வியாழன், 4 ஜூன், 2015

** முரசு கொட்டு **

வெற்றி வெற்றி என முரசு கொட்டு- இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு - இனி
எந்நாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

முற்றும் கற்றறிந்த மூடர் முகத்தை முட்டு
சற்றும் வளைந்திடாது நேர் நின்று கர்வம் தட்டு
கத்தும் கடல் அலையென எழுந்து வானம் தொட்டு
கீறும் மின்னல் வாள் எடுத்து பகைவர் தலை வெட்டு ;

கொடுமை நேரிடின் ஒடிந்திடாது பெருங்குரல் போரிட்டு
வறுமை எதிர்வரினும் கை ஏந்திடேன் என சபதமிட்டு
மடமை உரைப்பின் உண்மை ஒளி நேர் கண்பட்டு
வாய்மை இழந்திடாது உழைப்பினில் திறமை காட்டு ;

நடை எட்டு வைக்கும் இடமெல்லாம் விரல் நீட்டி சுட்டு
மார் நிமிர்த்தி அடிமை எங்குமில்லை என கை கட்டு
ஏர் பிடித்து தாய் நில மண்ணை நெற்றியில் திலகமிட்டு
ஏழ்மை பேதமை எங்குமில்லை படி புதுப் பாட்டு ;

கோழை எவருமில்லை புருவம் உயர்த்தி மீசை சுருட்டு
கோ மகனே ஆயினும் நேர் வழியில்லையேல் உயிர் விரட்டு
பார் எங்கள் புவனம் யாவும் பாசத்தின் தேர் எனப் பூச்சூட்டு
அதில் பாவையரே பாரதத்தின்  தாயென எங்கும் நீ பறைசாற்று ;

வெற்றி வெற்றி என முரசு கொட்டு - இனி
நம்மை வெல்ல இங்கு எவருமில்லை என முரசு கொட்டு
எட்டுத் திக்கும் எதிர் நின்று முரசு கொட்டு- இனி
எந்தநாளும் துன்பம் எங்களுக்கில்லை என முரசு கொட்டு ;

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக