திங்கள், 30 நவம்பர், 2015

மாறா காதல் இதுதானோடி~~~

என்றும் கூடாத போதும்
என்னுடன் கூடவே வருவதேனடி
சிறு ஊடல் நான் கொள்ளாத போதும்
பெரும் இடைவெளி ஏனடி
இது தீராக் காதல் என்ற போதும்
பகலினில் நீ மறைந்து திரிவதேனடி
மாறாத உயிர் நேசம் கொண்ட போதும்
மாதம் ஓர் நாள் மறந்தே போவதேனடி ;


உனைப் பாராது நானிருந்த போதும்
சுடர் பார்வை இவ்விடம் வீசுவதேனேடி
இணை சேராது இமை மூடிய போதும்
விழி மூடாது காத்திருப்பதேனடி
பசி வாட்டி எனை வதைத்திடும் போது
மேனியில் பால் சுரந்து தாகம் தீர்ப்பதேனடி
மோகத்தில் நெருப்பாய் இதயம் வெந்திடும்போது
மேக முந்தானை விலக்கி மார் மழை பொழிவதேனடி ;


ஒரு பறவையாய் சிறகு விரித்திடும்போது
அழகிய கூடாய் காட்சி அளிப்பதேனடி
ஓயாது பொழியும் கடும் பனியில் உடல் நடுங்கும்போது
உயர விரிக்கும் நிழற் குடையாய் ஆவதேனடி
வீணாய் இரவுப் பொழுதது நகர்ந்திடும்போது
மடியினில் வீணையாய் வீழ்வதேனடி ;


மன நோயால் சூள் கொண்டு உள்ளம் வாடிடும்போது
நீ தாயாய் நான் சேயாய் மாறிடுவதேனடி
யாவும் பொய்யாய் புவியில் உலாவிடும்போது
விண்ணில் மெய்யாய் என்னில் விளையாடுவதேனடி
நீ காயா, பழமா அறந்திட முடியாத போது
கையில் சிக்கிடா காற்றுனை உறிஞ்சி குடித்திடுதல் ஞாயமாடி
ஏடால் இன்ப பாடலால் உனை நிரப்பிட இயலாதபோது
நீ என்னிடம் மட்டும் இயல்பாய் வசப்படுதல் ஏனடி ;


வெண்ணிலவே....
மாறா காதல் இதுதானோடி~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக