ஞாயிறு, 26 ஜூலை, 2015

கள்ளத்தனம் ஏனடா கண்ணா

கள்ளத்தனம் ஏனடா கண்ணா
என் கண்ணிரண்டில் வழிகிறது காதல் தேனடா
உள்ளமது ஏங்குதடா கண்ணா
எங்கே நீ ஓடி மறைந்தாய் நெஞ்சம் தேம்புதடா ;

அள்ளி நிதம் என்னைக் குடித்தாய்
மடியில் தள்ளிப் புதுப் பாடம் சொல்லிக் கொடுத்தாய்
கன்னம் கிள்ளி கட்டியணைத்தாய் நாளும் அதை எண்ணி வளர் பித்தம் கொள்ளச் செய்தாய் ;

அல்லி முகமாய் எனைக் கோர்த்தாய்
துள்ளி விழும் கயலாக இடையில் விண்மீன் பறித்தாய்
முள்ளில் பூத்த மலராய் சிரித்தாய் முந்தானை நிலவில் நித்தம் முங்கிக் குளித்தாய் ;

கள்ளுண்ட போதை பார்வையில் வைத்தாய்
சிறு துளையிட்ட புல்லாங்குழல் இசையாய் அசைந்தாய்
இல்லாத குறைகள் யாவும் என்மீதுரைத்தாய்
கோபம் கொண்டு முகம் திருப்ப முத்தங்கள் பல கொடுத்தாய் ;

பொல்லாத மாயங்கள் புரிந்தாய்
நீயில்லாது பொழுது போகாது செய்தாய்
துன்பம் கொல்லாது பேரின்பம் தந்தாய்
நல் துணையாகி நீலமேனி நீங்காதிட அருள்வாய் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக