வியாழன், 18 பிப்ரவரி, 2016

நம் ஞாபகங்கள்


நீ ஆதமாய்
நான் ஏவாளாய்
திரிந்த இடங்கள் யாவிலும்
நம் ஞாபகங்கள்
தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது...


அப்படி எளிதாய்
விழுங்கிடவும், துப்பிடவும் இயலாது
தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள் அல்ல
தூண்டிலில் தொங்கும் மீனாகும் நம் பேரன்பு....

இன்னும் எத்தனை முறை யோசித்தாலும் சலிப்பதில்லை
அந்த காதோரப் பேச்சில் கனிந்த முத்தங்களில் நனைந்த தனிமைகள்...

எப்படி பார்த்தாலும் இரவின் கடைசி உரையாடல்
முத்தத்தில் முற்று பெறும்
வேடிக்கை என்னவெனில் துவக்கமும் அதிலடங்கும்...

நவீன தொடர்பற்ற பொழுதுகளில்
தோழமைகளின் துணையுண்டு
மறக்கவில்லை எனக்காக நீ கொடுத்தனுப்பிய பரிசு பத்திரமாய் என் வீட்டு அலமாரியில்...

சுழலும் வாழ்கையில் சூழ்நிலை பிரிவினை தந்த வலி
வழி எங்கிலும் வார்த்தைகளை சுமக்கின்றது
என்றாவது இறக்கி வைக்கப்படும் என்ற நம்பிக்கையில்....

இப்போது
நீ எங்கோ
நான் எங்கோ
ஆயினும் என்ன
தொலைக்கப்பட்ட காதலை
தூக்கித்திரியும் நினைவுச் சங்கிலி என்றும் துருபிடிப்பதில்லை...

இது நரை கூடி தள்ளாடும் பருவம்
கூட நிழல் போல நம் கனவுகள் தொடரும்
மரணத்தின் விழும்பில் நிச்சயம் தவறுவதில்லை
உள்ளார்ந்த அன்பு ஒருபோதும் உதிர்வதில்லை~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக