ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 4

மாபெரும் வீரணும் மைவிழியில்
மண் புழுவாய் ஆனதுண்டு !
அனைத்தும் அறிந்த அறிவாளியும் இதழிடையில்
முட்டாளாக மாறியதுண்டு!
கத்திக்கும் - புத்திக்கும்
நடக்கும் சண்டையில்
புத்தி முந்தி கொள்ளும்!
விதிக்கும் - மதிக்கும்
நடக்கும் சண்டையில்
மதி முந்திக் கொள்ளும்!
பகலுக்கும் - இரவுக்கும்
நடக்கும் சண்டையில்
பொழுதுகள் முந்தும்!
ஆணுக்கும் - பெண்ணுக்கும்
நடக்கும் சண்டையில்
ஆணே முந்துகிறான் !

இங்கும் தீராவே !
சில நேரங்களில்
உயிர்க்கும் சடலத்திற்கும்
இம்மி இடைவெளி கூட இருப்பதில்லை!
அமைதியான உடலாய் - சடலம்!
மெளனத்தின் உச்சமாய் - உயிர்!
நினைவுகளை இழந்தாய் - சடலம்!
ஒரே நினைவில் இருப்பதாய் - உயிர்!
அசையாத பொருளாய் - சடலம்!
உணர்விருந்தும் ஜடமாய் - உயிர்!
இதிலும் தீராவே !
உயிர் இருந்தும் சடலமாய்!

குத்துவாள் ஒரு பக்கம் கூர்மை!
துளைக்கும் தோட்டா ஒரு பக்கம் கூர்மை!
தைக்கும் நூல் இரு பக்க கூர்மை!
உடைந்த கண்ணாடி மூன்று பக்க கூர்மை
இரும்பு சட்டம் நான்கு பக்க கூர்மை
ஆனால் ...
பெண்ணின் ஒவ்வொரு பாகமும் கூர்மை !
ஊடுருவினால்
உயிர் தப்புவது கடினம் !
காயப் பட்டு!
உயிர் விட்டு!
தேகம் சுட்டு!
மோகம் முற்று!
தாகம் விற்று!
ஏக்கம் தொற்று!
விக்கித்துக் கிடந்தான் தீரா!

காதல் ஒரு கற்பூரம்
எரிய ஆரம்பித்த மாத்திரத்தில்
கரைவது தெரியாது!
காதல் ஒரு கடல்
மூழ்கும் அவசரத்தில்
ஆழம் புரியாது!
காதல் ஒரு நெருப்பு
பற்றும் வேகத்தில்
வேகுவது அறியாது!
காதல் ஒரு பனித்துளி
உருகும் நிமிடத்தில்
உருக்குலைவது உணராது!
காதல் ஒரு சூறாவளி
சுழலும் கணத்தில்
தூக்கி வீசப்படுவது தென்படாது!

காதல் ஒரு கண்ணாடி
கை நழுவும் வினாடியில்
சுக்குநூறாக உடைவது ஊர்ஜிதப்படுத்தாது!
காதல் ஒரு இனிப்பு
குடித்த பின்
கசப்பாய் மாறுவதை பொருட்படுத்தாது!
காதல் ஒரு விசம்
உயிரை உருக்கும்
கொடூரம் கற்பிக்காது!
காதல் ஒரு மகத்துவம்
கல்லறைகளுக்கு பின்னால்
வரலாறாய் வாசிக்கையில் கேட்காது!
எல்லாம்வாக தீரா !
தீண்டும் தென்றலை பூக்கள்
பார்த்திருக்க வாய்ப்பில்லை!
நதியில் தன் முகம் தெரிந்தாலும்
நின்று ரசிப்பதில்லை நிலா!
வேர் துளைத்து நெடுந்தூரம் சென்றாலும்
பாறைகள் கிடுகிடுப்பதில்லை!
மண்ணில் மறைந்தாலும்முற்றிலுமாக
மரித்துப்போவதில்லை மழைத்துளி!
அலை கரை முட்டி உடைந்தாலும்
கவலை அடைவதில்லை கடல் !
தீரா நின்று தின்று கொண்டிருந்ததை
மீரா கண்டுகொள்ளவில்லை!
உண்ணாதவரை மா சக்தியுடைய
மலைப்பாம்பு!
உண்டுவிட்டால் நத்தை அசைவுடைய
மண்புழு!
தனித்தனியாக இருக்கும் வரைதான் ஸ்வரம்
இணைந்து விட்டால் ராகம்!
திரவமாக இருக்கும் வரைதான் நீர்
உறைய துவங்கி விட்டால் பனி!
ஓடும் வரைதான் நதி
ஓரிடம் நின்றுவிட்டால் கடல்!
மூடி வைக்கப்படும் வரைதான் ரகசியம்
அவிழ்ந்து தென்பட்டால் தகவல் கசியும்!
விழியும், இதயமும் மோதாத வரைதான் தேடல்
மீரா (விழி) - தீரா (இதயம்) - வை தீண்டிவிட்டால் காதல் !

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக