வியாழன், 28 ஜனவரி, 2016

வடிவேலவன் வந்தானே


கந்தனைக் காணாது

எந்தன் உயிர் வாழாது
ஆறுமுகனை எண்ணாது
எந்தன் மனம் அமைதியாகாது
சிந்தனை செய்தேனே
சுந்தரத் தமிழ் தந்தானே
செவ்விதழ் சிரிப்பினிலே
சேர்த்தெனை அனைத்தானே;

வேதனைகள் தீர்ந்திடவே வடிவேலவன் வந்தானே
சோதனைகள் நீங்கிடவே சேவற் கொடியோன் நின்றானே
பன்னிரு கரங்கள் கொண்டு பெரும் பலம் தந்தானே
பரம்பொருள் பாதம் பணிந்திடவே பாவம் களைந்தானே ;

நெற்றி கண் நெருப்பிலிருந்து தாமரையில் மலர்ந்தோனே
கார்த்திகை பெண்கள் அறுவரிடம் முருகனாய் வளர்ந்தோனே
சக்தியின் அனைப்பினில் ஒருவனாய் ஆனோனே
ஓமெனும் மந்திரத்தை தந்தைக்கு ஓதியோனே ;

ஔவையின் தமிழுக்கு அழகன் தனை மறந்தானே
பழம் ஒன்றுக்கு பழனி மலை தந்தோனே
பிரம்மனை சிறை வைத்த சிங்காரனே
முத்தமிழை முன்னிருந்து காத்துவரும் கதிர்வேலனே ;

தீரா தவத்தினிலே தெய்வானை மணந்தவனே
வேடனாய் வனத்தினிலே வள்ளியை கவர்ந்தவனே
மா மயிலேறி எம் மனக் கண் முன் தோன்றியோனே
மண்டியிட்டு வணங்கினேன் நின் திருக்கோலம் கண்டவுடனே~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக