திங்கள், 30 நவம்பர், 2015

இறைவன் சொன்னது

இன்பமென்று நாடுவதெல்லாம் ஓர் நாள்
துன்பமாகும் என்றால் - இறைவா
அதை துணிந்து செய்ய மனம் ஏன் கொடுத்தாய் ;


இப்பூத உடல் மண்ணிலும், நெருப்பிலும் ஓர்நாள்
அழிந்திடும் என்றால் - இறைவா
அதற்குள் ஏன் அனையா ஆசை தீயை வளர்த்தாய் ;


பொய்மை முன்னும், உண்மை பின்னும்
வெல்லும் என்பதே நியதி எனில் - இறைவா
நன்மை செய்ய ஏன் பல தடைகளை விதித்தாய் ;


ஆணும், பெண்ணும் சமமென ஆகாது
அதில் ஆயிரம் பிரிவுகள் உண்டெனில் - இறைவா
பிறப்பிடம் மட்டும் ஏன் ஓரிடம் வைத்தாய் ;


நாளும், பொழுதும் நம்மிடமில்லை
அது நிகழ்வது யாவும் நின் நிலை எனில் - இறைவா
நான் எனும் ஆணவத்தை ஏன் சமைத்தாய் ;


கூடுவதும், பிரிவதும் நின்றிடாது
வாழ்வெல்லாம் தொடர்வது சத்தியமாயின் - இறைவா
உறவென்னும் பின்னலை ஏன் வடித்தாய் ;


இளமையும், முதுமையும் இயல்பே
இது யாவர்கும் நிகழ்வது உறுதியாயின் - இறைவா
அதை உணராது பருவத்தை ஏன் வகுத்தாய் ;


இனமும், குணமும் ஒன்றல்ல
அதில் கொலையுண்டு, கோவிலுண்டு எனில் - இறைவா
மனம் தனில் ஏன் இத்தனை மாற்றம் கொடுத்தாய் ;


யாவும் அறிய, புரிய நிலையதனை
தந்துவிட்டு எதிலிருந்தும் விடுபடாது தத்தளிக்க - இறைவா
மனிதனை மட்டும் ஏன் படைத்தாய் ;


இதனை ...
விதி என்று சொல்லலாகாது
கர்ம வினை என்று கருதலாகாது
ஆன்மா அழியும் வரை
அனுபவத்தால் அளப்பதனால்
மனித வாழ்வென்பது அவரவரால் ஆனது
இது இறைவன் சொன்னது ~~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக