
பராசக்தி - அதை நீ
நாளும் தர வேணுமடி
பராசக்தி
யாவும் தர வேணுமடி
பரா சக்தி - அதை நான்
யாவருக்கும் தர வேணுமடி
பரா சக்தி
பலம் தர வேணுமடி
பரா சக்தி - பாரினில்
பாமரனைக் காத்திடுவேன்
பரா சக்தி
ஆயிரம் கரம் வேணுமடி
பரா சக்தி - காத்திருக்கலாகாது
கெட்டதனை வீழ்த்திடுவேன்
பரா சக்தி
மன உறுதி வேணுமடி
பராசக்தி - எந்த நிலையிலும்
மாறாது நின்றுடுவேன்
பரா சக்தி
நிலை அன்பு வேணுமடி
பரா சக்தி - அதில் என்றும்
நீங்காது நீந்திடுவேன்
பரா சக்தி
நல் கலை வேணுமடி
பரா சக்தி - அங்கு களித்து
உனைக் கண்டிடுவேன்
பரா சக்தி
தகு பிழை வேணுமடி
பரா சக்தி - அதன் வாயில்
மிகு உண்மை உரைத்திடுவேன்
பரா சக்தி
தமிழ் மொழி வேணுமடி
பரா சக்தி - கவி எழுதி
புவி யாவும் கலப்பேன்
பரா சக்தி
தெளி மதி வேணுமடி
பரா சக்தி - பழி செய்யாது
பாவமது நீக்கிடுவேன்
பரா சக்தி
சுடர் ஒளி வேணுமடி
பரா சக்தி - எச் சூழலிலும்
பொய் சுட்டெரிப்பேன்
பரா சக்தி
நற் கதி வேணுமடி
பரா சக்தி - நின்னை நாளும்
நாடித் தொழுவேன்
பரா சக்தி
கோபக் கனல் வேணுமடி
பரா சக்தி - கொடுமை எரித்தே
துகள் சாம்பல் செய்திடுவேன்
பரா சக்தி
குழந்தை சிரிப்பொலி வேணுமடி
பரா சக்தி - குறை யாவையும்
நிதம் கொன்றுக் குவிப்பேன்
பரா சக்தி
மதமில்லா மண் வேணுமடி
பரா சக்தி - அங்கே சமம்
மானுடன் ஒன்றென பாட்டுப் படிப்பேன்
பரா சக்தி
விதை பல வேணுமடி
பரா சக்தி - வீதியெங்கும் விதைத்தே
பசி அறுவடை செய்வேன்
பரா சக்தி
வீணை ஒன்று வேணுமடி
பரா சக்தி - விரல் மீட்டியே
வேணு கானம் இசைத்திடுவேன்
பரா சக்தி
மழை எங்கும் வேணுமடி
பரா சக்தி - மா மரங்கள்
பூத்துக் குலுங்க துள்ளி குதிப்பேன்
பரா சக்தி
காதல் கிளி வேணுமடி
பரா சக்தி - ஏற்ற தாழ்வது
மாறி ஓர் கனி சுவைத்திடுவேன்
பரா சக்தி
சொல் ஒன்று வேணுமடி
பராசக்தி - அதைக் கொண்டு
இச் ஜெகத்தினை வாழ வைப்பேன்
பரா சக்தி
கேட்டது யாவையும்
தந்தருள்வாய்
பரா சக்தி
இதில் ஏது குறைந்தாலும்
உனக்கென்னை பலித்தே
உயிர் நிறுத்திடுவேன்
பரா சக்தி ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக