வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வாழ்வதனின் பொருள் என்ன ?

பக்தன் :
சாயலற்ற நேர்கோட்டு வாழ்வது சாதலுக்கான மார்க்கத்தை காட்டுவதேன் சர்வேசா ?

வாழ்வதனின் பொருள் என்ன ?

நமது ஆதாரம் எங்கிருந்து வேர்விடுகிறது. ஆசையின் ஈரத்திலா அல்லது அறியாமையின் ஆழத்திலா ?

மனித பிறப்பின் மர்ம நிலை யாதென்பதே மாயை என்பதானால் வாழ்தலின் வழிமுறை மாறுபடுதல் ஏன் ?

கர்மங்களைக் கொண்டு கணக்கிடும் இன்ப துன்பங்கள் சுயநல எண்ணத்தால் பெருகுமெனில் மனம் பக்குவப்படுதலின் மேன்மையை எவ்வாறு அறிவது ?

எல்லா உணர்ச்சிகளும் அறியப்பட்ட பின் அதனை ஆள்வது எல்லா தருணத்திலும் சாத்தியமாதல் சத்தியமாகுமா ?

கழிவதே ஜனனம் எனில் நிலைத்தல், நிலையாமை இவ்விரண்டுக்குமான உண்மை எது ?

தர்மமே உயர்வெனில் அதர்மத்தின் செயல் அழியாதிருப்பதின் மர்மமென்ன ?

பிறப்பும் இறப்பும் இயற்கையின் இயல்பு எனில் இடையினில் இளமை மூப்பு நோய்மை என பின்னல் ஏன் ?

உணர்தலே இவ்வாழ்வின் முழு தத்துவமெனில் இறைவா நீ உணர்த்துவது இங்ஙனம் எது ?

கடவுள் :
மானிடா புரிதலை அறிய முற்படுவதே யாவற்றுக்கும் ஆதாரக் காரணம்.

அனுபவம் உணர்த்தும் மெய்யறிவினை ஆக முழுவதும் மனம் ஏற்று நடப்பதில்லை.

நிகழ்வின் காட்சிக்கு ஏற்ப நிலையது உருமாறும்.

உண்மையினை பக்குவமாக்குதல் ஞானத்தின் பெரும் சுடர். அது அமைதி எனும்பொழுதும் அதன் பிரகாசம் பாரபட்சமற்ற விசாலமானது.

நினைப்பதும் மறப்பதும் நீடித்திருப்பதில்லை. இதுவே மாயை.

பிறப்பென்பது யாதெனில் தனித் தனி பிரபஞ்சத்தின் பொருளாகும். அது இன்னொன்றின் நன்னெறிக்கு வித்திடின் காலம் உள்ளவரை நிலைத்திடும். அஃதில்லையேல் அடித்துச் செல்லப்படும் கால வெள்ளத்தில் காணாமல் போய்விடும்.

இயலாமையும், இருளும் வாழ்வின் வடிவங்களாகும். எது நேர்வினும் அதை தாங்கும் மனமாய் மாறும். அது முடியாதபோது மூர்ச்சையாகும்.

ஆதலால் மனதை பத்திரப்படுத்தி வைக்காதே அதன் பாதையில் செல்ல விடு, வரும் வழியெங்கும் எதிர்படும் மேடு பள்ளங்களில் உன் பங்கினை அளி, பயணம் வேறுபடினும் பாதை யாவருக்கும் ஒன்றே.... மறவாதே மனமே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக