ஞாயிறு, 26 ஜூலை, 2015

** யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே **

தேவையறிந்து பொதி சுமக்கும் கழுதையின் கண்ணீரை எஜமான் கண்டுகொண்டும் கவனிப்பதில்லை. அவனுக்கு தேவை பொதி தாங்கும் வலிமையும், வழியும் மட்டுமே.
உழைப்பில் வழியும் உப்பு நீரை பருகி பார்க்காத குரல்வளை நரம்புகள் செருப்பு தைக்க கூட ஆகாது. உழைப்பின் தன்மை அறியாதவன் தன்னை அறியாததற்கு சமமானவன். நேற்று நிகழ்ந்தது எனக்கு இன்று உனக்கு நாளை அவனுக்கு.
இது வழக்கமான பாதை வகுப்பு தானே பின் ஏன் தட்டிக் கேட்க வேண்டும். மௌனமாகவே செத்துமடி என்கிறது அடிமைத்தனம்.
ஒரே பார்வையற்ற விழியில் நீ எந்த உலகை ஆளப்போகிறாய். உண்மையற்ற உன் கையெழுத்து எந்த கதவையும் தட்டும் திறன் அற்றது.
புதுப் புது வாழ்வியல் ஓட்டம் அளக்கும் உன் கைகளை கேட்டுப்பார் அது குடும்பத்திற்கான மூலதனமா என்று. வெறும் வார்த்தையில் உன் மீது குதிரை சவாரி செய்யும் உன் அபிமான ஜால்ரா ப்ரியர்களின் பக்கம் சுடு சொல் பாய்வதில்லை ஏன் ? சாமனியன் நாக்கு சம்பள நோட்டில் தொங்கவிடப்பட்டிருப்பதாலா ?
குப்பைகளுக்கு நீ கட்டும் கோபுரத்தில் கலசம் சிவப்பு நிறமாகத்தான் சொட்டும். எதையும் சொல்லும் இடத்தில் இருப்பதால் நீ சொல்வதெல்லாம் உண்மையாகிடாது.
உழைப்பின் தன்மை அறி. பின்னதுவே உன்னை உயர்த்தும். அதுயில்லாது தலையாட்டும் பொம்மைகளோடு தினமொரு வேசமிட்டால் கட்டியிருக்கும் கடைசி கோவணம் அவிழும் ...
அது பற்றி உனக்கு கவலையில்லை என்பதை நானறிவேன். ஆயினும் கேள்விக்கணையினை நான் எறிவேன் .

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக