ஞாயிறு, 26 ஜூலை, 2015

நரசிம்மனாய் வா

அழைக்கின்றேன் கண்ணா அபயம் அளிக்கவா
தவிக்கின்றேன் கண்ணா அநீதி தடுக்கவா
சங்கடங்கள் தீர்க்க சங்கெடுத்து ஊதவா
மண்ணோடு மண்ணாகட்டும் அதர்மம் அழிக்கவா

பெரும் படையது சிற்றெறும்பென நசுக்கவா
கொடுமையது வீழ்ந்திட குருதி குடிக்கவா
அடிமையது அகல ஆயுதங்கள் ஏந்திவா
ஆணவச் சிரம் கொய்ய சக்கரம் வீசவா

என் சகாயனே இது யாவும் சட்டென நிகழ நரசிம்மனாய் வா~~~


- வித்யாசன்

கள்ளத்தனம் ஏனடா கண்ணா

கள்ளத்தனம் ஏனடா கண்ணா
என் கண்ணிரண்டில் வழிகிறது காதல் தேனடா
உள்ளமது ஏங்குதடா கண்ணா
எங்கே நீ ஓடி மறைந்தாய் நெஞ்சம் தேம்புதடா ;

அள்ளி நிதம் என்னைக் குடித்தாய்
மடியில் தள்ளிப் புதுப் பாடம் சொல்லிக் கொடுத்தாய்
கன்னம் கிள்ளி கட்டியணைத்தாய் நாளும் அதை எண்ணி வளர் பித்தம் கொள்ளச் செய்தாய் ;

அல்லி முகமாய் எனைக் கோர்த்தாய்
துள்ளி விழும் கயலாக இடையில் விண்மீன் பறித்தாய்
முள்ளில் பூத்த மலராய் சிரித்தாய் முந்தானை நிலவில் நித்தம் முங்கிக் குளித்தாய் ;

கள்ளுண்ட போதை பார்வையில் வைத்தாய்
சிறு துளையிட்ட புல்லாங்குழல் இசையாய் அசைந்தாய்
இல்லாத குறைகள் யாவும் என்மீதுரைத்தாய்
கோபம் கொண்டு முகம் திருப்ப முத்தங்கள் பல கொடுத்தாய் ;

பொல்லாத மாயங்கள் புரிந்தாய்
நீயில்லாது பொழுது போகாது செய்தாய்
துன்பம் கொல்லாது பேரின்பம் தந்தாய்
நல் துணையாகி நீலமேனி நீங்காதிட அருள்வாய் ~~~

- வித்யாசன்

** யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே **

தேவையறிந்து பொதி சுமக்கும் கழுதையின் கண்ணீரை எஜமான் கண்டுகொண்டும் கவனிப்பதில்லை. அவனுக்கு தேவை பொதி தாங்கும் வலிமையும், வழியும் மட்டுமே.
உழைப்பில் வழியும் உப்பு நீரை பருகி பார்க்காத குரல்வளை நரம்புகள் செருப்பு தைக்க கூட ஆகாது. உழைப்பின் தன்மை அறியாதவன் தன்னை அறியாததற்கு சமமானவன். நேற்று நிகழ்ந்தது எனக்கு இன்று உனக்கு நாளை அவனுக்கு.
இது வழக்கமான பாதை வகுப்பு தானே பின் ஏன் தட்டிக் கேட்க வேண்டும். மௌனமாகவே செத்துமடி என்கிறது அடிமைத்தனம்.
ஒரே பார்வையற்ற விழியில் நீ எந்த உலகை ஆளப்போகிறாய். உண்மையற்ற உன் கையெழுத்து எந்த கதவையும் தட்டும் திறன் அற்றது.
புதுப் புது வாழ்வியல் ஓட்டம் அளக்கும் உன் கைகளை கேட்டுப்பார் அது குடும்பத்திற்கான மூலதனமா என்று. வெறும் வார்த்தையில் உன் மீது குதிரை சவாரி செய்யும் உன் அபிமான ஜால்ரா ப்ரியர்களின் பக்கம் சுடு சொல் பாய்வதில்லை ஏன் ? சாமனியன் நாக்கு சம்பள நோட்டில் தொங்கவிடப்பட்டிருப்பதாலா ?
குப்பைகளுக்கு நீ கட்டும் கோபுரத்தில் கலசம் சிவப்பு நிறமாகத்தான் சொட்டும். எதையும் சொல்லும் இடத்தில் இருப்பதால் நீ சொல்வதெல்லாம் உண்மையாகிடாது.
உழைப்பின் தன்மை அறி. பின்னதுவே உன்னை உயர்த்தும். அதுயில்லாது தலையாட்டும் பொம்மைகளோடு தினமொரு வேசமிட்டால் கட்டியிருக்கும் கடைசி கோவணம் அவிழும் ...
அது பற்றி உனக்கு கவலையில்லை என்பதை நானறிவேன். ஆயினும் கேள்விக்கணையினை நான் எறிவேன் .

- வித்யாசன்

பௌர்ணமி விழி சுட்டதென்ன

பௌர்ணமி விழி சுட்டதென்ன
பாயும் மின்னலென பார்வை பட்டதென்ன
தேயும் மேகமென தேகம் மெலிந்ததென்ன
ஓடும் தென்றலென மனம் வட்டமிட்டதென்ன

ஆடும் இலைகளென தலை அசைந்ததென்ன
பாடும் கருங்குயிலென ஓசை பிறந்ததென்ன
தாளம் போடும் மழையென இன்பம் பொழிந்ததென்ன
தேடும் நதியென ஆசை நீண்டு வளர்ந்ததென்ன

ஓங்கி வளரும் காடினைப்போல் காதல் ஆவதென்ன
துளை மூங்கிலில் முங்கிடும் காற்றைப்போல் ராகம் கசிந்ததென்ன
மேவிடும் மலைக்குன்றென நேசம் கூடுவதென்ன
சுடர் ஒளிவிடும் சூரியனாய் எங்கும் எனைச் சூழ்வதென்ன

காரிருளில் முளைக்கும் விண்மீனாய் கண்ணில் கனவு பூப்பதென்ன
மாரினில் தஞ்சம் புகும் முகமாய் மஞ்சத்தில் மயங்குவதுமென்ன
யார் யாரோ வந்தாலும் உனக்கிணையாகிடா ததென்ன
நாம் ஓருயிர் என்றாகினும் தனித்தனி ஈருடலாவதென்ன

சகியே ~~~

- வித்யாசன்

மனமது பிடிபடவில்லையடா

மனமது பிடிபடவில்லையடா
காற்றென நினைவது ஒரு நிலையி ல்லையடா
உயிரது உடலி ல்லையடா
தவியாய் தன்னிலையில் என் நிழலி ல்லையடா

சிறைதனில் பிறந்தாயடா
ஆகையால் இதயச் சிறைபிடித்தல் உனக்கெளிதானதடா
ஆயர்பாடி மாளிகையில் வளர்ந்தாயடா
ஆதலால் மங்கையர் மயங்க மாயம் யாவும் புரிவாயடா

சொன்ன சொல் கேளாத வம்பனடா
யசோதா ஆத்திரம் கொள்ள ஊரில் யாவரும் குற்றம் சொல்வாரடா
மண்ணை அள்ளித் தின்னும் மழலையடா
மாயையவள் மார்முலை பால்குடித்துக் கொன்றாயடா

மழை கொட்ட செய்வதறியாது மன்றாடிட
மலையதனை சுட்டு விரலால் குடை செய்தாயடா
பிழை செய்தால் மன்னித்து பொறுத்தருள்வாயடா
சிறு பிள்ளை போல் சிரித்தே எனைக் கொல்வாயடா

வெண்ணெய் திருடுவதில் கள்வனடா
அதுபோல் கன்னியர் நீராட மேலாடை கவர்வதில் வல்லவனடா
கோபியர்கள் தேடும் பெரும் காதலனடா
பூவையர் பூக்க புல்லாங்குழ லிசைக்கும் புருசோத்தமனடா

அன்னியர் எவராயினும் அன்புரைப்பாயடா
பண்புடையோர் வார்த்தையின் பொருள் கூற்றானவனடா
ஐவரின் நேர்மைக்கு நல் கீதையுரைத்தாயடா
பாரதப் போர் முற்றுக்கும் காரணம் நீயடா

நியாயம் வழங்குவதில் பரசுராமனடா
பெண்மை போற்றுவதில் ஶ்ரீ ராமனடா
நல் வாழ்வது அளிப்பதில் நாராயணனடா
நாளும் நம்பியே கை தொழுதேன் என் மயிற்பீலிக் கண்ணனையடா ~~~


- வித்யாசன்

கஜ கஜ லெட்சுமி தாயே

கஜ கஜ லெட்சுமி தாயே
புஜ புஜ பலம் யாவும் தாயே
ஜலமெனும் பெயரில் ஓடிடுவாய் நீரே
சகலமும் தந்தருள்வாய் நீரே
மள மள வென மனமிறங்கி அருள்வாயே
கல கலவென புன்னகை சிந்திடுவாயே
சல சலவென வீசிடும் தென்றல் நீயே
தக தகவென ஒளிரும் சுடர் நீயே ~~~


- வித்யாசன்

** நன்றிகள் தகுமா ? **


பெரும் வெளிச்சம் அளிக்கும் நேசத்தின் மீது எங்கும் படந்திருக்கும் காட்சியின் பிம்பங்கள் யாவிலும் நிறைந்திருக்கும் நன்றியின் பார்வைகள் வாய் சொல்ல இயலாது வால் அசைத்து காட்டிடும் ப்ரியங்களை உணர்ந்து மடியினில் கொஞ்சிடும் வாஞ்சையின் உள்ளங்கை உறவுத் தடவலில் ஒவ்வொரு முறையும் பேதமற்ற பேரன்பை பெருகின்றேன்.
வலி மிகுந்த வாழ்க்கையின் செல்லும் வழியாவிலும் நிழல் தந்து பின் விரல் பிடித்து வழி சொல்லும் மலர் வனமாய் வீற்றிருக்கும் உள்ளங்களின் சிநேகிதப் பந்தங்களின் சுழற்சியில் என் வாழ்வெங்கும் மகிழ்ச்சியானது கரை கொஞ்சும் அலையாகிறது.
கள்ளமற்ற வாழ்த்துக்களுக்கு முன்னால் கல் எறிந்த காயங்கள் யாவும் தடங்களாகாது கனியாக இனித்திடுதல் உறவின் வேர் முடிச்சே. எப்படி வார்த்தைகளை பிசைந்து ஊட்டினாலும் தங்களின் மழலை மாறாது உதடுகளில் ஒட்டிய இந்தச் சின்னஞ் சிறிய பருக்கையானது சிலாகித்துக் கொள்ளும் சிகரம் தொட்டதென.
மன்னிக்க கற்றுக் கொடுக்கும் பேரன்பின் சுடர் ஒளியில் நானும் சுகமாக எரிகின்றேன். நினைத்திட முடியா நீளமது, அளந்திட முடியா ஆழமது, கடந்திட முடியா பாதையது, பருகிட முடியா நீர்மமது, உணர்வால் மட்டுமே புலன்களில் புகுத்த முடியும் எனும்போது எனது நன்றிகளை மீண்டும் மீண்டும் வாயடைத்து வாலாட்டிச் சொல்கின்றேன் வாழ்வெல்லாம் மறவேன் என்று
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நட்சத்திர நன்றிகள்....

- வித்யாசன்

இரவுக் கோப்பையில்

இரவுக் கோப்பையில் வெள்ளை திராட்சை மிதந்திருக்க விழி இதழில் பருகியபடி நினைவுகளில் கலக்கின்றேன் போதையின் பாதையெங்கும் நின் நட்சத்திர பாதச் சுவடு
இருளின் உருளையில் ஒழுகும் மௌனத் தடவல்களின் உணர்வு கோட்டில் வெளிச்சம் தேடும் குரல்வளை எண்ண நிறமாக இருக்கக்கூடும்
தனிமையின் பின் சுவற்றில் எழுதப்பட்ட வார்த்தை ஓவியம் வடிவமற்று வருகைக்காக காத்திருக்கிறது நின் வாசிப்பில் அது பூர்த்தியாகலாம்
மறக்கடிக்கும் புதிய காட்சிகள் யாவிலும் மறையாது ஒளி சிந்தும் நின் பெரும் சுடரில்தான் நான் ப்ரியத்துடன் பிரயாணம் செய்கின்றேன்
சாத்தியமற்ற கற்பனை வாழ்க்கையின் வாசற்படியில் அமர்ந்தபடி கதவாகிறேன் உனக்கான தாழ்ப்பாள் துவாரமற்ற நெற்றிக்கண்
கருமையின் கருக்கலைப்பு குருதியில் செதுக்கப்பட்ட கருவறையில் கிடத்தப்பட்டிருப்பது எலும்புகளற்ற பெரும் காதல் சடலம் ~~~

- வித்யாசன்

சங்கு சக்கர நாயகன்

பொன்னை
மண்ணை
தன்னை
தமையனை
என்னையும்
இழந்து
தர்மத்தை
நிமிர்த்திய
தலைவனே ;


பெண்னென
பாராது
பெரும் சபை தனிலே
தலை மயிர் இழுத்து
அதர்மம்
தாண்டவமாடிட ;


அவைதனில்
கண்ணை
இழந்தோர்
ஆன்றோர் ;


பகடை சூதின்
அடிமையென
பாவை யென பாராது
ஆடை களைய
அலறிட காக்க
சபைதனில்
அறமுமில்லை
ஐவரும்
கையறுநிலை ;


மானம் பறிக்க
மேனி துடிக்க
நியாயம் தவிக்க
மாயவனே
வேடிக்கை ஆகுமோ
காப்பது நின் கடன்
கதி எதுவாகினும்
நின் ஒப்புடன் ;


இரு கண் மூடி
இரு கை கூப்பி
வேண்டினேன்
இக்கணமே
வா என் அண்ணனே ;


அபயமளிக்க
வந்தான்
வானவில்லென
ஆடை தந்தான்
வஞ்சகரின்
நெஞ்சினிலே
அச்சமது விதைத்தான் ;


நீதியது
மொழிந்து
அநீதியது
அழிந்து
கீதையது
பொழிந்து
சங்கெடுத்து
ஊதினான் ;


பெரும்
போரினில்
அதர்மமது
தீர்ந்து
தர்மமது
இதுவென்று
சங்கடங்கள்
நீக்கினான்
சங்கு சக்கர
நாயகன் ;


கண்ணன் ~~~

- வித்யாசன்

நிலவு நீயடி

நட்டநடு நிசி வானம் நானடி
கிட்ட ஒட்டிக்கிடக்கும் நட்சத்திரம் நீயடி
பட்ட பகல் ஒளிக் கதிர் நானடி
பச்சை வர்ணம் யாவும் நீயடி
தொட்டுத் தேய்ந்து போகும் மேகம் நானடி
பக்கம் வரத் தூரம் போகும் நிலவு நீயடி ~~~- வித்யாசன்

பறந்திடலாம்

வாழ்க்கை சதுரங்க கட்டத்தில்
பகடைக் காயாய் சுழல்வதை விட
பட்டாம்பூச்சியாய் பறந்திடலாம் ~~~


- வித்யாசன்

ஐய்யா...

வருத்தம் என்பது சற்றும் எனக்கில்லை
வந்தவரெல்லாம் இங்கு நிரந்தரமில்லை
பொருத்தம் பார்த்து யாரும் பிறப்பதில்லை
நாம் போய்ச் சேரும் நிமிடம் தெரிவதில்லை
தீயும் மண்ணும் உயிரைத் தின்பதில்லை
நீயும் நானும் இறப்பறியா இறைவனின் பிள்ளை
மூப்பென்பதும் முடிவென்பதும் நமக்கில்லை
முத்தமிழுக்கு அழிவென்பது எப்போதுமில்லை
ஆயினும் அழுதேன் ஐய்யா...
பிரிவென்பது மௌனம் என்பதாலோ தெரியவில்லை ~~~


- வித்யாசன்

வெல்வது தர்மமே

உண்மை முதலிலும் பொய்மை இறுதியிலும்
அழிவதே காலத்தின் நியதி ஆயினும்
முடிவில்


வெல்வது தர்மமே ~~~

- வித்யாசன்

பெண்களுக்கு முழுச்சுதந்திரம்

மார்பகமற்ற சதைப் பரப்பும்
மாதவிடாய் அற்ற பூப்பெய்வும்
யோனிற்ற சிறுநீரகப் பாதையும்
கருப்பை அற்ற வயிற்றுப் பகுதியும்
கற்பற்ற கன்னித் தன்மையும்
கண்ணீர் அற்ற கரு விழியும்
கழுத்தினில் கயிறற்ற கல்யாணமும்
காமம் அற்ற பெருங் காதலும்
எப்போது கிடைக்கும்
அப்போதுதான் பெண்களுக்கு முழுச்சுதந்திரம் கிடைக்கும் ~~~


- வித்யாசன்

நிகரில்லையடா

பேரன்பு பெருந்துயரம் எனக்களிப்பதில் உனைப் போல் வேறெவரும் நிகரில்லையடா ~~~

- வித்யாசன்

நீங்கட்டும்

பச்சை ஒளிபரவி பாரெங்கும்
பசிப்பிணி நீங்கட்டும் ~~~


- வித்யாசன்

** வந்தே மாதரம் **

எங்களது பாரதம்
எங்களது தேசம்
எங்கும் பொங்கும் நேசம் ;


இங்குயில்லை பேதம்
என்றும் நாங்கள் ஓரினம்
யாவரும் இந்தியர் ஆவோம் ;


எங்கள் உயிரது மானம்
எங்கள் மண்ணது வீரம்
எந்நாளும் மாறாது நெஞ்சீரம் ;


எங்கள் வளமது ஏர்நிலம்
எங்கள் பலமது தமிழினம்
எங்கள் பண்பாடு கலைக்கூடம் ;


எங்கள் தெய்வமது பெண்ணினம்
எங்கள் திண்ணமது சிங்கம்
எங்கும் சுடர் விட்டு பறக்கும் சுதந்திரம் ;


எங்கள் கீதம்
எங்கள் வேதம்
என்றும் சொல் ;


வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம் ;


- வித்யாசன்

ஆகிடலாகாதா

நின் இதழ் முத்தமிடும் புல்லாங்குழலாய்
என் உடல் ஆகிடலாகாதா ~~~- வித்யாசன்

வா கண்ணனே

கண்ணிரெண்டும் நின்னைத் தேடுதே
காரிருள் யாவும் நின் மேனியாகுதே
பொன்னகை யாவும் ஒருசேரப் புலம்புதே
நின் புன்னகையின் பூவிதழ் அரும்புதே
எண்ண அலைகள் மெல்ல மயங்குதே
பண் புல்லாங்குழல் இசையதனில் பொழுது உருகுதே
மண்ணில் உள்ளவை யாவும் மாயும் மாயையே
எனில் நின்மீதுள்ள பேரன்பு ஒன்றே வாழ்வே
பெரென வேறெதுவும் எனக்கிங்கு வேண்டுவதில்லையே
வேரென வேண்டுவது யாதெனில் நின் காதலே
அது பெற வெகு நேரமது ஆகினும் சம்மதமே
எதுவாயினும் நேசம் மாறாது மனம் நோகாது காத்திருப்பேனே
சீக்கிரம் எம் கரம் பற்ற இக்கணமே வா கண்ணனே ~~~


- வித்யாசன்

நானிருப்பேன்

நீ நடக்கும் பாதையாவும்
பதியும் தடமாக நானிருப்பேன் ~~~


- வித்யாசன்

இன்னொரு நாள்

இன்று தூக்கி எறியும் இவ்வுலகம்
இன்னொரு நாள் தூக்கிச் சுமக்கும்
இன்று தூக்கிச் சுமக்கும் இவ்வுள்ளம்
இன்னொரு நாள் தூக்கி எறியும் ~~~- வித்யாசன்

நெஞ்சுயர்த்தி

அஞ்சி
கெஞ்சி
அடிபணிந்து
ஆயுள் வரை வாழ்வதை விட
நெஞ்சுயர்த்தி
வீழ்வது மேல் ~~~


- வித்யாசன்

உரைத்திடுவாய் கிருஷ்ணா

காலமது கொண்ட கோலமது பொய்யாகி
வீணென ஆன போதும் கவலையில்லை
மானமது போகையில் மறைந்தே நீயிருக்கலாகாது
தாமதிக்காது ஞாயமது நிலைத்திட
நல் ஞானமது உரைத்திடுவாய் கிருஷ்ணா ~~~


- வித்யாசன்

எண்ணிக்கொண்டல்ல

எண்ணிக்கொண்டல்ல
யாவையும் விடுத்து அம்மரத்தடியில் அமர்ந்தேன்
ஒவ்வொரு இலையாக உதிரத் துவங்கியது
கிளை விடுத்து வேர் தாங்கிய மரமாய்
ஆடைகள் அற்றும் ஆசைகள் அற்றுமாய் ;


எவ்வித அளவுகோலுமில்லை எதிலும் ஒரே நிலை
மன ஒப்பந்தங்களின் வரைமுறையில் கையெழுத்தற்ற முற்றுப்புள்ளி
பெரு வானில் பறத்தலை விடுத்து நீள் சிறகினைச் சுருக்கி நிதானித்தல்
மர்மத்தின் தோலிரிக்கும் மதி நுட்பம் தேடி இருளும் வெளிச்சம் ;


தொலைவு, தொலைதல் வேறுபாடற்ற முகம் கழுவல்
நேசத்தின் கடைசிச் சொட்டின் ஈரம் பாதரசமாகியிருத்தல்
ஒட்டா ஈர்ப்பு காந்தமாகிப்போன விழி முன் சடலமாய் காட்சிகள்
சிலந்தி வாழ்க்கையில் சிக்கிடினும் உயிர்விடச் சம்மதப் புன்னகை ;


விழுங்கிய வார்த்தைகள் கல்லறையாகாது கரைகிறது சாம்பலாய்
நினைவின் நீள் ஞாபக் கயிற்றில் துயரமற்ற நொண்டியாட்டம்
உருவம் களைத்து உயிர் பிரிக்கும் அரூபப் பார்வையின் ஊடுருவல்
சலவையற்று படரும் தேவைகளை அறுத்தெறியும் சிறு கத்தி நாக்கு ;


சர்ச்சை, பிரச்சனை, சமாதானம் அதன் முன் சம்பந்தமில்லா உடன்படிக்கை கிழிப்பு
தீவுகளின் சுற்றுப்பரப்பில் ஒவ்வாமை தனித்திருக்க வாய்ப்பில்லை துரத்தப்படுகிறது
தீண்டத்தகாத புனிதக் கோப்பையை தட்டிவிட்ட அந்த நிமிடத்தில்தான்
சாத்தான் பிடி தளருகிறது ஆத்மா அதனருவம் அணிகிறது ;


விருப்பங்கள் நிரம்பிய மதுக் கிண்ணத்தில்
விடுதலைக்கான சுவை கசப்பிலிருந்து துவங்குகிறது
செலவாகும் நிமிடங்களின் கைகளில் நாமனைவரும்
மேலே, கீழே சிதறிச் சிரித்தழுகும் சில்லரையின் இருபுறமும்
பூர்த்தியெடையா நாணயம் அற்றவர்கள் தான் ~~~


- வித்யாசன்

வருவான் காத்திரு

உண்மையின் கண் மூடட்டும்
ஊமையின் மெய் மூடட்டும்
நன்மையின் ஒளி மூடட்டும்
நம்பிக்கையின் கை மூடட்டும்
நாளும் தொழுபவன் முகம் மூடட்டும்
நெஞ்சே சற்றும் கலங்காதே
பொய்மையை சுட்டெரிக்கும்
மூன்றாம் கண் விழிக்கும்
அது வரை பொறுத்திரு
முக்கண்ணன் வருவான் காத்திரு ~~~


- வித்யாசன்

கண்ணா...

எனைக் கண்டுகொள்ள யாருமில்லையடா கண்ணா
கண்ணிரண்டில் கண்ணீர் பொங்குதடா கண்ணா
எண்ணி எண்ணி மனம் ஏங்குதடா கண்ணா
எங்கு காணினும் நீயே எனை ஆளுகிறாய் கண்ணா ;

முப்பொழுதும் புலம்புகிறேன் மனமிறங்கவில்லையா
புல்லாங்குழல் துளையாய் எனை பாவித்தல் முறையா
அழும் விழிகளுக்கு ஆறுதலில்லையா
ஆயர்பாடி மாதவா நான் உனதடிமையில்லையா ;

கண்ணா.....

நாளும் தொழுதிட நம்பினேன் நீ எனக்கில்லையா
நாயகன் எனக்கென்றே உனைப் பற்றினேன் மெய்யில்லையா
ஊர் கூறும் பழி சொல்லில் உனக்கும் பங்கில்லையா
ஊமை என் உதட்டினில் உறுதியளித்தாய் நியாபகமில்லையா ;

கண்ணா....

வாழ்வெல்லாம் சேவகம் செய்திட வழியில்லையா
வாவென அழைத்திட வாமனனுக்கு வாய் வரவில்லையா
தேவையில்லையென தள்ளிவிட யான் ஏனைய பொருளோ
நின் மார்பினில் சேர்ந்திருக்கும் உயிர் மாலையில்லையோ ;

கண்ணா....

கொஞ்சிடும் நேரம் குறைத்து நெடுவென கெஞ்சவிடுதல் ஞாயமோ
அஞ்சியே நாளும் நானிருக்க அபயக் குரலெழுப்பலாகுமோ
பூசிய மஞ்சள் முகமது கனலாகி சிவந்திடத் தாங்குமோ
வீசு தென்றலாய் மஞ்சத்தில் பேசிய வார்த்தையது மாயமோ ;

கண்ணா....

என்ன குற்றமது யான் செய்தாலும் அதுபொறுத்து
முன்னம் வினைகள் முடிந்திட மோட்சமளித்து
விண்ணும் மண்ணும் விளங்கிட எம் கை கோர்த்து
விடியும் அடையும் பொழுதெல்லாம் என் வினாவிற்கு விடை தருவாய் ;

மயிற்பீலி மாழகனே
மங்கையின் மெய் காதலனே ;

கண்ணா...

- வித்யாசன்

கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ

இருளது அடர் மரமோ
மேகமது கிளையோ
மின்னுவது பூவோ
கருவிழியது மொய்க்கும் ஈயோ
வெண்ணிலவே நீ

வெள்ளைத் தேன் கூடோ
களைத்திட மனமுண்டோ
குடித்திட மலை இதழுண்டோ
கண்டு கொண்டேன் உனை
கல்லெறிந்து நீ கிடைப்பதுண்டோ ~~~


- வித்யாசன்

ஏந்திய வில்லது

மென்று செரித்திட முடியவில்லை
நின்று பொறுத்து சகித்திட கல்லில்லை - மனம்
கொன்று குருதி குடித்திட நெஞ்சு துடிக்குது
வஞ்சனை செய்வோரே வாழ்ந்திட
இனி உங்களுக்கு மண்ணில் இடமில்லை
கெஞ்சி அடிபணிந்து கேட்பினும் ஏந்திய வில்லது தலை கொய்யாது விடுவதில்லை ~~~


- வித்யாசன்

மனத் திண்ணம் வேண்டுமடா

மனத் திண்ணம் வேண்டுமடா - அது
சற்றே மாறிடின் மரணம் நேர்ந்திட வேண்டுமடா ;

உள்ளதிலுள்ளதை உரைத்திட
உறுதி வேண்டுமடா ;
உதட்டினில் உதிரும் வார்த்தையது
தெள்ளத் தெளிவுடன் உண்மையது வேண்டுமடா ;


கள்ளமது கனவிலும்
கலந்திராதிருத்தல் வேண்டுமடா ;
காண்பது யாவிலும்
காதலது பெருகிட வேண்டுமடா ;

துன்பத்திலும் துவளாது நெஞ்சம்
துணிவது மலையென வேண்டுமடா ;


அஞ்சுதல் அவனின்றி வேறில்லை
மிஞ்சுவோரை வீழ்த்திட வீரமிகு தோள் வேண்டுமடா ;

கொல்லத்தகுந்த வார்த்தையினை
சொல்லாதிருத்தல் வேண்டுமடா ;
மெல்லத் திறக்கும் பூவிதழாய்
மெய் ஞானமது அகத்தினில் வேண்டுமடா ;


காலத்தால் கற்பது யாவும்
நின் கருணையால் தாங்கி நிற்க வேண்டுமடா ;
மாயத்தால் மனம் காயமடைந்திடாது
நின் மயக்கத்தில் எப்பொழுதும் மதி ஆடிட வேண்டுமடா ;

கடும் நோயுற்று நொந்திங்கு வெந்திடாது
நிதம் வாய் விட்டு நின் நாமம் பாடிட வேண்டுமடா ;


சுடர் ஒளி யதனை நெற்றித் திலகமெனயிட்டு
இப்புவி தனை யான் சுற்றி வர வேண்டுமடா ;

யாதொரு நாள் சாவே என் விழிமுன் நின்றாடினாலும்
கெஞ்சுதலாகது நின் சரணம் பற்றிட திறம் வேண்டுமடா ;
யாவரும் போல் அல்லாது வையத்தில் அழியா எழுத்தாய்
என்றும் வாழ்வாங்கு வாழ நீ அருளிட வேண்டுமடா ;


உடல் கரைந்தே
உயிர் தோய்ந்தே
காற்றாகிப் போகையில்
வேறெங்கும் கலந்திடாது
வேராக உனைப் பற்றி நேராக
நின் குழல் வழி பிறந்திட வேண்டுமடா ;

கண்ணா..

- வித்யாசன்

மிதக்கவிடு

ஊர் கொண்டாட எனக்கொரு பொழுது வேண்டாம்
நீ ஊதும் குழலின் இதழ் தீண்டும் காற்றாய் மிதக்கவிடு
அதுபோதும் எனக்கு ~~~


- வித்யாசன்

மாதவா

என்ன நான் கேட்பேன் உன்னிடம்
மண்ணையும் விண்ணையும் அளந்த உன்னில் ஓரிடம் ;

கள்வனெனச் சொல்வதேன்
நீ வெண்ணெய் திருடன்
எங்கே ஒருமுறை காதல் செய்து என்னத் திருடேன் ;

பெண்கள் யாவரும் மயங்க புல்லாங்குழல் ஊதும் மாதவா
அதில் கண்கள் கிறங்கி
நாளும் திங்களாக நான் தேய வா ;

பண்ணிசைத்துப் பாடி நின்னை அழைக்க வா
பரந்தாமா நின் மாரினில் என் முகம்தனைப் புதைக்க வா ;

தள்ளி நின்று எள்ளி நகையாடாது
நின் கையிரண்டில் அள்ளிக் கொள்ள வா
பள்ளி கொண்ட நிலையினிலே நின் பாதமதனை புள்ளி மானென வருட வா ;

பார்க்கடலை தேகமென உடுத்த நீல வண்ண புன்னகை அன்பா
பாவை பார்வையினை மூடி விட்டேன்
பாவம் இவளென இமை திறக்க முன்னே வா ;

எம் கண்ணா ~~~

- வித்யாசன்

எழுவோம்

அலையென தடைக்கல் தொடர்வினும் அதை மிதித்து
அனலென எழுவோம் ஆதவனாய் ~~~


- வித்யாசன்

குறைவதில்லை

ஊர் ஊதும் வார்த்தை வதைகளில் ஒருபோதும் நெஞ்சம் கனலாகுவதில்லை
உன்னிதழ் ஊதும் காற்றலைகளில் பெருகும் காதலது குறைவதில்லை ~~~


- வித்யாசன்