வியாழன், 18 பிப்ரவரி, 2016

** கட்டங்களில் கவிழ்கிறது **

துவக்கத்திற்காக காத்திருக்கும் கவிதையைப் போல்
வருகைக்காக காத்திருக்கின்றேன் உன்னிதழ் சாலையில் ;

தற்கொலை செய்யவியலா நினைவுகளைச் சிறைபடுத்தி
ஆயுள் கைதியாக்கி நிரம்பியச் சிறைச்சாலையில் கம்பிகளில்லை ;

நின் புருவத்தின் மேலடுக்கில் அமர்ந்து கல் எறிகின்றேன்
விழிக்குளத்தில் விழாதிருக்க நீயோ இமைகளால் தட்டி விளையாடுகிறாய் ;

சாத்தப்பட்ட சந்தர்ப்ப சன்னல்களை திறப்பதற்கான வித்தைகள்
ஏதுமற்ற விரல்களின் நுனியில் கசிகிறது தீண்டலின் ஏகாந்தம் ;

மிச்சம் வைக்கப்பட்ட பருக்கையைப்போல் தனித்திருக்கும் கனவினை
கழுவி ஊற்ற படர்ந்திடும் வேரினில் எங்கிருந்து பூப் பறிக்க ;

எஞ்சியிருக்கும் மீத நிமிடங்களின் நீளகல வெளிபரப்பில்
நில்லாது சுழன்று கட்டங்களில் கவிழ்கிறது கருவிழிப் பந்து~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக