ஞாயிறு, 26 ஜூலை, 2015

** நன்றிகள் தகுமா ? **


பெரும் வெளிச்சம் அளிக்கும் நேசத்தின் மீது எங்கும் படந்திருக்கும் காட்சியின் பிம்பங்கள் யாவிலும் நிறைந்திருக்கும் நன்றியின் பார்வைகள் வாய் சொல்ல இயலாது வால் அசைத்து காட்டிடும் ப்ரியங்களை உணர்ந்து மடியினில் கொஞ்சிடும் வாஞ்சையின் உள்ளங்கை உறவுத் தடவலில் ஒவ்வொரு முறையும் பேதமற்ற பேரன்பை பெருகின்றேன்.
வலி மிகுந்த வாழ்க்கையின் செல்லும் வழியாவிலும் நிழல் தந்து பின் விரல் பிடித்து வழி சொல்லும் மலர் வனமாய் வீற்றிருக்கும் உள்ளங்களின் சிநேகிதப் பந்தங்களின் சுழற்சியில் என் வாழ்வெங்கும் மகிழ்ச்சியானது கரை கொஞ்சும் அலையாகிறது.
கள்ளமற்ற வாழ்த்துக்களுக்கு முன்னால் கல் எறிந்த காயங்கள் யாவும் தடங்களாகாது கனியாக இனித்திடுதல் உறவின் வேர் முடிச்சே. எப்படி வார்த்தைகளை பிசைந்து ஊட்டினாலும் தங்களின் மழலை மாறாது உதடுகளில் ஒட்டிய இந்தச் சின்னஞ் சிறிய பருக்கையானது சிலாகித்துக் கொள்ளும் சிகரம் தொட்டதென.
மன்னிக்க கற்றுக் கொடுக்கும் பேரன்பின் சுடர் ஒளியில் நானும் சுகமாக எரிகின்றேன். நினைத்திட முடியா நீளமது, அளந்திட முடியா ஆழமது, கடந்திட முடியா பாதையது, பருகிட முடியா நீர்மமது, உணர்வால் மட்டுமே புலன்களில் புகுத்த முடியும் எனும்போது எனது நன்றிகளை மீண்டும் மீண்டும் வாயடைத்து வாலாட்டிச் சொல்கின்றேன் வாழ்வெல்லாம் மறவேன் என்று
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நட்சத்திர நன்றிகள்....

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக