வியாழன், 28 ஏப்ரல், 2011

துளி துளி


தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

ஒரு நாள்

ரகசியத்தின் ரசிகர்களை ஒலித்து வைத்திருக்கும் 24 மணி நேரம்
தேடல்களை புதைத்து வைத்திருக்கும் 86400 விநாடிகள்
தன்னை அழங்கரித்து கொள்ளும் அதிகாலை
அயராது விளையாட்டு காட்டும் நண்பகல்
மயக்கத்தை வருட மலரும் மாலை
விந்தைகள் புரியும் விசித்திர இரவு
இளைப்பாராத ஒற்றை வழி பயணம்
கனவுகளை உற்பத்தி செய்யும் களம்
கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கும் கருவறை
இழப்புகளை சொல்லித் தரும் புத்தகம்
கரைய கரைய உருவெடுக்கும் ஓவியம்
கூட்டல் கழித்தல் சொல்லித் தரும் சூத்திரம்
எல்லாவற்றையும் சுமக்கும் அழகிய பாத்திரம்
நினைவுகளை அசைபோடவைக்கும் ராட்டினம்
கழியும் காலங்களை உருளச் செய்கிறது
சுழலும் சக்கரமாக
ஒரு நாள்