வியாழன், 28 ஜனவரி, 2016

**நட்சத்திரம்**


ஒவ்வொரு முறையும் உண்மை இப்படித்தான் தன் கழுத்தை இறுக்கி கொல்கிறது ;

சமமற்ற தராசின் நடு முள் குத்துவாள் ஆவது எப்போதும் நியாயத்தின் மார்பு கூடுகளுக்கே ;

தனித்த பறவையின் சிறகுகளில் திணிக்கப்படும் பாரங்கள் சிலுவையின் சாயலாகுதல் சாத்தியமே ;

மலம் கழிப்பதும், சிறு நீர் திறப்பதும் ஒன்றென ஆன பின்
பேதமென பார்க்கிறது தரமற்ற நினைவுக் கண்;

சாமானியக் கனவு சாம்பலில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யங்களின் சுவர்களில் ஒவ்வொரு செங்கலும் கல்லறையே ;

பிறப்பு மட்டுமே அடையாளமாகும் அவமான உலகில்
எந்த ஒரு ஆடையாலும் மன நிர்வாணத்தை மறைக்க இயலாது ;

இன்னும் அரங்கேற காத்திருக்கும் வரிசையின் நீளத்திற்கு ஏற்ப
கொலை யாவற்றுக்கும் சூட்டப்படும் பெயர் தற்கொலை ;

இங்கே நாங்கள் பிய்த்து எரியப்பட்ட வெற்றுக் காகிதம்
என்றபோதும்...
அங்கே நாங்கள் ஜொலிக்கும் **நட்சத்திரம்**

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக