வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணன் எங்கே ?

கண்ணன் எங்கே ?

கண்கள் அங்கே
கண்ட போதே காதல் கொண்டது நெஞ்சே ;

மார்கழி எங்கே ? மாதவன் அங்கே
மயங்குகிறாள் மைவிழியாள் இங்கே ;

தென்றல் எங்கே ?
புல்லாங்குழல் அங்கே
ஓசை கேட்டு எழுந்தோடினாள் நங்கே ;

சாமரம் எங்கே ?

மயிற்பீலி அங்கே
மார்பினில் சாய்ந்தே யாவையும் மறந்தே ;

இரு விழி காட்டி
இதழினில் புன்னகை கூட்டி
தினம் எனை வாட்டி
காதல் திண்ணம் ஊட்டி
உயிர் கலந்தே நின்றான் கள்வன் எனும் பெயர் சூட்டி ;

மாதுளை இதழலால் புது முத்தம் தொடுப்பான்
மாலை நேரத்து மழையென உள்ளம் நனைப்பான்
மார்கழி குளிராய் நடுங்க வைப்பான்
இவன்...
மாயவன் அன்றோ...
மனதினில் அனையா ஆசை தீ வளர்ப்பான் ;

தேம்பி அழுதால் சேயென வாரி அனைப்பான்
கை இரு சேவித்தால் தீரா துன்பங்கள் நீப்பான் ;
வானென உயர்ந்தே தலைகனம் அழிப்பான்
வாமனனாய் வந்து உலகினை அளப்பான் ;

அதிகாலை சூரியன் இவனென சிரிப்பான்
அதிலெங்கும் பறக்கும் சிறகாய் மிதப்பான் ;
கறுநிறமெங்கும் திருஉருவாய் காட்சியளிப்பான்
நீலக் கடல் துளிரிலை யென வண்ணமும் ஆவான் ;

ஞானம் உரைக்கும் குருவும் இவனே
மானம் காக்கும் நாமமும் இவனே
சேமம் வழங்கும் நற் சேவகன் இவனே
ஆதி ஷேசனை உடுக்கும் அன்பனும் இவனே ;

பாவையர் கொஞ்சும் கோகுலனே
நின் பாதம் ஒன்றே பேரானந்தமே
ஆயர் குலத்து ஆதவனே
நின் நெஞ்சம் ஒன்றே தஞ்சமே ;

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்ட போதே காதல் கொண்டது நெஞ்சே ;

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மயங்குகிறாள் மை விழியாள் இங்கே~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக