சனி, 18 டிசம்பர், 2010

புத்தாண்டு 2011




புழுதி படிந்த நமது கலாச்சாரம் - இந்த

புத்தாண்டில் புத்தாடை அணியட்டும்;

பழுதடைந்த நமது பண்பாடு - இன்றோடு

பாரதத்தில் புதையுண்டு அழியட்டும் !



சுருங்கி கிடக்கும் நமது உள்ளம் - இனி

பரந்து இருக்கும் வானம் ஆகட்டும்;

கிழிந்துபோன பழைய தேதியாக -  நம்மில்

சாதிகள்  ஒழிந்து போகட்டும் !



பதுக்கி வைத்திருக்கும் பணங்களை எல்லாம்

ஏழைக்கு பகிர்தளிக்க முடிவெடுப்போம்;

ஒதுக்கி வைக்கும் இன, மதங்களை யாவும்

குப்பையில் பெருக்கி தள்ள தோள்கொடுப்போம் !





அறிவியல் வளர்ச்சி, அழிவுக்கு வழி விடுவதை

புது முயற்சிகள் மூலம் முறியடிப்போம்;

அமுதும் ஏங்கும் தமிழை இன்னும்

அதிகம் கவிதை எழுதி அழகாய் விதைப்போம் !



வானம் முட்டி உடையும் அளவு

மனித நேயம் எட்டி வளரட்டும்;

கானக் குயில்களின் இன்னிசை மட்டும்

நம் காதுகளை துளைக்கட்டும் !





கடந்த காலம் துன்பங்கள் யாவும்

இறந்த காலம்  ஆகட்டும்;

இனி கடக்கப்போகும் ஒவ்வொரு கணமும்

நமக்குள் புது சக்திகள் பிறக்கட்டும் !



இருட்டு எனும் அழுக்கு வேட்டி - (இன்றோடு)

வானம் விட்டு கிழியட்டும்;

வெளுப்பு எனும் ஆடை கட்டி  - (புதிய)

கிழக்கு முட்டி முளைக்கட்டும் !





                                                                              வித்யாசன்........