ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 1

அனைவருக்கும் வணக்கம்,

வாசித்து வாசித்து உதடுகளின் தோல் உதிர்த்து, ரசித்து கொண்டிருக்கும் ரசனை உள்ளங்களுக்காக ஓர் கவிதை கதை...
இந்த உலகம் எப்பொழுதுமே ஏதாவது ஒன்றன் பின்னால் சென்று கொண்டே இருக்கும்.
சுழலும் புவியின் திசைக்கு எதிரேயும் தென்றல் வீசிக் கொண்டிக்கும்.
மனிதனின் மனம் என்பது ஆயிரம் சமுத்திரங்களை விட பெரியது. அதனால்தான் பயணங்கள் முடிவடையாமல் நீண்டு
கொண்டே இனிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பிறப்பதும், இறப்பதும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதம்.
எத்தனை விதமான பிறப்புகள் இருந்தாலும் மனித பிறப்புக்கே அத்தனையும் கட்டி ஆளும் மதம் உண்டு. மதம் என்று ஏன் சொன்னேன் என்றால் அது அறியும் மனம் கொண்டதால் மதம் என்றேன். (அறிந்தாலே மதம்தானே பிடிக்கும்)
அறிவு, கோபம், ஏமாற்றம், தடுமாற்றம், கர்வம், ஆணவம், துயரம், இன்பம், இரக்கம்... இப்படி வாழக்கையின் மதுக்
கோப்பையில் எத்தனை விதமான போதை ரசங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், ரசனை எனும் மதுவை ருசிக்கத் தெரிந்த நாவிற்க்கு மட்டுமே வாழ்க்கை கோப்பையின் அடி முதல் நுனி வரை போதை ஏறும்.

அப்படி ரசனையின் பிம்பங்கள் எங்கே முழுமையாக உயிர்ப்பு அடைகிறது என்று சிந்தித்தால் அது எப்படி ?
தேனையும், வாசத்தையும் பூட்டிக் கொண்டு பூக்கும் போது சிறகடிக்கும் பூக்களா ?
மழை வரும் முன் வர்ணம் தீட்டும் வானவில்லா ?
கடல் கரைந்து மீண்டும் தனித்து விழுந்து தடம் தேடும் மழையா?
எது நடந்தாலும் நில்லாது கதை சொல்லி செல்லும் காலமா?
இரவுக்கு வழி காட்டும் நிலாவா?
எது எது எது.... என்று கேள்விகள் நிற்கவில்லை....
எல்லாவற்றையும் உடைத்தெறிந்து உடுத்திக் கொண்டது பெண் எனும் இரு வார்த்தையில்.
இந்தபெண் எனும் உயிர் ரசனைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி இழுத்து செய்யப்பட்டதா?
அழங்காரங்களை ஒன்றன் மீதாக ஒன்றாக அடிக்கிவைக்கப்பட்டு செதுக்கப்பட்டதா?
ரகசியங்களை எல்லாம் குலைத்து தீட்டப்பட்டதா?
இயற்கையை யாவும் இணைத்து பிறப்பிக்கப்பட்டதா?
நினைவுகளை ராட்­­சச அலைகளால் மோதவிட உலாவவிட்டதா?

அது எதுவாக இருப்பினும் ஆண் எனும் பெரும் பாறைகள், சிறு பட்டாம் பூச்சியாய் மாறி பறக்க வைப்பது பெண்ணால்...
மட்டுமே நிகழ்த்தக் கூடிய விசயமாகும்.
அப்படி ஒரு பாறையின் இதய இடுக்கில் பூத்த ஒரு பூவின் கதையை கவிதையாக கட்டி போட முயற்சித்துள்ளேன்.
இது என் முதல் முயற்சி...
இல்லை .. இல்லை...
விடும் முதல் மூச்சு.
இந்த கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்துமே கற்பனையே ...
அப்படி என்ன?
கதா பாத்திரங்கள் நிறைய உண்டா?
என்றால் இல்லை...
எல்லலோரையும் போன்று அல்லாது
இல்லாத வற்றையே தேடிக் கொண்டு
இரவு, பகல் ரசனை மடியில் நின்று
நாட்களை தள்ளி கொண்டிருப்பவனே
தீரா ....
இவன் தான் இந்த கதையின் நாயகன்....

பூக்களால் நெய்யப்பட்ட தேகம்
புள்ளிகளால் சேகரிக்கப்பட்ட பூ
கூர்மையை மண்டியிட வைக்கும் விழிகள்
வியர்வையில் சந்தன வாசம் வீசும் நிலா
ரசனையின் தொட்டிலில் உறங்கும் பறவையே
மீரா...
இவள் தான் இந்த கதையின் நாயகி...

ஆரம்பம் 1
எந்த ஆரம்பமும் பிரம்மாண்டத்தின் தோள்களில் உயிர்ப்பிக்கிறது.
அப்படிதான் இதுவும்...
தொடு வானம் எனும் ஊர்...
மேகத்தை துடைத்து கொண்டிருக்கும் மரங்கள்,
தானே பாடிக் கொண்டிருக்கும் நதிகள்,
உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழுத்தி சொல்லும் பொழுதுகள்
இயற்கையின் இடையில் அமைந்த இடம்....
கற்பனையின் காட்டுக்குள் தனக்கென்று
அமைத்த வீட்டுக்குள் வாழ்ந்தான் தீரன்...
தொடுவானம் முழுக்க இவன் பாதங்கள் தொடாத இடமில்லை
நெடுந்தூர மலைகளையும் இவன் விழிகள் விட்டுவைக்கவில்லை
வாழ்நாளில் உண்டு...
தூண் துயரம், வான் ஆனந்தம்
எல்லோர் போலவும் இவனுக்குள்ளும்...
ரசனையின் சந்தனம்
சிந்தனையில் சிற்பி
வர்ணனையில் ஓவியன்
தேடலில் அலை
கேள்வியின் சங்கு
கற்பனையின் கருவறை
கற்றுக் கொண்டே இருப்பான்
நாளும் காற்றிடம் எதையாவது...
தனக்கென தனி உலகம்
இனிக்கின்ற புது பயணம்
இதயத்தை துவைக்கின்ற எண்ணம்
நிமிடம், நிமிடம் தவம் தவம்
கவிதையால் நிறம்பியது இவன் வனம்...

நினைவுகளில் சொட்டும் வண்ணங்களை எல்லாம்
வடித்து வைப்பான் ஏட்டில்...
வருடும் உதயங்களை எல்லாம் பூட்டி
வைப்பான் இருதய கூட்டில்...
தீரன் எதை எதையோ சந்தித்தான்
வீரன் கண்டிராத வெற்றிகளை குவித்தான்
காலம் கரைந்தோடியது....
காத்திருப்பின் நீளம் கத்தியை விட கூர்மையானது
தேடும் வரைதான் பயணம் பிடிக்கும்
அலை தொடும் வரைதான் கரை சிரிக்கும்
வாடினால் தான் புது பூக்கள் பிறக்கும்

அப்படி தேடலின் தொடு விரலாய் - தீரன் - விழியை
தீண்டி - தீ -யை மூட்டி காதல் நோயைஊட்டியவள் தான் மீரா ...

யார் இந்த மீரா ?
கண்ணணுக்காக காத்திருந்தவளா ?
தம்புரா வைத்து சோக கீர்த்தணை பாடுபவளா?
வெள்ளை புடவைக்குள் பூட்டிக் கொண்டிருக்கும் வைரக்கல்லா?
யார் ? யார் ? இந்த மீரா?
தொடுவானம் அருகில் உள்ள உடையூரில் உதித்தவள்
சிகப்பு நிலா
மறையாத வானவில்
பகலில் மின்னும் நட்சத்திரம்
நடமாடும் நதி
இரவை உருட்டி விளையாடும் கருவிழி
இலைகளாய் செய்யப்பட்ட கைகள்
புன்னகை கோயில்
புருவ சொர்க்கம்
பாடும் குயில்
சொட்டும் ரசனை துளி
கற்பனை ஓவியம்
ஆண் வாசமே படாத மெழுகு காவியம்...

தீரனின் விரல் தீண்டலில் மீண்டு எழ முடியாது
காதல் தூண்டிலில் சிக்கி தவித்தவள்....

தொடரும்...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக