வியாழன், 28 ஜனவரி, 2016

** வரலாறு காணாத ம(பி)ழை**

காறித் துப்பிய நிலமெங்கும்
களவாடலின் கையறு நிலை

துளி துளியாய்
தலை வாசல் உடைக்கப்பட்டன

முத்தமிடப்பட்டவை முள்ளானது
முழுவதுமாய் மூழ்கி தவிக்கிறது

வகுக்கப்படாத சட்டங்களின் ஓட்டைகளில்
வடிய மறுக்கும் நீதியின் பெரும் ஈரம்

மக்க முடியாதவற்றை விதைத்தோம்
மீள இயலாத துயரை அறுவடை செய்கிறோம்

வழி அடைத்த குற்றம் மறந்தோம்
வலி அகலாது இடம் பெயர தத்தளிக்கின்றோம்

கட்டிடங்களை கண்ணீரில் மிதக்கவிட்டு
இருள் அப்பிய தருணங்களில் வெறுமை நடுங்குகிறது

சிம்மாசன சில்லரை அதிகாரம்
சீழாய் கசிய குலுங்குது தலை நகரம்

இது பின்னொரு நாளில் பயங்கர கதையாகும்
துன்பம் துளைக்கையில் மதமற்று மனிதம் ஓங்கும்

குடை பிடிக்க மறுக்கும் சூரியன்
தனதானதை இன்னொரு நாள் கற்பிக்க காத்திருக்கு ?

கனவு பெட்டகங்களை தேடிய சாலையில்
இன்று உணவு பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகிறது

ஆம்....
இது வரலாறு காணாத மழைதான்
காரணம்...
மனிதன் செய்த பிழைதான்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக