வியாழன், 25 ஜூன், 2015

அடிமாடாய்

அதீத சுமை இழுக்கும் பொதி வண்டியின் முன்னில் வாயில் நுரை ஒழுகும் எண்ணங்களைக் கடந்து செல்லும் நடை பாதையின் இடையில் நில்லாது நகர்ந்தபடி சிறுநீர் கழிக்கும் சுடுவெயில் தகிப்பில் பிரார்த்தனையின் செரிமான அசைவுகளை சுழற்றும் சாட்டை அடியின் வலி அடங்கும்முன் வால் திருகி விரைந்திடச் செய்யும் நீங்காத் திமில் ரணங்களின் இழுவையில் இரு விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் புழுதிக் காற்றின் பிசுபிசுப்பில் அசையும் கழுத்து மணியின் ஓசையின் நன் இசையில் லகித்திருக்க இயலாது எதிர் வரும் பள்ளங்களில் முகம் விழுங்கி கடந்திட அடுத்தடுத்த மேடுகளின் பெருத்த செங்குத்துக் கோடுகள் தாழ்வினை சுட்டிக் காட்டி தலை தொங்க விடுவது இயல்பாகையில் நிழல் மிதக்கும் மரங்களின் இடைவெளியில் துளியும் கிட்டாத ஓய்வின் நிலையதனை தழுவிடும் ஊமையின் சொற்கள் எந்த வடிவினில் மொழி பெயர்ப்பதென்பது புலப்படாத நீள் பயணத்தின் இரு கைகோர்பின் பிடியில் பங்கிட்ட தூரங்களின் சிலுவை வடிவினை தொழுவதற்கு மனமிறங்கிடா ஐந்தறிவுக் கூற்றில் ஆறறிவு கூட்டில் அடைப்பட்டு அளவற்ற வியர்வையறியா இளைப்புற்ற பெரும் மூச்சு சப்தத்தில் முனக்கும் மூக்கணாங்கயிற்றின் எரிச்சலின் துயர் களையாது தூக்கிச் சுமந்த எல்லையின் முடிவில் அவன் கையிலிருந்து அவன் கைகளுக்கு அடிமாடாய் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக