திங்கள், 30 நவம்பர், 2015

இறைவன் சொன்னது

இன்பமென்று நாடுவதெல்லாம் ஓர் நாள்
துன்பமாகும் என்றால் - இறைவா
அதை துணிந்து செய்ய மனம் ஏன் கொடுத்தாய் ;


இப்பூத உடல் மண்ணிலும், நெருப்பிலும் ஓர்நாள்
அழிந்திடும் என்றால் - இறைவா
அதற்குள் ஏன் அனையா ஆசை தீயை வளர்த்தாய் ;


பொய்மை முன்னும், உண்மை பின்னும்
வெல்லும் என்பதே நியதி எனில் - இறைவா
நன்மை செய்ய ஏன் பல தடைகளை விதித்தாய் ;


ஆணும், பெண்ணும் சமமென ஆகாது
அதில் ஆயிரம் பிரிவுகள் உண்டெனில் - இறைவா
பிறப்பிடம் மட்டும் ஏன் ஓரிடம் வைத்தாய் ;


நாளும், பொழுதும் நம்மிடமில்லை
அது நிகழ்வது யாவும் நின் நிலை எனில் - இறைவா
நான் எனும் ஆணவத்தை ஏன் சமைத்தாய் ;


கூடுவதும், பிரிவதும் நின்றிடாது
வாழ்வெல்லாம் தொடர்வது சத்தியமாயின் - இறைவா
உறவென்னும் பின்னலை ஏன் வடித்தாய் ;


இளமையும், முதுமையும் இயல்பே
இது யாவர்கும் நிகழ்வது உறுதியாயின் - இறைவா
அதை உணராது பருவத்தை ஏன் வகுத்தாய் ;


இனமும், குணமும் ஒன்றல்ல
அதில் கொலையுண்டு, கோவிலுண்டு எனில் - இறைவா
மனம் தனில் ஏன் இத்தனை மாற்றம் கொடுத்தாய் ;


யாவும் அறிய, புரிய நிலையதனை
தந்துவிட்டு எதிலிருந்தும் விடுபடாது தத்தளிக்க - இறைவா
மனிதனை மட்டும் ஏன் படைத்தாய் ;


இதனை ...
விதி என்று சொல்லலாகாது
கர்ம வினை என்று கருதலாகாது
ஆன்மா அழியும் வரை
அனுபவத்தால் அளப்பதனால்
மனித வாழ்வென்பது அவரவரால் ஆனது
இது இறைவன் சொன்னது ~~~~


- வித்யாசன்

விழிகள்

கொலை செய்யும் நினைவினை
விலைக்கு வாங்கும் இரவினை
விற்க முடியாது
கனவை பழிக்கிறது
விழிகள்~~~ 


- வித்யாசன்

தீரா நம் பேரன்பு

தீர்ந்துபோன சொல்லில்
ஊர்ந்து போகும் நினைவுகள்
தூர்வாரும் நிமிடங்களிடம்
கை கோர்க்கையில்
அகப்பட்டது....

தீரா நம் பேரன்பு~~~

- வித்யாசன்

தூண்டில் புழுவா தொங்கவிட்ட

காட்டு நிலவா
அவ பாட்டுக்கு வந்தா
ரோட்டு கடையா இருந்த மனசில்
புது நோட்டு மழையா பொழிஞ்சு போனா
அவ முன்னால நான் சிறு பொம்மையா ஆனேனே
உண்மையாவே நான் பொய்யாகிப் போனேனே...


எழுத்து கூட்டி ஒரு வார்த்தை படிக்க எனக்கு தெரியாது
இப்ப...
அவ பெயரும் ஏ பெயரும் சேர்த்தா கவிதையினு சொல்லுது ஊரு
ஒதுங்கும் மீசை
ஒரக் கண்ணில் பதுங்குது
சீவி எடுத்த நொங்கு போல
இதயம் வெளிய தூங்குது...


பனை மரத்தபோல வளந்துபுட்டேன்
நிழல் கொடுக்க தெரியாது
இப்ப...
ஆலம் விழுதா மாறிபுட்டேன்
நீ ஊஞ்சலாட வருவது எப்போது
தாறுமாற பேசிய நானும்
தானா ஊமை ஆகிட்டேன்
சண்டியருனு சுத்துன நானும்
சாதுவாகி சாமிய தூக்கிட்டேன்...


கோடாரி நெஞ்சுக்குள்ள
கோழிக் குஞ்சு சத்தம் கேட்குது
ஊதாரினு சொன்ன வாயி
மகா ராசானு சுத்தி போடுது
கத்தி பிடிச்ச கையிது
ஒரு பூவ பறிக்க யோசிக்குது
இரட்ட விழி சிவக்க வரும் கோவமது
பச்ச பிள்ளையாட்டம் பார்த்து சிரிக்குது....


நீ...
ஏன்டீ என்ன மாத்திப்புட்ட
தூண்டில் புழுவா தொங்கவிட்ட ~~~


- வித்யாசன்

கேட்காம தலை ஆட்டுற

நீ என்ன செஞ்ச ஏ மனச
நா உன்ன சுத்தும் நிழலாக ;
கண்ணுக்குள்ள தூக்கமில்ல
கடுக கூட தூக்க முடியவில்ல;
பறந்த ஏ வானம்
சுருங்கிதான் போச்சு
கிழிஞ்ச துணியாக
பேச்சு ஆச்சு
இன்னும் என்ன சொல்ல
காரணம் ஏதும் புரியவில்லை...


கிளையில் ஆடும் இலையா போனேன்
தரையில் கிடந்து அழுகும் குழந்தையா ஆனேன்
தனியா பேசத் தானே
நிலவ அழைச்சேன்
கவிதை ஒன்னு எழுதி பார்த்து அத நான் கிழிச்சேன்
உள்ளம் போகும் பாதை எல்லாம்
உன்ன மட்டும் தானே இறக்காம உசுருக்குள்ள சுமந்தேன் ...


காக்கா பொட்டு சிகுனா ஒட்டி கண்ணாடி ரசிச்சேன்
ஓ பெயர எழுத்தத் தானே கை முழுக்க மருதாணி வச்சேன்
அடங்கா அலை போல
வந்து விழுகிற ஏ மேல
தர முடியா கடன் போல
நினப்பத்தான் துரத்துற
மடங்கும் ஆடைக்குள் விரலா நுழைஞ்சு பாக்குற
உரலில் இடிக்கும் புது நெல்லா என்ன பார்த்தா குதிக்கிற...


அதிகாலை போர்வை போல
அகலாம நீ இருக்க
சதிகாரன்னு ஒன்ன சொன்னா
சலிக்காம நீ சிரிக்க
மடியில் படுத்து
மனச கெடுத்து
நீ வலிக்காம இதழ் மூடுற
வழிய மறித்து
வம்பு இழுத்து
வரப்பு நீராக வளச்சு என்ன பிடிக்குற....


போடானு நா சொன்னா வாடித்தான் நீ போகுற
வாடானு நா சொன்ன ஏனென்னு கேட்காம தலை ஆட்டுற~~~


- வித்யாசன்

வீழ்வதற்கு

எல்லா
கட்டங்களிலும்
வெட்டுண்ட போதும்
தாயத்தை மட்டும்
சுழற்றுகிறாய்
விழிகளில் ;

ஆயத்தமாகினேன்
வீழ்வதற்கு ~~~~ 


- வித்யாசன்

மாறா காதல் இதுதானோடி~~~

என்றும் கூடாத போதும்
என்னுடன் கூடவே வருவதேனடி
சிறு ஊடல் நான் கொள்ளாத போதும்
பெரும் இடைவெளி ஏனடி
இது தீராக் காதல் என்ற போதும்
பகலினில் நீ மறைந்து திரிவதேனடி
மாறாத உயிர் நேசம் கொண்ட போதும்
மாதம் ஓர் நாள் மறந்தே போவதேனடி ;


உனைப் பாராது நானிருந்த போதும்
சுடர் பார்வை இவ்விடம் வீசுவதேனேடி
இணை சேராது இமை மூடிய போதும்
விழி மூடாது காத்திருப்பதேனடி
பசி வாட்டி எனை வதைத்திடும் போது
மேனியில் பால் சுரந்து தாகம் தீர்ப்பதேனடி
மோகத்தில் நெருப்பாய் இதயம் வெந்திடும்போது
மேக முந்தானை விலக்கி மார் மழை பொழிவதேனடி ;


ஒரு பறவையாய் சிறகு விரித்திடும்போது
அழகிய கூடாய் காட்சி அளிப்பதேனடி
ஓயாது பொழியும் கடும் பனியில் உடல் நடுங்கும்போது
உயர விரிக்கும் நிழற் குடையாய் ஆவதேனடி
வீணாய் இரவுப் பொழுதது நகர்ந்திடும்போது
மடியினில் வீணையாய் வீழ்வதேனடி ;


மன நோயால் சூள் கொண்டு உள்ளம் வாடிடும்போது
நீ தாயாய் நான் சேயாய் மாறிடுவதேனடி
யாவும் பொய்யாய் புவியில் உலாவிடும்போது
விண்ணில் மெய்யாய் என்னில் விளையாடுவதேனடி
நீ காயா, பழமா அறந்திட முடியாத போது
கையில் சிக்கிடா காற்றுனை உறிஞ்சி குடித்திடுதல் ஞாயமாடி
ஏடால் இன்ப பாடலால் உனை நிரப்பிட இயலாதபோது
நீ என்னிடம் மட்டும் இயல்பாய் வசப்படுதல் ஏனடி ;


வெண்ணிலவே....
மாறா காதல் இதுதானோடி~~~


- வித்யாசன்

எம் தாயே

வீணென பொழுதுகள் விரைந்திங்கு கழிந்திடாது
வெறும் சொல்லரென நாளும் இயலாதிங்கு கவிழ்ந்திடாது
செயல் வீரமெனக்கு தந்தருள்வாய் தாமதிக்காது தந்திங்கு தயைபுரிவாய்
எம் தாயே....

மனக் காட்டுக்குள்ளே


மனக் காட்டுக்குள்ளே
இருள் வீட்டுக்குள்ளே
விழி கூட்டுக்குள்ளே
பொத்தி உனை வைத்தேனடி

புத்தியது மயக்கத்திலே
பூத்த இமைகள் கவிழ்கையிலே
காத்திருந்த கனவெல்லாம் கதை சொல்லி ஓய்கையிலே
பாதி தூக்கத்திலே
கண் திறந்து பார்த்தேனடி

நீயோ...
மாயவில்லை மறையவில்லை மாறாது மனதிலிருந்தாய் என் பக்கத்திலே ~~~


- வித்யாசன்

இது என்ன நேசமடா

இது என்ன நேசமடா
எங்கும் மோசமடா
பொய்மை பேசுதடா
யாவும் வெறும் வேசமடா ...


மிகு ஏழை என்பாரடா
நிதம் ஏசிப் பழிப்பாரடா
பலவீனன் என்பாரடா
பயமுடையோ ரென எள்ளி நகைப்பாரடா...

நம்பிக்கை நாசம் செய்வாரடா
மன நஞ்சை நெஞ்சில் விதைப்பாரடா
நல்லவன் போல் நாளும் நடிப்பாரடா
நாடகம் முடிந்ததும் நாணயம் இழப்பாரடா ...


நாயென குரைப்பாரடா
அதுவுமல்ல நன்றி மறப்பாரடா
பேயென ரத்தம் குடிப்பாரடா
பேதமை மறைத்தே ஓரினமென்பாரடா ...


மெய் மானம் இல்லாரடா
செய் உதவி மறைப்பாரடா
பெரும் மேலோன் என்பாரடா
சுய பெருமை பேசியே பொழுதழிப்பாரடா ...


மிகு கோவம் கொள்வாரடா
கொடு மிருகம் விட தாழ்வாரடா
யானே பலமுடையோன் என்பாரடா
பாவம் அவரே பழமானபின் தடுமாறி வீழ்வாரடா ...


யாதும் அறிந்தவனென் பாரடா
எப்போது வருவான் எமன் என்பதை அறியாரடா
சூது பகை மாது மது மதி இழப்பாரடா
ரத்தம் சுண்டியபின் சுருண்டே கிடப்பாரடா ...


கொண்ட கோலம் பணமென்பாரடா
கோ மகனென்று முரசு கொட்டுவாரடா
யாவும் என்னால் முடியும் என்பாரடா
முடிந்து போகும் போது கோவணமின்றி எரிவாரடா~~~


- வித்யாசன்

புலவனாய் தவிக்கின்றேன்

தவழ்ந்து வந்த வார்த்தையை மறந்து தேடிய புலவனாய் கிடந்து தவிக்கின்றேன்
கனவில் எனை பிரிந்த பொழுது~~~


- வித்யாசன்

நெருக்கமாக

சபிக்கப்பட்ட தனிமையில்
தானியக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்ட நெல் மணியாய் காத்துக்கிடக்கிறது
வார்த்தைகள் மிக

நெருக்கமாக ~~~


- வித்யாசன்

என் காதலது மிகுதியாலே

வானது சூல் கொண்டு
பெரு வயிறு வளர்கிறது
மேகமது மேவி படர்ந்து
பேருகால தடமாகிறது
வெண் பாலது சுரந்து
மெல் மார்பது இளகுகிறது
இதனை யாரேனும் காணுவாரென்று
கார் முன்றானை ஊடே ஒளிகிறது
என் காதலது மிகுதியாலே
கண்முன் காட்சியாய் ஒளிர்கிறது~~~


- வித்யாசன்

தனக்கென கூட்டம்

தனக்கென கூட்டம் அமைப்பார்
அதற்கு தானே தலைவனென தம்பட்டம் அடிப்பார்
மனதில் உள்ளதை மன்றத்தில் வைப்பார்
அதுவே மன்னவன் முடிவென ஆணையிடுவார் ;


நிமிடம் ஒருமுறை முடிவெடுப்பார்
வாழ்வின் நிதர்சனம் இதுவென பொய்யுரைப்பார்
நாளும் உழைப்போரை நைய்ய புடைப்பார்
வெறும் வாயில் ஓதுவோருக்கு பொருள் வாரிக் கொடுப்பார் ;


தானும் ஏழை சாதி என்பார்
யாவரும் சரிசமமென்பார்
நீதி கதைகள் பல உரைப்பார்
நித்தமும் பல வேசமிட்டு நமை ஏய்ப்பார்;


ஏடுகள் பல கற்று கேடுகள் பல புரிவார்
ஏழையர் வாடிடும் நிலையறியாது ஏன் முடியாது என்றுரைப்பார்
நாளும் நிகழாததை நாளை நடக்குமென நம்பிக்கை வளர்ப்பார்
அதில் நல்ல பொழுதையெல்லாம் நாசம் செய்வார் ;


காவி அணிந்தவராய் ஆசை இல்லையென்பார்
கடை வீதிபோகாததை நல் பொருள் என்பார்
புத்தியில் ஒன்றை வைத்துக் கொண்டு பத்துவிதம் செய்வார்
அது புற்றாய் வளராது புதைகுழியானால் மற்றவரை பழிப்பார் ;


எட்டாக் கனி என்றபோதும் அது எனதென்பார்
தான் ஒரு முட்டாளா என யாவரையும் குற்றம் வுரைப்பார்
புண் பட்டபோதும் அதற்கு மருந்திடாது மறந்திடு என்பார்
வெண் சங்கு சுட்டாலும் நிறம் மாறுமா என சபதமிடுவார் ;


கெட்டாலும் காரணம் நானல்ல அது நின்னதால் என்பார்
விடுபட்டோர் காரணமறியாது வீழ்ந்தும் வீரம் பேசுவார்
சுமை தாங்காத மாடுகளையே சாட்டையால் சூழற்றுவார்
நிலை மாறாத போதனைகள் கூறுவோரை சாடுவார் ;


கண் மூடிக் கொண்டு வெளிச்சம் பக்கம் என்பார்
கடவுளை கை நீட்டி கானல் நீரில் மீன் பிடிப்பார்
கையாலாகதவர் கைத்தலம் பற்றி கரை சேருவேனென்பார்
இன்று வழியும் கண்ணீரை துடைக்காது நாளை கனவு பலிக்குமென்பார் ;


இப்படியே
பல காலத்தை கடந்தார்
இதை பார்த்தே பலனின்றி உழைத்தோர் நொந்தார்
நம்பிக்கை இழந்தும் வேறு வழியில்லாது வாழ்வை இழந்தார்

நாமெப்போது முன்னேற
நம் நாடெப்போது முன்னேற ?


- வித்யாசன்

பாப்பா

முழு சுதந்திரம் வேணுமடி பாப்பா
அதில் மூழ்கி சுகம் காண வேணுமடி பாப்பா
அடிமை இனத்தவர் நீங்க வேணுமடி பாப்பா
நாமனைவரும் சமமென்று நீ உரைக்க வேணுமடி பாப்பா ;


கொடுமை, மடமை ஓடி ஒழிய வேணுமடி பாப்பா
மண்ணில் எதற்கும் நாம் குறைந்தவரில்லை என்று கொட்டடி பாப்பா
சாதி, மதம் ஏதுமில்லையடி பாப்பா
அது உண்மையாகிட கல்விச் சாலையிலே அதை நீக்கிட வேணுமடி பாப்பா ;


நீதி நிலைத்திட வேணுமடி பாப்பா
அதற்கு நீ நித்தமும் சத்தியம் உரைத்திடடி பாப்பா
பாவங்கள் நிகழ்வதைக் கண்டு பயந்திடாதே பாப்பா
பார்வையில் வீரம் கொண்டு புது உலகை படைத்திடு பாப்பா;


யாவரும் கூறிடும் வார்த்தையினை உடனே நம்பிவிடாதே பாப்பா
அதில் நல்லவை, தீயவை யாதென கண்டுணர வேணுமடி பாப்பா
வீண் பிடிவாதங்கள் என்றும் கூடாதடி பாப்பா
வெறும் அனுமானத்தில் எதையும் உறுதி செய்தலாகுது பாப்பா ;


அதட்டுச் சொல்லுக்கு ஒருபோதும் அஞ்சிடாதே பாப்பா
அது எமனென்றாகினும் எதிர்த்து நின்றிடு பாப்பா
வஞ்சகர் வழியினில் வந்தால் நெஞ்சு நிமிர்த்திடு பாப்பா
அவர்தம் வார்த்தைகளில் மயங்கிடாது நேர் நடை போட்டிடு பாப்பா ;


நம் பண்பாடு, பரம்பரைத் தொழில் ஏரினை மறந்திடாதே பாப்பா
பெரும் பஞ்சம் வந்தபோதும் அண்டி கை தொழுதிடாதே பாப்பா
எங்கும் நீ சென்றபோதும் தரம் மங்கிடாதே பாப்பா
பாரெங்கும் வியக்கும்படி நம் பாரத புகழ் பேச வேணுமடி பாப்பா ;


இல்லையென்று இங்கு ஏதுமில்லையடி பாப்பா
தொல்லை செய்வோரை வேரோடு சாய்த்திடு பாப்பா
கொள்ளை அழகது மயங்கிட புன்னகை சிந்திடு பாப்பா
கொள்ளையர்களை குறைகூறாதே கொலை செய்திடு பாப்பா ;


கொஞ்சும் தமிழினை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றிடாதே பாப்பா
அந்நியர் விட்டுச் சென்றதை அனைத்தையும் தீயிலிடு பாப்பா
கொஞ்சும் மொழியினில் கவிதை சமைத்திடு பாப்பா
நமை மிஞ்சியவர் இங்கு எவருமில்லையென கர்வம் கொண்டிடு பாப்பா ;


இதனை என்றும் மனதினில் இறுத்திடு பாப்பா
இதை எவர் பொய்யென்று கூறினும் அவரைக் கொன்றிடு பாப்பா~~~


- வித்யாசன்

கூடாதோர் கூட்டத்தில்

கூடாதோர் கூட்டத்தில் கூடினால்
கோடான கேடெல்லாம் தேடிவரும்
படாதபாடு பட்டுணர்ந்த பின்னும்
அவர்தம் இழிசெயல் உரைத்து நொந்தால்
இருக்கின்ற நிம்மதியும் கெடும்
அதுமீறி பெரும் கோபம் கொண்டால்
கொலை பாதகச் செயலது விளையும்
ஆகவே விட்டொழிந்தது கர்மமென்று
தூர விலகிடு துஷ்டனைக் கண்டு
நற்செயல் புரிய இங்கிடம் பலவுண்டு
அது நாடி செல்
நாளும் பெருநிம்மதி அங்குண்டு~~~


- வித்யாசன்

உந்நிதழ் ஞாபகம்

நேர் பொய் சொல்லெடுத்து
அதன் பிழை மெய் திருத்தி
கார் மழை குடை விரித்து
வரும் நாளதற்கு காத்திருக்க
பாரிருவிழியில் நீ புகுந்திங்கு
நீங்காது பேராசை நிதம்தந்து
நடு இரவில் தூங்காது சுகித்து
கடுங் குளிரில் தாங்காது பூத்திருக்க
கரையுதடா என்தேகம்
கழுத்தடுத்து யாவையும்
காவு கேட்குதடா உந்நிதழ் ஞாபகம்~~~


- வித்யாசன்

தீபாவ(லி)ளி

ஒரு நரகாசுரனை கொன்றதற்கு 
ஓராயிரம் நரகாசுரனுடன் கொண்டாடும் திருவிழா...

சிவகாசி பட்டாசு ஆலையில் கருகிய உடலை மறந்துவிட்டு
தெருவெங்கும் வேட்டு சப்தம் சிதறவிழும் காகித பண்டிகை...


விடிய விடிய துடிதுடிக்க கணக்கற்ற மிருக கழுத்தறுபட்டு
வெந்து, வறுத்து தின்று ஜீரணிக்கும் வேதனையற்ற பெரு விழா...


பழைய ஆடை யார் தருவார் என்று ஏங்கும் குழந்தைகளுக்கு மத்தியில் புதுத் துணி பல உடுத்தி புன்னகைக்கும் புதுநாள்...

ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் வக்கற்ற ஏழ்மைக்கு காரணம் எண்ணாது பலகாரம் ருசிக்கும் பரிவற்ற சந்தோச பொழுது...

ஒலியில் சியர்ஸ் பருகி மதுவில் வாழ்வை தொலைத்துவிட்டு மகிழ்ச்சியை பறைசாற்றும் இருள் சூழ்ந்த ஒளி வெள்ளமிது...

உறவுகளை மறந்து உள்ளங்கையில் மிதந்து சமூக வளைதளத்தில் வாழ்த்துக்களை பகிரும் கலிகால தீபாவளியிது...

என்ன செய்வது ?
தீபாவ(லி)ளி வாழ்த்துக்கள்~~~

- வித்யாசன்

சனி, 7 நவம்பர், 2015

நல் ஞானம் கொடுத்தாய்

நல் ஞானம் கொடுத்தாய்
அதில் மானம் வைத்தாய்
சொல் ஈரம் நனைத்தாய்
பகை நடுங்கும் வீரம் விதைத்தாய்
ஏதுமில்லையென யாவும் அளித்தாய்
அது என்னது என்போரை தூற்றிப் பழித்தாய்
காயும் நிலவுடன் பெருங் காதல் வைத்தாய்
ஓடி ஆடும் கடலிடம் உழைப்பை உடுத்தாய்
மேகம் தொடும் மலையானபோதும் மேனியில் பச்சை வளர்த்தாய்
மேன்மை பல கண்டதாயினும் எங்கள் ஏழ்மையில் சிரித்தாய்
பாயும் நதி தந்து அதிலெதிரே மோதும் கயலானாய்
பாவையர் புருவமது விழியுமதுயென்று புரியவைத்தாய்
பேதமையற்று ஓர் வழி தன்னில் பிறப்பு வைத்தாய்
பின் ஏனதனில் பிரிவுவைத்து பித்தர்களாய் உலவ வைத்தாய்
பெண் மானம் காத்திடவே கரமதனில் பலம் வைத்தாய்
அதுவே காட்டு நரியென ரத்தம் ருசிக்க ஏன் காமம் கொடுத்தாய்
பார்த்து ரசிக்கவே யிங்கு பலயிருக்க பாவம் தனை புகுத்தாய்
நின் நோக்கத்திற்கு ஏற்றதாய் ஏன் ஒவ்வொன்றையும் படைத்தாய்
நல் ஆக்கமது மண்ணில் நிகழ்ந்திட தின ஊக்கமது தந்தாய்
பொய் அக்கறை காட்டிடாது மெய்யென தேன் மாரி பொழிந்தாய்
என் உள்ளிருந்து உலகதனை எண்ணி எண்ணி நொந்தாய்
அதற்கு உண்மை மறந்ததே இவ்வுலகம் என்றாய்
கூவும் குலாவும் இனங்களை மெல்லக் கொன்றாய்
அட கூறுகெட்டவனே நாளை கூடுவார் யாருமின்றி அழிவாய் என்றாய்
நாடும் நாமும் செழித்திட நல்லவை மட்டும் செய்வாய் என்றாய்
அதை நாடாது நன்றி மறந்திட்டு நடந்தால் நரகம்தான் என்றாய்
கூடாது கூடாது புதுமை பெருங்குற்றமாகும் மறப்பது நம் பழமை என்றாய்
மாறாது மாறாது வேளாண் வயல் வரப்பு மேன்மையென நின்றாய்
காணாதுபோன கூட்டுக் குடும்பத்தோடு எங்கள் உள்ளக் களியாட்டம் தொலைந்தாய்
ஆறாது ஓடிய இன்பபாலினிலே விசம் தனை கலந்தாய்
சுடர் ஒளி காற்றினிலும் குந்தகம் விளைய துணிந்தாய்
இந்நிலை நீண்டிட இனியது மாய்ந்திட நின்றதை நானும் பார்ப்பேனோ
தீமை கொன்றதனை நன்மை செய்வே அன்றி நான் விடுவேனோ~~~


- வித்யாசன்

வானளாவி மேவுதே கண்ணம்மா~~~

பேரன்பு வைத்தேன்
அதுவே உலகில் பெரிதென்று நினைத்தேன்
ஓர் நாளது பிரியுமென்பது அறியாது
ப்ரியங்களை புற்றாய் வளர்த்தேன்


எந்நிலையிலும் மறவேன் என்றுரைத்தேன்
எனை மீறியது வழி மாறிப் போகதென்று சுகித்தேன்
வானவெளியது பரந்ததென்று அறியாது கிளியினை இருதயக் கூட்டினில் அடைத்தேன்


நேர்வது எனதில்லை என்பது புரியாது நிகழ்ந்தது பேதமை
பாலென பார்த்தவை யாவுமே கள் என ஆனதே வேதனை
கோபமுள்ளது வீசவே காதல் மெல்லென கசந்ததே
வாழ்வே நீயின்றி என்றது நீங்கியே நீயாரோ நான் யாரோ என்றானதே


அங்கமது தீண்டியதும் மனமெங்கும் உலாவியதும் மாயையென்று ஆகியதே
மங்கள நாளதனில் துன்பமதை நின் ஞாபகங்கள் தந்ததே
சிந்தையிலே சிந்தியபடி பல காலம் உருண்டோடியதே
தேகமது தோய்திங்கு சடமாகினும் நாளும் நின் நேசமதைத் தேடுதே 


மாறிவரும் யாவையும் கடந்து மறந்திங்கே வாழ்வினும்
பொய் பேதமைத் தாண்டியே நம் மெய் அன்பு வானளாவி மேவுதே

கண்ணம்மா~~~

- வித்யாசன்

கண்ணபிரான் கால்பற்றுகிறது;

துளையெல்லாம் நா துழாவும் கோரப் பற்களாயின் குருதி சுவர் நிழலாய் படிகிறது;
வெறி பற்றிய விழியில் குட்டை பாவாடை அளவறியாது குத்திக்கிழிக்கும் வாளாகும் ஆண்குறி அலறல்களில் அபிசேகம் செய்கிறது;
எட்டி பார்க்கும் மொட்டின் மடு நசுக்கும் நகங்களின் வேகத்தில் வேதனை ஒலி பெண்பால் சுயமறுத்து பேச்சற்று மூர்ச்சையாகிறது;
நம்பிக்கையின் கூடாரங்களில் அம்மண வாசனை பிடிக்கும் மோப்ப நாய்களின் வாயில் ஒழுகும் மதநீரில் கண்ணீர் பிசுபசுப்பு கரைவதில்லை;
சிறகுமுளைக்கா பட்டாம் பூச்சிக் கூடொன்று வெந்நீரில் நூலாவதைபோல் வதை செய்யப்படும் வெற்றறைகளில் ஆடை கண்ணபிரான் கால்பற்றுகிறது;
கற்றுக் கொடுக்கும் பிரம்புகள் அங்கத்தின் மர்மங்களை கழற்றும் அந்தரங்கமாகையில் ஏடுகளின் எழுத்துக்கள் அழுகிறது;
சவங்களைப் புணரும் யுகங்களின் கைரேகைச் சாலையில் எதை போர்த்திக் கொண்டு கழுகின் மாடங்களைக் கடப்பது;
இப்படித்தான் பிஞ்சிலே பழுக்கின்றன யாருக்கும் தெரியாது நம் வீட்டுச் சின்னஞ்சிறு பொம்மைகள்~~~

** இந்து மதம் மதமற்றது 2 **



கல் மீது எனக்குள் எப்போதுமே ப்ரியம் வற்றுவதே இல்லை. ஒரு காலத்தில் கல்தான் எல்லாமே. அது ஆயுதம் முதல் ஆண்டவன் வரை. ஆனால் இன்று கல் கடவுளாக மட்டுமே இருக்கிறது.

கல் மனம் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் அது கடவுள். உண்மையும். என்னடா இப்படி சொல்கிறான் என்று எண்ணத் தேவையில்லை. உங்கள் மனதையே கேட்டு பாருங்கள் நமக்கு வெளிச்சம் கொடுப்பினும் எளிதில் உருகும் மெழுகை நேசிப்பதை விட அதைத் தாங்கும் மண்ணுக்கடியில் தூங்கும் கல்லறை மீதே காதல் கொள்கிறோம்.

இதை எளிமையாக விளக்கினால் இளகிய மனதுடையவர்களை காட்டிலும் கல் மனதுடையோரையே நாம் அதிகம் பேசுவது ஏசுவது சிந்திப்பது அவர் மனதில் இடம் பிடிப்பது என எல்லாமே அங்கு அதிகப்படியாய் நிகழும். கல் கடவுளாயிற்றே...

பூமியில் கடும் பஞ்சம் வந்தபோதும் இந்து மதத்தில் கடவுளுக்கு பஞ்சமில்லை. ஆலயம் சென்றால் அய்யோ என்று சுற்றோ சுற்று என்று என்னை பெற்றோர்கள் அழைத்துச் செல்வதை பார்த்து என்னடா கல்லுக்கா இப்படி என்று கடிந்து திட்டியதும். பின்னொரு நாளில் அந்த கல் முன்னே கண்கலங்கி அத்துன்பம் வெகு தூரம் சென்றதும் வேறு உண்மை...

கடவுள் எத்தனை உருவம் கொண்டாலும் கல் என்னவோ ஒன்றுதான். அது நிலத்திற்கு நிலம் மாறுபடினும் அனைத்து அடர் கல்லும் சிலை செய்ய உகந்ததே... இதிலும் சிறந்த கல் என்று ரகங்கள் உண்டு. அதற்குள் சென்றால் ஆராய்ச்சி அதிகப்படும். யாவருக்கும் தெரிந்தது கல் தானே...

சரி இந்த கல்லை வணங்க ஏன் நாளும் கோடிக் கணக்கான மக்கள் அலைகிறார்கள். பல கி.மீ தாண்டி பயணம் கொள்கிறார்கள். எதற்கு மாலை, தீ மிதி, தீ சட்டி, பொங்கல், மாவிளக்கு, மொட்டை, பூஜை, அபிசேகம், பட்டு சாத்துதல், வீதி உலா, சப்பரம், பலி கொடுத்தல் அப்பப்பா...இதுவெல்லாம் எதற்கு? ஏன் ? பதில் சொல்லா கல்லுக்கா குழம்பி இருந்திருக்கிறேன். ஆலயம் சென்றாலே இந்த கேள்விதான் என்னை ஆளும்....

மகிமை என்ற ஒரு சொல் உண்டு. அது இந்த கல்லுக்கு பொருந்துவதுண்டு. தஞ்சை கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அங்கிருக்கும் சிவலிங்கமும் அப்படி ஒரு காட்சியானது. மிகப் பெரியது. சிறிது காலம் தஞ்சையில் வசித்த நேரம் யாவும் ஆலயம் செல்லாத நாள் மிகக் குறைவு. அந்த ஆலயம் எனக்கு இன்றளவும் இறை பக்தியை நிறையச் செய்வதுண்டு. அது தஞ்சை பெரிய கோவில் அல்லவா...

கல் மிகிமை என்னதானென அதன் மீது லகிக்க அது கடவுளானது எனக்குள். நிறைய பேச ஆரம்பித்தேன் மற்றவரை போலவே. ஆனால் அது பேசவில்லை. நிறைய அழுதேன் அது உடனடியாக கண்ணீர் துடைக்கவில்லை. நிறைய சிரித்தேன் அறிவுரை வழங்கியது. நிறைய கடிந்தேன் என்மீது கோபம் கொள்ளவில்லை. போ என துரத்தினேன் தொடர்ந்து வந்தது. சீ வெறும் கல் என்றேன் கடவுளாகியது...

நம் மனதுக்கு எதுவெல்லாம் உகந்ததோ அதுவாக இக்கல் அமைவதே கடவுளாகக் காரணம். குறை நிறை எதுவாகினும் அதற்கு மறுப்பு கூறாமல் சம்மதம் சமாதானம் தருகிறது. அதனால் தான் கொலைகாரனும், கொள்ளைக்காரனும் ஆலயம் செல்கிறான். எவரிடமும் அது வாக்குவாதம் செய்வதில்லை. பலன் கேட்பதில்லை. நம் பலவீனத்தை சொல்லி பயம் காட்டுவதில்லை. மாறாக இருளிலும், இயலா நிலையிலும் பெரும் துணையாகவும், பேரொளியாகவும் விளங்குகிறது....

கல் எல்லாம் கடவுள் ஆகுமா? அப்படியாயின் காலில் மிதிபடுதல் எங்ஙனம் அதை குறிப்பிடுவது. அதுவும் கடவுள்தான். நமக்கு கைகள் உண்டு ஏனைய ஜீவ ராசிகளுக்கு அது இல்லை. அதற்கு கால்களே கை. அப்படித்தான் நம் பாதங்களும் கைக்கு ஒப்பாகும். அதனால்தான் பாதமிதியும் பகவானை தொழுதலுக்கு சமமாகும். சுருக்கமாக புரியும் படி சொன்னால் சிலர் காலடி பட்ட மண்ணை திருநீராக பூசிக் கொள்கிறோமே அப்படித்தான். ராமன் பாத ரட்சகை நாட்டை ஆண்டதும், கல் பாதம் பட்டு அகலிகை ஆனதும் தொழுவதே....

நாம் பார்ப்பது, தொடுவது, மிதிப்பது, நினைப்பது என கல் யாவும் கடவுளாகிறது. அது இந்து மாதத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. இது பொய் எனில் ஆலயம் சென்று கேள்~~~

- வித்யாசன்

** இந்து மதம் மதமற்றது **



மதம் சார்ந்து எதையும் என் மனம் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மதம் தான் ஒவ்வொரு மனிதனையும் பக்குவப்படுத்துகிறது. அவர்களது உள்ளங்களுக்கு ஒழுக்க ஆடைகளை கட்டி விடுகிறது.
மதம் தீவிரமாகும் போது மட்டுமே மதம்பிடித்த யானையாகி பலமான மரங்களையே சாய்த்து விடுகிறது. மும்மதங்கள் இந்தியாவில் உள்ளது. நான் இந்து மத்தத்தைச் சார்ந்தவன். கிறிஸ்துவ மத போதனைகள் எனக்கு போதை தரும் வார்த்தைகள். குரான் குறித்து பெரிதும் அறியாதவன். ஆயினும் முஸ்லீம் மத கட்டுப்பாடு என்னை கதி கலங்க வைத்துள்ளது.
எனக்கு கிறிஸ்தவ நட்புகளே அதிகம். சர்ச் செல்லும் பழக்கம் உண்டு. இவர்களின் மதக் கோட்பாடும் பழகும் விதமும் ஒத்தே அமைந்த ஒன்று. முஸ்லிம் நட்பு மிக சொற்பமே. தாமரை இலை தண்ணீர்போல். எனக்கு நோன்பு கஞ்சி மீது பெரும் ஆசை என் அம்மா அருகிலிருக்கும் பள்ளிவாசல் வழங்கப்படும் அதனை பிறர் மூலம் வாங்கித் தருவார்கள். இன்புற்று ரசித்து பருகியதுண்டு. என் இல்லத்தின் அருகில் இரு பள்ளிவாசல் தினமும் விழித்தால் தென்படுவதுண்டு. தொழுது பழக்கமில்லை. ஆசைஉண்டு.
ஆலய மணியாக இதயத்தில் ஒலித்துக் கொண்டிருப்பது இந்து மதம். என் அப்பா முருக பக்தர். சதா முருகனையே வேண்டி வாழ்வில் நிறை கண்டவர். பால்ய வயதிலிருந்தே அதை பார்த்தே முருகன் மீது முழு அன்பானேன். அப்பாவிற்கு மூட பழக்கம் முழு நம்பிக்கை அற்றவர் ஒரு நாளும் மாலை அணிதல், உணவருந்தாமல் இருத்தல் வேல் குத்துதல் தீ மிதித்தல் என எதன்மீதும் பற்று அற்றவர். மென்மையான பக்தி.
இதுவெல்லாம் எனை இந்து மதத்தின் மீது சவாரி செய்ய வைக்கவில்லை இதை எல்லாம் தாண்டி நிறைய எனக்கு நேர்ந்ததே அதன் மீதான பெரும் ப்ரியம்.
எனக்கு திருநீர் சந்தனம் குங்குமம் சவ்வாது பூக்கள் ஊதுபத்தி இவைகளென்றால் நாளெல்லாம் அதன் நறுமணத்தில் மயங்கியிருப்பேன். இது அத்தனையும் இந்து ஆலயத்தில் உண்டு...
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்த அனுபவம் மட்டுமின்றி அதன் உண்மைகள் பிடித்தமைக்கு காரணம். நிறைய கற்று கொடுக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும். எப்படி பழக வேண்டும் என்பதை. ஏன் என்றால் சிலருக்கு எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. சமீபத்தில் அப்படி ஒரு அழைப்பு. அது வளர்பாகவும் பழக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இந்து மதம் அதை எந்நேரத்திலும் பண்பினை அறிவுறுத்த மறுப்பதில்லை.
இந்து மதத்தின் பேரின்பதை ஒருமுறையில் கூறிவிட முடியாது. அது அன்பின் சந்நிதானம். நிதானம். பிரதானமாகும். ஒரே மூச்சில் சொல்லிடலாகும்... படித்திட முடியாது... அது கடலை குடித்திடும் முயற்சியாகும்~~~
-தொடரும்....

- வித்யாசன்

சாய்த்திடு இன்று

பயம் கொன்று
பரசுராமனென்று
சாதி , மதங்களை வெட்டிச் சாய்த்திடு இன்று ~~~


- வித்யாசன்

தீ மூட்டுகிறாய்

மௌனங்களில் தீ மூட்டுகிறாய்...
வார்த்தைகள் ஒவ்வொன்றாக உடன்கட்டை ஏறுகிறது ;

உனக்காக நேந்துவிட்ட சொற்களில் ஆசை ஜடை ஜடையாய் ...
மழிப்பதற்கு இச்ஜென்மம் போதாது ;

குறுக்கு நெடுக்கு கோடுகளில் உனக்கான குடிசை கட்டிவைக்கின்றேன் ...
நீ வசிக்க வேண்டாம் வாசித்திடு கோயிலாகும் ;

நகர முடியாத சவப்பெட்டியாக எழுத்துக்கள் ஆனால் என்ன ...
நீ எப்போது திறந்து பார்த்தாலும் உயிர்ப்புடனிருக்கும் ;

ம்....
உன்னிதழுக்குத் தெரியாது உச்சரிக்கும் போதெல்லாம் எச்சில்பட்டு உடம்பெல்லாம் வெட்கத்தில் தொப்பெலாக நனையுமென்பது~~~

- வித்யாசன்

ஆயர்பாடி அழகா

ஆயர்பாடி அழகா
மாயம் புரியும் மாதவா
பிருந்தாவனம் தேடுகிறது வா வா...

கங்கை கரை மன்னா
காதல் கள்வன் கண்ணா
கோகுலம் அழைக்கிறது வா வா....

நின் புன்னகை கொண்டு
மனப் புண்ணதனைக் கொன்று
என் எண்ணம் மீது ஏறி நின்று குழல் ஊத வா வா~~~


- வித்யாசன்

** அனுபவ ஆசான் 2 **


சில விசயங்களை என்னால் தூக்கி எறிய இயலவில்லை. வெள்ளை ஆடையில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு போன்றது. அது சித்ரவதை செய்தபோதும் அதனை சிரத்தையுடன் சிந்திக்கிறேன். அதற்காக பலரையும் சீறியிருக்கின்றேன்.
இது தொட்டில் பழக்கம் அல்ல இடையில் ஒட்டியதுதான். மனம் ஆலயம் என்றபோதும் அங்கும் நூலாம்படை இருக்கத்தானே செய்யும். அடிக்கடி ஒட்டடை அடித்தாலும் மீண்டும் மீண்டும் வளை பின்னல் எழும். அப்படித்தான் நினைவின் பல் சக்கரத்தில் சிக்குகிறது ஞாபகங்கள்.
எதை நான் மறக்க வேண்டும் நினைக்க கூடாது என்று எண்ணுகிறேனோ அது ஒரு காலத்தில் மறைந்தாலும் முழுவதுமாக நீங்குவதில்லை அது அவ்வப்போது வதைக்காமல் விடுவதில்லை. இதற்கு காரணம் அதுவெல்லாம் மனத்தீங்கான செயல்.
தவறு அற்ற வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அப்படி வாழ்வதும் பெரும் தவறாகும். சில தவறை உணர்ந்தால் ஒழிய அதை பிறர்க்கு எடுத்து கூற இயலாது. சிலவற்றை நாம் அனுபவமின்றி உணர்ந்து அதற்கு தக நடந்தால் துன்பம் தூக்கிலிடாது. என்ன செய்வது பலவும் எனக்கு அனுபவமாகவே நிகழ்ந்து விடுகிறது.
இடுகாட்டில் எரியும் உடலுக்காக அழுகும் உயிரைப் போல் முடிந்ததை எண்ணியே புலம்பும் பலவீனமான மனதை எப்படி பலப்படுத்தி வேறு எண்ணங்களை உடுத்தி பார்த்தாலும் கடைசியில் அழுதே ஆறுதல் அடையும். அது போதாது என்று மீண்டும் அதே சந்தர்ப்பம் இனி வாய்க்காதா என்று ஏங்கிடும்.
எல்லாம் இருந்தும் அதன் கூட குறையும் இருக்கும். அது அவரவர் மனங்களை பொறுத்து மாறியிருக்கும். கிடைக்காததை பெறவே பெரும் தவம் புரியும் மனதில் எழும் ஆசை புற்றின் நீளத்தை குறைக்கவும் முடியாது. அதனை புதைக்கவும் முடியாது.
ஏன் முடியாது முடியும் அதற்கு தன்னை முழுவதுமாக நம்பினால் போதும் என்றால் முடியும். ஆயினும் தவறியவை தரும் வலியை தாங்கவே அது நேரும். வாழ்வின் பிரதானமாக அனுபவம் ஆட்கொள்ளும் போதெல்லாம் அதை கடிவதில்லை அதற்கு கடிவாளம் இடுவதுமில்லை. அலையும் மனக்குதிரை ஓய்வதுமில்லை ....
மனம் ஒரு கடல் என்பேன்... அதில் நாம் எதைத் தூக்கி எறிந்து மூழ்கடிக்க நினைத்தாலும். அது ஓர் நாள் அலையென நினைவதை கரை சேர்த்துவிடும்~~~

- வித்யாசன்

என்ன தவம் யான் செய்தேன்

இரு புருவம் நிமிர்த்தி
வில் உயர்த்தி
விரல் அழுத்தி
விடும் அம்பின்
அவ்வழகு கண்டு
இது போதாது போதாது
போர்க்களம் மறந்தேன்
ராமா....
என்ன தவம் யான் செய்தேன்
ராவணனாய் அவதரிக்க
நினது கரத்தால் வதம் முடிக்க~~~


- வித்யாசன்

யாழினை நீ இசைக்க

யாழினை நீ இசைக்க
யாவையும் நான் மறக்க
நேர்வது ஏனோடி;
காற்றென நீயிருக்க
அதில் கலந்து நானிருக்க
காரணம் ஏனோடி;
அன்றது நிகழ்ந்தது
இன்றது நடந்ததாய்
ஞாபகம் வருவதேனடி;
ஆயிரம் வாதங்கள் ஆயினும் உள்ளன்பு குறையவில்லை பொங்குவதேனடி;
தோழி...
இதுதானோ உண்மைக் காதல்
உண்மை சொல்லடி... தோழி~~~


- வித்யாசன்

நின் அருளது வேண்டும் தாயே

நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே;


மலையது துயரது நேரிடினும்
அது மழையென தூரிட துணை புரிவாய்;
நிலையது கவலை ஆயினுமே
அது களைந்திடும் மேகமென ஆகிட தயை புரிவாய்;
கலைமகள் மலரதனில் வீற்று வீணையது மீட்டிடவே;
நிதமதை காண்பதுவே உளமது தெளிவது நாளும் அடைந்திடுமே;


பொருளது அழிவது புகும் ஆசை தந்திடாது காப்பாய்;
வெறும் சிலையிது என்றாகிடாது விழியதனில் உயிராவாய்;
மலைமகள் நிலவென சுடர் ஒளி ஆகையிலே;
மனமது மயங்கிடாது மதியது மலர்ந்திடுதே;


பெரு வானமெனவே ஞானம் தருவாய்;
நல் கானமது நாவினில் வர வரமருள்வாய்;
கோலமகள் எழில் முகம் பார்க்கையிலே;
எழும் மனக்கோபங்கள் அனைந்திடுதே; 


நின் திருவுரு அழகினைக் காண்கையிலே;
மனவுருகுது மலரடி தாழ் பணிந்திடவே;
மலரிதழ் புன்னகை பூத்திடவே;
பெரும் மனக்குழப்பங்கள் மறுகணம் நீங்கிடுதே;


அலைமகள் நீங்கிடா தொடர்ந்திடும் பேரன்பே;
இவ் அண்டத்தில் அடைக்கலமானேன் நின் திருவடி தினமே;

நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே~~~


- வித்யாசன்

அனுபவம்

அழுகிடும் பழமெனினும் அதற்குரித்த நாளில் இனித்தே இருந்திடக்கூடும்
அதுவன்றோ வாழ்வின் அனுபவம் ~~~


- வித்யாசன்

கண்ணன் வந்தான் - கண்கள் திறந்தான் ;

கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;


மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ;

பின்னல் ஜடையை பிடித்து இழுத்தான்
யாரென கேட்கும் முன் இதழினை நனைத்தான் ;


கன்னம் சிவக்க வெட்கம் பறித்தான்
காரணம் அறியேன் காவலை மறந்தேன் ;

பின்னிடை பிடித்து தன்னுடன் அனைத்தான்
மாரினில் சாய்த்து மர்மங்கள் அவிழ்த்தான் ;


மெல்லனெ காற்றாய் மேனி படர்ந்தான்
சொல்லொன்னோ சுகம்தனை சொல்லிக் கொடுத்தான் ;

சிறு பிள்ளைபோலே எனை அள்ளி எடுத்தான்
முன்னிரு மலையினில் மூழ்கா முத்தெடுத்தான் ;


எல்லையில்லாது எனைக் கொள்ளை அடித்தான்
ஏனெனக் கேட்காது தானாக கொடுக்க வைத்தான் ;

கலையும் மேகமென மோகம் களைத்தான்
கைகள் பற்றியே கவலை போக்கினான் ;


புல்லாங்குழல் எடுத்து புது ராகம் இசைத்தான்
பொழுதது போகவே நிலவதை மறைத்தான் ;

என் முகம் பார்த்தே ஏதேதோ பேசினான்
மடியினில் சேர்த்து உறங்க வைத்தான்
கண் விழித்து பார்த்தேன் காணாது தவித்தேன்
என் விழி ஓரம் நீர் வர சிரித்தே ரசித்தான் ;


ஒரு துளி விழுந்திட ஓடோடி வந்தான்
ஆறென அழுதிட ஆறுதல் தந்தான்
பாரென நீரது துடைத்து புன்னகை பொழிந்தான்
நீயே என் ராதையென நீங்காது தொடர்ந்தான்


கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;
மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ~~~


- வித்யாசன்

கண்கள் அங்கே

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே...

கோடி அழகு கோபாலன் என்பேன்
நிதமும் தேடியே நிலையாய் அகலியாவேன்
பிருந்தாவனத்தில் பூக்களாய் பூப்பேன்
கங்கை நதியினில் இரு கரையாவேன்
என்னை.....
கண்ணன் வந்து கைத்தலம் பற்றும் வரை கன்னியாக காத்திருப்பேன்....

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே ~~~


- வித்யாசன்

பழித்ததாம்

கல் மனமென்று ராமனை பழித்ததாம்
எல்லா கல்லும் தன்னை அகலியென்று எண்ணிக் கொண்டு ~~~


- வித்யாசன்

ஆப்பிள் நிறம்

நம் பேய் ப்ரிய பற்களில்
ஆதாம் ஏவாள் ஆப்பிள் நிறம் வழிகிறது~~~


- வித்யாசன்

கண்ணா....

புல்லாங்குழல் இசை கேட்குதடா
கண்ணா....
புல்லின் பனித்துளியெல்லாம் துளையாகி உன் இதழ் கேட்குதடா
கண்ணா....
பொல்லாத இரவென்னைக் கொல்லுதடா
கண்ணா...
நின் பெயர் சொல்லாது விடியும் என் பொழுதேதடா
கண்ணா....
நான் முன்னே வந்தால் கற்சிலையாகி நிற்பாயோடா
கண்ணா....
காதலை மொழிந்தாலும் கள்வனென ஒளிவாயாடா
கண்ணா...

வா.... வா....
கண்ணா...
மயிலிறகு
மன்னா....


- வித்யாசன்

ராமா .....

வில் ஒன்று
அம்பு கொண்டு
சூரன் கொன்று
எதிரியை வீழ்த்தினோமென்று
கர்வம் கொள்ளாதே
ராமா .....

மறந்திடாதே கண்ணயர்ந்து
இலங்கேஸ்வரன் பெயர் கொண்டு
ராவணன் மீதமுண்டு
பெருகும் வீரமுண்டு
பயமின்றி பத்துதலை கண்டு
எதிரிலே போரிட்டு நின்று
வெல்லும் பலமுண்டு ?

கேட்டு வா காட்டில் வாழும் ராமனை இன்று ~~~

- வித்யாசன்

சிறகுதிர்க்க

மதம் பார்ப்பதில்லை மாடங்களில் கூடுகட்ட
அங்கேயும் மனித அச்சமுண்டு சிறகுதிர்க்க ~~~



- வித்யாசன்

ஜங்ஃபுட்

உழுபவனுகில்லை நிலம்
வலுத்தவனுக்கு விளைச்சல்
அழ மறுக்கும் வானம்
விசமாகும் விவசாயம்
எதிர்காலம் என்னவாகும் ?
ஜங்ஃபுட் உலகமாகும் ~~~


- வித்யாசன்

ஞாபகங்கள்

இரவுப் படியில் அமர்ந்து
வெள்ளிக் குளத்தில்
விண்மீன் கல்லெறிந்து ரசிக்கின்றேன்
எழும் வளைவுகள் எங்கும் நின் நினைவுகள் ததும்பிட


ஞாபகங்கள் வெளிச்சமாகிறது ~~~

- வித்யாசன்

எங்கே கண்ணா

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா...

நெஞ்சமெனும் ஆலயத்தில் சாந்தியில்லை நீ வாராய் கண்ணா
கெஞ்சவிட்டு தள்ளி நில்லாது ஓடி வாராய் கண்ணா
மன சஞ்சலங்கள் தீர்த்து வைக்க வாராய் கண்ணா
நின் சன்னதியை சரண்டைந்தேன் பாராய் கண்ணா...

எங்கும் எதிலும் நீயே நிறைந்தாய் எந்தன் கண்ணா
என் எண்ணம் யாவிலும் கலந்தாய் நீங்கா கண்ணா
கண்ணிரண்டும் நீராகி வழியுதடா விரல் தாராய் கண்ணா
மண்ணில் இந்த பிறவி போதுமடா தீர்க்க வாராய் கண்ணா....

பொங்கும் சோகம் பொய்யாக்கிடு ராதை கண்ணா
எங்கும் ஏழை இல்லை என்றாக்கிடு யசோதை கண்ணா
அங்கமெங்கும் துடிக்கிறது அனைத்திட வாடா கண்ணா
எனக்கு நீயின்றி ஆறுதல் கூற வேறு யாறுமில்லையடா கண்ணா...

கண்ணா.... கண்ணா....
கண் திறவாய் கண்ணா...

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா ~~~


- வித்யாசன்

சுதந்திரமற்ற

சுதந்திரமற்ற வாழ்க்கையடா
இங்கே யாவரும் சூழ்நிலைக் கைதியடா
பணம் மட்டும் யாவையும் ஆளுதடா
அதுயில்லாது போனால் உயிரிருந்தும் பிணமடா
குணம் கெட்டு குறுக்கு வழியில் போகுதடா
இங்கே தரம் கெட்ட மனிதருக்கே உலகம் தலைப்பாகை அணியுதடா
நிறம் மாறும் மாந்தர் மனதினில் நீதியில்லையடா
ஏழையின் ஆசைக்கு எந்நாளும் பஞ்சமில்லையடா ~~~


- வித்யாசன்

அலைவரிசை

பைட்டுகளில் துவங்கி
ஜிஹாபைட்டாக மாறி
ஃபைபர் ஆப்டிக்கல்லை தின்று
வைஃபை வலம் வந்து
கேபி, எம்பி, ஜிபி கடந்து
அணு அணுவாய் சிதைந்து
அதனடியில் நாமிருவரும்
ஆதாம் ஏவாளாய் வாழ அழைப்பு விடுக்கிறது
அகண்ட அலைவரிசை ~~~


- வித்யாசன்

நித்திரை

உனக்கும் எனக்குமான ப்ரியத்தை அளக்கும் மௌனத்தை இடைவெளியில்லாது கட்டிக்கொண்டு கதை பேசி முகம் பார்க்கிறது இமை மூடிய நித்திரை ~~~

- வித்யாசன்

கண்ணனிடம் கேட்டேன்

கண்ணனிடம் கேட்டேன்
கண் கலங்கி நின்றேன்
என்னருகில் வந்தான்
என்னவென்று கேட்டான்

மனப் புண்ணதனை சொன்னேன்
பதிலறியாது பயந்தேன்
விண்ணதிரச் சிரித்தான்
மறு கணம் வேதனைகள் தீர்த்தான்
இவனை என்னவென்று சொல்வேன்
கைக் குழந்தையென தூக்கி கொஞ்சிடுவேன் ~~~


- வித்யாசன்

இல்லாமல்

இல்லாததை கேட்கும் இதயத்தை இல்லாமல் செய்தால் என்ன


- வித்யாசன்

சிலுவை

முள்
ஆணி
சாட்டை
சிலுவை
சாத்தான்
இவைகளுக்கு மட்டுமல்ல
நம் அனைவருக்கும்
பாவ மன்னிப்பு
முத்தங்களை பருகத் தருகிறார்
கர்த்தர் அங்கியிலிருந்து ஒழுகும் குருதி இதழில்

ஆமென் ~~~

- வித்யாசன்

ஆமென்

வேண்டுதலின் கண்ணீர் தேவனவனின் ரத்த துளியில் பரிசுத்தமாகி பாவ ஆணிகளில் படிந்திருக்கும் துயரம் பிரார்த்தனை சிலுவையில் நீங்கி வெளிப்படுதல் ஒளி வெப்பமல்ல பகிர்ந்தளிக்கும் ஊழிய அப்பமாகும் ....
ஆமென் ~~~

- வித்யாசன்

ஈர பிசுபிசுப்பில்

வார்த்தைகளின் வழித்தடங்களில் மௌனம் காத்திருக்கும் பிழைகளற்ற எழுத்துகளில் ப்ரியம் பிரகாசிக்கிறது பின்னிரவில் முன்னம் சொன்ன இதழ் மொழியின் ஈர பிசுபிசுப்பில் ~~~

- வித்யாசன்

அன்பது ஊறிடுமோ

சொல்லது வலுவற்றுச் சிதறலாகுமோ
நேர்மை இல்லாது நேயம் தோய்ந்து குன்றலாகுமோ
வில் எடுத்தவரெல்லாம் வீரன் ராமனாகுமோ
வீழ்வதனால் நதி நீரது உடைந்து உருக்குலையுமோ
ஏடெடுத்து பயில்வதனால் நினைவில் ஞானம் ஏறுமோ

வண்டு துளையிட்ட யாவும் புல்லாங்குழல் ஆகுமோ
நல் விசமுள்ள நாகமது தீண்டினால் நன்மை விளையுமோ
நாம் நம்புவோர் என்றும் நமக்குரியர் என்றாகிடுமோ
சில்லறை இல்லாதோரை கல்லறைதான் சேர்த்திடுமோ
சீரது நாளும் பாரினில் நிகழ்ந்தால் சிறுமை நெருங்கிடுமோ
மாதர் யாவரும் தம் உயிரென ஓம்பினால் ஒழுக்கம் ஒழுகுமோ
மெய்யது திரியா நாவினில் பொய்யது நிஜமென நின்றிடலாகுமோ
கையது கற்றது போதுமாயின் அது பெருங்கடலை கடந்திடலாகுமோ
ஐய்யமது அழிந்தே போயின் அந்நெஞ்சினில் அன்பது ஊறிடுமோ
இறப்பிங்கு இல்லாது இருப்பின் அடுத்த பிறப்பிங்கு ஆனந்தமாகுமோ ~~~


- வித்யாசன்