ஞாயிறு, 26 ஜூலை, 2015

பௌர்ணமி விழி சுட்டதென்ன

பௌர்ணமி விழி சுட்டதென்ன
பாயும் மின்னலென பார்வை பட்டதென்ன
தேயும் மேகமென தேகம் மெலிந்ததென்ன
ஓடும் தென்றலென மனம் வட்டமிட்டதென்ன

ஆடும் இலைகளென தலை அசைந்ததென்ன
பாடும் கருங்குயிலென ஓசை பிறந்ததென்ன
தாளம் போடும் மழையென இன்பம் பொழிந்ததென்ன
தேடும் நதியென ஆசை நீண்டு வளர்ந்ததென்ன

ஓங்கி வளரும் காடினைப்போல் காதல் ஆவதென்ன
துளை மூங்கிலில் முங்கிடும் காற்றைப்போல் ராகம் கசிந்ததென்ன
மேவிடும் மலைக்குன்றென நேசம் கூடுவதென்ன
சுடர் ஒளிவிடும் சூரியனாய் எங்கும் எனைச் சூழ்வதென்ன

காரிருளில் முளைக்கும் விண்மீனாய் கண்ணில் கனவு பூப்பதென்ன
மாரினில் தஞ்சம் புகும் முகமாய் மஞ்சத்தில் மயங்குவதுமென்ன
யார் யாரோ வந்தாலும் உனக்கிணையாகிடா ததென்ன
நாம் ஓருயிர் என்றாகினும் தனித்தனி ஈருடலாவதென்ன

சகியே ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக