
கடைசியாய் உடுத்தி குளிப்பாட்டியது வரை
எல்லாப் புடவையும் பீரோவுக்குள்
பத்திரமாய் உன் வாசம் வீசுகிறது ;
கோபத்தில் நீ அடித்த அடிக்கு பின்னால்
ஓடோடி வரும் முத்தத்திற்காகவே
நான் அடிக்கடி அழுவதுண்டு ;
என் பிள்ளை ஒவ்வொன்றிலும்
என்னைத் தேடி அப்படியே என உச்சியில் முத்தமிடும்
போதெல்லாம் தேவதை உண்மையாகிறது ;
பசி தாங்கி பால் சோறு ஊட்டிய பாத்திரத்தை
பார்த்தே பசியாறிய உன்னிடம் ஓர் நாளும்
கேட்டதில்லை பசிக்கின்றதா என்று ;
விரல் பிடித்து வீழாது நடை கற்றதை விழா எடுத்து கொண்டாடிய நீ
ஒரு அடி எடுத்து வைக்க முடியாது ஆயினும்
நான் வாழ்வில் பல அடி உயர ஓயாது வழிபட்டவள் ;
ஓர் நொடி காணாது, இமை தூங்காது காத்திட்ட பேரன்பை கைவிட்டு வெகு தூரம் மறைந்தாலும் வேறேதும் எண்ணாது
வேராக எனை எண்ணியவள் ;
வேண்டுவதே வாழ்வென்று எண்ணிடலாகாது
என்னில் ஏதும் வேண்டாது என் அன்பொன்றுக்கும்
அலைபேசி அழைப்புக்கும் நிதம் ஏங்கியவள் ;
எல்லாமே எனக்கு இருக்கிறது
அவை யாவும் உன்னால் ஆனது
நீயிருக்கும் வரை அறியவில்லை
நிஜ தெய்வம் பூமியில் வேறேதுமில்லை
யாருக்கும் என்மீது உன்போல் அன்பில்லை
இனி எங்கே தேடிக் கண்டுபிடிப்பேன் என் கோவிலை
அம்மா என்றழைக்கின்றேன்
எனை அழவைக்காது வா வா என் அருகில்~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக