வியாழன், 4 ஜூன், 2015

** கண்ணா நினக்கு சமர்ப்பணம் **



போயொளிந்தாய் பொறுக்கவில்லை நெஞ்சம் பொசுங்குதடா
தேடியலைந்தேன் வெறுக்கவில்லை மனம் விரும்புதடா

முன்னே வாராது என் கண் மூடி நின்று
தலை பின்னே திரும்பி இமை திறந்திட அதன் முன்னே
நீ மறைந்திட - இதுபோல்
தீராது செய்தல் முறையாகாது
தீயென உள்ளம் எரிகிறது நினைக் காணாது...

ஓவெனச் சிறு குழந்தையாய் அழுகிறேன்
ஓயாது நின் நினைவால் வாடுகிறேன்
புல்லாங்குழல் இசை கேட்டால் எழுந்தோடுகிறேன்
புரிந்தும் நின் மனம் கல்லாகிட நான் கரைகின்றேன்

அன்றொரு நாள் அருகினிலமர்ந்து சொல்லிய சொல் எல்லாம் சொல்லி உளறுகிறேன் ;
ஆசை தீர அணைத்து நானழைக்கும் போதெல்லாம் வருவேனென நீ உரைத்த உறுதி இழக்க கலங்குகிறேன் ;

தோழி எள்ளி நகையாட விடுதல் நலமோ
நினை நம்பி தந்தென்னை வந்து பாராதிருத்தல் தகுமோ
நின் சொல்லில் பொய்யிருத்தல் நியாயமோ
பூவையரைக் கிள்ளி மயிற்பீலியென சூடுதல் வழக்கமோ

என் நிலை சொல்லி தூதுவிட ஆளில்லையே
நான் செய்த பிழை என்ன நீ கூறவில்லையே
நிலைமாறி ஓர் நாளும் நான் போகவில்லையே
நின் மீதுக் குறையொன்றும் சாடவில்லையே

எதுவாயினும் என்னிடம் முறையாக முகம் காட்டிப் பேசிடு
கண்ணா...
அது முடியாது வாராது போவேனென மௌனித்தால்
கண்ணா... இனி
ராதையெனக் காத்திருக்கலாகாது
கோதையென பூத்திருக்கலாகாது
வேதனையது தாங்கிடலாகாது
வந்திடுவேன் இக்கணமே என்னுயிர் நினக்கு சமர்ப்பணமே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக