வியாழன், 28 ஜனவரி, 2016

** உற்று கவனி **

சொற்களின் எல்லா புறங்களிலிருந்தும் வலி வழிந்தோடுகிறது
சொல்ல முடியாததும் சொல்லில் முடியாதவையும் கட்டித் தழுவியபடி ;

அனாதையாக தனித்து விடப்பட்ட வார்த்தைகளின் அழுகைக்கு
நிதானமான நின் விழிகளின் விசாரிப்பு வாசிப்பே நிரந்தர காப்பகமாகும் ;

பிழை திருத்த முடியாது தவறிய எழுத்தினை தத்தெடுக்க மறுக்கிறாய்
பிழைத்திருக்க இயலாது கண்ணீரில் தத்தளித்து கரை தேடி அலைகிறது ;

குழப்பங்களை பிசைந்து கொடுக்கும் நிமிடங்களிடம் கிறுக்குகிறது விரல்கள்
குறுக்கு நெடுக்கு கோடுகளின் இடையில் வந்தடையும் வழி எங்கே துவங்குகிறது ;

வளைந்து நெளிந்து வடிவம் கூடி வரையும் முனைகள் யாவிலும்
ஒரு சந்திப்பும் அடுத்த பிரிவும் அருகருகே அவிழ்ந்து சிதை மூட்டுகிறது ;

சல்லடையிட்டு சலித்து வகுத்தனுப்பிய உணர்வுக் கோடுகளின் கீழிருந்து
சமாதான உருளைகளை நீக்கிவிட்டு ஓங்கி வீசுகிறாய் கத்திகளை ;

மொழி வழியாக ஒலிகளை திறப்பதற்கான சாவி செய்கின்றேன்
சாத்தப்பட்ட கதவு துவாரத்தின் நீளகலத்தை நிமிடமொருமுறை மாற்றுகிறாய் ;

நின் வெண் பாதமெங்கிலும் சிரம் குவிந்து வரம் வேண்டி வருடுகிறேன்
இடுவது ஒவ்வொரு முறையும் முற்றுப்புள்ளி அல்ல உற்று கவனி ;

** இது அடையாள வடு **



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக