொல்லாத காதல் மயக்கங்கள் தந்து வில்லாக வளைப்பாய்
யாருமில்லாத தருணத்தில் கனி யிதழ் சுவைப்பாய்
நின் பேரன்பு எழிலில் யாவரையும் ராதையாக்கி ஏங்கவைப்பாய் ~~~


- வித்யாசன்

கண்ணா....

சுவாச மூச்சென்றாய்
வீண் பேச்சதுதானோ
வீசும் காற்றென்றாய்
வெறும் கதையதுதானோ
கடல் அலையென்றாய்

கானல் நீரதுதானோ
காதல் மலையது என்றாய்
கண்ணீர் மழையதுதானோ ;

கண்ணா....

வாழ்வரை என்றாய்
வார்த்தைகள் பொய்தானோ
வரமென மொழிந்தாய்
வசந்தங்கள் மெய்தானோ
பாரெனப் பருகினாய்
தேகத் தாகமதுதானோ
காரிருள் கூடினாய்
பகலினில் மறைந்திடத்தானோ ;

கண்ணா...

பூவெனச் சூடினாய்
முகர்ந்து வாடிடத்தானோ
புல்லாங்குழல் ஊதினாய்
பூவிதழ் புண்ணாகிடத்தானோ
அன்பெனத் தழுவினாய்
துன்பமென தனித்திருக்கத்தானோ
விலகிடேன் என்றாய்
விழிகள் சிவந்திடத்தானோ ;

கண்ணா....

மாரது துளைத்தாய்
மாயமது புரிந்திடத்தானோ
மாறாது என்றுரைத்தாய்
மறப்பது முறைதானோ
மனமது ஒப்பளித்தாய்
மறைத்தல் நியாயந்தானோ
மங்கலக் குங்குமம் வைத்தாய்
மறைந்திடுதல் மர்மம் ஏனோ ;

கண்ணா....

வேரெனப் பற்றினாய்
வேறென நிலையது ஏனோ
நேரென உள்ளங்கையடித்தாய்
ரேகையது தேடிடத்தானோ
கோதையிவளை மொய்தாய்
ராதையெனக் காத்திடத்தானோ
பேதையிவளை அனைத்தாய்
போதைத் தீர்ந்திட புறந்தள்ளத்தானோ ;

கண்ணா....

தேவையென்பது தேய்பிறை ஆகிடுமோ
காதலென்பது காமத்தில் கழிந்திடுமோ
ஆவலென்பது தீரும் ஆசையாகிடுமோ
அன்பென்பது ஆளுக்கொரு வீதம் மாறிடுமோ
கடல் நீலமென உடல் வண்ணமுடைய கண்ணா வந்திங்கு காரணம் கூறிடு ~~~


- வித்யாசன்

குருட்டுப் பூனை

நான் குருட்டுப் பூனைதான்
நீ எதைக் கொடுத்தாலும் பாலெனக் குடிக்கின்றேன் ~~~~


- வித்யாசன்

புல்லாங்குழல்




கவலைகள் கண்களை கவ்விக்கொண்டிருக்க
கண்ணா புல்லாங்குழல் இசைத்து
நல் பொழுதினை புலர்த்து ~~~


- வித்யாசன்

இது.....

இது வெள்ளை முடியல்ல...
முடியாட்சியால் முடியாததை முடித்த கம்பீரம்
தேசியக் கொடியின் மாறா மறையா மையம்

விண்கலத்தை தாங்கி நிற்கும் அழகிய மேகம்
குழந்தைகளை ஏந்திக் கொஞ்சிடும் அன்பின் ஊஞ்சல்
அகிலம் போற்றும் அறிவின் மங்கா நூலகம்
எல்லை கடந்து தமிழை சுமந்து பறந்த வெண்புறா
யாவரின் கண்களும் காணும் கனவு உலகம்
என்றும் நம்பிக்கையின் கறைபடியா மா மகுடம்
காலம் வரைந்த தூரிகையற்ற எண்ண ஓவியம்
எந்த வடிவில் பார்த்தாலும் இந்தியாவின் அடையாளம்
காலச் சரித்திரம் பேசும் மண்ணில் அழியாக் காவியம்
கலாம் ~~~

- வித்யாசன்

யாரும் பிறப்பதுண்டா


யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா
இம்மண்ணை உயிரென நேசிக்க
பிறரை தன்போல் பாவிக்க
யாரும் பிறப்பதுண்டா

இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா...

கடல் அலைபோல் என்றும் ஓயாது கண்ணில் தூக்கமில்லாது கடமை செய்தானிவன் ;
ஏழை என்று பாராது
இங்கு யாவரும் சமம் என்று நாளும் வாழ்ந்தானிவன் ;
மாலை மரியாதை விரும்பாது
பட்டம் பதவிக்கு மயங்காது நம்மில் பாமரனாய் இருந்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

எட்டுத்திக்கும் தமிழ் சுடர் ஏற்றி
விஞ்ஞானம் வியக்க ஏவுகணை பூட்டி
அயல்நாட்டை அன்பால் வென்றானிவன் ;
தனக்கேதும் வேண்டாம் என்று
தலைக்கணம் துளியுமின்று
தமிழ் நாட்டிற்காக உழைத்தானிவன் ;
இனபேதமின்று மதம் ஒன்றென்று உரக்க உரைத்தானிவன்
ஈன்ற தாயைவிட பெரிதாக தம் தாய்நாட்டை மதித்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி யாரும் உன்போல் பிறப்பதுண்டா ....

அன்பே சிறப்பென்று
அதன்முன் யாவும் சிறிதென்று
அக்னி சிறகொன்று விரித்தானிவன் ;
அறிவே கல்வி என்று
குழந்தையே கோவில் என்று
அனுதினமும் அதனைத் தேடிச் சென்றானிவன் ;
உண்மையில்லை அரசியலில் என்ற வாக்கினை பொய்யாக்கி நேர்மையாகி நின்றானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

எங்கும் விவசாயம் பொங்கும்
நாளை யாவர் துயர் நீங்கும்
நம்பிக்கை விதைத்தானிவன் ;
கண்கள் விழித்து கனவு காணுங்கள்
எதிர்காலம் நம் விரல்கள் என நம்புங்கள் என்று
புதுப் பாடம் சொன்னானிவன் ;
என்றும் முடியாது என்றிருந்திடாது எழுந்து ஓட சக்தி தந்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

நல்லொரு பாதை வகுத்து
நடந்தின்று நாங்கள்
செல்லும்போது
துணையென இல்லாது எங்கே போனானிவன் ;
கனவு பலித்தது என்று
நற் காலம் பிறந்தது என்று
கதவு திறக்க கண்கள் மூடி மௌனமானானிவன் ;
கண்ணீர் பெருக்கெடுக்க
காலன் வந்துனை அழைக்க
எங்கள் தலை மகனே மனம் தாங்காது தூங்கினானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி யாரும் உன்போல் பிறப்பதுண்டா ....

ஏங்கித் தவிக்கின்றோம் எழுந்து வாரும் ஐய்யா
நீர் கண்ட கனவினை நினைவாக்குகின்றோம் தோள் கொடும் ஐய்யா
இனி நீ இல்லாது வாடும் நெஞ்சத்திற்கு ஒருமுறை ஆறுதல் கூறும் ஐய்யா
உன்போல் ஆலமரம் சாய்ந்தால் விழுதுகள் நிற்குமா ஐய்யா
காலம் முழுவதும் கை தொழுதிட நீ கடவுள்தான் ஐய்யா
மீண்டும் நீ பிறப்பதாயின் நாங்கள் யாவரும் எங்கள் உயிரைத் தருகிறோம் ஐய்யா ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் நல்லோர் இம்மண்ணில் யாரும் பிறப்பதுண்டா ...


கலாம் அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி....

- வித்யாசன்

செயலாவோம்

நல்லோர் கல்லறையில் நாளும் ஓர் பூவாவோம்
அவர்தம் கனவினில் நாமனைவரும் மெய்யாவோம்
இல்லார்க்காக வாழ்வோர் என்றும் இருப்பர்
அவர்தம் சொல்லாக நாமிருந்திடாது செயலாவோம் ~~~


- வித்யாசன்

தகுமோ நல்லிரவே

மாறா நேசம் வைத்தேன் வெண்ணிலவே
மோசம் செய்திடலாமோ என் நிலவே
உனைத் தேடி வந்தேன் தேவ நிலவே
நீ தேய்ந்திடலாமோ தேன் நிலவே
பேசாமல் கொல்வதேன் பேரழகு நிலவே
பேரொளி வீசி மயக்குவதென்ன பேரன்பு நிலவே
நான் பாவமல்லவா பால் நிலவே
என் மேல் கோபம் என்ன சொல் நிலவே
தள்ளி தள்ளிப் போவதென்ன தங்க நிலவே
நாமிருவர் தனிமையில் இருப்பது தகுமோ நல்லிரவே ~~~


- வித்யாசன்

விண்ணில்

விண்ணில் படரும் நின் ஞாபக வேர்களின் பின்னல்... உதிர்ந்த சருகுகளின் நிறமதனை அள்ளிப் பூசிக்கொண்டு முகமெங்கும் மௌனத் தவமிருக்கிறது... ஈரம் கசிந்த பார்வை இருளிலிருந்து ஒளிராதாயென ~~~

- வித்யாசன்