வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கண்ணா....

சுவாச மூச்சென்றாய்
வீண் பேச்சதுதானோ
வீசும் காற்றென்றாய்
வெறும் கதையதுதானோ
கடல் அலையென்றாய்

கானல் நீரதுதானோ
காதல் மலையது என்றாய்
கண்ணீர் மழையதுதானோ ;

கண்ணா....

வாழ்வரை என்றாய்
வார்த்தைகள் பொய்தானோ
வரமென மொழிந்தாய்
வசந்தங்கள் மெய்தானோ
பாரெனப் பருகினாய்
தேகத் தாகமதுதானோ
காரிருள் கூடினாய்
பகலினில் மறைந்திடத்தானோ ;

கண்ணா...

பூவெனச் சூடினாய்
முகர்ந்து வாடிடத்தானோ
புல்லாங்குழல் ஊதினாய்
பூவிதழ் புண்ணாகிடத்தானோ
அன்பெனத் தழுவினாய்
துன்பமென தனித்திருக்கத்தானோ
விலகிடேன் என்றாய்
விழிகள் சிவந்திடத்தானோ ;

கண்ணா....

மாரது துளைத்தாய்
மாயமது புரிந்திடத்தானோ
மாறாது என்றுரைத்தாய்
மறப்பது முறைதானோ
மனமது ஒப்பளித்தாய்
மறைத்தல் நியாயந்தானோ
மங்கலக் குங்குமம் வைத்தாய்
மறைந்திடுதல் மர்மம் ஏனோ ;

கண்ணா....

வேரெனப் பற்றினாய்
வேறென நிலையது ஏனோ
நேரென உள்ளங்கையடித்தாய்
ரேகையது தேடிடத்தானோ
கோதையிவளை மொய்தாய்
ராதையெனக் காத்திடத்தானோ
பேதையிவளை அனைத்தாய்
போதைத் தீர்ந்திட புறந்தள்ளத்தானோ ;

கண்ணா....

தேவையென்பது தேய்பிறை ஆகிடுமோ
காதலென்பது காமத்தில் கழிந்திடுமோ
ஆவலென்பது தீரும் ஆசையாகிடுமோ
அன்பென்பது ஆளுக்கொரு வீதம் மாறிடுமோ
கடல் நீலமென உடல் வண்ணமுடைய கண்ணா வந்திங்கு காரணம் கூறிடு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக